என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரெயில் கட்டணம் உயர்வு, பரந்தூரில் ரெயில் நிலையம்... அப்டேட் கொடுத்த ரெயில்வே இணை அமைச்சர்
    X

    ரெயில் கட்டணம் உயர்வு, பரந்தூரில் ரெயில் நிலையம்... அப்டேட் கொடுத்த ரெயில்வே இணை அமைச்சர்

    • மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயன்படுத்துவோருக்கும் எந்த ஒரு கட்டணம் மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
    • இந்திராநகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தரகேட்டு போராடி வரும் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    இந்திய ரெயில்வே துறையில் தெற்கு ரெயில்வே, வடக்கு ரெயில்வே, கொங்கன் ரயில்வே என 18 மண்டலங்கள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 13 ஆயிரத்துக்கும் அதிகமான எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 8 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

    பாதுகாப்பான, வசதியான பயணம் கிடைக்கும் என்பதால் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களின் முதல் தேர்வு ரெயில் தான். வந்தே பாரத், ராஜ்தானி உள்ளிட்ட ரெயில்களை தவிர மற்ற ரெயில்களில் கட்டணம் என்பது பிற போக்குவரத்துகளை விட குறைவுதான். எனவே அனைத்து தரப்பு மக்களின் விருப்ப தேர்வாக இருக்கிறது.

    ரெயில் கட்டணத்தை பொறுத்தவரை, கடந்த 2013-ம் ஆண்டு கிலோ மீட்டருக்கு 2 பைசா முதல் 10 பைசா வரை உயர்த்தப்பட்டது. அப்போது, மின்சார ரெயில்களுக்கு 2 பைசாவும், மெமு மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 பைசாவும், ஏ.சி. வகுப்பு பெட்டிகளுக்கு 6 முதல் 10 பைசா வரையிலும் கட்டணம் உயர்ந்தது.

    இதையடுத்து, 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் மீண்டும் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது, 2-ம் வகுப்பு படுக்கை வசதி இருக்கைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்ந்தது. ஏ.சி. வகுப்புகளில் ஏ.சி. சேர்கார், முதல் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு ஏ.சி. வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 பைசா வீதம் அதிகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரெயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட்ட ரெயில்வே அட்டவணையை ஜூலை 1-ந் தேதி ரெயில்வே வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டும் வருகிற ஜூலை 1-ந்தேதி திருத்தப்பட்ட ரெயில்வே அட்டவணை ரெயில்வே வாரியத்தின் மூலம் வெளியிடப்பட உள்ளது. அதன்படி, ஏ.சி. வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், ஏ.சி. அல்லாத சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும், 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு அரை பைசா கூடுதலாகவும் உயர்த்தப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின.



    அதே நேரம் புறநகர் ரெயில்கள் மற்றும் 500 கிலோ மீட்டருக்கு குறைவான தொலைவு செல்லும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு கட்டண உயர்வு இருக்காது என்றும், மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயன்படுத்துவோருக்கும் எந்த ஒரு கட்டணம் மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ரெயில்வே இணை மந்திரி சோமண்ணா, நேற்று சென்னை வந்தார். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து தனி ரெயிலில் அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையம் வந்தார். வழிநெடுகிலும் நடைபெறும் ரெயில்வே பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

    காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய மந்திரி சோமண்ணா, இந்திராநகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தரகேட்டு போராடி வரும் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரெயில் கட்டணம் பொது மக்களை பாதிக்காத வகையில் படிப்படியாக உயர்த்தப்படும். இது குறித்து விவாதம் நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலைய பகுதியில் ரெயில் நிலையம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. அது தற்போது பரிசீலனையில் உள்ளது,

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் விஸ்வநாத் பி.ஈர்யா மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×