search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசு"

    • கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான இச்சட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 237 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (DYFI), காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி ஆகியோர் ஆகியோரின் மனுக்களும் அடங்கும்.

    இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (CAA) தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஏப்ரல் 8-ம் தேதிக்குள் ஒன்றிய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

    இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிதிஷ்குமார், 2024 மக்களை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார்
    • இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தார்

    கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் கட்சியும் கூட்டணியில் அங்கம் வகித்தது.

    மக்களவை தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் நிதிஷ்குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, லாலு கட்சியுடன் இணைந்து முதல்வரானார்.

    பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்த நிதிஷ்குமார், 2024 மக்களை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தார். மோடி முன்னிலையில் இனிமேல் ஒருபோதும் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் காலித் அன்வர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "13 கோடி பீகார் மக்களும், பீகாரிகள் என்பதால் எங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) போன்ற எதுவும் தேவைப்படாது என நிதிஷ்குமார் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார்" என்று தெரிவித்தார்.

    பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் பீகாரில் குடியுரிமை திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை.

    • பணக்காரர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க. நிதி திரட்டி உள்ளது.
    • கன்னியாகுமரியில் நேற்று பிரதமர் பேசியது வெற்று முழக்கம்.

    சென்னை:

    அண்ணா அறிவாலயத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பா.ஜ.க. மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளது.

    * ஊழலில் சிக்கியதால் மக்களை திசை திருப்ப பல்வேறு முயற்சிகளை பா.ஜ.க. மேற்கொள்ளும்.

    * பணக்காரர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க. நிதி திரட்டி உள்ளது.

    * நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கு மேல் தேர்தல் நன்கொடை வழங்கியது எப்படி? தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கிய நிறுவனங்களுக்கு வருமான வரி சலுகை அளிக்கப்பட்டதா?

    * சீனா ஆக்கிரமிப்பை அகற்றாமல் வாய்மூடி மெளனம் காக்கிறது பா.ஜ.க.

    * பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது திராவிடக் கட்சிகள் தான்.

    * கன்னியாகுமரியில் நேற்று பிரதமர் பேசியது வெற்று முழக்கம்.

    * கச்சத்தீவை மீட்க பா.ஜ.க. அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன ?

    * வெளிநாட்டில் சிக்கியிருந்த மீனவர்களை தமிழக அரசுதான் மீட்டது.

    இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

    • நாட்டின் நலனுக்காக துணிச்சலான முடிவுகளை எடுக்கவும், லட்சிய திட்டங்களை வகுக்கவும், அவற்றை செயல்படுத்தவும், உங்களின் ஆதரவே எனக்கு மகத்தான பலத்தை அளித்தது.
    • நாட்டை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உங்களது ஆதரவு, சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தனது அரசின் சாதனைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். இதற்காக அவர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:-

    நாட்டு மக்கள் அனைவருமே எனது குடும்பத்தினர். 140 கோடி மக்களின் ஆதரவு எனக்கு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் அளித்தது. ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கடும் முயற்சி மேற்கொண்டோம். கடந்த 10 ஆண்டுகளில் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றமே மிகப்பெரிய சாதனையாகும்.

    பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது. மின்சார வசதி, அனைவருக்கும் கியாஸ் சிலிண்டர், குடிநீர், ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை, விவசாயிகளுக்கு நிதியுதவி, பெண்களுக்கு உதவி உள்ளிட்ட பல திட்டங்கள் உங்களின் நம்பிக்கையின் காரணமாகவே சாத்தியமானது.

    ஜி.எஸ்.டி. அமலாக்கம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான 370-வது பிரிவை ரத்து செய்தது, முத்தலாக் குறித்த புதிய சட்டம், மகளிர் இடஒதுக்கீடு, பாராளுமன்ற புதிய கட்டிடம் மற்றும் தீவிரவாதம், நக்சலைட்டு பிரிவினைவாதம் ஆகிய அனைத்தும் உங்கள் நம்பிக்கை ஆதரவால் சாதிக்க முடிந்தது.

    நாட்டின் நலனுக்காக துணிச்சலான முடிவுகளை எடுக்கவும், லட்சிய திட்டங்களை வகுக்கவும், அவற்றை செயல்படுத்தவும், உங்களின் ஆதரவே எனக்கு மகத்தான பலத்தை அளித்தது. நாட்டை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உங்களது ஆதரவு, சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
    • குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு தடை கோரிய மனுக்களை வருகிற 19-ந்தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.

    புதுடெல்லி:

    குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல், இன்று தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, சி.ஏ.ஏ.வுக்கு எதிரான மனுக்களை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

    அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மனுதாக்கல் செய்தவர்களுக்கு தார்மீக பொறுப்பு கிடையாது என்றும் இந்த வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு தடை கோரிய மனுக்களை வருகிற 19-ந்தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.

    • இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைய உறுதியேற்போம்.
    • நமது இசுலாமிய சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    "2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே, பா.ஜ.க. ஆட்சி இந்தியாவின் மதச் சார்பின்மைத் தன்மையைச் சீர்குலைத்து, சகிப்பின் மையை வளர்த்து, நமது இசுலாமிய சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் வழியாக இசுலாமியர் மீதான வெறுப்பைச் சட்டப் பூர்வமாக்க வழிவகுக்கிறது.


    இசுலாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான பன்னாட்டு நாளில், பா.ஜ.க. ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுத்து, அவர்களின் பிடியில் இருந்து இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைய உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது லிட்டருக்கு 2 ரூபாய் என்றாலும் அது சாதாரண மக்கள் மீதுள்ள பணச்சுமையைக் குறைக்க உதவும்.
    • நாடு முழுவதும் எவ்வித பாகுபாடின்றி பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 2 ரூபாயைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது லிட்டருக்கு 2 ரூபாய் என்றாலும் அது சாதாரண மக்கள் மீதுள்ள பணச்சுமையைக் குறைக்க உதவும். அது மட்டுமல்ல வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்ட சாமானிய மக்கள் பணத்தைச் சேமிக்கவும் உதவும். குறிப்பாக நாடு முழுவதும் எவ்வித பாகுபாடின்றி பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும்.

    மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை நிரூபிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருப்பதால் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை பாராட்டி, வாழ்த்தி, நன்றி கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக, அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற உரிமையில்லை என மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மனு பொதுப்படையாக உள்ளது. முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தளங்களில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது.
    • மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் பொருட்படுத்தாமல் இருந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மோசமான, ஆபாசமான உள்ளடங்களை ஒளிபரப்பியதற்காக 18 ஓ.டி.டி. தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

    இணையத்தில் ஆபாச படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை ஒளிபரப்பியதற்காக 18 ஓ.டி.டி. தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும் 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைதள கணக்குகளும் முடக்கம்.

    இந்த தளங்களில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது. இதையடுத்து மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் பொருட்படுத்தாமல் இருந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கால்நடை வளர்ப்பு ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு வெளிநாட்டு இன நாய்கள் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைத்தது

    இந்தியாவில் பிட்புல், ராட்வீலர், புல்டாக், உள்ஃப் நாய்கள் மற்றும் டெரியர் உள்ளிட்ட ஆக்ரோஷ தன்மை கொண்ட வெளிநாட்டு இன நாய்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், வீடுகளில் ஏற்கனவே வளர்க்கப்பட்டு வரும் அத்தகைய இன நாய்களுக்கு கருத்தடை செய்யுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாய்கள் மற்றும் மனிதர்களை பாதுகாக்க வேண்டும் என பீட்டா இந்தியா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு ரிட் மனுத் தாக்கல் செய்தது. அந்த வழக்கில், இது தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளின் குழு ஒன்றை அமைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து கால்நடை வளர்ப்பு ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு வெளிநாட்டு இன நாய்கள் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • அசாமில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மாநிலத்தில் கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
    • அனைத்து காவல் நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கவுகாத்தி உட்பட கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன

    குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியதற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அசாம் மாநில எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.

    எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சிகளுக்கு அம்மாநில காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    அந்த நோட்டீசில், எதிர்க்கட்சிகள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால், பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டாலோ, பொதுமக்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டாலோ, எதிர்க்கட்சிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அசாம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    அசாம் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளாக உள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட பல கட்சி தலைவர்களுக்கு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    அத்தகைய போராட்டங்கள் "சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், அசாமில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மாநிலத்தில் கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோனித்பூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் அதிக மக்கள் கூடுவதைத் தடை செய்யும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து காவல் நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கவுகாத்தி உட்பட கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், பதற்றமான பகுதிகளில் காவல்துறையினரின் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கு முன்னதாக, குடியுரிமை திருத்தச்சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று கருதி, காவலர்களின் நீண்ட கால விடுப்புகளை அம்மாநில அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    2019 ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அசாம் மாநிலத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் இறந்தனர். பின்பு கொரோனா ஊரடங்கை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.
    • இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    "ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CITIZENSHIP AMENDMENT ACT (CAA) இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது"

    பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல; பலவகையான மொழி, இன, மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்துவரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய தாய்த் திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும். அதுமட்டுமல்ல; சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.

    இதன் காரணமாகத்தான், கழக அரசு அமைந்தவுடனேயே, அதாவது, கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம். தமிழ்நாட்டைப் போலவே, பல்வேறு மாநிலங்களும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.

    இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன், தேர்தல் அரசியலுக்காக இந்தச் சட்டத்தை தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதோ என கருத வேண்டியிருக்கிறது.

    இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், இரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும். எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது; இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×