என் மலர்
நீங்கள் தேடியது "பட்ஜெட் கூட்டத்தொடர்"
- கூடங்குளம் அனுமின் நிலையத்திலிருந்து மின்சாரம் எடுக்க ஒன்றிய அரசின் திட்டமென்ன?
- எரிபொருளில் எத்தனால் கலக்கும் திட்டம் வருமானத்தை பெருக்கி உள்ளதா?
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இன்று திமுக திமுக எம்.பி.க்கள் பல்வேறு கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்பினர்.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1. கழிவுநீர் மேலாண்மையை முழுமையாக இயந்திரமயமாக்கும் திட்டங்கள் கிடப்பில் போட்டுள்ளதா ஒன்றிய அரசு?
திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி
அரக்கோணம் திமுக எம்.பி. எஸ். ஜெகத்ரட்சகன்
மார்ச் 2025 நிலவரப்படி, இயந்திரமயமாக்கப்பட்ட கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் சுத்திகரிப்பு உபகரணங்களைக் கொண்டுள்ள நகராட்சிகளின் எண்ணிக்கை மற்றும் மனிதர்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்குவதை முழுமையாகத் தடுத்துள்ள இடங்களின் விவரங்களை திமுக மக்களவை உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் மற்றும் கனிமொழி கருணாநிதி கோரியுள்ளனர். மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் 'கையால் மலம் அள்ளுவோர் தடைச் சட்டத்தின்' கீழ் நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் கண்டறியப்பட்ட விதிமீறல்கள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இயந்திர சாதனங்களைப் பயன்படுத்துவதை வலியுறுத்தும் நிலையான வழிகாட்டுதல்களை (SOP) அரசு வெளியிட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.
2. கூடங்குளம் அனுமின் நிலையத்திலிருந்து மின்சாரம் எடுக்க ஒன்றிய அரசின் திட்டமென்ன?
திமுக எம்.பி. ஆர். கிரிராஜன்
14,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் ஒட்டுமொத்த திறன் கொண்ட 18 அணு மின் உலைகளை கட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது குறித்தும் ஒவ்வொரு உலையையும் முடிக்கும் செலவு மற்றும் நேரம், அணுமின் நிலையங்களை அமைக்கும் இடங்கள் குறித்தும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். கூடங்குளத்தில் உள்ள அணு மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் இயக்குவதற்கும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அணு மின் நிலையங்களிலும் அதைச் சுற்றியும் 100 சதவீத பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
3. கார்பன் கடன் வர்த்தக திட்டத்தின் புதிய இலக்குகள் சாத்தியமா?
திமுக எம்.பி. பி. வில்சன்
கார்பன் கடன் வர்த்தக திட்டத்தின்(CCTS) கீழ் கூடுதல் தீவிர கார்பன் துறைகளுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள பசுமை வாயு வெளியேற்ற (GEI) இலக்குகள் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் கேள்வி எழுப்பினார். பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல்கள், ஜவுளி மற்றும் இரண்டாம் நிலை அலுமினியம் உட்பட இந்த வழிமுறையின் கீழ் கொண்டுவரப்பட்ட துறைகள் எவை? GEI இலக்குகளை கண்காணித்தல், சரிபார்த்தல் மற்றும் செயல்படுத்துவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் குறித்தும் அவர் கேட்டுள்ளார்.
4. வெளிநாட்டில் இறக்கும் இந்தியர்ளின் உடல்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான கோரிக்கைகள் தாமதமாக நிறைவேற்றுவது ஏன்?
திமுக எம்.பி. பி. வில்சன்
வெளிநாட்டில் இறக்கும் இந்திய குடிமக்களின் உடல்களை திருப்பி தாய்நாடு கொண்டு வருவதற்கான முழு செலவையும் அரசாங்கம் ஏற்க ஏற்கனவே உள்ள அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாதது ஏன் என்றும் அவை சரியாக செயல்படாமல் இருப்பது குறித்தும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் நாடாளுமன்றத்தில் கேட்டுள்ளார். வெளிநாட்டில் இறந்த இந்தியர்களை திருப்பி அனுப்புவது குறித்து குடும்பங்களிடமிருந்து அரசாங்கம் பெறும் கோரிக்கைகள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை எனும் புகார்கள் குறித்து அரசாங்கத்தின் பதில் என்ன என்றும் கேட்டுள்ளார்.
5. தமிழ்நாட்டில் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பை மேம்படுத்துக!
திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா
தமிழ்நாட்டில் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரிடம் சில முக்கிய கேள்விகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, மாநிலம் முழுவதும் எரிசக்தி மற்றும் மூலப்பொருளாக எரிவாயுவை விரிவுபடுத்துவதற்கான தற்போதைய நிலை குறித்தும், அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் ஊர்களுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஏதேனும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மாவட்ட வாரியாக கோரிக்கையின் அடிப்படையில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் பணியின் தற்போதைய விவரங்களையும் கோரியுள்ளார்.
6. எரிபொருளில் எத்தனால் கலக்கும் திட்டம் வருமானத்தை பெருக்கி உள்ளதா?
கோவை திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார்
தேனி எம்.பி. தங்க தமிழ்செல்வன்
தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின் கீழ், ஒரு லிட்டர் எரிபொருளில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை நிர்ணயித்த காலத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அரசு எட்டியுள்ளதா என்பது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 2014-ல் 1.5% ஆக இருந்த எத்தனால் கலப்பு, 2025-ல் 20% ஆக உயர்ந்ததற்கு கரும்புத் தொழில்துறைக்கு அரசு வழங்கிய வலுவான நிதிச் சலுகைகள் காரணமா என்ற விவரத்தை அவர்கள் கோரியுள்ளனர். மேலும், இந்த எத்தனால் கலப்புத் திட்டமானது பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் மற்றும் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைத்தல் போன்ற இலக்குகளை அடைந்துள்ளதா என்றும் அவர்கள் கேட்டுள்ளனர். இறுதியாக, இந்த 20% எத்தனால் கலப்பின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் எரிபொருள் விலையைக் குறைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களையும் அவர்கள் கோரியுள்ளனர்.
மேலும் தங்களது மற்றொரு கேள்வியில் அவர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்பான திட்டங்களை ஒருங்கிணைக்கவும், சீரமைக்கவும் நிதி ஆயோக் ஏதேனும் பரிந்துரைகளை வழங்கியுள்ளதா என்பது குறித்து அவர்கள் விளக்கம் கோரியுள்ளனர். குறிப்பாக, எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்காக ஏஐ வசதியுடன் கூடிய ஒன்றிய டிஜிட்டல் போர்டல் (centralised digital portal) அமைப்பது குறித்த பரிந்துரைகள் மற்றும் அதன் தற்போதைய நிலை பற்றி அவர்கள் கேட்டுள்ளனர். மேலும், இத்தகைய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளால் பொது வளங்கள் முறையாகப் பயன்படுத்தப்படுமா மற்றும் கடன் வசதி, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் மூலம் எம்எஸ்எம்ஈ வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் என்ன என்பது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
7. அமெரிக்காவின் புதிய வரியால் பாதிக்கும் சிறு, குறு தொழில்கள்
தீர்வு என்ன?
பெரம்பலூர் திமுக எம்.பி அருண் நேரு
அமெரிக்கா விதித்துள்ள சமீபத்திய வரிகளால் தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி, வாகன உதிரிபாகங்கள், தோல் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகளைச் சார்ந்த எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அரசு ஆய்வு செய்துள்ளதா என கேட்டுள்ளார். இந்த வரிகளால் உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதி குறைவு மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகள் குறித்த விவரங்களையும், இதனால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு எம்எஸ்எம்ஈ நிறுவனங்களின் எண்ணிக்கையையும் கோரியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மானியங்கள், குறைந்த வட்டி கடன் அல்லது வரி விலக்கு போன்ற ஏதேனும் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா மற்றும் வருங்காலத்தில் இத்தகைய சவால்களிலிருந்து எம்எஸ்எம்ஈ -களைப் பாதுகாக்க உள்ள திட்டங்கள் என்ன என்பது குறித்தும் விளக்கம் கோரியுள்ளார்.
8. குடிநீர் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை டிஜிட்டலில் கண்காணிக்கும் திட்டத்தின் சாத்தியங்கள் என்ன?
டாக்டர் கலாநிதி வீராசாமி
ஜல் ஜீவன் மிஷன் மற்றும் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், கிராமப்புறக் குடிநீர் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை டிஜிட்டல் முறையில் கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தத் திட்டத்தில் இடம்பெறவிருக்கும் நிகழ்நேர கண்காணிப்புத் திரைகள் (Real-time dashboards), ஐஓடி சென்சார்கள் (IoT Sensors), புவிசார் தகவல் அமைப்பு (GIS mapping) மற்றும் மொபைல் செயலிகள் போன்ற தொழில்நுட்பக் கூறுகள் குறித்து விளக்கம் கோரியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தேவைப்படும் நிதி மற்றும் காலக்கெடு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இக்கண்காணிப்பு முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், இதில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்தவும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
9. சென்னை மற்றும் ஓசூரில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோகும் ஆபத்து. அமெரிக்காவின் புதிய வரிக்கு தீர்வு காணுமா ஒன்றிய அரசு?
தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்
உலகளாவிய வர்த்தக இடையூறுகள் மற்றும் வரி நிச்சயமற்ற தன்மையால், சென்னை மற்றும் ஓசூரில் உள்ள எம்எஸ்எம்ஈ கிளஸ்டர்களில் சுமார் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் ஆபத்தில் உள்ளனவா என்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அண்மைக்காலப் புயல்கள் மற்றும் வெளிப்புறக் காரணிகளால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வட்டி மானியம் அல்லது சிறப்பு நிவாரணத் தொகுப்புகள் ஏதேனும் வழங்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 2026-ஆம் ஆண்டிற்கான 95 பில்லியன் ரூபாய் எம்எஸ்எம்ஈ நிதித் திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். 2025-26 காலக்கட்டத்தில் மாநில வாரியாக வழங்கப்பட்ட நிதி விவரங்கள் மற்றும் தமிழ்நாடு போன்ற தொழில் சார்ந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை நிலைப்படுத்த அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவரங்களைக் கோரியுள்ளார்.
10. முறையாக பயன்படுத்தபடுகிறதா நிலத்தடி நீர் மேலாண்மை திட்டத்தின் நிதி?
கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன்
தமிழ்நாட்டில் அடல் புஜல் யோஜனா திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் நிலத்தடி நீர் மேலாண்மைக்காக கண்டறியப்பட்டுள்ள முன்னுரிமை இடங்களின் எண்ணிக்கை குறித்து விளக்கம் கோரியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் சமூகப் பங்களிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன என்பதையும் கேட்டுள்ளார்.
மேலும், இத்திட்டத்திற்காகத் தமிழ்நாட்டிற்கு இதுவரை ஒதுக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்த விரிவான விவரங்களை கோரியுள்ளார். நிலத்தடி நீரை நிலையான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்யவும், தண்ணீர் பற்றாக்குறைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
11. படுகர் சமூகத்தை பட்டியல் பழங்குடி பிரிவில் சேர்க்கும் கோரிக்கையின்மீது நடவடிக்கை என்ன?
வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த்
1931-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை ஒரு முக்கியமான பழங்குடி இனமாக அங்கீகரிக்கப்பட்ட படுகர் சமூகத்தினரை, தற்போது பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes - ST) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை அரசு கவனித்துள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசிடமிருந்து ஏதேனும் அதிகாரப்பூர்வ முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளனவா மற்றும் அதன் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் விளக்கம் கோரியுள்ளார்.
மேலும், இக்கோரிக்கை குறித்து இறுதி முடிவெடுப்பதற்கான காலக்கெடு ஏதேனும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா, அவ்வாறு இல்லையெனில் அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும் விளக்கம் கோரியுள்ளார்.
12. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் நிதியை மறுப்பது ஏன்?
ஈரோடு எம்.பி, கே. ஈ. பிரகாஷ் கேள்வி
புது தில்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு நிதி அமைச்சர் தெரிவித்த கருத்துகளை அரசு கவனித்துள்ளதா என கேட்டுள்ளார். குறிப்பாக, ஒகேனக்கல் குடிநீர் திட்டம் - இரண்டாம் கட்டத்திற்காக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய தன் பங்கான ரூ. 2,283 கோடியை வழங்க மறுப்பதாலேயே, அத்திட்டத்திற்கான நிதி நடைமுறைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று கூறப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்திட்டத்தைச் சரியான நேரத்தில் செயல்படுத்தவும், மக்களின் குடிநீர் தேவையைத் தீர்க்கவும் நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் விளக்கம் கோரியுள்ளார்.
13. வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்குகிறதா ஒன்றிய அரசு?
தஞ்சாவூர் எம்.பி. முரசொலி
இந்தியாவின் நகர்ப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு, கழிவுநீர் மேலாண்மை முதலியவற்றை வழங்கும் அம்ருத் திட்டம் குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சரிடம் சில முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, இத்திட்டத்தின் செயல்பாட்டு விவரங்கள் மற்றும் ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான நிதிப் பகிர்வு நடைமுறைகள் குறித்து விளக்கம் கோரியுள்ளார். மேலும், தற்போது நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் வரும் நகரங்களின் பட்டியல், மாநில வாரியாகவும் திட்ட வாரியாகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதியின் நிலை குறித்தும் வினவியுள்ளார். மாநில அளவில் இத்திட்டத்தை முறையாகக் கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் ஏதேனும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விவரங்களைக் கேட்டுள்ளார்.
14. வேளான் பதப்படுத்துதலுக்கு நவீன உள்கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தில் சிக்கல்களை ஒன்றிய அரசு தீர்க்காதது ஏன்?
காஞ்சிபுரம் எம்.பி. செல்வம்
திருவண்னாமலை எம்.பி. சி. என். அண்ணாதுரை
தமிழ்நாட்டில் வேளாண் பதப்படுத்துதல் மேம்பாட்டிற்கான நவீன உள்கட்டமைப்பு உருவாக்கும் திட்டம் எவ்வளவு தூரம் பயனுள்ள முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து அவர்கள் விளக்கம் கோரியுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் மாவட்ட வாரியாக அங்கீகரிக்கப்பட்ட, முடிக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்களின் விவரங்கள், உருவாக்கப்பட்ட உற்பத்தித் திறன் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதி குறித்த தரவுகளை கேட்டுள்ளனர். மேலும், சிறு மற்றும் குறு விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் இத்திட்டத்தின் பயன்களைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்றும், முறையான விழிப்புணர்வு இல்லாமை அல்லது சிக்கலான நடைமுறைகளால் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இத்திட்டத்தை விரைவுபடுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி அறுவடைக்கு பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும் அரசு எடுத்து வரும் திருத்த நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
15. குப்பை மற்றும் கழிவுநீர் மேலாண்மையில் போதிய சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்காதது ஏன்?
தர்மபுரி எம்.பி. அ. மணி
நாட்டின் நகர்ப்புறங்களில் குப்பை, கழிவு மற்றும் சாக்கடை மேலாண்மை ஒரு கடுமையான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதா என்பது குறித்தும், அதற்கான காரணங்கள் மற்றும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கோரியுள்ளார். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட நிதி உதவி குறித்த விவரங்களை ஆண்டு வாரியாகவும், நகரம் வாரியாகவும் கோரியுள்ளார். மேலும், இத்தகைய பணிகளில் மாநிலங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை அரசு மதிப்பீடு செய்துள்ளதா என்பது குறித்தும் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
16. எத்தனால் உற்பத்தியில் இலக்கை எட்டுமா இந்தியா?
பொள்ளாச்சி எம்.பி. கே. ஈஸ்வரசாமி
கரும்பு தவிர்த்த இதர மூலப்பொருட்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் எத்தனால் உற்பத்தி அளவு எவ்வளவு மற்றும் அவை எந்தெந்த ஆதாரங்களில் (source-wise) இருந்து பெறப்படவுள்ளன என்பது குறித்த விவரங்களை கோரியுள்ளார். மேலும், நாட்டின் எத்தனால் கலப்பு இலக்கை (Ethanol blending target) எட்டுவதற்கு இந்த உற்பத்தி அளவு போதுமானதாக இருக்குமா என்பது குறித்தும் விளக்கம் கேட்டுள்ளார்.
17. ஸ்மார்ட் சிட்டீஸ் மிஷன் திட்டத்தின் செயல்பாடுகள் என்ன?
சேலம் திமுக எம்.பி, டி. எம். செல்வகணபதி
ஸ்மார்ட் சிட்டீஸ் மிஷன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்குக் குடிநீர் மற்றும் துப்புரவு வசதிகளுக்காக ஒன்றிய அரசு நிதி வழங்கி வருகிறதா என்பது குறித்தும், கடந்த மூன்று நிதியாண்டுகளில் பல்வேறு நகரங்களுக்கு விடுவிக்கப்பட்ட மொத்த நிதி எவ்வளவு என்பது குறித்தும் விளக்கம் கோரியுள்ளார். மேலும், இத்திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளனவா என்பது உண்மையா என்றும், அவ்வாறு கோரிக்கைகள் இருந்தால் அது தொடர்பாக ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் விவரங்களைக் கேட்டுள்ளார்.
18. பாரத்மாலா திட்டத்தின் செயல்பாடுகளில் தாமதங்கள் ஏன்?
ஆரணி எம்.பி. எம். எஸ். தரணிவேந்தன்
பாரத்மாலா திட்டத்தின் கீழ் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மற்றும் முடிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை, அவற்றின் நீளம் மற்றும் செலவிடப்பட்ட நிதி குறித்த விவரங்களை கோரியுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டில் இன்னும் தொடங்கப்படாமல் உள்ள திட்டங்களின் நிலை மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் முடிக்கப்பட்ட சாலைகளின் நீளம், செலவு மற்றும் காலக்கெடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இத்திட்டத்தால் சரக்கு போக்குவரத்துத் திறன் மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள தாக்கம் குறித்து அரசு ஆய்வு செய்துள்ளதா என்றும் விளக்கம் கேட்டுள்ளார். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி போன்ற சிக்கல்களைத் தீர்த்து, பணிகளை விரைந்து முடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இத்திட்டத்தின் மூலம் உள்ளூர் வேலைவாய்ப்பு, சிறு ஒப்பந்ததாரர்கள் மற்றும் எம்எஸ்எம்ஈ நிறுவனங்கள் அடையும் நன்மைகள் குறித்தும் விளக்கம் கோரியுள்ளார்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.
- அவர்களுக்கு இந்தியர்களின் தரவு தேவை. அந்த வலிமையை இந்தியா பயன்படுத்தத் தவறிவிட்டது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (பிப்ரவரி 11) எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.
அமெரிக்கா - இந்தியா இடையே கடந்த வாரம் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவையில் ராகுல் காந்தி பேசியதாவது, "நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் எங்கள் தாய் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிரதமர் பலனில்லாமல் இந்தியாவை விற்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.
ஒன்று அதானி மீதான அமெரிக்க வழக்கு, மற்றொன்று இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள 'எப்ஸ்டீன் கோப்புகள்'. 30 லட்சம் கோப்புகள் இன்னும் வெளியாகவில்லை, அதுவே பிரதமரின் பயத்திற்கு காரணம்.
அனில் அம்பானி என்ற ஒரு தொழிலதிபர் இருக்கிறார், அவர் ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை? காரணம், எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் உள்ளது.
அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஹர்தீப் புரியிடமும் நான் கேட்க விரும்புகிறேன். அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும், ஹர்தீப் புரியிடமும் அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும்.
மத்திய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் டிஜிட்டல் வர்த்தக விதிகள் இந்தியாவின் 21-ஆம் நூற்றாண்டு எதிர்காலத்தை அடகு வைக்கிறது. இதன்மூலம் டிஜிட்டல் வர்த்தக விதிகளின் மீதான கட்டுப்பாட்டை இந்தியா இழந்துவிட்டது.
இந்தியர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஒப்பந்தம் மூலம் இந்தியர்களின் தரவுகள் தடையின்றி அமெரிக்காவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து அதன் மக்களின் தரவுகள் தான். அமெரிக்காவின் டாலரை பாதுகாக்க வேண்டுமானால், அவர்களுக்கு இந்தியர்களின் தரவு தேவை. அந்த வலிமையை இந்தியா பயன்படுத்தத் தவறிவிட்டது.
ஒரு வேலை இந்தியா கூட்டணி அமெரிக்காவுடன் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், பின்வரும் நிபந்தனைகளை முன்வைத்திருப்போம்:
டிரம்ப் அவர்களே, உங்கள் டாலரைப் பாதுகாக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் டாலரைப் பாதுகாப்பதற்கான மிகப்பெரிய சொத்து இந்திய மக்களிடம் உள்ள தரவுகள்.
எங்கள் மக்களின் தரவுகளை நீங்கள் பெற விரும்பினால், எங்களைச் சமமானவர்களாகக் கருதிப் பேசுங்கள். எங்களை உங்களது வேலையாட்களைப் போல நடத்தாதீர்கள்.
எங்கள் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. எந்தச் சூழ்நிலையிலும் அதை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
உங்களுக்கு உங்கள் நாட்டு விவசயிகளின் வாக்குகள் வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்கள் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை உங்களுக்கு இருப்பதைப் போலவே, எங்கள் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உண்டு.
இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் எங்களை ஒருபோதும் பாகிஸ்தானுடன் சமமாக வைத்துப் பார்க்காதீர்கள். நாங்கள் ஒரு தன்னாட்சி கொண்ட வல்லரசு என்பதை அங்கீகரித்து சமமாகப் பேசுங்கள் என்று கூறியிருப்போம்.
ஆனால் மத்திய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள புதிய டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தம், இந்தியர்களின் தரவுகளைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துவிட்டது.
சீனாவுடனான போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுதம் நமது மக்களின் தரவுகள் தான். அதை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம் பிரதமர் மோடி இந்தியாவின் எதிர்காலத்தைச் சரணடையச் செய்துள்ளார்" என்று தெரிவித்தார்.
- அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு.
- ஆனால், அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது நாடாளுமன்ற மரபுகளை மீறி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியிடன் முடிவடைகிறது.
இந்நிலையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீது திமுக எம்.பி. திருச்சி சிவா இன்று (பிப்ரவரி 9) உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 3 அன்று, அமைச்சர் பியூஷ் கோயல் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஒப்பந்தத்தின் விரிவான விவரங்கள் அடங்கிய கூட்டு அறிக்கை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 7 அன்று அமைச்சர் பியூஷ் கோயல் பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் அம்சங்களை விளக்கினார்.
பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு.
ஆனால், அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது நாடாளுமன்ற மரபுகளை மீறிய செயல் என்றும், இது அவையின் உரிமை மீறல் ஆகும் என்றும் திருச்சி சிவா தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஏற்கனவே அவையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த உரிமை மீறல் நோட்டீஸை பின்னர் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.
சபாநாயகர் பதிலால் அதிருப்தியடைந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த விவகாரத்தை உடனடியாக விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர்.
- நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது.
- பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
புதுடெல்லி:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் உள்ள முதன்மை குழு அறையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதத்திற்கு வரவிருக்கும் முக்கிய பிரச்சனைகள், சட்ட மசோதாக்கள் குறித்தும், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தனர்.
- உங்கள் பிரேக்குகளை என்னால் சரிசெய்ய முடியாது, அதனால் நான் சத்தமாக அடிக்கும் ஹாரனை தருகிறேன்
- 77 நாடுகளில் ஜிஎஸ்டி உள்ளது, ஆனால் அவை ஒன்று அல்லது இரண்டு வரிகளை மட்டுமே விதிக்கின்றன.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நேற்றைய கூட்டத்தில் பட்ஜெட் குறித்து திருவானந்தபுர காங்கிரஸ் எம்பி சசி தரூர் விமர்சித்துள்ளார்.
நேற்றைய கூட்டத்தில் அவையில் பேசிய அவர், நிதியமைச்சரின் பட்ஜெட் உரை, 'உங்கள் பிரேக்குகளை என்னால் சரிசெய்ய முடியாது, அதனால் நான் சத்தமாக அடிக்கும் ஹாரனை தருகிறேன் ' என்று கூறும் கேரேஜ் மெக்கானிக்கை நினைவூட்டியது. மேலும், நிதி மசோதா வரி செலுத்துவோரிடம் கூரையை சரிசெய்ய முடியவில்லை, ஆனால் நான் உங்களுக்கு ஒரு குடையை கொண்டு வந்தேன் என்று சொல்வது போல் இருந்தது.
இந்த நிதி மசோதா ஒட்டுவேலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நாட்டிற்கு தெளிவு, உறுதிப்பாடு மற்றும் தீர்க்கமான தலைமை தேவைப்படும் நேரத்தில், அரசாங்கத்தின் பொருளாதார மேலாண்மை கட்டமைப்பு சவால்களால் பாதிக்கப்பட்டுள்ளது
உலகிலேயே மிகவும் குழப்பமான மற்றும் சிக்கலான ஜிஎஸ்டி கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது என்று தரூர் கூறினார்.
நாம் அனைவரும் கோரி வரும் எளிமையான வரிக்கு பதிலாக, இந்தியாவில் குழப்பமான ஜிஎஸ்டி விகிதங்கள் உள்ளன. இதில் உலகிலேயே மிக உயர்ந்த 28 சதவீத வரி அடங்கும். இருப்பினும், வரி வருவாய் இன்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவீதமே உள்ளது.
77 நாடுகளில் ஜிஎஸ்டி உள்ளது, ஆனால் அவை ஒன்று அல்லது இரண்டு வரிகளை மட்டுமே விதிக்கின்றன. நமது நாட்டில் இந்த பல-விகித அமைப்பு வணிகங்களுக்கான சுமையை மேலும் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
- சமூக நல்லிணக்கத்தை சேதப்படுத்தும் பாஜகவின் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும் ஒன்று.
- சிறுபான்மையினரை அரக்கர்களாக சித்தரிக்க பாஜக முயற்சி.
வக்பு வாரிய திருத்த மசோதாவை அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் கடுமையாக சாட்டியுள்ளது. சிறுபான்மை சமூகங்களை அரக்கர்களாக சித்தரிக்கும் பாஜகவின் முயற்சிகளின் ஒரு பகுதி தான் இது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இன்று டெல்லியில் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பியும் தேசிய செய்திதொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 2024 இல் பாஜக கொண்டு வந்த வக்பு திருத்த மசோதா, தீவிரமான குறைபாடுகளை உடையது. இந்த மசோதா, மதங்களைக் கடந்து அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசியலமைப்பு விதிகளை நீர்த்துப்போகச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தவறான பிரச்சாரத்தைப் பரப்புவதன் மூலமும், பாரபட்சங்களை உருவாக்குவதன் மூலமும் சிறுபான்மை சமூகங்களை அரக்கத்தனமாக சித்தரிக்க முயற்சிக்கும் பாஜவின் உத்தியின் ஒரு பகுதியாகும்.
நமது தனித்துவமான பல மத சமூகத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான சமூக நல்லிணக்கத்தை சேதப்படுத்தும் பாஜகவின் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும் ஒன்று.
தேர்தல் ஆதாயங்களுக்காக நமது சமூகத்தை நிரந்தர பிளவு நிலையில் வைத்திருக்க சிறுபான்மை சமூகங்களின் மரபுகள் மற்றும் நிறுவனங்களை சீர்குலைக்கும் முயற்சி இது.

வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக முந்தைய சட்டங்களால் உருவாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்கள், அமைப்பு, அந்தஸ்து மற்றும் அதிகாரம் குறைக்கப்பட்டு, சமூகம் அதன் சொந்த மத மரபுகள் மற்றும் விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை வேண்டுமென்றே இந்த மசோதா மூலம் பறிக்கப்படுகிறது.
வக்பு நிர்வாகத்தை பலவீனப்படுத்துவதற்காகவே தற்போதுள்ள சட்டத்தில் உள்ள விதிகள் எந்த காரணமும் இல்லாமல் நீக்கப்படுகின்றன. வக்பு நிலங்களை ஆக்கிரமித்தவர்களைப் பாதுகாக்க சட்டத்தில் இப்போது அதிக பாதுகாப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அடிப்படையில், வக்பு திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். நடப்பு பாரளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழல் காங்கிரஸ் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும்.
- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தொடர் 2 பகுதிகளாக 27 அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு இன்று தொடங்குகிறது.
- 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு இன்று தொடங்குகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தொடக்க நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முா்மு உரையாற்றுகிறார். அவரது உரையைத் தொடா்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படவுள்ளது. மேலும் 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், பிப்ரவரி 1-ல் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் கே.கேசவராவ் கூறுகையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, ஆட்சியின் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.
- பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பகுதிகளாக நடக்கவுள்ளது.
- முதல் அமர்வு இன்று தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடக்கிறது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கவுள்ளது.
இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதி உரை நிகழ்த்தி முடித்ததும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பகுதிகளாக நடக்கவுள்ளது. முதல் அமர்வு இன்று தொடர்ங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடக்கும். அடுத்த அமர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாட்களுக்கு பூஜ்ய நேரம் கேள்வி நேரம் எதுவும் இருக்காது. பிப்ரவரி 2-ம் தேதியிலிருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும். இதன் முடிவில் இரு சபைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிப்பார்.
இந்தக் கூட்டத்தொடரில் பி.பி.சி. ஆவணப்பட விவகாரம், சீன எல்லையில் நிலவும் பதற்றம், தொழில் அதிபர் அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
புதிய பாராளுமன்ற கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் பழைய கட்டடத்திலேயே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நேற்று ராகுல் பேசும்போது ஒருவித கொதிநிலை காணப்பட்டது என மோடி பேசினார்.
- பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தொரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
குடியரசு தலைவர் உரைக்கு முதலில் நன்றி தெரிவிக்கிறேன். தீர்மானம் முதல் வெற்றி வரை குடியரசு தலைவர் உரையில் அனைத்தும் இடம்பெற்றிருந்தன. தொலைநோக்கான உரை மூலம் மக்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறார் குடியரசு தலைவர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு அவர்களின் தரத்தை காட்டுகிறது. நேற்று ராகுல் பேசும்போது ஒருவித கொதிநிலை காணப்பட்டது.
பாராளுமன்றத்தில் ஒவ்வொருவரும் தங்களின் புரிதலுக்கு ஏற்ப உரையாற்றினர். ஒவ்வொருவரும் தங்களின் குணநலனுக்கு ஏற்றவாறு உரையாற்றினர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தொரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் அறிவுறுத்தினார். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். மோடியின் உரையை பாஜக எம்.பி.க்கள் கைதட்டி வரவேற்றனர்.
- ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது அனைவருக்கும் பெருமையான விஷயம்.
- சிறந்த முடிவுகளை எடுக்கக்கூடிய தேச நலனில் அக்கறை உள்ள நிலையான அரசு இப்போது உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:-
கொரோனா மற்றும் போர் அச்சத்திற்கு இடையே நாட்டை சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். 2004 முதல் 2014 வரை இந்தியாவில் ஊழல் அதிக அளவில் இருந்தது. 2010 காமன்வெல்த் போட்டியில் ஊழல் இருந்ததால் வீரர்களின் திறமையை வெளிப்படுத்த இயலவில்லை. இப்போது ஊழலில் இருந்து நாடு விடுதலை பெற்றுள்ளது.
அண்டை நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் உள்ள நிலையில் இந்தியா முன்னேறி வருகிறது. இந்த அரசின் சாதனை இந்திய மக்களை பெருமையில் ஆழ்த்தி உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி உலகளவில் பேசப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையிலும் இந்தியா வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறது. ஒருசில நபர்களால் இந்தியாவின் வெற்றியை ஜிரணிக்க முடியவில்லை.
ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது அனைவருக்கும் பெருமையான விஷயம். நிர்பந்தத்திற்கு பணிந்து சீர்திருத்தங்கள் தொடர்பான முடிவை எடுக்கும் அரசு அல்ல இந்த அரசு. சிறந்த முடிவுகளை எடுக்கக்கூடிய தேச நலனில் அக்கறை உள்ள நிலையான அரசு இப்போது உள்ளது. இந்தியா இன்று மிகப்பெரிய வாய்ப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
விலைவாசி உயர்வு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. தற்போது நிலைமை சிறப்பாக உள்ளதால் சிலரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- நீங்கள் எவ்வளவு சேற்றை நீர்நிலையில் கொட்டினாலும் தாமரை அதற்கு மேலேயே இருக்கும்.
- முந்தைய காங்கிரஸ் ஆட்சியாளர்களால் எந்த பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு தர முடியவில்லை.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது, பிரதமர் மோடியை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். விவாதம் முடிவடைந்த நிலையில் மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி பதிலுரையாற்றினார். பதிலுரையின்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த அமளிக்கு மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்ததுடன், முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தை கடுமையாக சாடினார். பிரதமர் மோடி பேசியதாவது:-
விமர்சனம் செய்யும் உறுப்பினர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். சேறு அவரிடத்தில் இருந்தது, என்னிடத்தில் நன்னீர் இருந்தது. யாரிடம் என்ன இருந்ததோ, அதுதான் மேலெழும்பி வந்தது. நீங்கள் எவ்வளவு சேற்றை அந்த நீர்நிலையில் கொட்டினாலும் தாமரை அதற்கு மேலேயே இருக்கும். தாமரை மலர்வதற்கு தாங்கள் செய்யும் இந்த சேவைக்காக நான் உங்களுக்கும் நன்றி உடையவனாக இருக்கிறேன்.
நேற்று எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசும்போது, 60 ஆண்டுகளாக நாங்கள் வலுவான அடித்தளம் அமைத்து வைத்திருந்தோம் என்று சொன்னார். 2014ம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்தபோது நிலைமை என்ன? என்பதை அறிய முயற்சி செய்தேன். காங்கிரஸ் குடும்பத்தின் எண்ணம் வலுவான அடித்தளம் அமைப்பதாக இருக்கலாம். ஆனால் அவர்கள் எங்கு பார்த்தாலும் குழி தோண்டி வைத்திருந்தார்கள். அந்த சமயத்தில் சிறிய சிறிய நாடுகள்கூட முன்னேறி வந்துகொண்டிருந்தன.
அவர்களின் காலம் நன்றாக இருந்தது. பஞ்சாயத்து முதல் பார்லிமென்ட் வரை எல்லாம் அவர்களின் ஆட்சிதான். ஆனால் அவர்கள் செய்த பணிகள் எல்லாம், எப்படி இருந்தது என்றால், நாடு ஒரு பிரச்சனையைக்கூட தீர்த்து வைக்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. பிரச்சனையை தீர்க்கவேண்டியது அவர்களின் கடமை. பிரச்சனைகளில் உழன்று நாட்டு மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் வேறு, அவர்களின் திட்டம் வேறு. இதனால் அவர்களால் எந்த பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு தர முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.






