search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Parliament"

  • டெல்லிக்கு சொந்தமான தண்ணீரை 28 லட்சம் மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் அவரது ஒரே கோரிக்கை.
  • காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.

  ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  டெல்லியின் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 5 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

  டெல்லிக்கு சொந்தமான தண்ணீரை 28 லட்சம் மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் அவரது ஒரே கோரிக்கை. அரியானா அரசு 613 எம்ஜிடி தண்ணீர் தர வேண்டும் என்பது ஒப்பந்தம். தேர்தலுக்கு பிறகு, 3 வாரங்களுக்கும் மேலாக, டெல்லிக்கு 100 எம்ஜிடி தண்ணீர் குறைவாகவே கிடைத்துள்ளது.

  அதிஷி அரியானா அரசு, எல்ஜி சக்சேனா, மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவர் கேட்கவில்லை.

  அதிஷி 5 நாட்கள் உண்ணாவிரதத்தில் இருந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொன்னார்கள். நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவரது சர்க்கரை அளவு 43 ஆக இருந்தது. அவரது குறைந்த சர்க்கரை அளவு 36 ஆக இருந்தது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் இல்லையெனில் அவரை இழக்க நேரிடும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

  இதனையடுத்து அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்னும் ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லிக்கு தண்ணீர் திறந்துவிட கோரி நாங்கள் பிரதமருக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று கூறினார்.

  • பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய மந்திரிகளும், எம் பி க்களும் பதவி ஏற்றனர்.
  • இதேபோல், கடந்த 2019-ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

  புதுடெல்லி:

  18-வது பாராளுமன்ற மக்களவை நேற்று கூடியது. பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய மந்திரிகளும், எம்.பி.க்களும் பதவி ஏற்றனர். இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, சக பெண் எம்.பி.க்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, 'மக்களவையில் மறுபடியும் வீராங்கனைகள் குழு' என்று குறிப்பிட்டு உள்ளார்.

   

  அந்த புகைப்படத்தில் அவருடன் எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் (தி.மு.க.), ஜோதிமணி (காங்கிரஸ்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), டிம்பிள் யாதவ் (சமாஜ்வாடி) ஆகியோர் அமர்ந்திருந்தனர். இதேபோல், கடந்த 2019-ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

  • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசியல் சாசன புத்தகத்தை பிரதமர் மோடியிடம் காண்பித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
  • மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்எல்ஏ பர்த்ருஹரி மஹ்தாப்க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

  டெல்லியில் இன்று 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் பிரதமர் மோடி உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவுடன் தொடங்கியது.

  தேசிய கீதத்துடன் தொடங்கப்பட்டு, கடைசியாக முடித்த பாராளுமன்ற கூட்டத்தில் இருந்து மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

  மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்எல்ஏ பர்த்ருஹரி மஹ்தாப்க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் தற்காலிக சபாநாயகருக்கு உதவியாக சுரேஷ் கொடிக்குன்னில், தளிக்கோட்டை ராஜுதேவர் பாலு, ராதா மோகன் சிங், ஃபக்கன் சிங் குலாஸ்தே மற்றும் சுதிப் பந்தோபாத்யாய் ஆகியோரையும் அவர் நியமித்தார்.

  இதைத்தொடர்ந்து தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு இந்தியா கூட்டணியை சார்ந்த உறுப்பினர்கள் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றதற்கு அரசியல் சாசனத்தின் புத்தகங்களை காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசியல் சாசன புத்தகத்தை பிரதமர் மோடியிடம் காண்பித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இதே போன்று அரசியல் சாசன புத்தகம் காண்பித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

  ராகுல் காந்தி, திரிணாமுல் தலைவர் கல்யாண் பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் அகிலேஷ் யாதவ், அவதேஷ் பிரசாத் ஆகியோர் எதிர்க்கட்சி பெஞ்ச்களின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.


  மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சிவராஜ் சிங் சவுகான், கிரிராஜ் சிங், சர்பானந்தா சோனோவால், பியூஷ் கோயல், ஜோதிராதித்ய சிந்தியா, பூபேந்தர் யாதவ், கிரண் ரிஜிஜு, மன்சுக் மாண்டவியா, பிரலாத் ஜோஷி, டாக்டர் ஜிதேந்திர சிங், ஜி கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

  மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சத்தியப் பிரமாணம் செய்ய எழுந்து நின்றபோது, நீட் வினாத்தாள் கசிவு, (UG-2024), NEET (PG-2024), UGC-NET 2024 ஆகியவற்றில் ஏற்பட்டு வரும் குளறுபடிகள் குறித்து எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.

  தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான எச்.டி. குமாரசாமி, சிராக் பாஸ்வான், ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, அனுப்ரியா படேல் ஆகியோரும் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 280 எம்பிக்கள் இன்று பதவியேற்றனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உட்பட மீதமுள்ள 260 பாராளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (நாளை) பதவியேற்க உள்ளனர். அரசியலமைப்பு புத்தகத்துடன் பதவி ஏற்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

  பாஜக எம்பிக்கள் ராதா மோகன் சிங் மற்றும் ஃபக்கன் சிங் குலாஸ்தே ஆகியோர் தலைவர் குழு உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

  ஆனால், காங்கிரஸ் எம்பி கே சுரேஷ், திமுக எம்பி டிஆர் பாலு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுதீப் பந்தோபாத்யாய் ஆகியோர் குழு உறுப்பினர்களாக பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.

  இதைத்தொடர்ந்து ஜூன் 26 அன்று நடைபெறும் கூட்டத்தில் மக்களவை சபாநாயர் தேர்தெடுக்கப்படுகிறார். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் ஜூன் 27 இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்றுவார். ஜூலை 3 அன்று மக்களவை கூட்டம் முடிவடைகிறது.

  • சமீபத்தில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜேபி நட்டா சுகாதாராதுறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • மத்திய அமைச்சர்கள் குழுவில் நட்டாவைத் தவிர, 11 உறுப்பினர்கள் மேல்சபையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஜே.பி. நட்டா முதன்முதலில் 2012 இல் ராஜ்யசபாவிற்கு, இமாச்சலப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 இல் அமித் ஷா கட்சியின் தலைவராக பொறுப்பேற்றபோது பாஜகவின் பாராளுமன்றக் குழுவில் உறுப்பினர் ஆனார். தற்போது இரண்டு முறை பாஜக தலைவராக இருந்து வருகிறார்.

  இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜேபி நட்டா ராஜ்யசபாவின் பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பதிலாக பாஜக மாநிலங்களவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், கோயல் ராஜ்யசபாவில் பாஜக தலைவராக இருந்தார்.

  சமீபத்தில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜேபி நட்டா சுகாதாராதுறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.

  மத்திய அமைச்சர்கள் குழுவில் நட்டாவைத் தவிர, 11 உறுப்பினர்கள் மேல்சபையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பா்.
  • மக்களவை இடைக்கால தலைவா் பா்த்ருஹரி மகதாப் முன்னிலையில் எம்.பி.க்கள் பதவியேற்பு நடைபெறும்.

  புதுடெல்லி:

  பிரதமர் மோடி 3-வது முறையாக கடந்த 9-ந்தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். மோடி பதவி ஏற்ற பிறகு பாராளுமன்றக் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

  பாராளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது.

  240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்தது. ஆனாலும், தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைத்தது.

  இந்தச் சூழலில், 18-வது பாராளுமன்றத்தின் மக்களவை முதல் கூட்டத் தொடா் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி ஜூலை 3-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. ஜூன் 27-ந்தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளாா்.

  பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பா். மக்களவை இடைக்கால தலைவா் பா்த்ருஹரி மகதாப் முன்னிலையில் எம்.பி.க்கள் பதவியேற்பு நடைபெறும். வருகிற 26-ந்தேதி பாராளுமன்றத் தலைவா் தோ்தல் நடைபெற உள்ளது.

  கடந்த 2 முறை பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் கோலோச்சியது. இந்த முறை எதிர்க்கட்சிகள் வலுவாக இருப்பதால் கூட்டத்தில் அனல் பறக்கும்.

  ஒடிசா மாநிலம், கட்டாக் பாராளுமன்றத் தொகுதியில் இருந்து தொடா்ந்து 7-வது முறையாக தோ்வான பா்த்ருஹரி மகதாப், மக்களவை இடைக்கால தலைவராக சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டாா். பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்த இவா், பாராளுமன்றத் தோ்தலுக்கு முன்னா்தான் பா.ஜ.க.வில் இணைந்தாா்.

  அதேநேரம், காங்கிரசை சோ்ந்த 8 முறை எம்.பி.யான கே.சுரேசுக்கு மக்களவை இடைக்கால தலைவா் பதவியை வழங்காதது குறித்து மத்திய அரசை அக்கட்சி விமா்சித்தது. தலித் என்பதால், அவரை புறக்கணித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

  காங்கிரசின் குற்றச்சாட்டை நிராகரித்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு, பல்வேறு முன்னுதாரணங்களை சுட்டிக் காட்டினாா். மேலும், இந்த விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்குவதாக அவா் பதில் குற்றச்சாட்டை முன் வைத்தாா்.

  இந்த சர்ச்சையை தொடக்கத்திலேயே எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேபோல் புதிய சபாநாயகர் தேர்விலும் ஒருமித்த கருத்து ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

  பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே பாராளுமன்றத் தலைவா் பதவியை எதிா்பாா்ப்பதாக கூறப்படும் நிலையில், அப்பதவியை பா.ஜ.க. விட்டுக் கொடுக்காது என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  கடந்த முறை ராஜஸ்தான் எம்.பி. ஓம் பிா்லா பாராளுமன்ற அவைத் தலைவராக செயல்பட்டாா். அவருக்கே பா.ஜ.க. மீண்டும் வாய்ப்பளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவா்கள் டி.புரந்தரேஸ்வரி, ராதா மோகன் சிங் உள்ளிட்டோரின் பெயா்களும் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

  கடந்த இரு தோ்தல்களைப் போல் இல்லாமல், பாராளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் பலம் இம்முறை கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, எதிா்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி தரப்பில் வேட்பாளா் களமிறக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. கருத்தொற்றுமை அடிப்படையில் பாராளுமன்றத் தலைவா் தோ்வாவது சிறப்பாக இருக்கும் என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

  • எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
  • நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குரலாக பாராளுமன்றத்தில் செயல்படுவேன் என்றார்.

  புதுடெல்லி:

  சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மாணவர்கள், பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

  காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

  இதற்கிடையே, டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குரலாக பாராளுமன்றத்தில் செயல்படுவேன் என தெரிவித்தார்.

  இந்நிலையில், நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை சந்தித்தனர். அங்கு அவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

  • சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
  • சுமார் 9 லட்சம் பேர் எழுதிய யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

  புதுடெல்லி:

  சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மாணவர்கள், பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

  தேசிய தேர்வுகள் முகமை சார்பில் இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல் கட்ட நெட் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினார்கள்.

  இதற்கிடையே, யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், புதிய தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என சொல்லப்பட்டு தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது.

  இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  பாராளுமன்றத்தில் யுஜிசி நெட் தேர்வு மற்றும் நீட் தேர்வு விவகாரத்தை நிச்சயம் எழுப்புவோம்.

  பா.ஜ.க.வின் தாய் அமைப்பால் கல்வி முறை கைப்பற்றப்பட்டதே தேர்வு வினாத்தாள் கசிவுக்குக் காரணம். இது மாறாத வரை, வினாத்தாள் கசிவு தொடரும். மோடி ஜி இந்த பிடிப்பை எளிதாக்கினார். இது தேச விரோத செயல்.

  ரஷியா-உக்ரைன் போரை மோடி தடுத்து நிறுத்தினார் என கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால், நரேந்திர மோடியால் இந்தியாவில் காகித கசிவை நிறுத்த முடியவில்லை அல்லது நிறுத்த விரும்பவில்லை.

  எங்கள் நிறுவனங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டதால் இது நடக்கிறது.

  தகுதியில் அடிப்படையில் துணை வேந்தர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. அவர்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த அமைப்பும் பா.ஜ.க.வும் நமது கல்வி முறையை ஊடுருவி அழித்துவிட்டன.

  பண மதிப்பிழப்பு மூலம் பொருளாதாரத்திற்கு நரேந்திர மோடி செய்ததை, தற்போது கல்வி முறையிலும் செய்துள்ளார்.

  இப்படி நடப்பதற்கும், நீங்கள் கஷ்டப்படுவதற்கும் காரணம் ஒரு சுதந்திரமான, புறநிலையான கல்விமுறை தகர்க்கப்பட்டதே. இங்கு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படுவது மிக முக்கியம் என தெரிவித்தார்.

  • பாராளுமன்றத்தில் திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லாவை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (CISF) தடுத்து நிறுத்தினர்.
  • இந்தியா கூட்டணி எம்.பிக்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகவே பாராளுமன்றம் பாதுகாப்பு மத்திய பாதுகாப்பு படைக்கு மாற்றப்பட்டதா?

  நேற்று பாராளுமன்றத்தில் நுழைந்த திமுக மாநிலங்களவை எம்.பி எம்.எம்.அப்துல்லாவை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (CISF) தடுத்து நிறுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  இது தொடர்பாக மாநிலங்களை சபாநாயகர் ஜெகதீப் தன்கருக்கு எம்.பி எம்.எம்.அப்துல்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

  அக்கடிதத்தில், "பாராளுமன்றவளாகத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் என்னிடம் நடந்து கொண்ட வேதம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முன்னர் பாராளுமன்ற பாதுகாப்பு படையினர் இருக்கும் பொழுது இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றது கிடையாது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ வேலைகள் இல்லாமல் வேறு வேலைகளுக்காக கூட பாராளும்னறத்தில் நுழைய உரிமை உண்டு என்று நான் நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில் திமுக எம்.பி பாராளுமன்றத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பாராளுமன்றத்தில் மத்திய பாதுகாப்பு படை (CISF) வீரர்களால் திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா கூட்டணி எம்.பிக்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகவே பாராளுமன்றம் பாதுகாப்பு மத்திய பாதுகாப்பு படைக்கு மாற்றப்பட்டதா? மக்கள் பிரதிநிதியான மாநிலங்களவை உறுப்பினரை ஏன் பாராளுமன்றம் செல்கிறீர்கள் எனக் கேட்டது கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்துள்ளார்.

  இந்தாண்டு மே மாதம் பாராளுமன்ற பாதுகாப்பது பணியை பாராளுமன்ற பாதுகாப்பு படையிடமிருந்து மத்திய பாதுகாப்பு (CISF) படைக்கு மாற்றியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

  • பாராளுமன்றம் வருகிற 24-ந்தேதி கூடுகிறது.
  • தற்காலிக தலைவராக (சபாநாயகர்) தேர்வு செய்யப்பட உள்ளார்.

  புதுடெல்லி:

  பிரதமர் மோடி தலைமை யில் பாஜ.க. கூட்டணி அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் பாராளுமன்றம் வருகிற 24-ந்தேதி கூடுகிறது.

  இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

  24 மற்றும் 25-ந்தேதிகளில் 2 நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பார்கள். பாராளுமன்ற மரபுபடி சபையின் மூத்த உறுப்பினரை தற்காலிக தலைவராக தேர்வு செய்வார்கள். அந்த வகையில் தற்போது கேரள மாநில மேவலிக்கரா தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கும் காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் தற்காலிக தலைவராக (சபாநாயகர்) தேர்வு செய்யப்பட உள்ளார்.

  அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதன் பிறகு சுரேஷ் எம்.பி. தற்காலிக சபாநாயகராக இருந்து புதிய எம்.பி.க்கள் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

  எம்.பி.க்கள் அனைவரும் பதவி ஏற்று முடித்ததும் பாராளுமன்றத்துக்கு புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சி கேட்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் சபாநாயகர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விரும்பவில்லை.

  எனவே சபாநாயகர் பதவியை பாரதீய ஜனதா தக்கவைத்துக்கொள்ளும் என்று உறுதியாகி இருக்கிறது. ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான புரந்தேஸ்வரி 6 தடவை எம்.பி.யான ராதா மோகன்சிங், முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா ஆகிய 3 பேரில் ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

  ஓம்பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன. தெலுங்கு தேசம் வலியுறுத்தும் பட்சத்தில் ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். யாருக்கு சபாநாயகர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் என்பது 25-ந்தேதி தெரிந்து விடும்.

  அன்று பிரதமர் மோடி சபாநாயகர் பெயரை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. 26-ந்தேதி சபாநாயகர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

  இதற்கிடையே துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதை பா.ஜ.க. ஏற்க மறுத்துள்ளது.

  துணை சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்க பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது. இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை பா.ஜ.க. மேலிடம் நியமனம் செய்துள்ளது.

  ராஜ்நாத்சிங் கூட்டணி கட்சிகளுடன் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஓரிரு நாட்களில் இதில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.