search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "budget"

    • தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்று தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இது.
    • மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் பேசினார்.

    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா கூறியதாவது:

    மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது சமூகத்தின் சில பிரிவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஆனால், இம்முறை அரசாங்கம் அனைவரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. பா.ஜ.க. ஆதரவாளர்கள்கூட அதிருப்தியில் உள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி, ஜிஎஸ்டி மற்றும் மூலதன ஆதாய வரி போன்ற வரிகள் மூலம் பொதுமக்களின் வருமானத்தில் 70 முதல் 80 சதவீதத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டுள்ளது.

    நாங்கள் இங்கிலாந்தைப் போல வரி செலுத்துகிறோம். ஆனால் சோமாலியாவைப் போல சேவைகளைப் பெறுகிறோம்.

    உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், போக்குவரத்து, கல்வி போன்றவற்றை அரசாங்கம் நமக்கு வழங்குகிறதா?

    2019-ல் பா.ஜ.க. அரசுக்கு 303 இடங்கள் கிடைத்தன. ஆனால் மக்கள் அந்த இடங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யை விதித்து அவற்றை 240-க்கு கீழே கொண்டு வந்தனர்.

    கடந்த 25 மாதங்களில் உண்மையான கிராமப்புற ஊதியங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    உணவுப் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றால் தான் குறைவான இடங்கள் கிடைத்தன.

    இந்தப் போக்குகள் தொடர்ந்தால் வருங்கால தேர்தல்களில் பா.ஜ.க. இன்னும் குறிப்பிடத்தக்க இடங்களைவிட சரிந்து 120 இடங்களுக்குக் குறையக் கூடும் என தெரிவித்தார்.

    • பாரபட்சமான பட்ஜெட் என்ற பதாகையுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம்
    • இப்போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு ரூ.15,000 கோடியையும் பீகார் மாநிலத்திற்கு ரூ.26,000 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

    ஆந்திரா, பீகார் மாநிலங்களை தவிர தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர் கூட இந்த பட்ஜெட்டில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட்டை விமர்சித்தன.

    இதனையடுத்து மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில், மத்திய பட்ஜெட் பாரபட்சமாக போடப்பட்டுள்ளது என்பதைக் கண்டித்து பாராளுமன்றத்தில் நாளை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தது.

    இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்காததை கண்டித்து, பாராளுமன்ற வளாகத்தில் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாரபட்சமான பட்ஜெட் என்ற பதாகையுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த திட்டத்தின்மூலம் புதிதாக வேலையில் சேரும் 210 லட்சம் இளைஞர்களுக்கு பலன் கிடைக்கும்
    • உற்பத்தித்துறை சார்ந்த தொழில்களில் உள்ள பணியிடங்களை அதிகரிக்கும் திட்டம் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

    நாட்டில் உள்ள அனைத்து தொழில்துறைகளிலும் ரூ.1 லட்சத்துக்குள் உள்ள சம்பளம் கொண்ட வேலையில் சேரும்  முதல் முறை ஊழியர்களுக்கு அவர்களின் ஒரு மாத சம்பளம் வருங்கால வைப்பு நிதியில் 3 தவணையாக அரசு செலுத்தும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின்மூலம் முதல் முறையாக வேலையில் சேரும் 210 லட்சம் இளைஞர்களுக்கு பலன் கிடைக்கும் என்று அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

    நடந்து முடித்த மக்களவைத் தேர்தலில் இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை பிரச்சனை பாஜகவின் வாக்கு வங்கியை சிதறடித்த நிலையில் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பு முக்கிய நகர்வாக அமைந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் மேற்கூறியதைத் தவிர்த்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும்நோக்கில் மேலும் 2 முக்கிய அறிவிப்புகள் கவனிக்கத்தக்கது.

    உற்பத்தித்துறை சார்ந்த தொழில்களில் உள்ள பணியிடங்களை அதிகரிக்கும் திட்டம் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் வரையறுக்கப்பட்ட ஊக்கத்தொகையானது அவர்கள் வேலைக்கு சேர்ந்த முதல் 4 வருட காலத்துக்கு தொடர்ந்து செலுத்தப்படும். இதனால் புதிதாக வேலையில் சேரும் 30 லட்சம் இளைஞர்கள் பயனடைவர் என்று நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

    அதுமட்டுமின்றி, நிறுவனங்கள் ஒவ்வொரு முறையில் கூடுதலாக ஒரு ஊழியருக்கு வைப்பு நிதி செலுத்தும்போதும் , அந்நிறுவனங்களுக்கு ரூ.3000 வரையிலான தொகையை அரசு திருப்பி செலுத்தும். இந்த திட்டமானது, நிறுவனங்கள் அதிக பணியிடங்களை உருவாக்க வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார். 

    • நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.14 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • மாத ஊதியம் பெறுவோருக்கான ஸ்டாண்டர்ட் டிடக்சன் ரூ.50,000-ல் இருந்து ரூ.75ஆயிரமாக உயர்வு

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று (ஜூலை 23) காலை துவங்கியது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

    அவரது உரையில்,

    மூன்றில் இரண்டு பங்கு மக்கள் புதிய தனிநபர் வருமான வரிமுறை அமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர், அறக்கட்டளைகளுக்கு இதுவரை இருந்த 2 விதமான வரி விதிப்பு முறை இனி ஒரே முறையாக தொடரும், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்வது இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது

    தொழில் முதலீட்டிற்கான ஏஞ்சல் வரி முற்றிலுமாக நீக்கப்படுகிறது, வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைக்கப்படும், ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரியும் குறைக்கப்படுகிறது

    நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.14 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இணையவர்த்தகத்திற்கான TDS வரி 11 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long-term capital gains tax) 10%-ல் இருந்து 12.5% ஆக அதிகரிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மாத ஊதியம் பெறுவோருக்கான ஸ்டாண்டர்ட் டிடக்சன் ரூ.50,000-ல் இருந்து ரூ.75ஆயிரமாக உயர்வு, தனிநபர் புதிய வருமான வரி முறையில் மாற்றம் செய்யப்டுகிறது. ரூ.3லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது

    ஆண்டுக்கு ரூ.3 முதல் 7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதம் வரியும், 7 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது. ரூ.10 முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15 சதவீதமும், ரூ..12 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதமும், 15 லட்சத்துக்கு மேல் வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

    • நகர்ப்புற பகுதிகளில் நிலம் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
    • காசி விஸ்வநாதர் கோயில் மேம்படுத்தப்படும்.

    நடப்பு 2024, 25-ம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ளது.

    நேற்று பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து உரையாற்றிய அவர்,

    முதலீட்டு செலவினங்களுக்காக இந்த ஆண்டு ரூ.11.11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பீகார் வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.11,500 கோடி ஒதுக்கீடு. வெள்ள மேலாண்மைக்காக அசாம் மாநிலத்திற்கும் நிதி உதவி வழங்கப்படும். ஒடிசாவில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதிக பத்திரப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தப்படும். பீகாரில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய ரூ.21,400 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில் நிலம் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

    நாட்டின் விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு. பழங்குடியின மக்களுக்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. காசி விஸ்வநாதர் கோயில் மேம்படுத்தப்படும்.

    25 ஆயிரம் ஊரக வாழ்விடங்களை இணைக்கும் வகையில் கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தொழில் தொடங்குவதை எளிதாக்க ஜன்விஷ்வாஷ் 2.0 மசோதா கொண்டு வரப்படும். நடப்பு நிதியாண்டில் கடன்களை தவிர மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நிதி பற்றாக்குறை மொத்த ஜிடிபி-யில் 4.09 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.48.21 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், விதிகள் எளிமையாக்கப்படும். வெளிநாடுகளில் இந்திய ரூபாய் அடிப்படையில் பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    சோலார் பேனல் திட்டத்தின் கீழ் 1 கோடி குடும்பத்திற்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். பீகாரில் உள்ள விஷ்ணு போதி, மகா போதி ஆலய வழித்தடங்களை மேம்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    ஜிஎஸ்டி வரி முறை மேலும் எளிதாக்கப்படும். புற்றுநோய்க்கான 3 முக்கிய மருத்துகளுக்கு சுங்கவரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. மொபைல் போன்கள், அது தொடர்பான சாதனங்கள் மீதான சுங்கவரி 15 சதவீதம் குறைக்கப்படுகிறது.

    தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதம் குறைப்பு. பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4 சவீதம் குறைக்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது. 20 வகையான தாதுக்கள் மீதான சுங்க வரியும் குறைக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

    • கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.
    • சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி நிதி.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று (ஜூலை 23) காலை துவங்கியது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

    அவரது உரையில்,

    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய இலவச வீடுகள் கட்டப்படும். ஆந்திராவிற்கு சிறப்பு நிதி உதவியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்கப்பட உள்ளது. பீகாருக்கு சிறப்பு நிதியாக ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிப்படுகிறது. பெண்கள், பெண் குழந்தைகள் பயன்பெறும் திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    உட்கட்டமைப்பு உள்ளிட்ட கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. திறன் மேம்பாட்டு பயிற்சி பெறும் இளைஞர்களுககு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும். வரும் 5 ஆண்டுகளில் 500 நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

    நாடு முழுவதும் புதிதாக 12 தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. புதிய சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

    மாநில அரசு வங்கிகளோடு இணைந்து நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம் துவங்கப்படுகிறது. மாநில அரசுகளோடு இணைந்து பல்வேறு நகரங்களை வளர்ச்சி மையமாக அரசு மேம்படுத்தும்.

    திவாலான நிதி நிறுவனங்களில் இருந்து மக்களுக்கு பணத்தை பெற்றுத்தர ஆணையம் அமைக்கப்படும். பிரதமரின் நகர்ப்புற வூட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரு கோடி நகர்ப்புற ஏழைகளின் வீடு தேவையைப் பூர்த்தி செய்ய ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    கூடுதலாக சிறிய வகை அணுமின் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய இ-காமர்ஸ் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட் மீது உரையாற்றி வருகிறார்.
    • கிசான் கிரெடிட் கார்ட் 5 மாநிலங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

    அவரது உரையில்,

    பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீது மக்கள் மீண்டும் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. இந்திய மக்கள் சாதி, மத வேறுபாடின்றி வளர்ச்சி அடைய பிரதமர் மோடி உழைத்து வருகிறார்.

     ✵இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடுகளை அளிக்க ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ✵நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் 4 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம்

    ✵பிரதமரின் இலவச உணவு வழங்கும் கரீப் கல்யாண் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    ✵வேலை வாய்ப்புகளை பெருக்க 9 வகையான முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    ✵வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அரசு கவனம் செலுத்தப் படும் 

    ✵பருவநிலையை தாக்குப்பிடித்து வளரும் 102 வகையான புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது- நிர்மலா சீதாராமன்

    ✵அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு தயார் செய்வோம்...

    ✵மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

    ✵கிசான் கிரெடிட் கார்ட் 5 மாநிலங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

    ✵நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு MSP உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ✵உயர்கல்விக் கடனுக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் 

    ✵பீகாரில் புதிய விமான நிலையம், சாலைகள் அமைக்கப்படும். கயாவில் புதிய தொழில்வழித்தடம் அமைக்கப்படும்.

    ✵20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கும் திட்டம்...

    ✵நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும்.

    ✵ஆந்திராவை பிரிக்கும் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும்.
    • இந்த பட்ஜெட் மீது மக்களிடம் பல்வேறு எதிர்பார்பார்ப்புகள் காணப்படுகிறது.

    புதுடெல்லி:

    நடப்பு 2024, 25-ம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    தற்போது தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

    இதற்காக பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர்.

    அதன்படி 2024, 25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

    இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும்.

    பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

    குறிப்பாக, வளர்ந்த இந்தியா என்ற இலக்கில் செயல்பட்டு வரும் மத்திய அரசு, அதற்கான திட்டங்களை பட்ஜெட்டில் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதை உறுதி செய்வதுபோல பிரதமர் மோடியும், இதை அமிர்த காலத்தின் முக்கியமான பட்ஜெட் என குறிப்பிட்டு உள்ளார்.

    அதேநேரம் இந்த பட்ஜெட் மீது மக்களிடமும் பல்வேறு எதிர்பார்பார்ப்புகள் காணப்படுகிறது. குறிப்பாக, வருமான வரிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    மேலும் விலைவாசியை கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    இதைப்போல வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி விடுவித்தல், ஒப்புதல் வழங்குதல், நிதி ஒதுக்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு போன்ற பல்வேறு மாநில அரசுகளும் எதிர்பார்த்து இருக்கின்றன.

    இந்த எதிர்பார்ப்புகளை மத்திய பட்ஜெட் நிறைவேற்றுமா? என்பது இன்று தெரிந்து விடும்.

    • நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
    • நாட்டின் நலனுக்காக அடுத்து வரும் 5 ஆண்டுகளும் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வாருங்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கிறது.

    எனவே கூட்டத்தொடர் முழுவதும் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டியது அவசியம். கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.

    2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடையும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களின் அனைத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

    நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். வளர்ச்சிக்கான பாதையில் நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. உலகில் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளை விட இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

    எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு அரசியலை கைவிட்டு நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற முன் வர வேண்டும்.

    கசப்பு அரசியலுக்கான நேரம் முடிந்து விட்டது. அரசியலை தேர்தல் நேரத்தில் பேசிக் கொள்ளலாம். பாராளுமன்றத்தின் பயனுள்ள நேரத்தை சிலர் வீணடிக்கிறார்கள். நம்மிடம் நாட்டு மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.

    நாட்டின் நலனுக்காக அடுத்து வரும் 5 ஆண்டுகளும் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வாருங்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.
    • பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கிறது

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமர்பித்தார்.

    பட்ஜெட்டுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்த விரிவான தகவல்களை வழங்குகிறது. அடுத்த நிதியாண்டிற்கான அரசி்ன் கொள்கை முன்னுரிமைகளையும் பிரதிபலிக்கிறது.

    பொருளாதார ஆய்வறிக்கையில் இடம் பெற்று உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    இந்தியாவின் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளர்ச்சி காணும். நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகி வருகிறது.


    தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படுகின்றன. நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

    மோசமான காலநிலையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. நாட்டின் பணவீக்கம் 4.5 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளது.

    கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. 2020 நிதி ஆண்டை விட 2024-ம் ஆண்டில் உண்மையான ஜி.டி.பி. 20 சதவீதம் உயர்ந்துள்ளது. 2025-ம் நிதி ஆண்டில் வலுவான வளர்ச்சி இருக்கும்.

    உலகளாவிய பிரச்சனைகள், வினியோக சங்கிலியில் குளறுபடி, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் பணவீக்கம் திறமையாக கையாளப்பட்டது. இதனால் 2023-ம் நிதி ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் 2024-ம் ஆண்டில் 5.4 சதவீதமாக குறைந்துள்ளது.

    நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு நீண்ட காலம் தெளிவான முன்னோக்கி செல்லும் திட்டம் தேவை. பணவீக்கம் 2025-ம் ஆண்டு 4.5 சதவீதம் ஆகவும், 2026-ம் ஆண்டு 4.1 சதவீதமாகவும் குறையும் என்று ஆர்.பி.ஐ. கணித்து உள்ளது. அதேபோல் 2024-ல் 4.6 சதவீதமாகவும் 2025-ல் 4.2 சதவீதமாகவும் இந்தியாவில் பணவீக்கம் இருக்கும் என்று ஐ.எம்.எப். கணித்து இருக்கிறது.

    பெரும்பாலான மாநிலங்களில் விலைவாசி குறைந்து வருகிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் வேளாண் துறையின் நிலையான வளர்ச்சி 4.18 சதவீதமாக இருக்கிறது. 2023-24-ல் வேளாண் துறை தற்காலிக வளர்ச்சி 1.4 சதவீதமாக உள்ளது.

    பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கிறது. இதில் தொழிற்துறையே முக்கிய பங்கு வகிக்கிறது. 9.5 சதவீத தொழிற்துறை வளர்ச்சி இதற்கு காரணமாகும்.

    வேலை வாய்ப்பு சந்தை கடந்த 6 ஆண்டுகளாக மேம்பட்டு வருகிறது.

    இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பாராளுமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
    • நீட் தேர்வு முறைகேடு தொடர்பான திமுக, காங்கிரஸ் எம்.பி.க்களின் கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடத்த அனைத்து உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    தொடர்ந்து பாராளுமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விவாதம் நடைபெற்றது.

    நீட் தேர்வு முறைகேடு தொடர்பான திமுக, காங்கிரஸ் எம்.பி.க்களின் கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில் 2023-2024 பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    நாளை அவர் நடப்பு 2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பாராளுமன்ற தேர்தல் வர இருந்ததால், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்தார்.

    முழுமையான பட்ஜெட்டை நாளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது, அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் ஆகும்.

    • மக்களுக்கு வழங்கி உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம்.
    • உலக நாடுகளை ஒப்பிடும்போத இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

    புதுடெல்லி:

    பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பாராளுமன்றம் சிறப்பாக நடைபெற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    * பாராளுமன்றத்தின் கவுரவத்தை காப்பாற்றும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்.

    * பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நம்புகிறேன்.

    * பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    * பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

    * மக்களுக்கு வழங்கி உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம்.

    * எனது அரசியல் பயணத்தில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

    * 2047-ல் வளர்ந்த பாரதம் என்ற நோக்கத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    * நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கான வழிகாட்டி.

    * வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான எங்களது உழைப்பு தொடரும்.

    * வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதே எங்கள் கனவு.

    * உலக நாடுகளை ஒப்பிடும்போத இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

    * நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் "அமுத காலத்தில் தாக்கல் செய்யப்படும் உன்னத பட்ஜெட்".

    * 3-வது முறையாக நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

    * பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது.

    * கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 8 சதவீதம் உயர்ந்துள்ளது என்று கூறினார்.

    ×