என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் ரகுபதி"
- இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு.
- ஆட்சியில் பங்கு கேட்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பால் பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
த.வெ.க.வுக்கு 42 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக கூறுகின்றனர். அதை திருப்பி 24 இருந்தாலே பெரிய விஷயம். செங்கோட்டையனுக்கு அரசியல் புள்ளி விவரம் தெரியாது. அவருக்கு டூர் போட தெரியுமே தவிர, மக்களின் மனதை அறிய தெரியாது. 42 இல்லை 24 கூட கிடையாது, அதற்கும் குறைவுதான்.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஒத்துப்போகாது என்பது எடப்பாடி பழனிசாமியின் கனவு, அவரது எதிர்பார்ப்பு. அதனால் அதைச் சொல்கிறார். எடப்பாடி எப்போதும் கனவு கண்டு கொண்டிருப்பவர் என்பது நாடறிந்த உண்மை. அன்புமணி ராமதாசுக்கு பொருளாதாரத்தை பற்றி என்ன தெரியும்? அவர் மருத்துவத்தில் ஏதாவது சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. அவர் பொருளாதார நிபுணரும் அல்ல, மேதையும் அல்ல. அவர் சொல்வது ஏற்கத்தக்கதும் அல்ல. இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தை தந்துள்ள அரசு திராவிட மாடல் அரசு. இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு.
பிரதமர் மோடி மலேசியாவுக்கு சென்றால் தமிழை புகழ்ந்து பேசுவார். ஏனென்றால் மலேசியாவில் தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ள இந்தியர்கள் தான் அதிகம். அதனால் அப்படி பேசுவார். ஆனால் ஒடிசாவுக்கு போனால் தமிழனை திருடன் என்பார். தமிழ் திருடனின் கையில் ஒடிசாவின் சாவி இருக்கிறது என்பார். பீகாருக்கு போனால் தமிழனை திருடன் என்பார். அங்கே எல்லாம் தமிழர்கள் திருடர்கள், ஆனால் வெளிநாட்டிற்கு சென்றால் அவர்களின் பார்வையில் தமிழர்கள் இணைப்பு பாலமாக விளங்க கூடியவர்கள்.
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி குறித்து பேச குழு அமைக்க எப்போது சரியான நேரம் வருகிறதோ அப்போது குழு அமைப்போமே தவிர, இது மிகப்பெரிய கூட்டணி. எல்லோருடனும் பேசுவதற்கு சுருக்கமான காலத்தில் அந்த கூட்டணியை பேசி முடிக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல் எங்கள் தலைவர் வியூகம் வகுத்து கூட்டணியை முடிவு செய்வார். அதில் எந்தவித பிசுபிசுப்பும் வராது யாரும் கவலைப்பட வேண்டாம்.
ஆட்சியில் பங்கு கேட்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதைக் கொடுக்கின்ற இடத்தில் எங்கள் தலைவர் இருக்கிறார். அவரை பொறுத்தவரை திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். அது கூட்டணி கட்சி ஆதரவோடு தொடர வேண்டும் என்பது தான் எங்கள் தலைவரின் விருப்பம். எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி என்பது பொய்பாடி வாக்குறுதிகள். எல்லாமே பொய் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அவர் ஆட்சியில் இருக்கும் போது இதையெல்லாம் செய்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. அவரை மக்கள் நம்பமாட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிறப்பாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் வராது. திராவிட மாடல் ஆட்சி தொடரும்.
எங்கள் கூட்டணியை பற்றி பேச ஆதவ் அர்ஜூனா யார்? எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் அடிமை போல நடத்துவதாக கூறுகிறார்களா. எடப்பாடி பழனிசாமி தான் அடிமை பழனிசாமி. விஜய்யின் அடிமை ஆதவ் அர்ஜூனா. இந்த அடிமைகளின் பேச்சுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் கூட்டணியில் உள்ளவர்களை சம இடத்தில் வைத்துள்ளோம். யாரையும் ஆண்டான் அடிமையை போல் நடத்துகின்ற பழக்கம் தி.மு.க.வுக்கு எந்த காலத்திலும் கிடையாது என்றார்.
- எடப்பாடி பழனிசாமியால் அவர் சொல்லும் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாது.
- த.வெ.க.வின் நிலைமை தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும், வந்த பிறகு பார்க்கலாம்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் என்று பார்க்கிறேன். ஏனென்றால் அவர் கொடுக்கும் வாக்குறுதி அவரது ஆட்சி காலத்திலேயே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள். நிறைவேற்ற முடியாது என்று தெரிந்து சொன்ன வாக்குறுதிகளை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்.
அன்று பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று சொன்னவுடன் எப்படி சாத்தியம், ஆட்சியை முடக்கிவிடும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி இன்று ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று தெரிவித்துள்ளார். அன்று எல்லாவற்றையும் சாத்தியமில்லை என்று சொன்ன அவரது வாய் இன்று பலவற்றை வாக்குறுதியாக கொடுத்து வருகிறார். அவர் முழுக்க முழுக்க பொய் சொல்கிறார்.
எடப்பாடி பழனிசாமியால் அவர் சொல்லும் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாது. அவரது காலத்திலும் இதை நிறைவேற்ற முடியாது. கிருஷ்ணராயபுரத்தில் குவாரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்பேரில் நடவடிக்கை எடுப்பார்கள்.
திருக்குறளை கூறுவார், திருக்குறளை மொழி பெயர்ப்பார், எதை வேண்டுமானாலும் மொழி பெயர்ப்பார். என்ன வேண்டுமானாலும் ஆடுவார், பாடுவார், நடிப்பார் ஆனால் மக்களிடம் விஜய்யால் ஓட்டு வாங்க முடியாது. ஐந்து ஓட்டை கூட வாங்க முடியாத சுயேட்சை வேட்பாளர் கூட, தான் வெற்றி பெறுவேன் என்று கூறுவார். தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும். அதேபோல்தான் த.வெ.க.வின் நிலைமை தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும், வந்த பிறகு பார்க்கலாம்.
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி குறித்து பத்திரிகையாளர்தான் சுமுகமான போக்கு இல்லை என்று கூறி வருகின்றனர். நாங்கள் குழு அமைத்து விடுவோம், பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ள சில பேர் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பேசலாம்.
ஆனால், எங்களுடைய கூட்டணியில் இருந்து நாங்கள் யாரையும் விடுவதாக இல்லை, யாரும் போவதாகவும் இல்லை. அவர்கள் எங்களோடு இருந்தால்தான் வெற்றி என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். வேறு எங்கு சென்றாலும் யாருக்கும் எந்த சீட்டும் கிடைக்காது என்று அவர்களுக்கு தெரியும். கூட்டணிக்கு புதிய கட்சியினர் வருவார்களா என்பதை தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார் என்றார்.
- மத்திய அரசின் இப்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாடு கொண்டாட எதுவுமில்லை.
- டிரெக்கிங், கோபுரம் என வெற்று அறிவிப்புகளை தந்து ஏமாற்றுகிறது பாஜக அரசு
பாஜகவிற்கு சித்தாந்த ரீதியாக சிம்ம சொப்பனமாக தமிழ்நாடு இருப்பதால், தமிழர்கள் மீது பாஜக கொண்டுள்ள வன்மம் தீராது என்பதை இந்த ஒன்றிய பட்ஜெட் நிரூபித்து விட்டது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தேர்தல் நடக்கும் மாநிலங்களைக் கவர பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறார்கள்!
எவ்வளவு அறிவிப்புகளைச் செய்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு விழாது என்பதை தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள்
ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு அவர்களின் அடிமைகளுக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்!
வழக்கமாக ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சமயத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் மாநிலங்கள் கொண்டாடக்கூடிய அம்சங்கள் இருக்கும். ஆனால், ஒன்றிய பாஜக அரசின் இப்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாடு கொண்டாட எதுவுமே இல்லை. பாஜகவிற்குச் சித்தாந்த ரீதியில் சிம்மசொப்பனமாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். தமிழர்கள் மீது பாஜக கொண்டிருக்கும் வன்மம் ஒருபோதும் தீராது என்பதை மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நிரூபித்துவிட்டது.
தமிழ்நாடு என்கிற பெயரே இல்லாத பட்ஜெட்டை கடந்த காலங்களில் தாக்கல் செய்த ஒன்றிய பாஜக அரசு, அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த முறைப் பெயருக்காவது தமிழ்நாடு என்ற வார்த்தையைச் சேர்த்துவிடுவது என்று குறியாக இருந்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதுவும் பெயரளவு அறிவிப்புகள்தான். தமிழ்நாட்டிற்கென பிரத்தியேகமான சிறப்புத் திட்டங்கள் எதையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.
கடந்த காலத்தில் பீகார் மற்றும் ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு திட்டங்களை அள்ளி வழங்கியது ஒன்றிய பாஜக அரசு. குறிப்பாக 'பீகார் பட்ஜெட்டா!' என சொல்லும் அளவிற்கு, வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு 11 ஆயிரம் கோடி, மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க 26 ஆயிரம் கோடி, பெகல்பூர் மின் நிலைய திட்டத்திற்கு 21 ஆயிரம் கோடி எனச் சுமார் 70 ஆயிரம் கோடிக்குச் சிறப்புத் திட்டங்களை அறிவித்தது மோடி அரசு. ஆனால், இப்போதும் தமிழ்நாட்டை வழக்கம் போலவே புறக்கணித்திருக்கிறார்கள்.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 41 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற நமது நீண்ட காலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மோடி குஜராத் முதலமைச்சராக இருக்கும்போது, 50 சதவிகித வரிப் பகிர்வு கேட்டுப் போராடினார். அவர் பிரதமர் ஆன பிறகு அதனைச் செயல்படுத்த மறுக்கிறார்.
விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான சமக்ரா சிக்ஷா நிதி 3,548 கோடி ரூபாய், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஜல்ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி போன்றவற்றை விடுவிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பற்றி அறிவிப்பும் இடம்பெறவில்லை. அமெரிக்காவின் வரிவிதிப்பால் பல்லாயிரம் கோடி இழப்பை சந்தித்திருக்கும் திருப்பூர் ,கோவை தொழிற்துறையை மீட்பதற்கு ஆக்கப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை. தேர்தல் நடக்கும் மாநிலங்களை கவருவதற்காக பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. நாட்டின் பொருளாதாரத்திற்கு 9 விழுக்காடு பங்களிப்பைச் செய்யும் தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு வெறும் 4 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதால் ஆண்டுக்குச் சுமார் ரூ. 5,000 கோடி நிதி இழப்பு ஏற்படும்.
பொதிகை மலையில் டிரெக்கிங், பழவேற்காட்டில் பறவைகளைக் கண்காணிக்க மூன்று புதிய கோபுரங்கள் அறிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒன்றிய அரசின் அறிவிப்பா? ஆட்சியைத் தாங்கி பிடிக்கும் பீகாருக்கும் ஆந்திராவுக்கு வாரிக் கொடுப்பார்கள். ஆட்சி அமைக்கக் கூடிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்தால் ஆயிரம் கோடிகளில் திட்டங்களை அறிவிப்பார்கள். ஆனால், தேர்தல் நடக்கும் காலத்தில்கூட அள்ளிக் கொடுக்க மனம் இல்லாமல் டிரெக்கிங், கோபுரம் என வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு ஏமாற்றப் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் மதுரையில் தொழில் வழித்தடம், தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா, மதுரையிலிருந்து கொல்லம் நவீன தேசிய நெடுஞ்சாலை, சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும், புதிதாக 7 ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்றெல்லாம் சொன்னார்கள். அவையெல்லாம் என்ன நிலையில் இருக்கிறது என சொல்வார்களா?
பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தியப் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையில் இருக்கும். ஆனால், ஞாயிற்றுக் கிழமை ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் பங்குச்சந்தைகள் செயல்பட்டன. அதன் விளைவு என்ன தெரியுமா? பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஒன்றிய பட்ஜெட்டில் பலனே இல்லை என்பதைப் பங்குச் சந்தையே பறைசாற்றிவிட்டது.
தமிழ்நாட்டை முழுவதுமாக புறக்கணித்த பட்ஜெட்டை வெட்கமேயில்லாமல் வரவேற்று அறிக்கைவிடுகிறார் அடிமை பழனிசாமி. சொல்வதற்கு ஒன்றுமேயில்லாமல் தொடர்ந்து 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள நிதி அமைச்சருக்கு வாழ்த்துகள் என்று அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி.
அதிமுகவோ பாஜகவோ எத்தனை முகமூடிகளை அணிந்து வந்தாலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல இனி எப்போதும் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாது. இதனை உணர்ந்து கொண்டதால்தான் ஒன்றிய பட்ஜெட்டில்கூட தமிழ்நாட்டை வஞ்சித்திருக்கிறார்கள். பட்ஜெட்டில் தமிழ்நாட்டை ஒன்றும் செய்யாமல் வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு அவர்களின் அடிமைகளுக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்தார்.
- தேர்தலுக்காக பிரதமர் ஆயிரம் பேசினாலும் தேர்தலில் எதிரொலிக்காது.
- நாங்கள் ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை தந்திருக்கிறோம்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அ.தி.மு.க.வின் ஒரு பகுதியும், அதேபோல பா.ஜ.க.வும் இணைந்ததை தவிர அதை நாங்கள் வலுவாக பார்க்கவில்லை, அது பலவீனமான கூட்டணி. எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் வந்து சேர்ந்தாலும் தி.மு.க. வின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்தியா கூட்டணியை யாராலும் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாட்டு மக்களின் மனதில் யார் இருக்கிறார்களோ அவர்கள் தான் வெல்ல முடியுமே தவிர, கூட்டத்தைக் கூட்டி காட்டி யாராலும் வெல்ல முடியாது.
தமிழ்நாட்டின் மக்களின் மனநிலையை இன்றைக்கு ஒவ்வொரு சர்வே மூலமாக நாங்கள் அறிந்து வருகிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும், அதன் மூலமாக தங்களுக்கு இன்னும் பல நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு மக்களுடைய விருப்பம். அந்த விருப்பத்தை மோடியாலோ, வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது.
கிரைம், மாபியா, கரப்ஷன் எல்லாம் பிரதமர் மோடியின் கட்சிக்கும், அவர்களது கூட்டணிக்கும் தான் பொருந்துமே தவிர எங்களுக்கு ஒரு துளியும் பொருந்தாது. 11 முறை தேர்தலில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு 12-வது தோல்வியை 2026 நிச்சயமாக தரும். துணை முதலமைச்சர் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து கொண்டி ருக்கிறார். தமிழ்நாட்டில் யாராலும் அசைக்க முடியாத ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர, மற்றவர்கள் சொல்லுகின்ற அளவிற்கு பலவீனமான ஆட்சி கிடையாது. பலமான ஆட்சியில் இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
தேர்தலுக்காக பிரதமர் ஆயிரம் பேசினாலும் தேர்தலில் எதிரொலிக்காது. தமிழ்நாட்டு மக்கள் கெட்டிக்காரர்கள், அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பது தெரியும். தங்களுக்கு எந்த ஆட்சி உதவி செய்யும் என்பது தமிழ்நாடு மக்களுக்கு தெரியும். மோடி ஆயிரம் குற்றச்சாட்டுகளை சொல்லலாம், குறைகளை சொல்லலாம். ஆனால் அவர் தனக்கு முன்னால் இருக்கக்கூடிய மாநிலங்களை எல்லாம், குறிப்பாக பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் பார்த்துவிட்டு அதைவிட தமிழ்நாட்டில் ஏதாவது குற்றங்கள் கூட என்று சொன்னால் அப்போது நாங்கள் பதில் அளிக்கிறோம்.
யார் வந்தாலும் வந்தவர்களை வரவேற்கின்ற இயக்கம் தான் தி.மு.க. அவர்களுக்கு உரிய மரியாதை தருகிற தலைவர் தான் மு.க.ஸ்டாலின். எங்களை நம்பி வருகின்றவர்கள் கெட்டுப் போபவர்கள் கிடையாது. மற்றவர்களை நம்பி செல்பவர்கள் மோசம் போவதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
எடப்பாடி பழனிசாமியை, டி.டி.வி.தினகரன் விமர்சனம் செய்து பேசிவிட்டு மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது வெட்கக்கேடு. தேசிய ஜனநாயக கூட்டணி காட்டும் ஒட்டுமொத்த கூட்டத்தையும் நாங்கள் மகளிர் அணி கூட்டத்தின் மூலமாகவே பீட் செய்து விடுவோம். பகுதி பகுதியாக மக்கள் அலையை கொண்டு செல்கின்ற சக்தி இந்தியாவிலேயே தி.மு.க.வுக்கு இருப்பதைப் போல வேறு எந்த இயக்கத்துக்கும் கிடை யாது.
நாங்கள் எப்போதும் எதிரிகள் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இறுமாப்பு கொண்டவர்கள் கிடையாது. எதிரிகள் இருக்கிறார்கள், ஆனால் எங்களோடு மோதும் அளவிற்கு அவர்கள் வலிமையாக இல்லை. நாங்கள் சொன்னதை செய்துள்ளோம். மகளிர் உரிமைத்தொகை தருகிறோம் என்று கூறினோம், அதை தந்துள்ளோம்.
நாங்கள் ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை தந்திருக்கிறோம். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் தருகிறோம் என்று கூறி ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமியை மக்கள் நம்புவார்களா, அல்லது ஒரு கோடியே 32 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையைக் கொடுக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்புவார்களா என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எங்கள் வெற்றிக்கான கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எதிர்க்கட்சிகளே சொல்லாத பொய்யை ஆளுநர் தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.
- இந்தியாவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்களில் 18 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.
சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறி உள்ளார்.
சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை என குற்றம்சாட்டி உள்ள ஆளுநர், தமிழக அரசின் மீது 13 குற்றச்சாட்டுகளை அடுக்கி விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் சட்டசபையில் நடந்தது தொடர்பாக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவயது:
* மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பா.ஜ.க.வின் பிரதிநிதியாக சட்டசபைக்கு வந்துள்ளார்.
* முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் இறுதியில் தேசிய கீதம் பாடுவதும் சட்டசபையின் மரபு.
* ஆளுநர் தனது உரையை வாசிக்கும்போது மைக் ஆப் செய்யப்பட்டது என ஆளுநர் மாளிகை கூறியது முற்றிலும் தவறு.
* ஆளுநர் உரையை படியுங்கள் என்று தான் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.
* எவ்வளவு தாழ்மையுடன் கேட்க வேண்டுமோ அவ்வளவு தாழ்மையுடன் கேட்டார் சபாநாயகர்.
* ஆளுநரின் மைக் அணைக்கப்படவில்லை. ஆளுநரின் மைக் அணைக்கப்பட்டதாக கூறியது பச்சை பொய்.
* எதிர்க்கட்சிகளே சொல்லாத பொய்யை ஆளுநர் தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.
* தமிழக பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் உள்ளது என்பதை மத்திய அரசே ஒத்துக்கொண்டுள்ளது.
* ஆளுநர் கூறியிருப்பது பொய் என்பதற்கு மத்திய அரசின் புள்ளிவிபரங்களே சாட்சி.
* ஆளுநருக்கு தமிழகத்தின் மீது என்ன வெறுப்பு என்பதை அவர்தான் கூற வேண்டும்.
* ஆளுநர் வெளியேறிய சில நிமிடங்களிலேயே விளக்க அறிக்கை வருகிறது.
* முன்னரே இப்படி ஒரு அறிக்கையை தயாரித்து விட்டு திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்.
* பெண்கள் மீதான குற்றங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
* பெண்கள் தைரியமாக வந்து புகார் அளிக்கும் நிலையை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.
* உயர்கல்வி அதிகம் பயிலும் பெண்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
* மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது அதிக கல்வி வளர்ச்சி கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
* அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.
* சிறு குறு தொழில்களில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக கூறுவது தவறு.
* தமிழ்நாட்டில் கஞ்சா உற்பத்தி கிடையாது. போதைப்பொருட்கள் எந்த மாநிலத்தில் இருந்து வருகிறது என்பது உங்களுக்கே தெரியும்.
* இந்தியாவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்களில் 18 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.
* ஆண்டுதோறும் 20,000 பேர் தற்கொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும்.
* தனிமனித தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தனிமனித தற்கொலைக்கு அரசு பொறுப்பாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும்.
- யார் அந்த டி.டி.வி.தினகரன்? அவருக்கு அரசியலே தெரியாது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் பேஸ்ட் காப்பி அடிப்படையிலேயே உள்ளது. கடந்த தேர்தலின் போது மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினோம். அப்போது எடப்பாடி பழனிசாமி குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து படிக்க வைப்பதை போல் மகளிருக்கு ஆசை வார்த்தை கூறி உரிமைத்தொகை தர போகிறோம் என்று தி.மு.க. கூறியுள்ளது என்று சொன்னார்.
உங்களால் உரிமைத்தொகை கொடுக்க முடியாது என்று கூறியவர், இன்று 2000 ரூபாய் கொடுக்க முடியும் என்று கூறியதில் இருந்தே மகளிருக்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எந்த அளவிற்கு மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ள வரவேற்பையும் எடுத்துக்காட்டி உள்ளது என்பதை அறியலாம்.
எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும். அவசர அவசரமாக பந்திக்கு முந்திக்கொண்டு செல்வதைப் போல எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஆனால் அங்கு பந்தியே போடவில்லை, அவர் காத்திருக்கத்தான் வேண்டும். பந்தி போட்டவுடன் நாங்கள் வந்து அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவோம். எடப்பாடியால் எந்த நிதி நிலையையும் சரி செய்ய முடியாது. அவரின் திறமை என்ன என்பதை மக்கள் பார்த்துவிட்டார்கள். அவரால் திறமையாக எதையும் செயல்படுத்த முடியாது.
ராகுல் காந்தி தான் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளது. எனவே கூட்டணிக்குள் எந்த குழப்பமும் ஏற்படாது. யாராலும் அதனை உடைக்க முடியாது. சிலர் எதிர்பார்க்கிறார்கள், அது நடக்காது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்கள் கூட்டணியை விட்டு யாரையும் அனுப்புவது கிடையாது, அந்த பழக்கமும் கிடையாது. அவர்களை அரவணைப்பது தான் தமிழ்நாடு முதலமைச்சர் பழக்கம். தற்போதும் அவர்களை அரவணைத்து கொண்டு தான் இருக்கிறார். அந்த அரவணைப்பிலிருந்து யாராவது செல்ல வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் எங்களோடு இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதற்கு எங்கள் தலைவர் தெளிவான பதிலை சொல்லிவிட்டார்.
வரக்கூடிய தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என டி.டி.வி.தினகரன் ஜாதகம் பார்த்து ஜோசியம் சொல்கிறார். யார் அந்த டி.டி.வி.தினகரன்? அவருக்கு அரசியலே தெரியாது. நாங்கள் தனித்து ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு வெற்றி பெறுவோம். நிச்சயம் தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் என்றார்.
- எடப்பாடி பழனிசாமி தங்கள் கூட்டணியில் புதிய கட்சி இணையும் என்று கூறுகிறார்.
- காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு வந்த வருமானத்தை விட தற்போது பா.ஜ.க. ஆட்சி காலத்தில் அதிக அளவு வந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சீமான் எதுக்கு வேண்டும் என்றாலும் பொங்கல் வைப்பார். திராவிடம் இணைந்தது தான் தமிழ்நாடு. அதனால் திராவிட பொங்கல் கொண்டாடி வருகிறோம். மகாராஷ்டிராவில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனக்கு ஒரு ஆபத்து என்று வந்தவுடன் தமிழர்கள் மீது தாக்குதல் என்று சொல்லிவிடுவார். அண்ணாமலை பேசிய இந்தி அங்கேயும் புரியவில்லை, இங்கேயும் புரியவில்லை.
எங்களுக்கு யாராலும் நெருக்கடி கொடுக்க முடியாது. அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தவும் முடியாது. அவர்கள் கூட்டணி போகப்போக தேய்ந்து கொண்டே போகுமே தவிர, பலப்படுத்த எப்போதுமே முடியாது.
எடப்பாடி பழனிசாமி தங்கள் கூட்டணியில் புதிய கட்சி இணையும் என்று கூறுகிறார். நிறைய கட்சிகள் உருவாகி வருகிறது. லெட்டர் பேட் கட்சிகள், அந்த கட்சிகள் எல்லாம் வரும் என்று கூறி இருப்பார். ஜனநாயகனுக்கு பலரும் குரல் கொடுத்து இருக்கக்கூடிய நிலையில் அது குறித்து சம்பந்தப்பட்ட நடிகர் விஜய் குரல் கொடுக்காததை வைத்து அவருடைய தைரியத்தை தெரிந்து கொள்ளலாம்.
1965-ம் ஆண்டு நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் பராசக்தி. அன்றைய நிகழ்வுகள் இன்று எதிர்ப்பு போராட்டம். இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் மாணவர் பட்டாளம் துணிந்து எழுந்து நடத்திய போராட்டம். அப்போதுள்ள காங்கிரஸ் கட்சி வேறு, தற்போதுள்ள காங்கிரஸ் கட்சி வேறு.
காங்கிரஸ், தி.மு.க.வினருக்குள் ஆட்சியில் பங்கு தொடர்பாக தற்போது எழுந்துள்ள விமர்சனத்தால் கூட்டணிக்குள் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. அவரவர்கள் அவர்களது விருப்ப கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு வந்த வருமானத்தை விட தற்போது பா.ஜ.க. ஆட்சி காலத்தில் அதிக அளவு வந்துள்ளது. அதில் சிறு துளியை மட்டுமே தந்துள்ளனர். நிச்சயமாக அதிகமாக தொகையை அவர்கள் தரவில்லை. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது கிடைத்த நிதி தற்போது எங்களுக்கு கிடைக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தான் தமிழ்நாட்டிற்கு சாலை, கத்திப்பாரா மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கிடைத்தது.
அமித்ஷா, மோடி அடுத்தடுத்து தமிழகம் வருகை தந்தாலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்களுக்கு ஏமாற்றத்தத்தை தான் ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி அன்புமணி கூட்டணி மாறிக் கொண்டிருக்கிறார்’’ என விமர்சித்த பழனிசாமிதான், இன்றைக்கு வேடந்தாங்கலில் அன்புமணியோடு ஐக்கியமாகியிருக்கிறார்.
- மக்களை ஏமாற்றும் காதில் பூ சுற்றும் வேலையை எல்லாம் செய்தவர், திமுக அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை பற்றிப் பேசுவதற்கு அருகதை அற்றவர்.
ஆட்சியில் இருக்கும்போது, மக்களை பற்றி கவலைப்படாமல் , ஆட்சி முடியும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்டு அவர்களின் குறையை தீர்க்கப் போகிறேன் என்பது கடைந்தெடுத்த கபட வேலை என 'உங்கள் கனவை சொல்லுங்கள்' திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் இத்திட்டம் குறித்து பேசுவதற்கு பழனிசாமி தகுதியற்றவர் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"மக்களை ஏமாற்றும், காதில் பூ சுற்றும் வேலையை எல்லாம் செய்த பழனிசாமி, 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை பற்றிப் பேசுவதற்கு அருகதை அற்றவர். திமுக அரசு புதுத் திட்டம் கொண்டு வந்தால், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திகு திகு என எரிகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அன்புமணி சேர்ந்த போது, ''வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி அன்புமணி கூட்டணி மாறிக் கொண்டிருக்கிறார்'' என விமர்சித்த பழனிசாமிதான், இன்றைக்கு வேடந்தாங்கலில் அன்புமணியோடு ஐக்கியமாகியிருக்கிறார்.
கூட்டணிக்கு ஆள் கிடைக்காதா? என ஓர் ஆண்டுகாலமாக ஓலமிட்டுக் கொண்டிருந்த பழனிசாமிக்கு, திமுக அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம் நினைவுக்கு வந்து, ஒப்பாரி ஓலமிட்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் கனவுகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க வேண்டும் எனும் தொலைநோக்கோடு மக்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து செயலாற்ற 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' எனும் புதுமையான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில், தன்னார்வலர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் சந்தித்து அவர்களின் கனவுகளைக் கேட்டறிய உள்ளனர். அவர்களின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்து நிறைவேற்றுவதை அரசு இலக்காக வைத்துச் செயல்பட உள்ளது. ஆனால் மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் எப்பொழுதும் அமித்ஷா காலடியில் கிடக்கும் அடிமைக் கனவோடே வாழும் பழனிசாமி இந்தத் திட்டத்தைப் பற்றி ஆதாரமற்ற அரைவேக்காட்டுத்தனமான அவதூற்றைக் கக்கியிருக்கிறார்.
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம் வரவேற்பை பெறும் போது, அதிலும் தனக்கு ஸ்கோர் கிடைக்குமா? எனப் பாய்ந்து வந்து, புகுந்து கொள்வார். எப்படி லேப் டாப் திட்டம், பொங்கல் பரிசுத் தொகுப்பு எனத் தன்னை இணைத்துக் கொண்டாரோ அது போல! 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்று ஒரு திட்டத்தை திமுக அரசு அறிவித்து, மக்களின் கனவைத்தான் கேட்கிறது. அதன்பிறகுதான் அது திட்டமாகச் செயல்வடிவம் பெறும். கனவைக் கேட்டதற்கே பழனிசாமி ஏன் அலறுகிறார்? ஆகாயத்திற்கும் வானத்திற்கும் குதிக்கிறார்?
ஆட்சி முடியும் நேரத்தில், கனவைச் சொல்லுங்கள் என்று கேட்கிறார்களே எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் பழனிசாமி. 2021-ல் ஆட்சி முடியும் நேரத்தில் குறைகளை அரசுக்குத் தெரிவித்துத் தீர்வு காணும் 1100 எண் தொலைப்பேசி சேவை திட்டத்தைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 10 நாள் முன்பு பழனிசாமி கொண்டு வந்தாரே... அது கடைந்தெடுத்த கபட வேலை இல்லையா? 2021 தேர்தல் தேதி அறிவிப்புக்கு இரண்டு நாள் முன்பு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது பழனிசாமியின் உதடுகள்தானே! மினி கிளினிக் தொடக்கம், 9, 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ், வன்னியர் உள் ஒதுக்கீடு என எத்தனை குட்டிக்கரணங்களைத் தேர்தல் நேரத்தில் பழனிசாமி அடித்தார்?
மக்களை ஏமாற்றும் காதில் பூ சுற்றும் வேலையை எல்லாம் செய்தவர், திமுக அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை பற்றிப் பேசுவதற்கு அருகதை அற்றவர். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை முதல்வர் அவர்களிடம் நேரடியாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ தெரிவித்து மனுக்கள் மீது உரிய காலக்கெடுவுக்குள் தீர்வு காணப்பட்ட திட்டம்தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த மக்கள் தொடர்புத் திட்டம் மகத்தான வரவேற்பை பெற்றது. அப்படி மக்களோடு நேரடி தொடர்பு கொண்ட திட்டம் எப்படி வெற்றி பெற்றதோ அதேப் போல 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டமும் நிச்சயம் வெற்றி பெறும்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், மக்களிடம் செல் என்றார். அவரின் கொள்கையை நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கும் திமுக அரசு, 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை செயல்படுத்துவதற்காக மக்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறது. மக்களைவிட்டு எப்போதுமே எட்டி நிற்கும் எடப்பாடிக்கு இந்த திட்டம் எட்டிக்காயாகத்தான் இருக்கும்!
அடிமை ஆட்சி நடத்திய பழனிசாமியின் அருவருப்பான ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் கொடுங்கனவுக்கு ஆளான அவலநிலையை மாற்றி, மக்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தியிருப்பது திராவிட மாடல் ஆட்சிதான். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு மக்களின் எண்ணம் அறிந்து செயலாற்றும் அரசு, அவர்களின் எண்ணங்களைச் செயல்படுத்தும் அரசு, இன்று தமிழ்நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றவும் திட்டம் தீட்டியிருக்கிறது.
திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களின் மீது அவதூற்றைப் பரப்புவதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் பழனிசாமி. வீண் அவதூறுகளைப் பரப்பிப் புலம்புவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டுக்குப் பயனுள்ள கனவு எதையாவது வைத்திருந்தால் தெரிவிக்கட்டும். அதையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றும். அடுத்த முதல்வர் நான்தான் என்ற பழனிசாமியின் கனவு மட்டும் எப்போதும் காணல் நீராகத்தான் இருக்கும்." என தெரிவித்தார்.
- திருப்பரங்குன்றம் கல் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று நாங்கள் கேட்கிறோம்.
- தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டியது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவரின் பொறுப்பு.
திருப்பரங்குன்றம் வழக்கில் நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரகுபதி, சுடுகாட்டை தவிர வேறு எங்கும் உடலை எரிக்க முடியாது. அதைப்போலத்தான் மற்ற பழக்க வழக்கங்களையும் மாற்றமுடியாது என்று கூறியிருந்தார். இவரின் இந்த கருத்து சர்ச்சையானது. இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
* திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேய் கதையை அரசு அவிழ்த்துவிடுவதாக நீதிமன்றம் கூறுகிறது.
* பேய் கதை என நீதிபதிகள் கூறியதால் சுடுகாடு என்ற உதாரணத்தை நான் கூறினேன்.
* பேய் இருக்கிறது என்று கதை சொல்லி இருக்கிறார்கள். அதற்கு நான் சுடுகாடு என்று கூறினேன். அதில் தப்பில்லை.
* அரசு பேய் கதைகள் சொல்கிறது என நீதிபதிகள் சொல்லும்போது நான் கூறியதில் தவறில்லை.
* நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எந்த ஒரு கருத்தையும் நான் கூறவில்லை. சட்டத்திற்கு உட்பட்டுதான் பேசினேன்.
* முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் அதனை சுட்டிக்காட்டும் உரிமை வழக்கறிஞராகிய எனக்கும் உண்டு.
* திருப்பரங்குன்றம் கல் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று நாங்கள் கேட்கிறோம்.
* தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டியது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவரின் பொறுப்பு என்றார்.
- கடந்த 100 ஆண்டுகளில் கல் தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை
- மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுகவினர் செயல்பாடுகளை, நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கோயில் கல் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
"கடந்த 100 ஆண்டுகளில் கல் தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. சுடுகாட்டில் தான் உடலை எரிக்க வேண்டும் என்றால் சுடுகாட்டில் தான் எரிக்க வேண்டும். வேறு இடத்தில் எரிக்க மாட்டார்கள். அது போல எந்த பழக்க வழக்கத்தையும் மாற்றக் கூடாது. ஒரு இடத்தில் இதுதான் நடக்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் அதுதான் நடக்க வேண்டும். இந்த தீர்ப்பின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கின்றனர். இல்லாத ஒரு வழக்கத்தை புகுத்தக்கூடாது." என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் ரகுபதியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பெயரில், "சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது" என்று திமுக அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழ்நாடு மக்களின் ஆன்மீக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதலமைச்சர் உட்பட திமுகவினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், திமுக அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுகவினர் செயல்பாடுகளை, நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கின்றனர். நாவடக்கம் இன்றித் திரியும் திமுகவினருக்கு, தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்று கடந்த 100 ஆண்டு காலமாக இல்லை.
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு குறித்து கூறியதாவது:-
* திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்.
* உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.
* தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்று கடந்த 100 ஆண்டு காலமாக இல்லை.
* திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது.
* யாரோ ஒருவர் கேட்டதற்காக தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறார்கள்.
* இல்லாத ஒரு வழக்கத்தை நீதிமன்றம் ஏன் புகுத்த வேண்டும்?
* பிரச்சனைக்குரிய அந்த தூண் தீபத்தூண் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
- பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
- மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கும்போது தமிழகத்தை மற்றும் மத்திய அரசு வஞ்சிக்கிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரேஷன் கார்டுக்கு இன்று 3000 ரூபாய் அறிவித்துள்ளோம். இதுவரை தமிழக வரலாற்றில் 2500க்கு மேல் கொடுக்கப்படவில்லை. 3000 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டு விடுவார்கள் என நம்புகிறீர்களா..?
எங்களது திட்டங்களை வைத்து தான் மக்கள் ஓட்டு போடுவார்கள். முதல்வரின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துவிட்டன. தமிழகத்தில் நாங்கள் அமித் ஷாவை மண்ணை கவ்வ வைப்போம்,
உதயநிதியை முதலமைச்சர் என்று எப்போதும் நாங்கள் சொல்லவில்லை. துணை முதலமைச்சர் என்றுதான் கூறி வருகிறோம்.
இந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் தான். எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைவராக வரலாம். தேர்தல் பணிக்காக அவர் இன்று சுழன்று பணியாற்றி வருகிறார்.
ஊழல் குற்றச்சாட்டு குறித்து கருத்து சொல்கிற தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அவர்தான் ஒண்ணாம் நம்பர் ஊழல்வாதி.
அமித் ஷா மேடை ஏறுவதற்கு தாமதமாவதற்கு கூட்டம் இல்லாததே காரணம். தமிழகத்தில் அமித் ஷாவுக்கு இடம் கிடையாது. பா.ஜ.க. பருப்பு தமிழகத்தில் வேகாது.
பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. முதலில் கூட்டணி கட்சிகளின் கூட்டம் தான் என்று அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்து கொள்ளவில்லை. அமித் ஷா சொல்வதை கூட்டணி கட்சிகளிடமே நடக்கவில்லை. அப்புறம் எங்கு வெளியே நடப்பது.
தமிழக அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் கூறுவது தான் வேடிக்கையானது.
காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அது எங்கள் பிரச்சனையாகாது. இந்தியா கூட்டணி தமிழகத்தில் மிக பலமாக உள்ளது. இங்கிருந்து எந்த கட்சியும் வெளியே செல்லாது . மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
எங்களுடைய வெற்றி தெளிவாக உள்ளது தைரியமாக நாங்கள் உள்ளோம். எதைப் பற்றியும் நாங்கள் கவலைப்படக்கூடிய அவசியம் கிடையாது. எங்களுக்கு அடுத்தது யார் என்பது தான் தற்போது பிரச்சனை.
முதல்வர் சில தினங்களுக்கு முன் அறிவித்த ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் எந்த எதிர்மறை கருத்துக்களும் அவர்களிடம் இருந்து வரவில்லை.
90 நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அண்ணாமலை கூறி வருகிறார். எந்த 90 நாட்கள் என்று அவர் தெரிவிக்கவில்லை. அண்ணாமலை எதையாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார் அதைப்பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட அவசியமில்லை.
தமிழக அமைச்சர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி வருகிறார்கள் என்று நேற்று அமித் ஷா கூறியுள்ளார். நாங்கள் எங்கும் வெள்ளை பெயிண்ட் அடிக்கவில்லை.
தி.மு.க. மீது எதையாவது பழி சுமத்த வேண்டும் என்பதற்காக கரூர் சம்பவத்திற்கும் செந்தில்பாலாஜிக்கும் சம்பந்தம் உள்ளது என்று பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி வருகிறார் . இது அவருடைய கண்டுபிடிப்பு. எங்கள் மீது பழி போட முடியாது.
தமிழகத்திற்கு வழக்கமாக ஒதுக்க வேண்டிய நிதியை தான் மத்திய அரசு ஒதுக்கியது. எங்களுக்கு சிறப்பு நிதி எதுவும் வரவில்லை என்று தான் நாங்கள் கூறுகிறோம்.
மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கும்போது தமிழகத்தை மற்றும் மத்திய அரசு வஞ்சிக்கிறது.
காங்கிரஸ் வெளியேறப் போகிறது என்று எடப்பாடி பகல் கனவு கண்டு வருகிறார். தி.மு.க.வை குறை கூற எடப்பாடிக்கு ஒரு சதவீதம் கூட தகுதி கிடையாது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பேட்டியின்போது உடன் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை, புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாகத்அலி இருந்தனர்.






