என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Ragupathi"

    • இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு.
    • ஆட்சியில் பங்கு கேட்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பால் பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    த.வெ.க.வுக்கு 42 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக கூறுகின்றனர். அதை திருப்பி 24 இருந்தாலே பெரிய விஷயம். செங்கோட்டையனுக்கு அரசியல் புள்ளி விவரம் தெரியாது. அவருக்கு டூர் போட தெரியுமே தவிர, மக்களின் மனதை அறிய தெரியாது. 42 இல்லை 24 கூட கிடையாது, அதற்கும் குறைவுதான்.

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஒத்துப்போகாது என்பது எடப்பாடி பழனிசாமியின் கனவு, அவரது எதிர்பார்ப்பு. அதனால் அதைச் சொல்கிறார். எடப்பாடி எப்போதும் கனவு கண்டு கொண்டிருப்பவர் என்பது நாடறிந்த உண்மை. அன்புமணி ராமதாசுக்கு பொருளாதாரத்தை பற்றி என்ன தெரியும்? அவர் மருத்துவத்தில் ஏதாவது சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. அவர் பொருளாதார நிபுணரும் அல்ல, மேதையும் அல்ல. அவர் சொல்வது ஏற்கத்தக்கதும் அல்ல. இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தை தந்துள்ள அரசு திராவிட மாடல் அரசு. இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு.

    பிரதமர் மோடி மலேசியாவுக்கு சென்றால் தமிழை புகழ்ந்து பேசுவார். ஏனென்றால் மலேசியாவில் தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ள இந்தியர்கள் தான் அதிகம். அதனால் அப்படி பேசுவார். ஆனால் ஒடிசாவுக்கு போனால் தமிழனை திருடன் என்பார். தமிழ் திருடனின் கையில் ஒடிசாவின் சாவி இருக்கிறது என்பார். பீகாருக்கு போனால் தமிழனை திருடன் என்பார். அங்கே எல்லாம் தமிழர்கள் திருடர்கள், ஆனால் வெளிநாட்டிற்கு சென்றால் அவர்களின் பார்வையில் தமிழர்கள் இணைப்பு பாலமாக விளங்க கூடியவர்கள்.

    காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி குறித்து பேச குழு அமைக்க எப்போது சரியான நேரம் வருகிறதோ அப்போது குழு அமைப்போமே தவிர, இது மிகப்பெரிய கூட்டணி. எல்லோருடனும் பேசுவதற்கு சுருக்கமான காலத்தில் அந்த கூட்டணியை பேசி முடிக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல் எங்கள் தலைவர் வியூகம் வகுத்து கூட்டணியை முடிவு செய்வார். அதில் எந்தவித பிசுபிசுப்பும் வராது யாரும் கவலைப்பட வேண்டாம்.

    ஆட்சியில் பங்கு கேட்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதைக் கொடுக்கின்ற இடத்தில் எங்கள் தலைவர் இருக்கிறார். அவரை பொறுத்தவரை திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். அது கூட்டணி கட்சி ஆதரவோடு தொடர வேண்டும் என்பது தான் எங்கள் தலைவரின் விருப்பம். எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி என்பது பொய்பாடி வாக்குறுதிகள். எல்லாமே பொய் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அவர் ஆட்சியில் இருக்கும் போது இதையெல்லாம் செய்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. அவரை மக்கள் நம்பமாட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிறப்பாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் வராது. திராவிட மாடல் ஆட்சி தொடரும்.

    எங்கள் கூட்டணியை பற்றி பேச ஆதவ் அர்ஜூனா யார்? எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் அடிமை போல நடத்துவதாக கூறுகிறார்களா. எடப்பாடி பழனிசாமி தான் அடிமை பழனிசாமி. விஜய்யின் அடிமை ஆதவ் அர்ஜூனா. இந்த அடிமைகளின் பேச்சுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் கூட்டணியில் உள்ளவர்களை சம இடத்தில் வைத்துள்ளோம். யாரையும் ஆண்டான் அடிமையை போல் நடத்துகின்ற பழக்கம் தி.மு.க.வுக்கு எந்த காலத்திலும் கிடையாது என்றார். 

    • எடப்பாடி பழனிசாமியால் அவர் சொல்லும் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாது.
    • த.வெ.க.வின் நிலைமை தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும், வந்த பிறகு பார்க்கலாம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் என்று பார்க்கிறேன். ஏனென்றால் அவர் கொடுக்கும் வாக்குறுதி அவரது ஆட்சி காலத்திலேயே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள். நிறைவேற்ற முடியாது என்று தெரிந்து சொன்ன வாக்குறுதிகளை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்.

    அன்று பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று சொன்னவுடன் எப்படி சாத்தியம், ஆட்சியை முடக்கிவிடும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி இன்று ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று தெரிவித்துள்ளார். அன்று எல்லாவற்றையும் சாத்தியமில்லை என்று சொன்ன அவரது வாய் இன்று பலவற்றை வாக்குறுதியாக கொடுத்து வருகிறார். அவர் முழுக்க முழுக்க பொய் சொல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமியால் அவர் சொல்லும் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாது. அவரது காலத்திலும் இதை நிறைவேற்ற முடியாது. கிருஷ்ணராயபுரத்தில் குவாரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்பேரில் நடவடிக்கை எடுப்பார்கள்.

    திருக்குறளை கூறுவார், திருக்குறளை மொழி பெயர்ப்பார், எதை வேண்டுமானாலும் மொழி பெயர்ப்பார். என்ன வேண்டுமானாலும் ஆடுவார், பாடுவார், நடிப்பார் ஆனால் மக்களிடம் விஜய்யால் ஓட்டு வாங்க முடியாது. ஐந்து ஓட்டை கூட வாங்க முடியாத சுயேட்சை வேட்பாளர் கூட, தான் வெற்றி பெறுவேன் என்று கூறுவார். தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும். அதேபோல்தான் த.வெ.க.வின் நிலைமை தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும், வந்த பிறகு பார்க்கலாம்.

    காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி குறித்து பத்திரிகையாளர்தான் சுமுகமான போக்கு இல்லை என்று கூறி வருகின்றனர். நாங்கள் குழு அமைத்து விடுவோம், பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ள சில பேர் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பேசலாம்.

    ஆனால், எங்களுடைய கூட்டணியில் இருந்து நாங்கள் யாரையும் விடுவதாக இல்லை, யாரும் போவதாகவும் இல்லை. அவர்கள் எங்களோடு இருந்தால்தான் வெற்றி என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். வேறு எங்கு சென்றாலும் யாருக்கும் எந்த சீட்டும் கிடைக்காது என்று அவர்களுக்கு தெரியும். கூட்டணிக்கு புதிய கட்சியினர் வருவார்களா என்பதை தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார் என்றார். 

    • கார்த்திகை தீபம் என்பது தமிழ் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படக் கூடியது.
    • தமிழர்கள் கொண்டாடக்கூடிய பண்டிகையில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் இல்லை என்றார்.

    சென்னை:

    இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    கார்த்திகை தீபம் என்பது தமிழ் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படக் கூடியது.

    தமிழர்கள் கொண்டாடக்கூடிய பண்டிகையில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் இல்லை.

    தமிழ்நாட்டில் எந்த வழியிலாவது காலூன்ற வேண்டும் என மதவாத சக்திகள் சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர்.

    2014-ம் ஆண்டின் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. 2014-ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அரசு செயல்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு உள்ளது; இது தனி நீதிபதியின் தீர்ப்பு.

    2014ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அறியாமல் புதிதாக ஒரு வழக்கை தொடுத்து தற்போது தீர்ப்பை பெற்றுள்ளனர்.

    திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சனையை உருவாக்குகிறார்கள். மத ஒற்றுமை, மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்கிறது.

    ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது பெற்ற தீர்ப்பையே மறந்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பா.ஜ.க.வுக்கு முழு அடிமை என்பதை உறுதிசெய்திருக்கிறார் பழனிசாமி.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என தெரிவித்தார்.

    • சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு சிவகிரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் ரகுபதி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தென்காசி மாவட்டத்தின் ஆரம்ப எல்லையான சிவகிரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அமைச்சர் ரகுபதிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிவகிரி தேவர் சிலை அருகே வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சங்கரன்கோவில் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிவகிரி பேரூர் செயலாளர் செண்பக விநாயகம், பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அமைச்சர் ரகுபதி சிவகிரியில் உள்ள தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதப்பன், யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், ராயகிரி செயலாளர் குருசாமி, முன்னாள் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ராயகிரி விவேகானந்தன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும், பார்த்துக்கொள்ளலாம்.
    • அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசு அம்பேத்கர் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க காரணமாக இருக்கலாம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் பழைய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. சார்பில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்னும் 11 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. ஒன்றுக்கு மட்டும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மீதமுள்ள 10-க்கு தரக்கூடிய நிலையில் விரைவில் அவர் ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் சட்டமன்றத்திலேயே சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி இந்திய குடியரசு தலைவருக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

    அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும், பார்த்துக்கொள்ளலாம். அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் கவலை இல்லை. மடியில் கனம் இல்லாததால் வழியில் பயமில்லை. அமைச்சர்கள் எதையும் சந்திக்க தயாராக உள்ளனர். அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசு அம்பேத்கர் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

    • மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை கூட கவர்னர் கூறவில்லை.
    • தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என கவர்னர் நினைக்கிறார்.

    சென்னை:

    சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- சட்டமன்றத்தில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து விட்டாரா? இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வருகிறதே?

    அமைச்சர் ரகுபதி பதில்:- அந்த 10 சட்ட மசோதாக்களை நாங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினோம். அதை திருப்பி அனுப்புவதற்கு முன்பு கவர்னர் இன்னென்ன காரணங்களுக்காக நான் திருப்பி அனுப்புகிறேன் என்று குறிப்பிட்டு இருப்பாரேயானால், அதற்கான தகுந்த விளக்கங்களை நாங்கள் தந்து, அந்த மசோதாக்களை நிறைவேற்றி திருப்பி அனுப்பி இருப்போம்.

    ஆனால் அப்போது காரணம் தெரிவிக்காமல் 'சும்மா' அனுப்பி விட்டு இப்போது நாங்கள் மீண்டும் சட்டமன்றத்தில் 10 மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பிய உடன், தான் ஒப்புதல் தர வேண்டும் என்கின்ற கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கின்ற நிலையிலே, அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காக இன்றைக்கு உள்துறை அமைச்சகத்தின் மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பி இருப்பதாக ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார்.

    கேள்வி:- இந்த விசயத்தில் அவர் தொடர்ந்து காலதாமதப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கிறீர்களா?

    பதில்:- தன்னிடம் இருக்கக் கூடிய அதிகாரம் பறி போகக்கூடாது என்ற எண்ணம் ஏன் அவருக்கு வருகிறது என்று தெரியவில்லை.

    ஒரு மாநில அரசுக்கு ஒரு துணை வேந்தரை நியமிக்க கூட அதிகாரம் கூடாது என்று நினைப்பது எந்த அடிப்படையில் நியாயமான ஒன்று என்று புரியவில்லை.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஒரு குழுவை நியமிக்கிறோம். அந்த குழுவில் கவர்னரின் பிரதிநிதியும் இருக்கிறார். அரசின் பிரதிநிதியும் இருக்கிறார். சிண்டி கேட் பிரதிநிதியும் அதில் உள்ளார்.

    அந்த தேடுதல் குழுதான் மூன்று பேரையும் பரிந்துரை செய்கிறது. அதில் ஒருவரை துணைவேந்தராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

    கவர்னர் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாநில அரசாங்கம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்வதிலே என்ன தவறு இருக்கிறது?

    மக்கள் உரிமை பறிக்கப்படாமல் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மசோதாக்களை அவருக்கு 2-வது முறையாக அனுப்பி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உரை எனது மனசாட்சிக்கு விரோதமாக இருக்கிறது என்று சொல்லி கவர்னர் வராமல் இருந்திருக்கலாம்.
    • தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது என்பதை புள்ளி விவரத்தோடு நாங்கள் சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

    சென்னை:

    சட்டமன்ற பேரவையில் இன்று கவர்னர் உரை தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் உரையோடு சட்டமன்ற பேரவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பு தரப்பட்டு, ஜனநாயகத்தை மதிக்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னரை முறைப்படி அழைத்து இன்று சட்டமன்றத்தில் முதல் கூட்டத்தைக் கூட்டினார்.

    கேரள கவர்னர் இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசி விட்டுச் சென்றுவிட்டார். நம்முடைய தமிழ்நாட்டின் கவர்னர், கவர்னர் உரையிலிருந்து பேசாமல் தனது சொந்த சில கருத்துகளை பேசிவிட்டு அமர்ந்து விட்டார்.

    தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றார். ஆனால், மரபுப்படி முதலில் தமிழ்த் தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும். இதனை கடந்த ஆண்டிலேயே நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

    ஆனால், தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய கவர்னர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அங்கிருக்கக் கூடிய அரசாங்கங்களுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    நிச்சயமாக கவர்னரின் நடவடிக்கைகள், வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு வலிமையை உருவாக்கும் வண்ணம் இன்று அவர் பதிலளித்திருக்கிறார். ஜனநாயகத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    அவருக்கு கொடுத்த உரையில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் கேட்கலாம். உரையில், உண்மைக்கு மாறாக இருக்கிறது, சரியாக இல்லை என்று அவர் கூறினால் அதற்கு விளக்கம் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழ்நாடு அனைத்து விதத்திலும் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது என்பதை புள்ளி விவரங்களோடு நாங்கள் சொல்லுகின்றபோது, அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவமும், அதனைத் தாங்கிக் கொள்கிற சக்தியும் கவர்னருக்கு இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.

    தான் ஒரு மாநிலத்தின் தலைவராக, தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம், இந்திய ஒன்றியத்தில் பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கிறது, தேசிய அளவில், தமிழ்நாட்டின் ஜி.டி.பி. உயர்ந்திருக்கிறது.

    விளையாட்டுப் போட்டிகளில் ஐந்தாவது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு வந்திருக்கிறோம், பல துறைகளில் முதலிடத்திற்கு வந்துள்ளோம், இவற்றையெல்லாம் கவர்னர் உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ளவோ, படிக்கவோ மனமில்லாமல், இந்த அரசின் சாதனைகளை தான் வாசிக்க விருப்பமில்லாமல், பொய்யான கருத்துகளை தெரிவித்து, தனக்கு ஏற்றாற்போல அவர் படித்திருக்கின்றார்.

    தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது என்பதை புள்ளி விவரத்தோடு நாங்கள் சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம். கவர்னர் விளக்கம் கேட்டிருந்தால் நிச்சயமாகக் கொடுத்திருப்போம்.



    ஆனால், அவர் ஏதும் விளக்கங்கள் கேட்கவில்லை. அதனால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன. இந்த உரை எனது மனசாட்சிக்கு விரோதமாக இருக்கிறது என்று சொல்லி கவர்னர் வராமல் இருந்திருக்கலாம். ஆனால், ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கவர்னர் என்ற அந்தப் பதவிக்கு ஜனநாயகத்தில் நாம் உரிய மரியாதை தர வேண்டும் என்று மதிப்புக் கொடுக்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் இருக்கின்ற காரணத்தினால்தான், இன்று நடைபெற்ற இத்தனை நிகழ்வுகளையும் நாங்கள் தாங்கிக் கொண்டிருக்கிறோம்.

    தேசிய கீதத்தை வாசிக்க வேண்டுமென்று சொல்கின்ற கவர்னர் நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் உரையை படிக்கின்றவரை அங்கேயே பொறுமையோடு இருந்தவர் இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருக்கலாம், சபாநாயகர் தமிழில் பேசுவது என்னவென்று அவருக்குத் தெரியாது. ஆனால், சபாநாயகர் பேசும்போது, திடீரென்று கவர்னர் எழுந்து சென்று விட்டார். இரண்டு நிமிடம் பொறுத்திருந்து, இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்பு உரிய மரியாதையோடு அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர் மரியாதையை அவரே தவற விடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குஜராத், மகாராஷ்டிராவில் தான் அதிக போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • தி.மு.க. மீது அடிப்படை ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை :

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தி.மு.க.வை களங்கப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. செய்யும் அரசியல் எடுபடாது.

    * வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை பயன்படுத்திய பா.ஜ.க. தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவையும் பயன்படுத்துகிறது.

    * பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வும் கைகோர்த்து செயல்படுகிறது.

    * தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. போதைப்பொருள் பயன்படுத்துவதை முழுமையாக தடுத்து வைத்துள்ளோம்.

    * குஜராத், மகாராஷ்டிராவில் தான் அதிக போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    * தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.

    * தி.மு.க. மீது அடிப்படை ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    * போதைப்பொருள் தொடர்பான புகார் எழுந்தவுடனே ஜாபர் சாதிக்கை தி.மு.க.வில் இருந்து நீக்கிவிட்டோம். அவருக்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    • 10 நாட்களில் தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும், டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக்கின் தொடர்பு பற்றியும் கவர்னரை சந்தித்து புகார் அளிக்கப் போவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதன்படி கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணியளவில் நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

    இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

    எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்தார். பின்னர் போதைப்பொருட்கள் நடமாட்டம் குறித்த பட்டியல் அடங்கிய புகார் மனுவை அளித்தார்.

    கவர்னர் ஆர்.என்.ரவியிடம் சி.வி.சண்முகம் போதைப்பொருட்களின் நடமாட்டம் பற்றியும், டெல்லியில் கைதான ஜாபர் சாதிக் பற்றியும் விளக்கி கூறினார்.

    கவர்னரை சந்தித்து விட்டு வெளியில் வந்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தி.மு.க. அயலக அணி நிர்வாகியான ஜாபர் சாதிக் டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பல தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

    3 ஆண்டுகளில் அவர் 45 முறை போதைப்பொருட்களை கடத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


    ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை சினிமா தயாரிப்புக்கு பயன்படுத்தி இருப்பதாகவும் தி.மு.க. நிர்வாகிகளுக்கு வழங்கி இருப்பதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    முதலமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இயக்கிய சினிமா படத்தை ஜாபர் சாதிக் தயாரித்து உள்ளார். முதலமைச்சர், உதயநிதியை சந்தித்து நிதி அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரி கவர்னரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.

    இப்படி போதைப்பொருள் மூலமாக சம்பாதித்த பணத்தை வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வினர் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    கே:- போதைப்பொருள் விவகாரத்தில் தி.மு.க.வை களங்கப்படுத்த முயற்சிகள் நடப்பதாக அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறாரே?

    ப:- போதைப்பொருள் கடத்தலில் இருந்து மக்களை திசை திருப்ப தி.மு.க.வினர் நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் இளைஞர்கள் சீரழிந்து விடுவார்கள்.

    10 நாட்களில் தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தலில் தி.மு.க. நிர்வாகிக்கு தொடர்பு இருப்பதால் அது பற்றி அதிகாரிகள் வெளியில் தெரிவித்துள்ளனர். தங்கள் மீது குற்றமில்லை. மடியில் கனமில்லை என்றால் ஏன் பயப்படுகிறார்கள். போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தால் தி.மு.க.வினர் நடுங்கிப் போய் உள்ளனர். பதற்றத்தில் இருக்கிறார்கள். தவறு செய்யவில்லை நாங்கள் நிரபராதி என்றால் சட்டப்படி சந்திக்க வேண்டியது தானே.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    • புதிய நடைமுறையின் மூலம் பார்வவையாளர்கள் கைதிகளை காலதாமதம், கூட்ட நெரிசல் இன்றி மிகவும் எளிய முறையில் சந்திக்க முடியும்.
    • வக்கீல்கள் சந்திக்கும் அறையும் புனரமைக்கப்பட்டு உள்ளது.

    புழல்:

    சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3,400-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் இந்த கைதிகளை பார்க்க அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என 700 முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் சிறை வளாகத்தில் பார்வையாளர் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுவதோடு, போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வந்தது. அத்துடன் கைதிகளை சந்திக்க பார்வையாளர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியது இருந்தது.

    இவற்றை தவிர்த்திட தற்போது புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சிறை கைதிகளை சந்திப்பதற்காக அரை மணிநேரம் கொண்ட 13 சுற்றுகள் அட்டவணைப்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 56 கைதிகள் பார்வையாளர்களை சந்திக்கும் வகையில் தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த அட்டவணைப்படி வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை (அரசு விடுமுறை நீங்கலாக) காலை 8 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஏதேனும் 2 நாட்களில் கைதிகள் தங்கள் உறவினர்களை சந்திக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.

    அத்துடன் கைதிகள் சந்திக்க வரும் பார்வையாளர்கள் வசதிக்காக முன்பதிவு முறையும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 044-26590000 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை கைதிகளை சந்திப்பதற்கு வசதியான நேரத்துக்கு ஒரு நாள் முன்னதாவே முன்பதிவு செய்து கொள்ளலாம். இவர்கள் பதிவு செய்த நேரத்துக்கு 45 நிமிடங்கள் முன்னதாக வந்தால் போதும்.

    இந்த புதிய நடைமுறையின் மூலம் பார்வவையாளர்கள் கைதிகளை காலதாமதம், கூட்ட நெரிசல் இன்றி மிகவும் எளிய முறையில் சந்திக்க முடியும்.

    இதே போல் வக்கீல்கள் சந்திக்கும் அறையும் புனரமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வக்கீல்கள் சந்திப்பு அறையில் புதிய அறைகள் அமைத்து கைதிகள், வக்கீல்களுக்கு புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 50 வக்கீல்கள் கைதிகளை சந்திக்க முடியும். இவர்களுக்கும் முன்பதிவு செய்ய தொலைபேசி எண் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய நடைமுறையின்படி வக்கீல்கள் தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை கைதிகளை சந்திக்கலாம். இதனால் வக்கீல்கள், கைதிகளை வழக்கு சம்பந்தமாக சந்தித்து பேச போதுமான நேரம் கிடைக்கிறது.

    புழல் சிறையில் மேம்படுத்தப்பட்ட பார்வையாளர் சந்திப்பு முறை மற்றும் புனரமைக்கப்பட்ட வக்கீல் நேர்காணல் அறையை நேற்று சிறைத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

    இதேபோல் புழல் தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பறை இசை, நாடகம், சங்கீத பயிற்சி, காட்சி கலைகள், பாட்டு கச்சேரி, கானா ஆகியவற்றை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி நிறைவு விழாவிலும் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பயிற்சி பெற்ற கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் சிறைத்துறை தலைமை இயக்குனர் மகேஷ்வரர் தயாள், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதர்சனம், சிறைத்துறை தலைவர்(தலைமையிடம்) கனகராஜ், சென்னை சரக சிறைத்துறை துணைத்தலைவர் முருசேன், தொண்டு நிறுவன நிறுவனர் கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சிறை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.

    • கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட யாரும் சி.பி.ஐ. விசாரணை கேட்கவில்லை.
    • 2026-ல் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களை பிடிப்பதற்காக இன்று முதல் பிரசாரத்தை தொடங்கி விட்டோம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பார். சில கட்சிகள் சி.பி.ஐ. விசாரணை கோரியதை அரசியலாகத்தான் பார்க்க முடியும். கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட யாரும் சி.பி.ஐ. விசாரணை கேட்கவில்லை.

    2026-ல் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களை பிடிப்பதற்காக இன்று முதல் பிரசாரத்தை தொடங்கி விட்டோம். முதலமைச்சரை பொருத்தமட்டில் மது விலக்கு வேண்டும் என்று கூறுகிறோம். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் கூட்டணி கட்சிக்கு வருபவர்கள் சீட்டுகளையும் கேட்கிறார்கள், பணத்தையும் கேட்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்பதை இது காட்டுகிறது.

    இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

    • 3 பேர் கொண்ட தேடுதல் குழு தான் அமைக்க முடியும்.
    • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2 கட்சி போட்டிதான் இருக்கும் 2-வதாக ஒரு அணி வேண்டுமென்றால் நிற்கலாம்.

    புதுக்கோட்டை:

    தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக விரோதிகள், பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்கள், ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்களை கட்சியில் சேர்ப்பது, பதவிகளை கொடுப்பது பா.ஜ.க.வே, தவிர வேறு எந்த கட்சியும் இல்லை. இதற்கு ஏற்கனவே பலமுறை ஆதாரத்தோடு பெயர் பட்டியலோடு நிரூபித்து இருக்கின்றோம்.

    தி.மு.க.வில் தெரிந்து நாங்கள் செய்வது கிடையாது. தெரியாமல் எங்கேயாவது நடந்திருந்தால் உடனடியாக கட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்படுவார்கள்.



    சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவுக்கே பொதுவான அம்பேத்கரை பற்றி அமித்ஷா கூறியதைப் பற்றி கேட்டால் ஜெயக்குமார் பேசிய கருத்துதான் எனது கருத்து என்று கூறுகிறார். அப்படி கூறுவதற்கு பொதுச்செயலாளர் பதவி எதற்கு.

    பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் கவர்னர் அவருக்கு பிடித்தபடி செய்ய வேண்டும் என்று கூறினால் அதற்கான ஆள் நாங்கள் கிடையாது. நாங்கள் சட்டப்படி செய்கிறோம். சட்டப்படி இல்லை என்றால் யார் வேண்டுமென்றால் நீதிமன்றத்திற்கு செல்லலாம்.

    3 பேர் கொண்ட தேடுதல் குழு தான் அமைக்க முடியும். கவர்னர் 4-வதாக யு.சி.ஜி.யில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். ஆனால் நாங்கள் இதுவரை அப்படி யாரையும் சேர்க்கவில்லை. புதிதாக அப்படி யாரையும் சேர்க்க முடியாது என்பதுதான் எங்களது வாதம்.

    இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்லும் போது எங்கள் வாதத்தையும் நியாயத்தையும் எடுத்து வைப்போம். சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னரின் கடந்த கால செயல்பாடு தற்போது இருக்காது என்று எண்ணுகின்றோம்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2 கட்சி போட்டிதான் இருக்கும் 2-வதாக ஒரு அணி வேண்டுமென்றால் நிற்கலாம். எதிர்க்கட்சிகள் சிதறி கிடைப்பது எங்களுக்கு வலிமை தான். ஆனால் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். அதில் வெற்றி பெற்று வர வேண்டும் என்றுதான் எங்கள் தலைவர் விரும்புவார். தகுதியே இல்லாத ஆட்களோடு போட்டியிட விரும்பமாட்டார். என்றைக்கும் ஆரோக்கியமான போட்டிதான் அவருக்கு பிடிக்கும்.

    நெல்லையில் 2 கொலைகளில் இதுவரை 4 பேரை பிடித்துள்ளனர். போலீசார் துரிதமாக செயல்பட்டுள்ளனர். இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. தனிப்பட்ட முன்விரோதத்தில் நடைபெறும் சம்பவங்களை எப்படி முன்கூட்டி தடுக்க முடியும். கோர்ட்டுக்கு வெளியே நடந்த கொலைக்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×