search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN assembly"

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படும் பேருந்துகள் கொரோனா காரணமாக நிறுத்தப்படவில்லை.
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ஓட்டுநர்களை நியமனம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரத்தில், பேராவூரணி - பட்டுக்கோட்டை இடையே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படுமா என பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படும் பேருந்துகள் கொரோனா காரணமாக நிறுத்தப்படவில்லை. போதிய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இல்லாத காரணத்தினால் தான் அந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ஓட்டுநர்களை நியமனம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற போக்குவரத்து கழகங்களுக்கு பணியாளர்களை நியமனம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டவுடன் நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுமார் 5 ஏக்கர் நில பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டிடக்கலையுடன் வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது எழிலன் எம்.எல்.ஏ., வள்ளுவர் கோட்டத்தின் புனரமைக்கும் பணிகள் எப்போது முடிவடையும் என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

    வள்ளுவர் கோட்டம் அமைப்பதற்காக கடந்த 1974-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1976-ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

    மேலும், சுமார் 5 ஏக்கர் நில பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டிடக்கலையுடன் வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கல் தேர் 128 அடி உயரம் கொண்டதாகவும் 67 மீட்டர் நீலம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    10 ஆண்டுகளாக வள்ளுவர் கோட்டம் பாழடைந்து இருந்த நிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலையரங்கம், மாற்றுத்திறனாளிகள் நடைபாதை, உணவு கூடம், விற்பனை கூடம், மழை நீர் சேகரிப்பு வசதி, ஒலி ஒளி காட்சி கூடம், நுழைவாயில் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். ஆனால் முன்னதாகவே பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் முதலமைச்சர் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை.
    • ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம், முடிவெடுத்து இருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

    சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் கருணாநிதி நினைவிடம் திறப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர்; நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர்; முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருடைய நினைவிடம் அமைக்கும் பணி முழுமையடைந்து இருக்கிறது. தலைவர் கலைஞரின் நினைவிடம் மட்டுமல்ல; தலைவர் கலைஞரை உருவாக்கிய, நம் தாய்த் தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டிய அறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    அப்படிப் புதுப்பிக்கப்பட்டிருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும், தலைவர் கலைஞரின் புதிய நினைவிடமும் வருகிற 26-ந் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளன என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    எதற்காக இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை. அதனை ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம், முடிவெடுத்து இருக்கிறோம்.

    ஆகவே, அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக்கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று பேரவைத் தலைவர் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும் தங்கள் மூலமாக அழைப்பு விடுத்து அமைகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் கடந்த 12-ந்தேதி தொடங்கியது.
    • காலவரையின்றி சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அன்று சட்டசபையில் கவர்னர் உரையை படிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். இதன் பின்னர் 3 நாட்கள் கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து கடந்த 19-ந்தேதி பொது பட்ஜெட்டும், 20-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இன்றுடன் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. காலவரையின்றி சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • பா.ம.க. சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பேச முற்பட்டார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக விளக்கம் அளித்தார்.

    சென்னை:

    சட்டசபையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பேசுவதற்கு பா.ம.க. அனுமதி கோரியது.

    அதன்மீது பா.ம.க. சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பேச முற்பட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அவரது பேச்சும் அவை குறிப்பில் ஏறாது என்று சபாநாயகர் தெரிவித்தார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் விரிவாக விளக்கம் அளித்தார். இருப்பினும், பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். 

    • வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இலக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஹால் டிக்கெட் மறந்துவிட்டு பதற்றம் அடைய கூடாது என்று அதை தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஷிவ் நாடார் பவுண்டேஷன் இணைந்து, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைத்து பராமரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்தானது.

    தொடர்ந்து, மணற்கேணி இணையம் இனி கணினியிலும் காணும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஷிவ் நாடார் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு 6ம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    மணற்கேணி செயலியார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 2 லட்சம் அளவில் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


    அதேபோல், 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை ஒரு கான்செப்ட் எப்படி வந்துள்ளது என்பது போல் அந்த வீடியோக்கள் இருக்கும். தனியார் பள்ளி கொரோனா காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வியை கொண்டு சேர்த்தார்கள். அதை அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்போது கொண்டு சேர்த்து வருகிறது.

    வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இலக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒன்றரை லட்சம் கோடி தி.மு.க. ஆட்சி தொடங்கியதில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற வரலாற்றிலேயே இந்த ஆண்டு தான் 44 ஆயிரம் கோடி பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    கோடை காலம் தொடங்கியதால் பள்ளிகளில் பந்தல் அமைப்பது, குடிநீர் வைப்பது உள்ளிட்ட கோடைகால தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் செய்வது போல் இந்த ஆண்டும் தயாராக உள்ளது.

    ஹால் டிக்கெட் மறந்துவிட்டு பதற்றம் அடைய கூடாது என்று அதை தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வில் ஒவ்வொரு முறையும், செய்வது போல் இந்த ஆண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், நிதி நிலைமை சீர் அடையும் போது அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்ட பா.ம.க.வின் எம்.எல்.ஏ.க்கள் தன்னை நேரடியாக சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.
    • உங்களுக்கு சாதகமாகவே நடந்து வருகிறோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று நேரமில்லா நேரத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு விளக்கம் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்ட பா.ம.க.வின் எம்.எல்.ஏ.க்கள் தன்னை நேரடியாக சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.

    சாதிவாரி கணக்கெடுப்பு கொள்கைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. உங்களுக்கு சாதகமாகவே நடந்து வருகிறோம். இந்த விளக்கத்திற்கு பின்னரும் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு எதுவும் கூற முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காவிரி விவகாரம் குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்தோம்.
    • உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவது மட்டுமே காவிரி ஆணையத்தின் வேலை.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் காவிரி பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

    அமைச்சர் துரைமுருகனின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். "காவிரியின் குறுக்கே மேகதாதுவை அனுமதிக்காதே" என சட்டசபை வளாகத்தில் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * காவிரி விவகாரம் குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்தோம்.

    * உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவது மட்டுமே காவிரி ஆணையத்தின் வேலை.

    * காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை பேசியதற்கு கண்டன தீர்மானம் பேரவையில் நிறைவேற்றவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

    • மேகதாது விவகாரத்தில் கர்நாடகா மட்டுமே ஆணையத்தில் பேசி கொண்டிருக்கிறது.
    • பாஜகவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் காவிரி பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவர் கூறியதாவது:

    * காவிரி விவகாரத்தில் திமுக அரசு அலட்சியம் காட்டுகிறது.

    * காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நடைபெற்ற சம்பவம் கவலை அளிக்கிறது.

    * மேகதாது விவகாரம் சேர்க்கப்பட்ட ஆணைய கூட்டத்தில் ஏன் கலந்து கொண்டீர்கள்? அதில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்றும் கேள்வி எழுப்பிய ஈபிஎஸ், மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி தடை ஆணை பெற வேண்டும் என்று கூறினார்.

    மேகதாது அணை விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:

    * மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது.

    * நீர் பங்கீட்டு பிரச்சனைகளை தீர்வு காண மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

    * ஆணையத்திற்கு நீண்ட காலம் தலைவர் நியமிக்கப்படாமல் இருந்ததால் பிரச்சனை ஏதும் வரவில்லை.

    * தற்போது தலைவர் நியமிக்கப்பட்டு கடந்த பிப்.1-ந்தேதி கூட்டம் நடைபெற்றது.

    * கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க கூடாது என தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

    * தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.

    * மேகதாது விவகாரத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    * மேகதாது விவகாரத்தில் கர்நாடகா மட்டுமே ஆணையத்தில் பேசி கொண்டிருக்கிறது.

    * மேகதாது பற்றி பேச கேரள அரசும், மத்திய பிரதிநிதியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    * மேகதாது குறித்து விவாதம் மட்டுமே நடைபெற்றது. வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

    * கூட்டத்தில் எடுத்த முடிவுகள் வேறு, அதன் அறிக்கையில் இருந்த தகவல்கள் வேறு.

    * மேகதாது தொடர்பாக மத்திய பொதுப்பணித்துறைக்கு அளித்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.

    * தமிழ்நாட்டில் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது.

    * பாஜகவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர்.

    * மேகதாது அணை குறித்து யாரும் அஞ்ச தேவையில்லை.

    * மேகதாது அணை கட்டுவதை தமிழகத்தை சேர்ந்த எந்த கட்சியும் அனுமதிக்காது.

    * மேகதாது விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ள அதே அக்கறை எங்களுக்கும் உள்ளது என்று அவர் கூறினார்.

    • வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் விளையாட்டுத் திடல், தேவையான அளவு அரசு பள்ளிகள் இல்லை.
    • தென் சென்னையில் இருப்பதுபோல அரசின் எந்த சேவைகளும் வடசென்னையில் இல்லை.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்ட அரசுகள், வட சென்னை பகுதியை புறக்கணித்தே வந்துள்ளன. தென் சென்னையையும், வட சென்னையையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தாலே வட சென்னையை எந்த அளவுக்கு 'மாற்றான்தாய்' மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்தியிருக்கிறது என்பது தெரியவரும். சரியான சாலை வசதிகள், முக்கியமான இடங்களில் கூட மேம்பாலங்கள் இல்லாதது, சுகாதாரமான குடிநீர் கிடைக்காதது, கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாதது, அதிக மாசு ஆகியவைதான் வட சென்னையின் முக்கிய பிரச்சனைகள்.

    வடசென்னை பகுதியில்தான் அதிக மாசை ஏற்படுத்தும் அனல் மின் நிலையங்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ரசாயன ஆலைகள் அதிக அளவில் உள்ளன. சமீபத்தில்கூட மழைநீரில் கச்சா எண்ணெய் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உர ஆலை ஒன்றில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால், ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் விளையாட்டுத் திடல், தேவையான அளவு அரசு பள்ளிகள் இல்லை. தென் சென்னையில் இருப்பதுபோல அரசின் எந்த சேவைகளும் வடசென்னையில் இல்லை. வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது அரை நூற்றாண்டுக்கும் மேலாக வட சென்னை மக்களின் கோரிக்கை. இப்போதுதான் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. அது எப்போது முடியும் என்று தெரியவில்லை.

    பெரம்பூரில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம், பேப்பர்மில்ஸ் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, ஐ.சி.எப்., அயனாவரத்தை இணைக்கவில்லை. இதனால் அரசு பேருந்துகள் மட்டுமே மேம்பாலத்தில் செல்கின்றன. இப்படி, வட சென்னையில் பல்வேறு கட்டமைப்புகள் அரைகுறையாகவே உருவாக்கப்பட்டுள்ளன. புளியந்தோப்பில் உள்ள ஆடுகள் வெட்டும் இடம் இன்னும் நவீன மயமாக்கப்படவில்லை. வடசென்னை பகுதியில் குறிப்பாக முதலமைச்சரின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கூட மயானங்களின் பராமரிப்பு படுமோசமாக உள்ளது.

    வட சென்னையின் பெரும்பான்மையான இடங்களில் குடிநீரில் சாக்கடை கலந்துதான் வருகிறது. கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் போதுமானதாக இல்லை. மழைநீர் கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்களாக மாறியுள்ளன. இதனால் மழை நீர் வெளியேற முடியாமல், மழை காலங்களில் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    வட சென்னையின் இதுபோன்ற பிரச்சனைகளை பட்டியலிட்டு அதற்கு தீர்வு காண வேண்டும் என பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 'என் மண் என் மக்கள்' யாத்திரை வட சென்னை பகுதிக்கு வந்தபோது, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வட சென்னை எப்படி வஞ்சிக்கப்படுகிறது என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி பேசினார்.

    ஆனால், 2024-25-ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில், வட சென்னையின் பிரச்சனைகள், தேவைகளுக்கு தீர்வு காண எந்தத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. வட சென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி வழங்கப்படும் என, நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு புதிதாக கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், கடந்த நிதிநிலை அறிக்கையிலும் இதே ரூ. 1000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டதற்கான தடயங்களே இல்லை. மக்களை ஏமாற்ற மீண்டும் அதே அறிவிப்பை செய்துள்ளனர். இப்படி மக்களை ஏமாற்ற நினைக்காமல், வட சென்னையின் வளர்ச்சிக்கு, அம்மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வாயு கசிவை கண்டறிந்ததும் 20 நிமிடங்களில் குழாயில் ஏற்பட்ட வாயு கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
    • தொழிற்சாலையை ஆய்வு செய்து உர உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டனர்.

    சென்னை:

    எண்ணூரில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது குறித்து வேல்முருகன், ஜெகன் மூர்த்தி, எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்கள்.

    இதற்கு சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் தாக்கல் செய்த விவர அறிக்கையில் கூறி இருந்ததாவது:-

    இந்த உரத்தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் அங்கு குடியிருப்பு பகுதிகளில் வசித்த மக்களுக்கு கண் எரிச்சல், தோல் அரிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன.

    வாயு கசிவை கண்டறிந்ததும் 20 நிமிடங்களில் குழாயில் ஏற்பட்ட வாயு கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொழிற்சாலையை ஆய்வு செய்து உர உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டனர். அதன்படி உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    தற்போது விசாரணை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூடம் 1986 பிரிவு 5-ன் கீழ் சுற்றுச்சூழல் இழப்பீடாக 5 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்து 888 ரூபாயை அந்த உர நிறுவனத்திடம் இருந்து ஏன் வசூலிக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடவாசல் பகுதியில் தயாராக உள்ள இடத்தை கொடுக்க பகுதி மக்கள் தயாராக உள்ளனர்.
    • குடவாசல் தொகுதிக்கு அருகிலேயே கல்லூரி கட்டிடம் நிச்சயம் கட்டப்படும் எனவும் உறுதியளித்தார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று நேரமில்லா நேரத்தில், குடவாசல் தொகுதியில் கல்லூரி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அவர் பேசுகையில், 'குடவாசல் தொகுதியில் 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கல்லூரி கட்ட நடவடிக்கை மேற் கொண்டதாகவும், ஆனால் நீதிமன்ற வழக்கால் கட்ட முடியாமல் போய்விட்டது.

    குடவாசல் பகுதியில் தயாராக உள்ள இடத்தை கொடுக்க பகுதி மக்கள் தயாராக உள்ளனர். குடவாசலிலேயே அரசு கலைக்கல்லூரி இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'என்றார்.

    இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், குடவாசல் தொகுதிக்கு அருகிலேயே கல்லூரி கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை குடவாசலில் இடம் கிடைக்காததால் அருகில் இருக்கக்கூடிய இடத்தில் கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    10 ஆண்டுகளாக என்ன செய்திருந்தீர்கள். குடவாசல் தொகுதிக்கு அருகிலேயே கல்லூரி கட்டிடம் நிச்சயம் கட்டப்படும் எனவும் உறுதியளித்தார்.

    ×