என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை பணியாளர்கள்"

    • குப்பை அள்ளுவதில் கூட கொள்ளை அடிப்பது தான் தி.மு.க. ஆட்சியாளர்களின் கொள்கை.
    • பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் 100 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் மீதமிருக்கும் அண்ணாநகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றும் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தூய்மைப் பணியாளர்களின் நலனில் எந்த அக்கறையும் இல்லாமல் தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது.

    ஏற்கனவே, ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் ஒப்பந்தத்தை தனியாரிடம் வழங்கிய திமுக அரசு, அதற்காக ரூ.2300 கோடி மக்களின் வரிப்பணத்தை தனியார் நிறுவனத்திற்கு வாரிக் கொடுத்தது. இப்போது அண்ணாநகர், தண்டையார்பேட்டை மண்டலங்களுக்கான ஒப்பந்தத்தின் மூலம் இன்னும் கூடுதலான தொகையை வாரி வழங்க இருக்கும் தி.மு.க. அரசு, அதற்கான வெகுமதியை பெற்றுக்கொள்வதற்காகத் தான் இத்தனை நாடகங்களையும் அரங்கேற்றுகிறது.

    ஆட்சியாளர்கள் லாபம் அடைவதற்காக தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும்போது, தூய்மைப் பணியாளர்களின் பணிப்பாதுகாப்பு பறிக்கப்படும்; ஊதியம் சுரண்டப்படும். ஆனால், இதைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. குப்பை அள்ளுவதில் கூட கொள்ளை அடிப்பது தான் தி.மு.க. ஆட்சியாளர்களின் கொள்கை ஆகும்.

    தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாநகர், தண்டையார்பேட்டை மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணியை மாநகராட்சியே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல்.
    • திமுக-வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை.

    தூய்மை பணியாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படுவதாக திமுக அரசு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

    சமீபத்தில், "தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்" என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நிகழ்ச்சி நடத்தினார் பொம்மை முதல்வர்.

    இந்நிலையில், சென்னையில் 60% பேருக்குக் கூட உணவு விநியோகம் செய்யப்படவில்லை எனவும், பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

    மேலும், தற்போது, கோவையில் செம்மொழிப் பூங்கா ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வரப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    தேர்தலுக்கு முன், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதைக் கேட்கும் தூய்மைப் பணியாளர்கள் ஜனநாயக உரிமையையும் பறித்துக்கொண்டு, அராஜகத்தால் அவர்களின் போராட்டங்களை ஒடுக்கி விட்டு, Damage Control ஆக ஒரு திட்டத்தைத் தருகிறேன் என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நடத்திவிட்டு, அதையும் கைவிட்டுவிட்டார் இன்றைய பொம்மை முதலமைச்சர்.

    ஆனால், குப்பை வண்டியில் சாப்பாடு போட்டு இழிவு படுத்துவது என்பது, இதற்கு இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தவே வேண்டாம் என்றே சுயமரியாதை உள்ள எவருக்கும் தோன்றச் செய்கிறது.

    எதிர்க்கட்சியாக இருக்கும் போது எளிய மக்களை ஏமாற்றுவதிலும், ஆட்சிக்கு வந்தபின் அதே மக்களை இழிவுபடுத்துவதிலும் திமுக-வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை!

    தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முறையாக, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் செயல்படுத்திட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து மீண்டு வர தூய்மை பணியாளர்கள் உதவுகின்றனர்.
    • தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் அனைத்தையும் தி.மு.க அரசு படிப்படியாக செய்யும்.

    சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம், குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவை முதலமைச்சர் ருசி பார்த்து நன்றாக இருப்பதாக அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    * ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாக இருப்பது தூய்மை.

    * சென்னையை தூய்மையாக வைத்திருக்க காரணமானவர்கள் தூய்மை பணியாளர்கள்.

    * ஊரெல்லாம் உறங்கிய பின்னர், உறங்காமல் பணி செய்பவர்கள் தூய்மை பணியாளர்கள்.

    * தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை இல்லை சேவை.

    * தூய்மை பணியாளர்களின் சுயமரியாதையை காக்கவே உணவு வழங்கும் திட்டம், உதவித்தொகை உள்ளிட்ட திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    * வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து மீண்டு வர தூய்மை பணியாளர்கள் உதவுகின்றனர்.

    * தூய்மை பணியாளர்களுக்கு அனைவரும் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும்.

    * தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் அனைத்தையும் தி.மு.க அரசு படிப்படியாக செய்யும்.

    * சென்னையில் 200 வார்டுகளிலும் ஓய்வறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தூய்மை பணியாளர்களுக்கு உணவுத் திட்டம்.
    • தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்கள்.

    சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவுத் திட்டம், குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவை முதலமைச்சர் ருசி பார்த்து நன்றாக இருப்பதாக அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

    3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தூய்மை பணியாளருக்கான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

    மேலும், பணியின்போது உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கான நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கினார்.

    தூய்மை பணியாளர் குழந்தைகளின் உயர்கல்வி உதவித்தொகை, சுயதொழில் மானிய திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.

    சென்னை மாநகராட்சியின் 31,373 தூய்மை பணியாளர்களுக்கான இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.64,73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
    • காலை உணவில் இட்லி, போன்றவை, மதியம் ரசம், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவை அடங்கும்.

    தூய்மை பணியாளர்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

    சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்தத் திட்டம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என அரசு எதிர்பார்க்கிறது. அரசாணைப்படி, தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு, மாநகராட்சியின் உணவகங்கள் மூலம் வழங்கப்படும்.

    தூய்மை பணியாளர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வர வேண்டி இருப்பதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காலை உணவு இலவசமாக வழங்கப்படும் என்றும், இது சென்னை மாநகராட்சி பகுதியில் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    காலை உணவில் இட்லி, போன்றவை, மதியம் ரசம், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவை அடங்கும். இந்த உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும்.

    இந்நிலையில் சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை வரும் 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

    • தூய்மை பணியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மீண்டும் பழைய நிலையில் மாநகராட்சியிலேயே பணி வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    சென்னை மாநகராட்சி முன்பாக போராட்டம் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்ததோடு, அவர்களை அந்த இடத்தில் இருந்து அகற்றவும் உத்தரவிட்டது.

    சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும் ஆகஸ்ட் 13-ந் தேதி நள்ளிரவில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    தூய்மைப் பணியாளர்கள் எதிர்த்தபோதும், அனைவரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களிலும், சமூக நலக்கூடங்களிலும் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக ஆறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்திருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

    தூய்மைப் பணியாளர்களைப் பொறுத்தவரை, அடுத்தகட்டமாக அனுமதி பெற்ற இடத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்போவதாக உழைப்பாளர்கள் உரிமை இயக்கத்தின் பாரதி தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் சென்னை எழும்பூரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மீண்டும் பழைய நிலையில் மாநகராட்சியிலேயே பணி வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    மண்டலம் 5 மற்றும் 6-ஐ சேர்ந்த தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு, மாநகராட்சியின் உணவகங்கள் மூலம் வழங்கப்படும்.
    • தூய்மை பணியாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் முதல் படியாக அமைந்துள்ளது.

    தூய்மை பணியாளர்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் மு.க.ஸடாலின் தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்புத் திட்டங்களை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு தந்தார்.

    இதில், தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்படும்.

    தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் நல வாரியம் மூலம் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியுடன் கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் ரூ.10 லட்சம் அவர்களது குடும்பத்திற்கு கிடைக்கும்.

    தூய்மைப் பணியாளர்கள் சுயத்தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியமாக அதாவது, ரூ.3½ லட்சம் வரை வழங்கப்படும்.

    6 சதவீத வட்டி மானியத்துடன் வழங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வியில் சேரும் போதும் உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    அவர்கள் எந்தப் பள்ளியில் பயின்றாலும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்ட ணம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கும் வகையில் புதிய கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.

    தூய்மைப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளில் வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும். தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்படும்.

    தூய்மை பணியாளர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வர வேண்டி இருப்பதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காலை உணவு இலவசமாக வழங்கப்படும். இது சென்னை மாநகராட்சி பகுதியில் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று வெளியான அரசாணைப்படி, தூய்மை பணியாளர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு 3 வேளைகளும் இலவச உணவு வழங்கப்படும். இது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

    சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்தத் திட்டம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என அரசு எதிர்பார்க்கிறது. அரசாணைப்படி, தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு, மாநகராட்சியின் உணவகங்கள் மூலம் வழங்கப்படும்.

    காலை உணவில் இட்லி, போன்றவை, மதியம் ரசம், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவை அடங்கும். இந்த உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும். சென்னை மாநகராட்சி, இதற்கான உணவகங்களை அமைத்து, பணியாளர்களின் பணி நேரத்துடன் ஒத்திசைவாக வழங்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்தத் திட்டம், தூய்மை பணியாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் முதல் படியாக அமைந்துள்ளது" குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்ட 21 மின்கல வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
    • பணியில் சேர விரும்பினால் உடனே அவர்களுக்கான ஆணைகளை வழங்க மாநகராட்சி தயாராக இருக்கிறது.

    சென்னை மாநகராட்சி சாலை பராமரிப்புப் பணிகளுக்காக 21 மின்கல வாகனங்கள் மற்றும் நாய்களைப் பிடிக்கும் 5 வாகனங்கள் என 26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் பராமரிப்புப் பணிகளை சாலைப்ப ணியாளர்கள் மேற்கொள்வதற்கு ஏதுவாக, ஐ .டி.பி.ஐ. வங்கி மற்றும் எக்விட்டாஸ் வங்கியின் சார்பில் பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்ட 21 மின்கல வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் மற்றும் நிலைக்குழு தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களிடம் மேயர் பிரியா கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய் பிடிப்பதற்காக கூடுதலாக 5 வாகனங்களும் குப்பை அள்ளுவதற்கும் 21 வாகனங்கள் என மொத்தம் 26 வாகனங்கள் இன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 23 நாய் பிடிக்கும் வாகனங்கள் சென்னை மாநகராட்சியில் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் தற்போது கூடுதலாக 5 வாகனங்கள் நாய்கள் பிடிப்பதற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளது என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மண்டல வாரியாக தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்ற வருகிறது. தற்போது 60 சதவீத பணிகள் முடிந்துள்ளது.

    அதேபோல நாய்களுக்கு சிப் பொருத்தக்கூடிய பணிகளும் கடந்த மாதம் தொடங்கி இருக்கிறது.

    மண்டலத்துக்கு ஒரு கருத்தடை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் அனைத்து பணிகளும் முடிய உள்ளது. பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவு வழங்குகிறார்கள். அதனால் அதிக அளவு நாய்கள் அந்த பகுதியில் சுற்றுகிறது. பொதுமக்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    ஓரிரு நாட்களில் எந்த பணிகளும் முடியாது. ஒரு 6 மாதம் காலம் எடுத்துக் கொள்ளப்படும். தெரு நாய்கள் கருத்தரிப்பதை கட்டுப்படுத்தும் போது நாய்கள் தொல்லை குறையும். 2022-ம் ஆண்டு முதல் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில பகுதியில் மழை நீர்வாடிக்கால் வாய் பணிகள் முடிந்துள்ளது. தற்போது மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ள இடங்களில் மழைநீர் வடிகால் வாய் பணிகள் நடைபெற்றது.

    தற்போது நடைபெற்று வரக்கூடிய பணிகளை அப்படியே நிறுத்தி ஜனவரிக்கு பிறகு மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். சாலை வெட்டும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மண்டலம் 5- 6 தூய்மை பணியாளர்கள் இப்போதும் பணியில் வந்து சேரலாம்.

    பணியாளர்கள் நிறைய நபர்கள் பணியில் சேர்ந்து இருக்கிறார்கள். பணியில் சேர விரும்பினால் உடனே அவர்களுக்கான ஆணைகளை வழங்க மாநகராட்சி தயாராக இருக்கிறது. போதுமான அளவிற்கு பணியாளர்கள் இருக்கிறார்கள். பணிகள் சீராக நடைபெற்று வருகிறது.

    கூடுதலாக கட்டுப்பாட்டு மையத்தில் ஆட்கள் நியமிக்கப்பட்டு பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக வட்டார அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உடனே தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வருகிறோம் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்.
    • முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டுத் தோ்வுகள் மற்றும் முதல் பருவத் தோ்வுகள் கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற்றன. தொடா்ந்து மாணவா்களுக்கு கடந்த 27-ந்தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டது.

    இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளன. விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி, பள்ளிகளில் வகுப்பறைகள் உள்பட வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற் கொள்ள வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தோ்வு விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட வேண்டும்.

    மேலும், 2-ம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாட நூல்களையும் உடனே வழங்க வேண்டும். பருவ மழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை கல்வி அலுவலர்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழங்கி உள்ளது.

    • தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை.
    • கடைசியாக தூய்மைப் பணியாளர்கள் பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும்

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு திரண்டனர்.

    இதற்கிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, 'சாலையை மறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.

    இதனையடுத்து 14 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் செய்தனர்.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

    தூய்மை பணியாளர்கள் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை. தமிழ்நாடு அரசு மற்றும் மாநகராட்சி பேச்சுவார்த்தை நடத்தி கடைசியாக தூய்மைப் பணியாளர்கள் பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

    • தமிழக அரசு சட்டம் 240 நாட்கள் வேலை செய்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான்.
    • சட்டபூர்வமான பாதுகாப்பு என்பது தான் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது தான் நியாயமானது.

    தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் என்பது சமூக நீதி அல்ல. குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதே சமூக நீதி. நீங்கள் காலம் முழுக்க குப்பை அள்ளுங்கள் என கூறுவது ஏற்புடையத்தல்ல. குப்பை அள்ளும் தொழிலில் இருந்து அவர்கள் மீள வேண்டும் என்பதுதான் எங்களின் போராட்டம். பணி நிரந்தரம் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்பதற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து இருந்தார்.

    தூய்மை பணியாளர்கள் குறித்த திருமாவளவனின் கருத்திற்கு வி.சி.க.வின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    தமிழக அரசின் சட்டம் 240 நாட்கள் வேலை செய்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான். அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்று தான் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. துப்புரவு பணியாளர்கள் மட்டுமல்ல, பல துறையில் ஒப்பந்த முறையில் எடுக்கப்பட்ட பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் போக்கு இருக்கிறது.

    தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களும் சட்டபூர்வமாக வைத்திருக்கும் கோரிக்கை பணி நிரந்தரம் என்பது. திருமாவளவன் சொல்லும் கருத்து சரியானது அல்ல.

    எனக்கு தெரிந்த துப்புரவு பணியாளர் குடும்பத்தில் பிறந்த பெண், அவரது அப்பா, அம்மா நிரந்தர பணியாளர்களாக இருந்தார்கள். அதில் கிடைத்த வருமானத்தில் பி.எச்.டி. முனைவர் பட்டம் வரை படிக்க வைத்தார்கள். தற்போது அந்த பெண் கல்லூரி பேராசிரியராக இருக்கிறார்.

    ஒரு வேளை பணி நிரந்தரம் செய்யாமல் இருந்தால், இன்றைக்கு அவர் பேராசிரியராக இருக்கும் அந்த பெண்ணும் தூய்மை பணியாளாராக தான் இருந்திருப்பார்.

    ஆகவே பணி நிரந்தரம் அதில் கிடைக்கும் வருமானம், பணி பாதுகாப்பு ஆகிய சேர்ந்து அடுத்த தலைமுறையை இந்த பணியில் இருந்து விடுவித்து உயர்கல்வி பெறுவதற்கும், வேறு வாய்ப்பு கிடைப்பதையும் அந்த குடும்பத்திற்கு ஏற்படுத்து விடும்.

    ஆகவே இந்த பிரச்சனையை திருமாவளவன் மட்டுமல்ல அதியமான் உட்பட இத்தகைய கருத்துகளை சொல்லி இருக்கிறார்கள். இது வந்து கொஞ்சம் கூட ஏற்கத்தக்கதல்ல.

    நாம் வந்து பரம்பரையாக அந்த குடும்பத்தில் இருக்கும் பணியை வழங்க வேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை. இப்பொழுது பணி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு அது நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அதன் மூலமாக சட்டபூர்வமான பாதுகாப்பு என்பது தான் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது தான் நியாயமானது. ஆகவே திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கூறும் கருத்துகள் ஏற்புடையது அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் எந்த ஒரு தொழிலும் ஒரு சமூகத்தினரால் மட்டுமே செய்யப்படுவதாக இருக்கக் கூடாது.
    • தூய்மைப் பணியாளர்களை பணி நிலைப்பு செய்யக்கூடாது என்று கூறுவது அரசும், தனியார் நிறுவனங்களும் சுரண்டுவதற்கு துணைபோவதாகவே அமையும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சென்னை மாநகராட்சியில் தற்காலிகப் பணியாளர்களாக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், ''அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட்டால் அவர்களும், அவர்களின் தலைமுறைகளும் தொடர்ந்து துப்புரவுப் பணியையே செய்யக் கட்டாயப்படுத்துவதைப் போலாகி விடும்; எனவே அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கக்கூடாது" என்று சில தலைவர்களால் புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை சொல்லப்பட்ட காலமும், சூழலும் ஐயத்தை ஏற்படுத்துகின்றன.

    தமிழ்நாட்டில் எந்த ஒரு தொழிலும் ஒரு சமூகத்தினரால் மட்டுமே செய்யப்படுவதாக இருக்கக் கூடாது; எல்லா தொழிலும் எல்லா சமூகத்தினராலும் செய்யப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வரும் நிலையில், அவர்களை அந்தத் தொழிலில் இருந்து மீட்க வேண்டும்; அவர்களுக்கு கண்ணியமான வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை.

    ஆனால், பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் 12 நாள்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது முன் வைக்கப்படாத இந்த யோசனைகள், தூய்மைப் பணியாளர்களின் இந்தக் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவர்களின் மீது அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டதால் தமிழ்நாடு அரசின் மீது ஒட்டுமொத்த தமிழகமும் கோபத்தில் இருக்கும் நிலையில் எழுப்பப்படுவது தான் வினோதமாக உள்ளது. மக்களின் கோபத்திலிருந்து அரசைக் காப்பாற்றுவதற்காக இந்த யோசனைகள் முன்வைக்கப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    தூய்மைப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது பணியாளர்களின் நுரையீரலை பாதிக்கும் என்பது மட்டுமின்றி, அது கண்ணியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்காது. அதனால் அவர்கள் தொடர்ந்து தூய்மைப் பணி செய்ய அனுமதிக்கப்படக்கூடாது. ஆனால், அதற்கு முன்பாக தூய்மைப் பணியில் இருந்து மீட்கப்படும் பணியாளர்களுக்காக என்னென்ன மாற்றுப் பணிகள் வழங்கப்படவுள்ளன என்பதை அரசு வரையறுக்க வேண்டும்.

    எடுத்துக்காட்டாக, ஒரு தூய்மைப் பணியாளர் 5 அல்லது 7 ஆண்டுகள் பணி செய்த பின் அப்பணியில் இருந்து மீட்கப்படும்போது அவருக்கு அரசுத் துறைகளில் கல்வித் தகுதிக்கு ஏற்ற நிரந்தரப் பணி வழங்குதல், ஒவ்வொருவருக்கும் இயல்பாக கிடைக்கும் ஓய்வுக்கால பயன்களை விட கூடுதலாக 50% மானியத்துடன் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கி தொழில் முனைவோர் ஆக்குதல் போன்ற மாற்று வாழ்வாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். அதை செய்யாமல் தூய்மைப் பணியாளர்களை பணி நிலைப்பு செய்யக்கூடாது என்று கூறுவது அவர்களை அரசும், தனியார் நிறுவனங்களும் சுரண்டுவதற்கு துணைபோவதாகவே அமையும்.

    தூய்மைப்பணியாளர்களுக்கு இத்தகைய மாற்று வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்டாலும் கூட, அவர்கள் பணி செய்யும் காலத்தில் நிலையான பணியாளர்களுக்குரிய ஊதியம் மற்றும் பிற உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இது பற்றியெல்லாம் எதுவும் பேசாமல் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கக்கூடாது என்று மட்டும் வலியுறுத்துவது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×