என் மலர்
நீங்கள் தேடியது "Arrested"
- சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவி பலியானார்.
- ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
பணியில் அலட்சியமாக இருந்ததாகக்கூறி கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதுவதற்கு காரணமாக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
பங்கஜ் சர்மாவிடம் ரெயில்வே போலீசாரும், உள்ளூர் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடிக்கும் முறைகளை பின்பற்றுகின்றனர்.
- மீனவர்கள் மற்றும் படகுகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி படகுகளுடன் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறுகையில்,
இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடிக்கும் முறைகளை பின்பற்றுகின்றனர். இதனால் கடல்வளம் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, இலங்கையின் வடக்கு பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
இலங்கைக் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
எல்லைதாண்டி மீன் பிடித்தால் கைது மற்றும் படகு பறிமுதல் நடவடிக்கை தொடரும். மீனவர்கள் மற்றும் படகுகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த பிரச்சனையை தூதரக ரீதியாக இந்தியாவிடம் கொண்டு செல்வதோடு, சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் மீனவர்களை கைது செய்ய இலங்கை அரசு, இலங்கை கடற்படைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
- போலீசார் கேட்ட கேள்விகளுக்கு தமிழரசன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
- சுமன் மற்றும் தமிழரசன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25-ந் தேதி அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பாலமுருகன் கொலை செய்யப்பட்டதும், சம்பவ இடத்திற்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர், தனது அண்ணனை கொன்று விட்டார்களே என அழுது புலம்பினார். அவர் மீது எழுந்த சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
போலீசார் கேட்ட கேள்விகளுக்கு தமிழரசன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலமுருகனை தனது நண்பர்களான சுமன், நரசிம்ம பிரவீன், அஸ்வின் ஆகியோருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்ததை தமிழரசன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கேரளாவில் பதுங்கி இருந்த முன்னாள் இந்து முன்னணி நிர்வாகியும், இந்திய ஜனநாயக கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவருமான சுமனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சுமன் மற்றும் தமிழரசன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கைதான 2 பேரையும் போலீசார் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அஸ்வின், நரசிம்ம பிரவீன் ஆகிய 2பேரையும் தேடி கேரளா மற்றும் வால்பாறை பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். பணம்-கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நடந்துள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள 2 பேரையும் பிடித்து விசாரிக்கும்போது கொலைக்கான முழு காரணமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கலசப்பாக்கம் போலீசில் கடந்த ஆண்டு காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காமராஜ் பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 60), வக்கீலான இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக இருந்து வந்தார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் பொது குழாயில் தண்ணீர் எடுப்பது குறித்து தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தகராறு குறித்து கலசப்பாக்கம் போலீசில் கடந்த ஆண்டு காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை காமராஜ் மற்றும் அவரது நண்பர் ராஜா இருவரும் நாயுடுமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கும்பல் காமராஜ் மற்றும் ராஜா இருவரையும் கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலசபாக்கம் போலீசார் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக காமராஜ் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காமராஜ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து காமராஜின் சகோதரர் ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், கருணாநிதி ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக விசிக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சொரகொளத்தூர் மற்றும் நாயுடு மங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பகுதியில் அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் இருக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- முக்கிய குற்றவாளியான பிரபாகரன் வீட்டுக்கு போலீசார் சோதனை செய்ய சென்றனர்.
- ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட வே.சத்திரப்பட்டியில் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு பால்பாண்டி என்பவர் இரவு பணியில் இருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் அதே பகுதியில் உள்ள கண்மாய் கரையில் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபாகரன் வீட்டுக்கு போலீசார் சோதனை செய்ய சென்றனர்.
அப்போது வீட்டில் அவர் இல்லாததால் அவரது தந்தையை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனை அறிந்த பிரபாகரன் ஆத்திரம் அடைந்தார்.
தான் வீட்டில் இல்லாதபோது போலீசார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தனது தந்தையை மிரட்டி அழைத்து சென்றதாக கூறி பிரபாகரன் தனது கூட்டாளியுடன் நேற்று இரவு மது போதையில் வே.சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் பால்பாண்டியை மிரட்டியுள்ளார். பின்னர் அந்த போலீஸ்காரர் தனி அறைக்கு தப்பிச்சென்று உட்புறமாக பூட்டிக் கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து போலீஸ் நிலையத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழித்தும், உடைத்தும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பினார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயக்குமார் காவல் நிலையத்திற்கு செல்ல முயன்றபோது போலீசார் அவரை முத்துலிங்காபுரத்தில் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார் முன்னாள் அமைச்சர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்தனர்.
சம்பவம் குறித்து அறிந்து தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
- பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.
- அதிக உராய்வின் காரணமாக குவித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாட்சியாபுரம், திருத்தங்கல், காரியாபட்டி, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. வெளிமாநில உரிமம் பெற்று இங்கு வந்து பட்டாசு ஆலைகளை நடத்தும் பெரும்பாலான உரிமையாளர்கள் அதனை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு லாபம் சம்பாதிக்கிறார்கள்.
இந்த பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். அண்மை காலமாக பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் காரணமாக அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலி ஆகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி அதிரடியாக ஆய்வு நடத்தி விதிகளை முறையாக பின்பற்றாத ஆலைகளுக்கு சீல் வைத்து வருகிறார்கள்.
இந்தநிலையில காரியாபட்டி அருகே இன்று காலை நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அமைந்துள்ளது வடகரை கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று பல்வேறு கட்டிடங்களுடன் இயங்கி வருகிறது. இங்கு காரியாபட்டியை அடுத்த தண்டியனேந்தல், கல்குறிச்சி, காரியாபட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். பல்வேறு கிளைகளை கொண்டுள்ள இந்த ஆலை நாக்பூர் மாநில உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த ஆலையில் சங்கு சக்கரம், மத்தாப்பு உள்ளிட்ட பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்படுகிறது. இன்று காலை பட்டாசு ஆலைக்கு வந்த தொழிலாளர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் தண்டியனேந்தல், கல்குறிச்சியை சேர்ந்த 5 தொழிலாளர்கள் மருந்துகளை கலக்கும் பணியில் இருந்தனர். அப்போது அதிக உராய்வின் காரணமாக குவித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது.
இதில் அந்த அறை அடையாளம் காண முடியாத அளவுக்கு இடிந்து தரைமட்டமானது. மேலும் அங்கு பணியில் இருந்த தண்டியனேந்தல் கிராமத்தை சேர்ந்த கருப்பையா (வயது 35), கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் (53) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கியும், உடல் சிதறியும் பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் பேச்சியம்மாள் (43), கணேசன் (53) மற்றும் முருகன் (45) ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காரியாபட்டி உள்ளிட்ட அருகிலுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் கூட செல்ல முடியாத அளவுக்கு தொடர்ந்து மருந்துகள் வெடித்த வண்ணம் இருந்தன. பின்னர் அதிக வேகத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பிறகே பலியானவர்களின் உடல்களையும், காயம் அடைந்தவர்களையும் மீட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்தை அறிந்த அந்த பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களின் உறவினர்கள் ஆலை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்ததையடுத்து பட்டாசு ஆலையின் மேற்பார்வையாளர், போர்மேன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- வங்களாதேசத்தை சேர்ந்த சிலரும் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
- போலியாக ஆதார் அட்டை பெற்று பெருந்துறையில் சிப்காட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பப்லு சர்தார் உதவியாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுடன் வங்களாதேசத்தை சேர்ந்த சிலரும் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இதையடுத்து பெருந்துறை போலீசார் அவ்வப்போது சிப்காட் பகுதி, பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வங்களாதேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதிக்குட்பட்ட வீரப்பன் சத்திரத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்களாதேச தம்பதியினரை போலீசார் கைது செய்து உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
ஈரோடு வீரப்பன்சத்திரம், காமராஜ் நகரில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தம்பதிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் வங்காளதேசத்தை சேர்ந்த பப்லு சர்தார் (37), அவரது மனைவி ரிபியா காடுன்(37) ஆகியோர் என்பதும், இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் சட்ட விரோதமாக தங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
போலியாக ஆதார் அட்டை பெற்று பெருந்துறையில் சிப்காட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பப்லு சர்தார் உதவியாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. உரிய பாஸ்போர்ட் விசா எதுவும் இன்றி வசித்து வந்துள்ளனர். இதையடுத்து பப்லு சர்தார், அவரது மனைவி ரிபியா காடுன் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
- கைதான 13 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கட்டாணிபட்டியை சேர்ந்தவர்கள் செல்வம் மகன்கள் மணிகண்டன் (வயது 30), சிவசங்கரன் என்ற விக்னேஷ் (25). இதில் மணிகண்டன் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
விக்னேஷ் கல்லம்பட்டியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் சிவகங்கை அருகே அழகமா நகரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு தோப்பில், அப்பகுதியை சேர்ந்த சிலர் தொலைந்து போன மாடு ஒன்றை தேடி சென்றுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் ஆடு, கோழி சத்தம் கேட்டுள்ளது. சத்தம் வந்த திசை நோக்கி சென்றபோது, தோப்பிற்குள் மணிகண்டன், விக்னேஷ் இருவரும் இருந்துள்ளனர். இதையடுத்து மாட்டை தேடி சென்றவர்கள் மற்றும் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி கிராம மக்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் ஆடு, கோழி திருட வந்ததாக கூறி பயங்கரமாக தாக்கினர்.
தப்பித்து ஓட முயற்சி செய்தபோது, மேலும் பலமாக தாக்கியதில் இருவரும் சுருண்டு கீழே விழுந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் சிறிது நேரத்தில் இறந்தனர். ஆடு, கோழி திருட வந்ததாக தவறாக எண்ணி தாக்கப்பட்டனரா? அல்லது முன்பகை காரணமா? என்பது குறித்து மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக அழகமாநகரி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (45), சேமராஜ் (31), பிரபு (30), தீபக் (19), விக்னேஸ்வரன் (31), தினேஷ் (31) உள்ளிட்ட 6 பேரை முதற்கட்டமாக போலீசார் நேற்று கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரணையில் வினோத் (34), பிரவீத் (24), அருண் பாண்டி (29), யுவராஜ் (22), அரவிந்த் (25), மணிகண்டன் (31), சீமான் (43) ஆகியோரை இன்று போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் அண்ணன், தம்பி கொலை வழக்கில் மொத்தம் 13 பேர் கைதாகி உள்ளனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக மேலும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரர்கள் மீது கடந்த 2015-ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலவளவு போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் பட்டிகள், கிடைகள் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு அருகாமையில் அவர்கள் மறைந்திருந்து நோட்டமிட்டனர்.
- தாய், தந்தை இறந்துவிட்ட நிலையில் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
காளையார்கோவில்:
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே அமைந்துள்ளது மதகுபட்டி கிராமம். கடந்த சில மாதங்களாக மதகுபட்டி கிராமத்தில் அடிக்கடி ஆடுகள், கோழிகள் திருடு போவது தொடர்கதையாகி வந்தது. போதிய பாதுகாப்புடன் பட்டிகளில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தபோதும் இந்த திருட்டை தடுக்க முடியாமல் ஆடு வளர்ப்போர் தவித்து வந்தனர். நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் ஆடுகளை வளர்த்து வருவோருக்கு இந்த தொடர் திருட்டு பெரும் இழப்பை ஏற்படுத்தி வந்தது.
ஆடு திருடும் கும்பலை பிடிப்பதற்காக பாதிக்கப்பட் டவர்கள் இரவு நேரங்களில் கண்விழித்து கண்காணித்து வந்தபோதிலும் வேறு பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆடுகள் திருடு போய் வந்தன. அதேவேளையில் நள்ளிரவு நேரங்களில் மதகுபட்டி கிராமத்தில் வாகனங்கள் வந்து செல்வதை உறுதி செய்த பொதுமக்கள், ஆடு மற்றும் கோழிகளை திருடுவதில் யாரோ மர்ம நபர்கள் ஈடுபட்டு கைவரிசை காட்டி வருவதாக எண்ணினர். அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய பொதுமக்கள் ஆடு, கோழி வளர்ப்போரிடம் இதுகுறித்து பேசி தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் மதகுபட்டி கிராம மக்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். குறிப்பாக ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் பட்டிகள், கிடைகள் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு அருகாமையில் அவர்கள் மறைந்திருந்து நோட்டமிட்டனர்.
நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அங்குள்ள சுப்பு என்பவரது தோப்பிற்குள் 2 வாலிபர்கள் புகுந்து உள்ளனர். சத்தம் கேட்டு சுதாரித்த அந்த பகுதியில் கண்காணிப்பில் இருந்தவர்கள் கூச்சல் எழுப்பி ஒன்று கூடினர். இதைப்பார்த்த அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். ஆனால் கிராம மக்கள் விடாமல் துரத்தி சென்றதுடன், அவர்களை கல், கம்பு, கட்டை உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை கொண்டு சரமாரியாக தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் ஒருகட் டத்தில் ஓட முடியாமல் கீழே விழுந்து மயங்கினர். இதுகுறித்த தகவல் அறிந்த மதகுபட்டி போலீசார் நள்ளிரவில் சம்பவம் நடந்த கிராமத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-
மதகுபட்டி அருகேயுள்ள கல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் மணிகண்டன் (வயது 30), விக்னேஷ் என்ற சிவசங்கரன் (25). இதில் மணிகண்டன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். விக்னேஷ் கல்லம்பட்டி பகுதியில் கூலிவேலை பார்த்து பிழைப்பு நடத்தினார். தாய், தந்தை இறந்துவிட்ட நிலையில் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
கோவையில் வேலை பார்க்கும் மணிகண்டன் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வார். அப்போது தனது தம்பியுடன் சேர்ந்து அந்த பகுதியில் நடைபெறும் சேவல் சண்டையிலும் பங்கேற்று வந்து உள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடு, கோழிகளை திருடி விற்பதாக கிராம மக்கள் சந்தேகித்து உள்ளனர். அதேபோல் மதகுபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டுக்காக வளர்த்து வரும் காளைகளையும் சகோதரர்கள் திருடி இருக்கலாம் என்றும் கருதினர்.
இந்தநிலையில்தான் நேற்று நள்ளிரவில் மதகுபட்டிக்கு ஆடு திருட வந்ததாக கருதிய பொதுமக்கள் அவர்களை அடித்துக் கொலை செய்து உள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மதகுபட்டி போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிதம்பரம் வைப்புச்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து பி.எச்.டி. படித்து வந்தேன்.
- உதவி பேராசிரியர் மீது 3 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது மாணவி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியில் கடந்த 2018-ம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். அந்த மாணவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏற்கனவே புகார் செய்தார். மேலும் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார்.
அதில், நான் சிதம்பரம் வைப்புச்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து பி.எச்.டி. படித்து வந்தேன். அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நோயியல் பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த ராஜா என்னுடன் பலமுறை உல்லாசத்தில் ஈடுபட்டார். அதை அவர் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். தற்போது அந்த வீடியோவை வைத்து என்னை மிரட்டி வருகிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் உதவி பேராசிரியர் ராஜா மீது சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தமிழரசி வழக்குப்பதிவு செய்தார். மேலும் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.
பின்னர் உதவி பேராசிரியர் ராஜாவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 ஆண்டுகளுக்கு பின்னர் கொடுக்கப்பட்ட இப்புகாரின் உண்மைத்தன்மையை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். அதே சமயம் இடைப்பட்ட காலத்திலும் பெண்ணுக்கு பேராசிரியர் தொந்தரவு கொடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
- திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
- போலீசார் பணத்தை கைப்பற்றி அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கீரனூர் சோதனை சாவடியில் போலீசார் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதியில் இருந்து வெளிமாநில மதுபானம் கடத்தி வரப்படுகிறதா? என்பது குறித்து தினசரி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
அதில் பயணித்த பயணி ஒருவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அந்த பையில் ரூ.20 லட்சம் இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த பணத்தை கைப்பற்றி அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் கோலாலம் பள்ளம் பகுதியை சேர்ந்த முகமது யூனுஸ் என்பதும், அவரிடம் ரூ.20 லட்சத்தை திருவாரூரை சேர்ந்த நபர் ஒருவர் கொடுத்து அனுப்பியதும் தெரியவந்தது.
மேலும் முகமது யூனுஸ் வீட்டிற்கு வந்து ஒருவர் குறியீடு ஒன்றை வழங்குவார் என்றும், அதனை பெற்றுக்கொண்டு அந்த நபரிடம் பணத்தை தர வேண்டும் என்றும் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து முகமதுயூனுசை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியராஜ் மற்றும் போலீசார் கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 3 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு தினந்தோறும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அவர்கள் புதுச்சேரி கடற்கரை அழகை ரசிப்பது வழக்கம்.
இதற்கிடையே புதுச்சேரி கடற்கரைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளை வாலிபர்கள் கேலி கிண்டல் செய்து ரகளையில் ஈடுபடுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு புகார் வந்தது.
போலீஸ் சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியராஜ் மற்றும் போலீசார் கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள டூயூப்ளக்ஸ் சிலை அருகே மதுபோதையில் 3 வாலிபர்கள் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை.
இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 27), ராமநாதபுரம் அடுதாகுடியை சேர்ந்த முகேஷ் (26), புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதேபோல் கடற்கரை சாலையில் சீகல்ஸ் ஓட்டல் அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்த திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த பிரசாத் (30), புதுக்கோட்டை மாவட்டம் போஸ் நகரை சேர்ந்த கருப்பையா (29) ஆகியோரை கைது செய்தனர்.