என் மலர்
நீங்கள் தேடியது "மருமகள் கைது"
- நேற்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
- எனக்கும், மாமியாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளன்குளம் காலனி மேலத்தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மனைவி வெள்ளையம்மாள் (வயது 90).
இந்த தம்பதிக்கு பழனி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் அருணாச்சலமும், பழனியும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், வெள்ளையம்மாள், தனது மருமகள் வசந்தா (60) மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
நேற்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
உடனே தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிராஜா மற்றும் மானூர் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின்பேரில் அவரது மருமகள் வசந்தாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது வாக்குமூலமாக கூறுகையில், எனது மாமியார் வயது முதிர்வால் நான் வீட்டில் இருக்கும் போதெல்லாம் என்னை சம்பந்தமே இல்லாமல் திட்டிக்கொண்டே இருப்பார்.
வயல் வேலைக்கு அல்லது வேறு எங்காவது வேலை நிமித்தமாக சென்று வரவோ அல்லது சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு வீட்டுக்கு வர கொஞ்சம் நேரமாகிவிட்டால், சந்தேகப்பட்டு பேசுவார். இதனால் எனக்கும், மாமியாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.
இந்நிலையில் நேற்றும் சம்பந்தமில்லாமல் என்னை திட்டியதால் ஆத்திரம் அடைந்த நான் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தேன் என்றார்.
இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் கிளைச்சிறையில் அடைத்தனர்.
- ஆத்திரமடைந்த மருமகள் ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
- படுகாயமடைந்த ராஜேந்திரன் கடலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாயி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவத்தில் மருமகள், அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயி ராஜேந்திரனின் மகன் இறந்துவிட்ட நிலையில் அவரது மருமகள் ஜெயபிரியா வேறு ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த விவசாயி ராஜேந்திரன் மருமகளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருமகள் ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேந்திரன் கடலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மருமகள், அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவசாயி ராஜேந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
- தீ விபத்து என போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- லலிதா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பெண்டுர்த்தி, அப்பன்னபாலத்தை சேர்ந்தவர் ஜெயந்தி கனக மகாலட்சுமி (வயது 66). இவர் தனது மகன் சுப்பிரமணிய சர்மா, மருமகள் லலிதா, பேர குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
ஜெயந்தி கனக மகாலட்சுமி தனது மருமகள் லலிதாவை தேவையில்லாமல் துன்புறுத்தி வந்துள்ளார். தன்னை அடிக்கடி துன்புறுத்தி வந்ததால் மாமியார் மீது கடும் கோபத்தில் இருந்தார்.
மாமியாரை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் என லலிதா முடிவு செய்தார். அதன்படி பாட்டிலில் பெட்ரோலை வாங்கி வந்து வீட்டில் மறைத்து வைத்து இருந்தார்.
நேற்று முன்தினம் கணவர் வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றனர். வீட்டில் லலிதா மற்றும் அவரது மாமியார் மட்டும் இருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட லலிதா அவரது மாமியாரை கயிற்றால் கட்டினார். இதுகுறித்து மாமியார் கேட்டபோது விளையாட்டுக்காக கட்டுவதாக தெரிவித்தார். பின்னர் கண்ணை கட்டினார். விபரீதம் நடக்கப் போவதை அறிந்த ஜெயந்தி கனக மகாலட்சுமி தன்னை ஒன்றும் செய்து விடாதே என மருமகளிடம் கெஞ்சினார்.
இருப்பினும் ஆத்திரத்தில் இருந்த லலிதா வீட்டில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வந்து மாமியார் மீது ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீ பற்றியதால் ஜெயந்தி கனக மகாலட்சுமி வலியால் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் கணவருக்கு போன் செய்த லலிதா மாமியார் உடலில் எதிர்பாராதவிதமாக தீ பற்றி எரிந்து இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தீ விபத்து என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருப்பினும் லலிதா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் மாமியார் தேவையில்லாமல் தன்னை துன்புறுத்தியதால் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்தார்.
போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து லலிதாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் மூதாட்டி காசியம்மாள் கிராமத்தில் உள்ள பாழடைந்த சமுதாய கூடத்தில் தனியாக வசித்தார்.
- கடந்த 2-ந் தேதி இரவு காசியம்மாள் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த புலிவனாந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 85). இவரது கணவர் சின்னத்தம்பி மூத்த மகன் செல்வம், 2-வது மகன் ராஜி (60) ஆகியோர் அடுத்தடுத்து இறந்து விட்டனர். 3-வது மகன் சின்னப்பையன் பராமரிப்பில் காசியம்மாள் இருந்தார்.
யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் மூதாட்டி காசியம்மாள் கிராமத்தில் உள்ள பாழடைந்த சமுதாய கூடத்தில் தனியாக வசித்தார்.
கடந்த 2-ந் தேதி இரவு காசியம்மாள் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
மேலும் அவரது கம்மல் மூக்குத்தி என 1½ பவுன் நகைகள் இரும்பு பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
காசியம்மாளுக்கும் அவரது மூத்த மருமகள் தேவகி (58) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தேவகியிடம் விசாரணை நடத்தினர்.
இதில் தேவகி இந்த கொடூர கொலையை செய்திருப்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
தேவகி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய மாமியார் காசியம்மாள் பெயரில் 2 ஏக்கர் நிலம் உள்ளது.
எனது மகன் நரேஷ் செங்கல் சூளை நடத்தி பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. தற்போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் கூலி வேலை செய்து வருகிறார். அவருக்கு ரூ.4 லட்சம் கடன் உள்ளது.
அந்தக் கடனை அடைக்க எனது மாமியார் காசியம்மாளிடம் நிலத்தை பிரித்து எழுதி தருமாறு கேட்டேன். இதனால் அவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அவர் சொத்தை பாகம் பிரித்து தர முடியாது என கூறிவிட்டார். இதனால் நான் ஆத்திரமடைந்தேன்.
கடந்த 2-ந் தேதி நள்ளிரவு வீட்டிலிருந்து காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு மாமியார் தங்கி இருந்த இடத்திற்கு சென்றேன். அவர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரது கழுத்தில் 3 முறை கத்தியால் குத்தினேன்.
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்தார்.
அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். கொலைக்கு பயன்படுத்திய கத்தியை அங்குள்ள கோவில் அருகே வீசிவிட்டேன். பின்னர் எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






