search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • லட்சக்கணக்கானோர் தங்கள் அன்றாட பணிகளுக்காக ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
    • திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகிறது.

    நெல்லை:

    தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போக்குவரத்தாக ரெயில் போக்குவரத்து உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் தங்களின் அன்றாட பணிகளுக்காக இந்த ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

    உத்தியோகம், மருத்துவ சிகிச்சை, குடும்ப நிகழ்ச்சி உள்பட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் ரெயில்களில் பயணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் காரணமாக பின்வரும் ரெயில்கள் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை என மொத்தம் 25 நாட்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் மற்றும் திருச்செந்தூர்– திருநெல்வேலி இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    • மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.66 அடியாக உள்ளது.
    • கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து மழை குறைந்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணி முத்தாறு அணைகளில் நீர்மட்டம் அதிகரித்தது. நேற்று மழை குறைந்த நிலையிலும் தொடர் நீர்வரத்தால் இன்றும் அணைகள் நீர்இருப்பு அதிகரித்துள்ளது.

    143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 91.70 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 1/2 அடி உயர்ந்து 105 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 861 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.66 அடியாக உள்ளது. அந்த அணை பகுதியில் 2.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பாபநாசத்தில் 80 அடியும், மணிமுத்தாறில் 102.05 அடியும், சேர்வலாறில் 67.39 அடியும் நீர் இருப்பு இருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் இந்த ஆண்டு கோடையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மாநகரில் மழை எதுவும் பெய்யவில்லை. புறநகரில் களக்காடு, அம்பையில் பரவலாக மழை பெய்தது. அங்கு தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராதாபுரத்தில் 4 மில்லிமீட்டரும், நம்பியாறு அணை பகதியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. கொடுமுடியாறு அணையில் 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. வானம் பார்த்த பூமியான சங்கரன்கோவில் சுற்று வட்டாரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகிரியில் அதிகபட்சமாக 25 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்த வரை கருப்பாநதி அணை பகுதியில் மட்டும் 3.50 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்ததது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கணிசமாக கொட்டியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கழுகுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சி நிலவியது. ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதேநேரம் தூத்துக்குடி மாநகர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 2 நாட்களாக பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    • மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி இந்தியாவிலேயே அதிக மழை பொழிவு பெறும் இடமாகும்.
    • நாலுமுக்கில் 7 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 6.5 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி இந்தியாவிலேயே அதிக மழை பொழிவு பெறும் இடமாகும். இங்கு நேற்று முன்தினம் இரவு தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி ஊத்து எஸ்டேட்டில் 9 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது. நாலுமுக்கில் 7 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 6.5 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலை சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • நம்பியாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 29 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
    • செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 912 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணை பகுதியில் இன்று காலை வரை 28 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 1/4 அடி உயர்ந்து 90.50 அடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டமும் 1 1/2 அடி உயர்ந்து இன்று 103.51 அடியாக உள்ளது. அங்கு 19 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 88.40 அடி நீர் இருப்பு உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 487 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நம்பியாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 29 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே களக்காடு தலையணையில் நீர்வரத்தால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்குறுங்குடி நம்பி கோவில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவு தொடங்கி இன்று வரை பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் அதிகபட்சமாக 6 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    வைப்பார், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், சூரங்குடி, வேடநத்தம், கயத்தாறு, கடம்பூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளிலும் தொடர்மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். மாநகரில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கிவிட்டதால் உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    • கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
    • 10 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. வானிலை மையம் ஏற்கனவே நேற்றும், இன்றும் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது.

    கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் படகுகளை நிறுத்தி வைத்தனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நெல்லை மாவட்டத்திலும் கள்ளக்கடல் எச்சரிக்கையால் நேற்று மீனவ கிராமங்களான கூட்டப்பனை, கூடுதாழை, பெருமணல், உவரி உள்ளிட்ட 10 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இன்றும் 2-வது நாளாக அவர்கள் கடலுக்கு செல்லாமல் கரைகளில் படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர். 

    • மதுமிதாவிற்கு இன்று பிளஸ்-2 கணிததேர்வு நடைபெற்றது.
    • தந்தையின் பூத உடலை வணங்கி விட்டு மாணவி மதுமிதா தனது பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள விஜயச்சம்பாடு வடலிவிளை கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 55). இவரது மனைவி பானுமதி.

    இவர்களது மகள் மதுமிதா இட்டமொழியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிஸஸ்-2 படித்து வருகிறார். அய்யாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

    இந்நிலையில் மதுமிதாவிற்கு இன்று பிளஸ்-2 கணிததேர்வு நடைபெற்றது. இதற்கிடையே தந்தை இறந்த நிலையிலும் தந்தையின் பூத உடலை வணங்கி விட்டு மாணவி மதுமிதா தனது பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார்.

    தந்தை இறந்த சோகத்திலும் லட்சியத்தை நோக்கி பயணம் செய்யும் மாணவியை பொதுமக்கள் பாராட்டினர். 

    • மலைநம்பி கோவிலுக்கு இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பக்தர்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
    • சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கினர்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்த மாவட்டங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் மழை எச்சரிக்கை காரணமாக, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் அதிகாரிகள் குழுவினர் நீர் நிலைகளில் பார்வையிட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதலே மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. தொடர்ந்து நேரம் செல்ல செல்ல மிதமான மழையில் தொடங்கி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.

    காலை 7 மணி முதல் சுமார் 1 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகரில் பேட்டையில் தொடங்கி டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலையம், பாளை பஸ் நிலையம், பாளை மார்க்கெட், சமாதான புரம், கே.டி.சி. நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    மாநகரை ஒட்டி உள்ள கிருஷ்ணாபுரம், சிவந்திபட்டி, கீழநத்தம், சீவலப்பேரி, தாழையூத்து, கங்கைகொண்டான், மூன்றடைப்பு சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    சாலைகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. காலையிலேயே மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். பாளையில் அதிகபட்சமாக 5 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாவட்டத்தில் இன்று காலையில் இருந்து சேரன்மகாதேவி, களக்காடு, அம்பை சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்தது. திசையன்விளை, நாங்குநேரி பகுதியில் சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டமாக காட்சியளித்ததோடு, குளிர்ந்த காற்றும் வீசியது. தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், திருக்குறுங்குடி வனச்சரகத்திற்குட்பட்ட மலைநம்பி கோவிலுக்கு இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பக்தர்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி எஸ்டேட் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. ஊத்தில் 28 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 23 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 18 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை ஒட்டப்பிடாரம், குளத்தூர், கீழதட்டப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக ஒட்டப்பிடாரத்தில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. தூத்துக்குடி மாநகர பகுதியில் அதிகாலை முதல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    முத்தையாபுரம், அண்ணாநகர், பழைய பஸ் நிலையம், முள்ளக்காடு, புதுக்கோட்டை, திரேஸ்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கினர். சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இப்போது தான் உப்பு உற்பத்தி மீண்ட நிலையில், இன்று பெய்த மழையால் உரிமையாளர்கள் மிகவும் சோகம் அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்திலும் இன்று காலை முதலே ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சிவகிரி, கடையம், குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் அறுவடை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் மழையால் வயல்களில் சாய்ந்துள்ளது.

    • தி.மு.க.வினரின் ஆசியோடு குற்றங்கள் நடப்பதை யாராலும் மறுக்க முடியாது.
    • தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாள்தோறும் அரங்கேறுகிறது.

    நெல்லை:

    தமிழகத்தை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக தி.மு.க. அரசு மாற்றிவிட்டதாக கூறி அதனை கண்டித்தும், போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக்கோரியும் மகளிர் தினமான இன்று நெல்லை மாநகர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கி கலந்து கொண்டு கண்டன உரையாற்றி பேசியதாவது:-

    தமிழகத்தில் பெண்கள் முதல் வயதான மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. சட்டம்-ஒழுங்கை சரி செய்யுங்கள். பால்வாடிக்கு செல்கின்ற பால் முகம் மாறாத பெண் குழந்தைகள் முதல் கல்லூரிக்கு செல்கிற மாணவிகள், பள்ளிகளுக்குச் செல்கிற சிறுமிகள், வேலைக்கு செல்கிற பெண்கள், வீட்டிலே இருக்கிற பெண்கள், மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுவதை தடுக்க ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர்.

    மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். மாதராய் பிறக்க மாதவம் செய்ய வேண்டும் என்ற பேசப்பட்ட தமிழகத்தில் பெண்களாய் பிறந்ததற்கு அச்சப்படும் நிலை உள்ளது. பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பாதுகாக்கும் ஆசிரியர்கள் தவறு செய்கின்றனர். பாலியல் வன்கொடுமை, போதை பொருள் நடமாட்டம், கனிமவள கொள்ளை என எந்த குற்றமாக இருந்தாலும் தி.மு.க.வுக்கு நேரடி அல்லது மறைமுக தொடர்பு இருக்கிறது.

    தி.மு.க.வினரின் ஆசியோடு குற்றங்கள் நடப்பதை யாராலும் மறுக்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் ரவுடிகள் ஓடி ஒழிந்தார்கள். இப்போது தி.மு.க கொடி பொறித்த வண்டியில் வந்து ரவுடிசம் செய்யும் நிலை உள்ளது. பெண்கள் பாலியல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டால் புகார் அளிக்க கூடாது என அவர்கள் அளித்த புகார்கள் லீக் செய்யப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் காவல் துறை ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகமான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். அதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். அவரது ஆட்சி காலத்தில் தான் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது.

    தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாள்தோறும் அரங்கேறுகிறது.

    பாலியல் வன்கொடுமை செய்து பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். பள்ளிக்கு பெண் குழந்தைகளை அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பை கட்டிகொண்டு இருக்கும் அவலம் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சரால் பெண் முன்னேற்றத்திற்கு கொண்டு வந்த நல்ல திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் மூடுவிழா காணப்படுகிறது.

    மீதம் இருக்கும் ஓராண்டினை பாவமன்னிப்பு பெறும் ஆண்டாக எடுத்து விழித்து கொள்ளுங்கள். இந்த ஆட்சியாளர்கள் 4 ஆண்டுகளாக கமிஷனை தவிர வேறு எதன் மீதும் அக்கறை இல்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக தமிழக அரசு செயல்படுவதை பார்த்து சந்தி சிரிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 5 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு-நாங்குநேரி சாலையில் உள்ள கடம்போடு வாழ்வு பகுதியில் நேற்று முன் தினம் இரவில் வருவாய் புலனாய்வு துறையினர் வாகன சோதனை நடத்தினர்.

    அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு தெற்கு தெருவை சேர்ந்த சுப்பையா மகனும், ஒய்வு பெற்ற ராணுவ வீரருமான அழகியநம்பியை (வயது 44) சோதனை செய்தபோது, அவர் யானை தந்தங்களை கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை களக்காடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் களக்காடு வனசரகர் பிரபாகரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அவரிடம் விசாரணை நடத்தி, அவரது கூட்டாளிகளான ஜமீன் சிங்கம்பட்டி, பஜனை மட தெருவை சேர்ந்த ஆறுமுகம் (53). அம்பை அருகே உள்ள சிவந்திபுரம், ஆறுமுகம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த வீனஸ் ஆர்பர்ட் (45), அம்பை தெற்கு ரதவீதியை சேர்ந்த கார்த்திக் (32), வள்ளியூர் கீழத்தெருவை சேர்ந்த நம்பிநாராயணன் (32) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 4.7 கிலோ எடையுள்ள 3 யானை தந்தங்கள், யானையின் பற்கள் கைப்பற்றப் பட்டது. இவைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.


    மேலும் 5 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து இவர்கள் யானை தந்தங்களையும், பற்களையும் விற்பனை செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்தது. பின்னர் 5 பேரையும் வனத்துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

    யானை தந்தங்கள், பற்கள் இவர்களுக்கு எப்படி கிடைத்தது? யானைகளை கொன்று தந்தம், பற்கள் எடுக்கப்பட்டதா? என்பவைகள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மேலும் சிலரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • விவசாயிகளுடனான கருத்துகேட்பு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நெல்லையில் நடைபெற்றது.
    • விவசாயிகளிடம் வேளாண் துறையில் செய்யப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும், பணிகள் தொடர்பாகவும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழக அரசு வேளாண்மைக்கு என ஆண்டுதோறும் தனி பட்ஜெட்டை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதி நிலை அறிக்கை வருகிற 15-ந் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இதில் இடம் பெற வேண்டிய சிறப்பு அம்சங்கள் தொடர்பான விவசாயிகளுடனான கருத்துகேட்பு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நெல்லையில் நடைபெற்றது.

    பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 12 மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    ஆண்டுதோறும் நேரடியாக விவசாயிகளை சந்தித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டு வரும் சூழலில் 5-வது வேளாண் நிதிநிலை அறிக்கைக்காக இன்று நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு கலந்துகொண்டு விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட வாரியாக விவசாயிகளிடம் வேளாண் துறையில் செய்யப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும், பணிகள் தொடர்பாகவும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    • புலவன்பட்டி கட்ட பொம்மன் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • கடன் கொடுத்த நிதி நிறுவனத்தினர் ரேவதி வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டு அவதூறாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், வி.கே.புரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சிவந்திபுரம் அருகே உள்ள புலவன்பட்டி கட்ட பொம்மன் தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 27) என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    அவருடன் சேர்ந்து அம்பை ஊர்காடு பகுதியை சேர்ந்த அசோக்ராஜா (30), வி.கே.புரம் கம்பலத்தார் தெருவை சேர்ந்த செல்வகுமார் (21), கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணியபுரம் யாதவர் தெருவை சேர்ந்த சங்கர்ராஜா ஆகிய 3 பேர் நிதி நிறுவனம் நடத்தி கந்து வட்டி வசூலிப்பதாகவும், நிதி நிறுவனத்திற்கு உரிய அனுமதியை அவர்கள் பெறவில்லை எனவும் புகார்கள் எழுந்தது.

    இந்நிலையில் வி.கே.புரம் கட்டப்புளி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்ற கூலி தொழிலாளியின் மனைவி ரேவதி என்பவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதற்காக நிதி நிறுவனம் நடத்தி வரும் சுரேசிடம் கடன் பெற்றுள்ளார்.

    அவர் கடன் தொகையை செலுத்த தாமதமானதால், கடன் கொடுத்த நிதி நிறுவனத்தினர் அவர் வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டு அவதூறாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனை அடைந்த ரேவதி வி.கே.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் உரிய அனுமதியின்றி நிதி நிறுவனங்களை நடத்தியதாக கூறி சுரேஷ் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பிரதான அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.
    • பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பெய்த பரவலான மழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. மேலும் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பிரதான அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 23 அடி உயர்ந்தது. நேற்று பகலில் இருந்து மழை படிப்படியாக குறைந்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் வரத்தும் குறைந்தது.

    பிரதான அணையான பாபநாசம் அணைக்கு நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், மழை குறைந்துவிட்டதால் அணைக்கு வரும் நீரின் அளவு 721 கனஅடியாக குறைந்து விட்டது. எனினும் நீர் வரத்தால் அந்த அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 ½ அடி உயர்ந்து 87 அடியை கடந்துள்ளது.

    இதேபோல் மணிமுத்தாறு அணை பகுதியில் நேற்று காலை வினாடிக்கு 1,797 கனஅடி நீர் வந்த நிலையில், இன்று 545 கனஅடியாக குறைந்தது. அந்த அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 104 அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி மாநகர், புறநகர், அணைபகுதிகள் என எங்கும் மழை பெய்யவில்லை. மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் லேசான சாரல் பெய்தது.

    இந்த மழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் 1 வாரத்திற்கும் மேலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    கடந்த 4 நாட்களாக மழை பெய்ததால் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆயிரக்க ணக்கான ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து நாசமாகிவிட்டது.

    தென்காசி மாவட்டத்திலும் சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று மலைப்பகுதியில் மழை குறைந்ததால் தண்ணீர் வரத்தும் குறைந்தது. தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    அணைகளை பொறுத்தவரை தொடர் கனமழையால் கடனா, ராமநதி அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முதல் மழை குறைந்ததன் காரணமாக நீர்வரத்து சற்று குறைந்தது. நேற்று 61 அடியாக இருந்த கடனா அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 65 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 52 அடியாக உள்ளது.

    ×