search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "accident"

  • குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்துவைத்துள்ளார்.
  • ர். இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் தங்களது பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

  புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் தங்களது பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

   

  இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி  பங்களாவில் அடைத்துவைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.

  சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் அடுத்தடுத்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகி வரும் நிலையில், சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதாக என்று கண்டறிய எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை திரிக்க முயன்றதாக சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

  இதன்மூலம் சிறுவனைக் காப்பாற்ற அவனது குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தியுள்ளது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. முன்னதாக விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதும்படியும், 15 நாட்கள் போக்குவரத்து காவலர்களுடன் பணிபுரியுமாறும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

   

  • பதர்களை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் நேற்று (மே 26) இரவு ஷாஜஹான்பூர் அருகே சாலையோர உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
  • பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் அனைவரும் உத்தர்காண்டின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஜெதா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

  உத்தரகாண்டில் உள்ள பிரசித்தி பெற்ற பூர்ணகிரி கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது டிரக் மோதியதில் 11 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் நேற்று (மே 26) இரவு ஷாஜஹான்பூர் அருகே சாலையோர உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

  அப்போது அந்த வழியாக போலஸ்ட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி நிலை தடுமாறி பஸ் மீது கவிழ்ந்ததில் பஸ்ஸின் உள்ளே அமர்ந்திருந்த பக்தர்கள் 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

   

  இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் அனைவரும் உத்தரகாண்டின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஜெதா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

   

   

  • விபத்தில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பெங்களூருவில் இருந்து கோழிக்கோட்டுக்கு சென்ற படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ், கேரள மாநிலம் கொடுவள்ளி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

  இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்த 10 பேரையும் மீட்டு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • விபத்தை ஏற்படுத்தியதாக லாரி டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்துவை போலீசார் கைது செய்தனர்.
  • விபத்து தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

  கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள டிஸ்டேல் என்ற பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி பஸ்-லாரி மோதிய விபத்தில், பஸ்சில் பயணம் செய்த ஐஸ் ஆக்கி வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயம் அடைந்தனர்.

  விபத்தை ஏற்படுத்தியதாக லாரி டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்துவை போலீசார் கைது செய்தனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார்.

  விபத்து தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இதற்கிடையே ஜஸ்கிரத் சிங் சித்துவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஜஸ்கிரத் சிங் சித்துவுக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.

  இந்த நிலையில் அவரை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சித்துவின் வக்கீல் கூறும்போது, இன்னும் பல சட்ட நடைமுறைகள் உள்ளது. நாடு கடத்தும் செயல்முறைக்கு மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம் என்றார்.

  • விபத்துக்குள்ளான கார்களில் பயணம் செய்து வந்த நபர்கள் சம்பவ இடத்தில் இல்லை.
  • தப்பியோடியவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா பெருமாநல்லூர் அருகே வலசப்பாளையம் பகுதியில் இன்று அதிகாலை கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு காரின் டயர் வெடித்து டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.

  அப்போது அந்த காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ் காரின் மீது மோதியது. மேலும், பஸ்சுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு டெல்லி பதிவு எண் கொண்ட சொகுசு காரும் பஸ் மீது மோதியது.

  அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.


  இந்தநிலையில் விபத்துக்குள்ளான கார்களில் பயணம் செய்து வந்த நபர்கள் சம்பவ இடத்தில் இல்லை. அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விபத்துக்குள்ளான காரில் சோதனை செய்த போது, அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு டன் அளவிற்கு குட்கா பொருட்கள் இருந்தன.

  காருடன் குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் குட்கா பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன, யாருக்கு கொண்டு செல்லப்பட்டது, திருப்பூரில் விற்பனை செய்ய கொண்டு வந்தனரா என்ற விவரம் தெரியவரும். இதனால் தப்பியோடியவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  • மகாராஷ்டிராவின் பண்டாரா-கோண்டியா நெடுஞ்சாலையில், நவேகான் நாக்சிரா சரணாலயத்தின் வழியாக NH 753 சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையைக் கடக்க முயன்ற புலி மீது மோதியது
  • கார் மோதியதில் காயமடைந்த புலி நொண்டியபடியே சாலையைக் கடக்க முடியாமல் நிலைதடுமாறி விழும் பரிதாபகரமான காட்சிகள் பதிவாகியுள்ளது.

  வன விலங்குகள் ஊருக்குள் வரும் வீடியோக்களும், காட்டு சாலைகளில் உலா வரும் வீடியோக்களும் இணையத்தளத்தில் அவ்வப்போது வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். சில சமயங்களில் வாகனங்களில் அந்த விலங்குகள் அடிபடும் துரஷிஷ்டவசமான சம்பவங்களும் நடந்து வருகிறது.

  அந்த வகையில் சமீபத்தில் மகாராஷ்டிராவின் பண்டாரா-கோண்டியா நெடுஞ்சாலையில், நவேகான் நாக்சிரா சரணாலயத்தின் வழியாக NH 753 சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையைக் கடக்க முயன்ற புலி மீது மோதி, புலி படுகாயமடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  X தளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், வயது முதிர்ந்த ஆண் புலியின் மீது கார் மோதியதில் காயமடைந்த புலி நொண்டியபடியே சாலையைக் கடக்க முடியாமல் நிலைதடுமாறி விழும் பரிதாபகரமான காட்சிகள் பதிவாகியுள்ளது. காயமடைந்த புலியை மீட்டுபகுழுவினர் மீட்டு அவசர சிகிச்சைக்காக நாக்பூருக்கு கொண்டுசென்றனர். ஆனால் படுகாயமடைந்த புலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. இந்த சரணாலயப் பகுதியில் 40 கிமீ மேல் செல்லக்கூடாது என்ற வேக வரம்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

  இந்நிலையில் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். வன சாலைகளில் விலங்குகளை பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

  • 11 பேரையும் மீட்டு கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  நெல்லை:

  நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள தெற்கு புலிமான்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 42).

  இவர் இறந்துபோன தனது தந்தை முருகேசனுக்கு திதி கொடுப்பதற்காக தனது தாய், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் ஒரு ஜீப் வாகனத்தில் இன்று அதிகாலையில் கன்னியாகுமரி புறப்பட்டு சென்றுள்ளார். அதனை உவரி அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஓட்டிச்சென்றார்.

  கூடங்குளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தோட்டவிளையை கடந்து ஜீப் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த சொகுசு கார் எதிர்பாராதவிதமாக ஜீப்பின் மீது நேருக்கு நேராக மோதியது.

  இதில் ஜீப்பில் பயணித்த விஜயகுமாரின் மனைவி சந்தனகுமாரி (38), விஜயகுமாரின் சகோதரி முத்துச்செல்வி (32) ஆகிய 2 பேருக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

  மேலும் அதில் பயணித்த விஜயகுமார், அவரது தாயார் சரஸ்வதி (60), இளவரசன் (14), சம்போ (8), தமிழ் செல்வி (46), ஹரினி (13), கனிஷ்கா (13), பாக்கியவதி (56), ராஜேந்திரன் (50) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

  இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 11 பேரையும் மீட்டு கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே சந்தனகுமாரியும், முத்துச்செல்வியும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 9 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதில் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது.
  • தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம், தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறோம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

  லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதில் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

  இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:45 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என்றும் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  மேலும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம், தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறோம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

  இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை. விபத்து தொடர்பான ரேடார் பதிவுகளில், விமானம் 37,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூன்று நிமிடங்களில் 31,000 அடிக்குக் கீழே இறங்கியது. பின் அங்கிருந்து வேகமாக இறங்கி அரை மணி நேரத்திற்குள் பாங்காக்கில் தரையிறங்கியது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் இதுவரை இதுவரை மொத்தம் ஏழு விபத்துகளைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • படுகாயமடைந்த மனைவி சரளா தேவி, காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • முறிந்து விழுந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அங்கிருந்து அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  ஹைதராபாத்தில் உள்ள பொலராம் அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதி மீது மரம் முறிந்து விழுந்ததில் கணவர் ரவீந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  படுகாயமடைந்த மனைவி சரளா தேவி, காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சரளா தேவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

  தொடர்ச்சியாக மழை பொழிந்து வருவதால் மரம் முறிந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  முறிந்து விழுந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அங்கிருந்து அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  ஆனால் முறிந்து விழுந்த மரம் பல வாரங்களாக மெதுவாக சாய்ந்து வந்ததாகவும், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

  தம்பதி மீது மரம் முறிந்து விழுந்த காட்சி மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.