என் மலர்
மத்தியப்பிரதேசம்
- இந்தக் கடனின் இன்றைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய்களை தொடும்.
- சீஹோர் மற்றும் போபால் சமஸ்தானங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமாக ருதியா குடும்பம் விளங்கியது.
1917இல் முதலாம் உலகப் போர் சமயத்தில், மத்தியப் பிரதேசத்தின் சீஹோர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேத் ஜம்மாலால் ருதியா என்பவரிடம் பிரிட்டிஷ் அரசு 35,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளது.
பிரிட்டிஷ் அரசுக்கு கடன் கொடுத்த விஷயம் ருதியா குடும்பத்தினருக்குத் தெரிந்திருந்தாலும், அதற்கான ஆவணங்கள் யாரிடமும் இல்லை. இதனால் 109 ஆண்டுகளாக இந்த விஷயம் கிடைப்பில் இருந்துள்ளது.
ஜம்மாலால் ருதியாவின் பேரன் விவேக் ருதியா, தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு பழைய ஆவணங்களையும் உயிலையும் ஆய்வு செய்தபோது, இந்தக் கடனுக்கான அசல் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் கிடைத்துள்ளன.
முதலாம் உலகப் போரினால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, போபால் சமஸ்தானத்தின் நிர்வாகத் தேவைகளுக்காக இந்த 'போர்க் கடன்' வாங்கப்பட்டதாக அந்தப் பத்திரங்கள் தெரிவிக்கின்றன.
1917-ல் 35,000 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகையாகும். அன்றைய தங்கத்தின் விலையோடு ஒப்பிடும்போது, இந்தக் கடனின் இன்றைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய்களை தொடும்.
ஒரு இறையாண்மை கொண்ட நாடு, தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியது சர்வதேச சட்டப்படி கட்டாயம் என்ற அடிப்படையில், கடனை திருப்பி கேட்டு பிரிட்டன் அரசுக்கு சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்ப ருதியா குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர்.
ஒரு காலத்தில் சீஹோர் மற்றும் போபால் சமஸ்தானங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமாக ருதியா குடும்பம் விளங்கியது.
இன்றும் சீஹோர் நகரின் 20 முதல் 30 சதவீத குடியிருப்புகள் இந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான நிலங்களில்தான் அமைந்துள்ளன.
தற்போது இவர்கள் விவசாயம், ரியல் எஸ்டேட் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மயக்க நிலையில் இருந்த பெண்கள் குப்பைத் தொட்டிக்கு அருகிலும், திறந்தவெளி தரையிலும், கடும் வெயிலிலும் படுக்க வைக்கப்பட்டனர்.
- குடிக்கத் தண்ணீரும் இல்லை. அழுக்கான அந்த இடத்தில் தொற்று ஏற்படும் என்று தெரிந்தே எங்களை விட்டுவிட்டார்கள்.
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள பாக் பகுதியில் உள்ள சமூக நல மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாட்டு முகாம் நடைபெற்றது.
சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 180 பழங்குடியினப் பெண்கள் இந்த முகாமிற்கு வந்திருந்தனர்.
30 படுக்கைகள் மட்டுமே கொண்ட அங்கு, வந்திருத்தவர்களில் 175 பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முகாம் மருத்துவரான ராகேஷ் தாவர், மதியம் 3 மணிக்கு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அவர் ஒரு அறுவை சிகிச்சையை வெறும் 2 முதல் 5 நிமிடங்களுக்குள் முடித்துள்ளார். சில மணி நேரங்களிலேயே 175 அறுவை சிகிச்சைகளை அவர் செய்துள்ளார்.
அறுவை சிகிச்சை முடிந்த பின், மயக்க நிலையில் இருந்த பெண்கள் குப்பைத் தொட்டிக்கு அருகிலும், திறந்தவெளி தரையிலும், கடும் வெயிலிலும் படுக்க வைக்கப்பட்டனர்.
பெண்களுக்குக் குடிநீர், உணவு, நிழலுக்குக் கூடாரம் என எதுவுமே வழங்கப்படவில்லை. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் இருந்தும், சுகாதாரமற்ற முறையில் தரையில் கிடத்தப்பட்டுள்ளனர்.
"எங்களை காலை 8 மணிக்கே வரச் சொன்னார்கள். ஆனால், நாள் முழுவதும் எங்களுக்கு உணவோ அல்லது தண்ணீரோ கூட வழங்கப்படவில்லை" என்று பாதிக்கப்பட்ட ஒரு பெண் தெரிவித்தார்.
மற்றொரு பெண், "மயக்க மருந்து கொடுத்ததால் உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை முடிந்ததும் என்னை வெளியே தூக்கி வந்து வெயிலில் தரையில் கிடத்தினார்கள்.
அங்கு படுக்கைகள் இல்லை, குடிக்கத் தண்ணீரும் இல்லை. அழுக்கான அந்த இடத்தில் தொற்று ஏற்படும் என்று தெரிந்தே எங்களை விட்டுவிட்டார்கள்." என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து செய்தி பரவியதை அடுத்து, சுகாதாரத் துறை, சம்பந்தப்பட்ட பி.எம்.ஓவை பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
- 42 வயதான மத்திய அரசு ஊழியர் உடன் பணிபுரியும் 54 வயது பெண்ணை காதலித்தார்.
- அப்பெண்ணும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.
மத்தியப் பிரதேசத்தை சேர்த்த 42 வயதான மத்திய அரசு ஊழியர் ஒருவர் கடந்த 23 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் திருமண பந்தத்தில் இருந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவர் தன்னுடன் பணிபுரியும் 54 வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், இதனால் குடும்பத்தை அவர் கண்டுகொள்வதில்லை என்றும் மனைவி போபால் குடும்ப நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றம் மூன்று பேரையும் அழைத்து ஆலோசனைகளை வழங்கியது. ஆனால், கணவர் தனது காதலியுடன்தான் வாழ்வேன் என்று கூறிவிட்டார். எனவே நீதிமன்றம் தம்பதிக்கு விவாகரத்து அளித்தது.
ஆனால் மனைவி தனது கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு பதிலாக தனது கணவரை விட்டுக்கொடுக்க ரூ.1.5 கோடி இழப்பீடு வேண்டும் என்று அப்பெண்ணிடம் கோரினார். அப்பெண்ணும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.
கணவன் மனைவி மற்றும் காதலிக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு வீடு, மற்றும் ரூ.27 லட்சம் என மொத்தம் ரூ.1.5 கோடியை காதலி வழங்க உள்ளார்.
- அதர்வா தானே ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.
- உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தினர்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் 19 வயது இளைஞர் அதர்வா சதுர்வேதி.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான EWS கோட்டாவின் கீழ் இரண்டு முறை இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வில் அதர்வா தேர்ச்சி பெற்றார். இரண்டாவது முறை 530 / 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஆனால் மத்தியப் பிரதேச அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் EWS இடஒதுக்கீட்டை அமல்படுத்தாததால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அதர்வா வழக்கு தொடர்ந்தார். ஆனால் அங்கு நீதி கிடைக்காததால், உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் வாயிலாக அதர்வா தானே ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.
மாணவனின் வாதத்தைக் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு வார காலத்திற்குள் அதர்வாவிற்கு 2025-26 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் தற்காலிக சேர்க்கை வழங்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் மாநில அரசிற்கும் உத்தரவிடப்பட்டது.
தனியார் கல்லூரிகள் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றவில்லை என்றால், அவற்றைப் பூட்டிவிடுங்கள் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் காட்டமாக தெரிவித்தார்.
- கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து அடையாளம் காணப்பட்டார்.
- தனது மனைவி, தாய், சகோதரன் மற்றும் சகோதரியின் உதவியுடன் வீசியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நிஷத்புரா பகுதியில் கமல் நகர் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை, இங்குள்ள ஒரு செப்டிக் டேங்கிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
செப்டிக் டேங்கிற்குள் சோதனை செய்தபோது, ஒரு இரும்புப் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து அவர் மகாராஷ்டிர மாநிலம் கோண்டியாவைச் சேர்ந்த அஷ்ரபி என்று அடையாளம் காணப்பட்டார்.
போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

மத்தியப் பிரதேசத்தை சமீர் கான் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும், அஷ்ரபிக்கும் ஓராண்டிற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அஷ்ரபி போபாலில் சமீருடன் வசித்து வந்துள்ளார்.
ஏற்கனவே திருமணமான சமீரைத் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அஷ்ரபி வற்புறுத்தியதாகவும், பணம் தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சமீர், கடந்த பிப்ரவரி 7 இல் அஷ்ரபியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு, தனது மனைவி, தாய், சகோதரன் மற்றும் சகோதரியின் உதவியுடன் சடலத்தை ஒரு இரும்புப் பெட்டிக்குள் திணித்து, வீட்டின் அருகே இருந்த செப்டிக் டேங்கிற்குள் சமீர் வீசியுள்ளார்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி சமீர் கான் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அப்போது 20 வயதாக இருந்த சலீம், சம்பவத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் பக்கத்து மாவட்டமான தார் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்.
- தற்போது 65 வயதாகும் சலீம் அங்கு குடும்பத்துடன் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார்.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் பால்காவாடா பகுதியில் பால்காட் என்ற கிராமம் அமைந்துள்ளது.
கடந்த 1980 ஆம் ஆண்டு இந்த கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் இருந்து ரூ.100 மதிப்புள்ள கோதுமை திருடு போனது.
கோதுமையை திருடியதாக சலீம் மற்றும் ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அப்போது 20 வயதாக இருந்த சலீம், சம்பவத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் பக்கத்து மாவட்டமான தார் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்.
தற்போது 65 வயதாகும் சலீம் அங்கு குடும்பத்துடன் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார்.
மறுபுறம் மாநில அளவிலான நீண்ட கால வழக்குகளளில் தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணிகளை மத்தியப் பிரதேச காவல்துறை தீவிரப்படுத்தியது.
இந்நிலையில் சலீமின் முன்னாள் கூட்டாளி ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சலீமை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
- கோயிலில் வழிபட வந்திருந்த பக்தர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது.
- வைஷ்ணவி (11), சாயா (7) மற்றும் கரிஷ்மா (9) ஆகிய மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் ரூலி பகுதியில் உள்ள அஹ்ரௌலி கிராமத்தில் மாதா கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் பழைய கூரையை இடித்துவிட்டு, அங்கு கோபுரம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 9) மதியம் 2 மணியளவில் பணியின்போது எதிர்பாராதவிதமாக கூரை இடிந்து விழுந்தது.
கோயிலில் வழிபட வந்திருந்த பக்தர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி வைஷ்ணவி (11), சாயா (7) மற்றும் கரிஷ்மா (9) ஆகிய மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.2.50 லட்சம் கொடுத்து சொந்தமாக ஒரு இ-ரிக்ஷா வாங்கி உள்ளனர்.
- இ-ரிக்ஷாவை ஓட்ட முடியாமல் அவர்களின் வருமானம் தடைபட்டது.
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சில மின்வாகனங்கள் அடிக்கடி பழுதாவதாகவும், அவற்றை பழுது நீக்கி கொடுப்பதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்வருவதில்லை என்றும் இணையத்தில் அதிக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதுபோன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஷிவ்புரி பகுதியை சேர்ந்தவர் நாராயன். இவரது மனைவி குடியா மஹூர். இவர்கள் இருவரும் இ-ரிக்ஷா ஓட்டி வந்தனர். இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.2.50 லட்சம் கொடுத்து சொந்தமாக ஒரு இ-ரிக்ஷா வாங்கி உள்ளனர். அதனை ஓட்டி வருமானம் ஈட்டி தங்கள் 3 குழந்தைகளையும் வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் வாங்கிய 2 மாதத்திலேயே இ-ரிக்ஷா சரியாக வேலை செய்யாமல் பழுதானது. இதுகுறித்து குடியா மஹூர் இ-ரிக்ஷா வாங்கிய நிறுவனத்தினிடம் புகார் செய்த போதும் அவர்கள் இ-ரிக்ஷாவில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்காமல் 4 மாதங்களாக அலைக்கழித்து வந்துள்ளனர்.
இ-ரிக்ஷாவில் பேட்டரி வெடித்துள்ளது. இதை நீங்கள் தான் புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என மழுப்பலாக பதில் கூறி உள்ளனர். இதனால் இ-ரிக்ஷாவை ஓட்ட முடியாமல் அவர்களின் வருமானம் தடைபட்டது. இதனால் ரிக்ஷா வாங்குவதற்கு வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் குடியா மஹூர் திணறினார். இதனால் ஆத்திரமடைந்த குடியா மஹூர் சம்பவத்தன்று தனது இ-ரிக்ஷாவை ஷோரூம் கொண்டு சென்ற நிலையில் திடீரென ஆவேசமடைந்து ஷோரூம் முன்பு வைத்து இ-ரிக்ஷாவுக்கு தீ வைத்து எரித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயை அணைத்ததோடு, குடியா மஹூரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
- முதுமை காரணமாக இம்ரத்தால் நடக்க முடியவில்லை.
- மருத்துவமனை வளாகத்தில் தனது தந்தையை சுமந்தபடி சில நிமிடங்கள் சுற்றித் திரிந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த முனேஷ் ரகுவன்ஷி என்ற நபர் தனது தந்தை இம்ரத் சிங்கை குணா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
வாகனம் அவர்களை மருத்துவமனை வாயிலில் இறக்கிவிட்டுச் சென்றது. முதுமை காரணமாக இம்ரத்தால் நடக்க முடியவில்லை. முனேஷ் ஸ்ட்ரெச்சரைத் தேடினார். மருத்துவமனை ஊழியர்கள் கூட அவருக்கு உதவ வரவில்லை. இதனால், அவர் தனது தந்தையை தோளில் சுமந்து மருத்துவமனைக்குள் சென்றார்.
அவர் மருத்துவமனை வளாகத்தில் தனது தந்தையை சுமந்தபடி சில நிமிடங்கள் சுற்றித் திரிந்தார். இதனை வேடிக்கை பார்த்த ஊழியர்கள் உதவ முன்வரவில்லை. முனேஷ் தனது தந்தையை 2-வது மாடிக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. லிப்ட் பழுதடைந்தது முனேஷ் மட்டும் ஸ்ட்ரெச்சரில் தனது தந்தையை வைத்து 2-வது மாடிக்கு இழுத்துச் சென்றார். இது அரசு மருத்துவமனையில் அவலம் நடந்ததாக பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து முனேஷ் கூறுகையில், என் அப்பாவுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. சரியான நேரத்தில் நான் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவமனை ஊழியர்கள் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. நான் நிறைய சிரமங்களை எதிர்கொண்டேன் என்றார்.
- வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்துள்ளான்.
- தடுக்க முயன்ற போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஒசாஃப் அலி கான் என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம், 11-ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு போபால் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஒசாஃப் அலி கானை போலீசார் இன்று ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த வழக்கறிஞர்கள், அலி கான் மீதான கோபத்தில் நீதிமன்ற வளாகத்தில் அவனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தடுக்க முயன்ற போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வழக்கறிஞர்கள் அலி கானை சரமாரியாகத் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- மத்தியப் பிரதேச விளையாட்டு விழாவின் நிறைவு விழாவில் சிவராஜ் சிங் சௌகான் கலந்துகொண்டார்.
- சிவராஜ் சிங் சவுகான் பேட்டிங் செய்ய ஜடேஜா அவருக்கு பந்துவீசினார்.
மத்தியப் பிரதேச விளையாட்டு விழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேட்டிங் செய்ய ஜடேஜா அவருக்கு பந்துவீசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- பள்ளியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, அழுதுகொண்டே பெற்றோரிடம் ஆசிரியர் செய்த செயலைக் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் வகுப்பறையில் வைத்து 1 ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
திகம்கர் மாவட்டம் பலேரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்ற அந்த 6 வயது சிறுமியை ஆசிரியர், பள்ளியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, அழுதுகொண்டே பெற்றோரிடம் ஆசிரியர் செய்த செயலைக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பலேரா காவல் நிலையத்தில் திரண்டு புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போக்சோவின் கீழ் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.






