என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு மருத்துவமனை"

    • வீடியோ, போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
    • சித்திக் அளித்த விளக்கம் சரியாக இல்லாததால் அவரை அதிகாரிகள் பணி நீக்கம் செய்தனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் வக்கார் சித்திக் என்பவர் டாக்டராக வேலை செய்து வந்தார்.

    இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் புது மனைவி கணவரை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சித்திக் தனது மனைவியை முதல் மாடிக்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு வார்டில் இருந்த நோயாளிகளை வெளியே அனுப்பிவிட்டு தனது சட்டை, பேண்டை கழட்டினார்.

    பின்னர் புது மனைவியை கட்டிப்பிடித்த படியும், கட்டிலுக்கு அடியில் முன்னும், பின்னும் உருண்டு புரண்டார். இதே போல் நீண்ட நேரம் நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர்.

    இதனை ஆஸ்பத்திரி நோயாளிகள் தங்களது செல்போன்களில் வீடியோ, போட்டோவாக பதிவு செய்தனர்.

    இந்த வீடியோ, போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து சித்திக்கிடம் விளக்கம் கேட்டனர். சித்திக் அளித்த விளக்கம் சரியாக இல்லாததால் அவரை அதிகாரிகள் பணி நீக்கம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் நோயாளிகளை காப்பாற்றும் புனிதமான பணியில் உள்ள டாக்டர் ஒருவர் இது போன்ற செயலில் ஈடுபட்டது ஏற்புடையதல்ல.

    இனி இதுபோல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். 

    • கடுமையாக பிரசவ வலி ஏற்பட்ட போதிலும் எந்த டாக்டரும், நர்சும் ரூபாவை பரிசோதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • நடைபாதையில் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென குழந்தை பிறந்தது.

    ஹாவேரி:

    ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகாவில் உள்ள ககோலா கிராமத்தை சேர்ந்தவர் ரூபா(வயது 30). கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் ரூபாவை ஹாவேரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பிரசவ அறையில் படுக்கை வசதி பற்றாக்குறையாக இருந்ததால், ரூபா பிரசவ அறையின் வெளியில் நடைபாதையில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

    பின்னர் அவருக்கு கடுமையாக பிரசவ வலி ஏற்பட்ட போதிலும் எந்த டாக்டரும், நர்சும் ரூபாவை பரிசோதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடுமையான வலியால் துடித்த ரூபா இருக்கையில் அமர முடியாமல் எழுந்து அங்கும் இங்கும் வலியில் துடித்தப்படி நடந்து கொண்டிருந்தார். அவர் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென குழந்தை பிறந்தது. பின்னர் தரையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததால் அந்த குழந்தை உடனே இறந்துவிட்டது.

    ரூபா கடுமையான பிரசவ வலியில் அலறி துடித்த போதிலும் டாக்டர்கள் அனைவரும் அலட்சியமாக செயல்பட்டதாகவும், அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததும் தான் குழந்தை இறப்புக்கு காரணம் எனவும் ரூபாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

    பின்னர் போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் இதுகுறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • கழிவறை, சமையல் கூடம், ஆய்வுக்கூடம் டாக்டர்கள் அறை, செவிலியர்கள் அறை மற்றும் பிற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • தங்குதடையின்றி பாதுகாப்பான சுகாதாரமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வருகை தந்தார்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று கொல்லிமலையில் இருந்து காரவள்ளி வரை சுமார் 25 கிலோ மீட்டர் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் நடைபயணம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் சேர்ந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளிடம் மருத்துவமனையின் சிகிச்சை முறைகள் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாளர்கள் ஆகியோர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் கழிவறை, சமையல் கூடம், ஆய்வுக்கூடம் டாக்டர்கள் அறை, செவிலியர்கள் அறை மற்றும் பிற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் தங்குதடையின்றி பாதுகாப்பான சுகாதாரமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராஜ்மோகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    இதை தொடர்ந்து நாமக்கல் மாநகராட்சியில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் புதிய சித்த மருத்துவமனையை திறந்து வைத்தார். ரூ.2.28 கோடி மதிப்பில் புதுச்சத்திரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு வட்டாரங்களில் 3 புதிய பொது சுகாதார வளாகம், 2 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தையும் திறந்து வைத்து பேசினார்.

    • மேலும் நான்கு குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
    • இந்தக் குழந்தைகள் அனைவரும் அதே மருத்துவமனையில் தொடர்ந்து ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்று வந்தனர்.

    ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில் ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்ற 5 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது.

    ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் சைபாசா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தலசீமியா பாதித்த 5 குழந்தைகளுக்கும் ரத்தம் மாற்று சிகிச்சைகாக மருத்துவமனையின் ரத்த வங்கியிலிருந்து ரத்தம் ஏற்றப்பட்டது .

    இந்நிலையில் அதில் ஒரு குழந்தையின் பெற்றோர், ரத்த வங்கியில் தங்கள் குழந்தைக்கு எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாக நேற்று முன் தினம் குற்றம்சாட்டினர். புகாரைத் தொடர்ந்து, சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார் தலைமையிலான ஐந்து பேர் குழு அந்த மருத்துவமனைக்கு விரைந்தனர்.

    நேற்று அவர்கள் நடத்திய ஆய்வில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 5 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு உறுதியானது.

    தலசீமியா பாதித்த குழந்தைகளுக்கு மோசமான ரத்தம் செலுத்தப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் விசாரணையின்போது ரத்த வங்கியில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன என்றும் டாக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    தலசீமியா நோய்க்காக இந்தக் குழந்தைகள் அனைவரும் அதே மருத்துவமனையில் தொடர்ந்து ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அலட்சியத்தால் அவர்களுக்கு எச்ஐவி பாதித்துள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரத்த வங்கியின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • அவருக்கு மறைவான இடம் கூட தரப்படவில்லை.
    • இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    உத்தரகாண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை தரையிலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பெண் செவ்வாய்க்கிழமை இரவு ஹரித்வாரில் உள்ள அரசு பெண்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் உறவினப் பெண் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார்.

    பணம் தர முடியாத ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், பணியில் இருந்த மருத்துவர், பிரசவம் பார்க்க முடியாது என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. 

    சிகிச்சை மறுக்கப்பட்ட அந்தப் பெண் பிரசவ வலியில் நகர முடியாமல் மருத்துவமனையின் தரையிலேயே அதிகாலை 1:30 மணியளவில் குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவருக்கு மறைவான இடம் கூட தரப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அது மட்டுமின்றி, குழந்தை பிறந்த பிறகு கர்ப்பிணி பெண்ணிடம் அங்கிருந்த நர்சுகள், "என்ன சுகமாக இருக்கிறதா? இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமா?" என்று நக்கலாக பேசி கேலி செய்துள்ளனர்.

    சம்பவம் குறித்து புகார் எழுந்த நிலையில், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இரவுப் பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் சோனாலி உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசர நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்று விரிவான விசாரணை நடந்து வருவதாகவும், அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார். மேலும் பிரசவித்த தாயும் சேயும் நலமாக உள்ளாதாகவும் அவர் தெரிவித்தார். 

    • மருந்து, ஊசிகள் இருப்பு, நோயாளிகளின் வருகை, எக்ஸ்-ரே பிரிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • உள்நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    கரூரில் நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், இன்று காலை ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்திருந்தார். பின்னர் கொடுமுடி பகுதியில் சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து அவர் திடீரென கொடுமுடி அரசு மருத்துவமனைக்குள் சென்று, அங்கிருந்த மருத்துவர்கள், பணியாளர்கள் வருகைப்பதிவேடு, மருந்து, ஊசிகள் இருப்பு, நோயாளிகளின் வருகை, எக்ஸ்-ரே பிரிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், அங்கு உள்நோயாளிகளாக இருந்தவர்களிடம், முறையாக சிகிச்சை அளிக்கின்றார்களா, மருந்து, ஊசிகள் வழங்கப்படுகிறதா என சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

    மேலும், அங்குள்ள சுகாதார வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், இங்கு ஏதேனும் குறைகள் இருந்தால், உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என மருத்துவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

    இதனையடுத்து, உள்நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார். ஆய்வை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    • ஏழைகளுக்கு, அரசு மருத்துவமனைகள் இனி உயிர் காக்கும் இடங்களாக இல்லை, ஆனால் மரணக் குகைகளாக மாறிவிட்டன.
    • உங்கள் அரசாங்கம் நாட்டின் மில்லியன் கணக்கான ஏழைகளின் சுகாதார உரிமையைப் பறித்துவிட்டது.

    மத்தியப் பிரதேச தலைநகர் இந்தூரில் மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் வார்டுக்குள் எலி கடிதத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    இந்நிலையில் இதுகுறித்து தனதுஎக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,

    "மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலி கடித்து இரண்டு பிறந்த குழந்தைகள் இறந்தனர். இது தற்செயல் நிகழ்வு அல்ல, இது முழுமையான கொலை. இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் அர்த்தமற்றது. இதைப் பற்றிக் கேள்விப்பட்டாலே முதுகுத்தண்டில் நடுக்கம் ஏற்படுகிறது.

    சுகாதாரத் துறை வேண்டுமென்றே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது சிகிச்சை பணக்காரர்களுக்கு மட்டுமே. ஏழைகளுக்கு, அரசு மருத்துவமனைகள் இனி உயிர் காக்கும் இடங்களாக இல்லை, ஆனால் மரணக் குகைகளாக மாறிவிட்டன.

    பிரதமர் மோடியும் மத்தியப் பிரதேச முதல்வரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். உங்கள் அரசாங்கம் நாட்டின் மில்லியன் கணக்கான ஏழைகளின் சுகாதார உரிமையைப் பறித்துவிட்டது.

    இப்போது குழந்தைகள் அவர்களின் தாய்மார்களின் மடியில் இருந்து பறிக்கப்படுகிறார்கள்" என்று ராகுல் கடுமையாக சாடினார்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க இந்தூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

    • பச்சிளம் குழந்தைகள் வலியால் அலறி துடித்தன.
    • காயம்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. மாநிலத்தின் மிகப்பெரிய ஆஸ்பத்திரிகளில் ஒன்றான இங்கு எலித்தொல்லை அதிகரித்துள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்தநிலையில் குழந்தைகள் நல வார்டில் புதிதாக பிறந்த 2 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தன.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது அந்த குழந்தைகளின் கை விரல்கள் மற்றும் காதுகளை அங்கு சுற்றித்திரிந்த எலிகள் கடித்து குதறின. இதனால் பச்சிளம் குழந்தைகள் வலியால் அலறி துடித்தன. காயம்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    • தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உள்ளது.
    • மாவட்டக் கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். மேலும் விழாக்களில் அந்தந்த பகுதி மக்களுக்கு வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கி குறை தீர்க்கும் சேவைகளையும் செய்து வருகிறார்.

    சமீபத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் 10 நாட்கள் ஓய்வு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.

    சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதோடு முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த 2 விழாக்களில் பங்கேற்றார்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் தலைமை மருத்துவமனை தாம்பரம் சானடோரியம் வளாகத்தில் ரூ.115 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனை 400 படுக்கை வசதிகளுடன் 6 தளங்களுடன் அமைந்துள்ளது.

    இந்த மருத்துவமனை திறப்பு விழா இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார். பிறகு அவர் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதிகளை பார்வையிட்டார்.

    அதன் பிறகு பல்லாவரத்தில் விமான நிலையம் அருகே கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு 20 ஆயிரத்து 21 ஏழை எளியவர்களுக்கு ரூ.1672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.

    தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உள்ளது.

    விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு-சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, துணை மேயர் காமராஜ், பம்மல் தெற்கு பகுதி கழக செயலாளர் மண்டலக் குழுத் தலைவர் வே.கருணாநிதி, பல்லாவரம் சேர்மன், இ.ஜோசப் அண்ணாதுரை, த.ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்லாவரம் பாண்ட்ஸ் கம்பெனி பாலத்தில் இருந்து தாம்பரம் அரசு மருத்துவமனை வரை வழியெங்கும் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டக் கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

    இதே போல் பல்லாவரம் மேடைக்கு வரும் போது கண்டோன்மெண்ட் குன்றத்தூர் சாலை சந்திப்பு முதல் பழைய டிரங்க் சாலை வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • தகராறின் போது விஸ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார்.
    • மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான விஸ்ரூதை போலீசார் தேடி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியை கத்தியால் குத்தி கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குளித்தலை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த ஸ்ருதி(27)-யை அவரது கணவரான விஸ்ரூத் கத்தியால் 3 குத்தியதில் ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஏற்கனவே தகராறின் போது விஸ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான விஸ்ரூதை போலீசார் தேடி வருகின்றனர்.

    அதிகாலையில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்தனர். 

    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 700-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன.
    • பிரசவித்த பெண்களையும், குழந்தைகளையும் கவனிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட படுக்கை அறை கொண்ட வார்டு உள்ளது.

    கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்காக இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.

    இங்கு கள்ளக்குறிச்சி மட்டுமின்றி கச்சிராயப்பாளையம், சின்னசேலம், கல்வராயன்மலை, தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காகவும், பரிசோதனைக்காகவும் வந்து செல்கின்றனர். அவ்வாறு பிரசவத்திற்காக வரும் பெண்கள், குழந்தை பெற்றதும் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அது போல் பச்சிளம் குழந்தைகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவர்களும் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 700-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன. அவ்வாறு பிரசவித்த பெண்களையும், குழந்தைகளையும் கவனிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட படுக்கை அறை கொண்ட வார்டு உள்ளது.

    இந்த வார்டில் குழந்தைகள் மற்றும் பெண்கள் இருப்பதற்காக அமைக்கப்பட்ட படுக்கைகள் கிழிந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பிரசவித்த தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்து படுக்க வைக்கும் நிலை இருந்து வருகிறது. இதனால் அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

    இந்த நிலையில் படுக்கைகள் கிழிந்து சேதமாகி இருப்பதும், பச்சிளம் குழந்தைகளை தாய்மார்கள் தரையில் படுத்து படுக்க வைத்திருக்கும் காட்சி அடங்கிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைபார்த்ததும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மருத்துவமனைகளில் இதுபோன்று சேதமாகி காணப்படும் படுக்கை மற்றும் மெத்தைகளை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நேற்று இரவு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து பார்வையிட்டு நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    • குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று வெளியானது.
    • வீடியோவில், வார்டில் போடப்பட்டிருக்கும் படுக்கைகள் படு மோசமான நிலையில் இருப்பதையும் பார்க்க முடிந்தது.

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று வெளியானது.

    அந்த வீடியோவில் பச்சிளங் குழந்தைகள் தரையில் படுக்க வைத்துள்ள படியும், வார்டில் போடப்பட்டிருக்கும் படுக்கைகள் படு மோசமான நிலையில் இருப்பதையும் பார்க்க முடிந்தது.

    இதற்கு, கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    இதுகுறித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் பவானி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், " சம்பந்தப்பட்ட 2 பெண்கள், அவசர சிகிச்சை பிரிவு அருகே கூடுதலாக வைக்கப்பட்டிருந்த மெத்தைகளை பயன்படுத்தி உள்ளனர்.

    சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, சேதமடைந்த மெத்தையை அப்புறப்படுத்தப்படுத்தி உள்ளோம். தற்போது நோயாளிகளுக்கு தேவையான மெத்தைகள் இருப்பு உள்ளன" என்றார்.

    ×