என் மலர்
நீங்கள் தேடியது "வாலிபர் கொலை"
- கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
- போலீசார் இருவரின் குடும்பத்தினரையும் வரவழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பாப்பட்லா மாவட்டம், கொலக்கலூவை சேர்ந்தவர் நாக கணேஷ். இவர் குண்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஷிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் தூரத்து உறவினரான தெனாலி அடுத்த எடவூருவை சேர்ந்த கீர்த்தி அஞ்சனாதேவி என்பவரை பெண் கேட்டு சென்றனர். நாக கணேஷ் தங்களது மகளை விட உயரம் குறைவாக இருப்பதால் பெண் தர அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.
நாக கணேஷ், கீர்த்தி அஞ்சனாதேவி இருவரும் சந்தித்த முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்டனர். இருவரும் தங்களது பெற்றோர்களுக்கு தெரியாமலேயே செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். நீண்ட நேரம் செல்போனில் பேசி அரட்டை அடித்து காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினர். அமராவதியில் உள்ள கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். தங்களது உயிருக்கு கீர்த்தியின் பெற்றோர் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் நல்லபாடு போலீசில் பாதுகாப்பு கேட்டு சரணடைந்தனர்.
போலீசார் இருவரின் குடும்பத்தினரையும் வரவழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். தங்களது திருமணம் கோவிலில் எளிமையான முறையில் நடந்ததால் உறவினர்கள், நண்பர்களை அழைத்து பிரம்மாண்ட முறையில் திருமண வரவேற்பு விழா நடத்த புதுமணத் தம்பதியினர் முடிவு செய்தனர்.
நாக கணேஷ் நேற்று காலை வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு நண்பர் ஒருவருடன் வங்கிக்கு சென்றார். நகைகளை அடகு வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பைக்கில் வீடு திரும்பி வந்து கொண்டு இருந்தார். நாக கணேஷ் வங்கிக்கு சென்றதை அறிந்த கீர்த்தியின் தந்தை, மகன் துர்காவிடம் எத்தனை பேர் இருந்தாலும் வெட்டி சாய்த்து விட்டு வா நான் பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இதையடுத்து கீர்த்தியின் சகோதரர் தனது 2 நண்பர்களுடன் பைக்கில் வந்து நாக கணேசின் பைக்கை வழிமறித்தார்.
தன்னிடமிருந்த கத்தியை எடுத்து நாக கணேஷை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த நாக கணேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
துர்கா ராவ், நாக கணேஷை வெட்டி கொலை செய்வதை அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் தாலியில் உள்ள ஈரம் காய்வதற்கு முன்பாகவே தங்கையின் கணவரை கொலை செய்து பூவையும் பொட்டையும் பறித்த கல் நெஞ்சம் படைத்த துர்கா ராவிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பதிவு செய்து வருகின்றனர்.
கொலை குறித்து நல்லபாடு போலீசார் வழக்கு பதிவு செய்து துர்கா ராவ் அவரது 2 நண்பர்கள், கீர்த்தியின் தந்தை ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- கைதான சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு டவுன் பகுதியில் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
நெல்லை:
நெல்லை டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் வெங்கடேஷ் என்ற ஆனந்த் (வயது 19). தாய்-தந்தை இறந்துவிட்ட நிலையில், வெங்கடேஷ் சென்னையில் கூலி வேலை செய்து வந்தார்.
சமீப காலமாக டவுனில் தனது பெரியப்பா வீட்டில் தங்கியுள்ள வெங்கடேஷ், கூலி வேலை செய்து வந்தார். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வெங்கடேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார்.
அப்போது அங்கு மறைந்திருந்த 3 பேர் கும்பல், வெங்கடேசை நோக்கி அரிவாளுடன் ஓடிவரவே, அதனை பார்த்த வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொண்டு த.மு. சாலையில் தப்பிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அவர்களை சுற்றி வளைக்கவே, மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தவறி விழுந்தனர்.
உடனே அந்த கும்பல் வெங்கடேசை குறிவைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதனை பார்த்து அந்த பகுதி கடைக்காரர்களும், வெங்கடேசின் நண்பர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துணை போலீஸ் கமிஷனர் பிரசன்னகுமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 2023-ம் ஆண்டு, டவுன் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சக்தி என்பவரை 2 கைகளையும் வெட்டிக்கொலை செய்யும் முயற்சியில், தற்போது கொலை செய்யப்பட்ட வெங்கடேசுக்கு தொடர்பு இருந்துள்ளது.
அந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாமா என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதனால் அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசன்னகுமார் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், சந்திப்பு த.மு. சாலையில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் கும்பல் வெங்கடேசை வெட்டிக்கொலை செய்தது உறுதியானது.
அதனை அடிப்படையாக கொண்டு விசாரித்ததில், நெல்லை டவுன் வயல் தெருவை சேர்ந்த இசக்கிராஜா(19) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை நடத்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 2 சிறார்களை இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான இசக்கிராஜாவை தேடி வருகின்றனர்.
கைதான சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில நாட்களுக்கு முன்பு டவுன் பகுதியில் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கொலையாளிகள் தரப்பினரும் மோட்டார் சைக்கிளில் வரவே, 2 தரப்பினரின் மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்படவே கைகலப்பு வரை சென்றதாகவும், அந்த பகுதி மக்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இசக்கிராஜா தரப்பினர் சமாதானம் அடையாமல், திட்டமிட்டு வெங்கடேசை கொலை செய்தது தெரியவந்தது.
கைதான 2 சிறுவர்களும் டவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். தலைமறைவான இசக்கிராஜா பள்ளி படிப்பை முடித்துவிட்டு அரசு போட்டித்தேர்வுக்காக தனியார் அகாடமியில் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு நாளும் தனது வீட்டில் அச்சத்துடன் வசித்து வந்த ராகவி, சதீஸ்குமாரை செல்போனில் அழைத்து தன்னை அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
- ராகவி அளித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலம் அருகேயுள்ள பொட்டபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாராஜா மகன் சதீஸ்குமார் (வயது 21). படித்துவிட்டு கிடைத்த வேலைக்கு சென்று வந்தார். தும்பப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்பரது மனைவி ராகவி (29). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் செல்வம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் பொட்டபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் ராகவி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இதற்கிடையே சதீஸ்குமாருக்கும், ராகவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. முதலில் செல்போனில் மட்டும் பேசி வந்த இருவரும் பின்னர் தங்களது குடும்பத்தினருக்கு தெரியாமல் ஊர் சுற்றி வந்தனர். ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு யாரிடமும் கூறாமல் ஊரை விட்டு சென்று வேறொரு ஊரில் தம்பதியராக வசித்து வந்தனர்.
இந்தநிலையில் ராகவியின் பெற்றோர், தங்கள் மகள் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து சென்று விட்டதாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனை அறிந்த சதீஸ்குமார், ராகவியை மீண்டும் அவரது வீட்டில் கொண்டு சென்று விட்டு வந்தார்.
அப்போது முதல் ராகவியை அவரது சகோதரர் ராகுல் மற்றும் உறவினர்களான சரிதா, அழகர், ஆறுமுகம், கண்ணாயி, மணிமேகலை ஆகியோர் வீட்டுக்காவலில் பூட்டி வைத்துள்ளனர். சதீஸ்குமாருடன் செல்ல நினைத்தால் உங்கள் இருவரையும் கொன்று விடுவோம் என்றும் கூறி மிரட்டியுள்ளனர். இதனால் வேறுவழி யின்றி ராகவி அந்த வீட்டிலேயே அடைபட்டு கிடந்தார்.
ஒரே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சில காலம் கழித்து அழைத்து செல்வதாக சதீஸ்குமார் கூறிச்சென்றார். அதுவரை அவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். ஆனாலும் ஒவ்வொரு நாளும் தனது வீட்டில் அச்சத்துடன் வசித்து வந்த ராகவி, சதீஸ்குமாரை செல்போனில் அழைத்து தன்னை அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதே வீட்டில் வாழ்ந்தால் தன்னுடையே பெற்றோரும், சகோதரர்களும் அடித்து கொன்றுவிடுவார்கள் என்று கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து மீண்டும் ராகவியை தன்னுடன் அழைத்து செல்ல நேற்று சதீஸ்குமார் பொட்டபட்டிக்கு வந்திருந்தார்.
பின்னர் ராகவியை அழைத்துக்கொண்டு கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்ற அவர், தங்களை சேர்த்து வைக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பு உறவினர்களை அழைத்து பேசிய போலீசார், கணவரை இழந்த பெண் என்பதாலும், இருவரும் மேஜர் என்பதாலும் அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். அதன் பிறகு நள்ளிரவில் சதீஸ்குமார், ராகவி இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
ஆனாலும் ஆத்திரம் தீராத ராகவியின் சகோதரர் ராகுல் சதீஸ்குமாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக தனது நண்பர்கள் அய்யனார், அருள்பாண்டி இருவரையும் அழைத்து திட்டம் தீட்டினார். அதன்படி சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற சதீஸ்குமார், ராகவியை காரில் பின்தொடர்ந்தனர்.
அய்யப்பட்டி அருகே சென்றபோது அந்த காரில் வந்தவர்கள் சதீஸ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் இருள் சூழ்ந்த பகுதிக்கு சதீஸ்குமாரை மட்டும் இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர்.
இதில் சதீஸ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் காரில் வந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. சாலையில் பலத்த காயங்களுடன் கிடந்த ராகவி கொடுத்த தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார் அடித்து கொலை செய்யப்பட்ட சதீஸ்குமாரின் உடலை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த ராகவி 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுதொடர்பாக ராகவி அளித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சதீஸ்குமாரை கொலை செய்தது ராகவியின் உறவினர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 12-ந்தேதி முதல் தங்களது விசாரணையை தொடங்கினர்.
- ராமச்சந்திரனுக்கு கொலையில் நேரடி தொடர்பு இல்லை என்பதால், அவர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் (வயது 27) என்பவர் நகை திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அஜித்குமாரை பல்வேறு இடங்களுக்கு போலீஸ் வேனில் அழைத்துச் சென்ற ராமச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் தங்களது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 12-ந்தேதி முதல் தங்களது விசாரணையை தொடங்கினர். 20 நாட்களுக்கு மேலாக மதுரை, திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன்குமார் மற்றும் கோவில் பணியாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களையும் விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சிறப்பு தனிப்படை போலீசார் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் கடந்த ஜூன் 27 மற்றும் 28-ந் தேதிகளில் அஜித் குமாரை எந்த எந்த இடத்திற்கு யார், யார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர் என்பது குறித்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும், போலீஸ் வேனில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டியுள்ளார்.
இந்த வழக்கில் ராமச்சந்திரன் சாட்சியம் முக்கியமாக இருப்பதால் அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் குமாரை பல்வேறு இடங்களுக்கு வேனில் அழைத்துச் சென்ற ராமச்சந்திரனுக்கு கொலையில் நேரடி தொடர்பு இல்லை என்பதால், அவர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ராமநாதபிரபுவை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் ராமநாதபிரபு (வயது 28). வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி, மது போதை என்று ஊரை சுற்றி வந்துள்ளார். பண பலம் மிக்க அவரை பெற்றோரும் பல முறை கண்டித்தும் அவர் திருந்தவில்லை.
இதற்கிடைய திருமணத்திற்கு பிறகு ராமநாதபிரபு தன்னுடைய மனைவி ஊரான ராமநாதபுரம் மாவட்டம் அம்மன் கோவிலை அடுத்த தெற்கு தரவை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த சாத்தையா மற்றும் சிலருடன் அமர்ந்து ராமநாதபிரபு மது அருந்தினார். பின்னர் தலைக்கேறிய அளவுக்கு அதிகமான போதையுடன் தனக்கு சொந்தமான காரில் நண்பர்களான அம்மன்கோவிலை சேர்ந்த பழனி மற்றும் வள்ளிமாடன்வலசையைச் சேர்ந்த சிவா, தெற்கு தரவையைச் சேர்ந்த சாத்தையா ஆகியோருடன் அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது எதிரே வாலி நோக்கத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி உப்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அதனை டிரைவர் கார்த்தி ஓட்டினார். அம்மன்கோவிலை அடுத்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை குடியிருப்பு பகுதியில் சென்றபோது எதிரோ வந்த லாரி, காரின் பக்கவாட்டு பகுதியில் லேசாக உரசியது. இதில் அந்த காரின் கண்ணாடி உடைந்ததுடன், காரிலும் கீறல் ஏற்பட்டது.
இதனையடுத்து லாரியை முந்திச் சென்ற பிரபு லாரியை மடக்கி வழிமறித்து நிறுத்தினார். பின்னர் அந்த லாரி டிரைவர் கார்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்த பலர் திரண்டனர். அப்போது காரில் கீறல் விழுந்ததை உடனடியாக சரி செய்து தருவதாகவும், கண்ணாடியை மாற்றி தருவதாகவும் லாரி டிரைவர் கார்த்தி கூறியுள்ளார்.

ஆனால் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத ராமநாதபிரபு லாரி டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து தகராறு நடந்த பகுதியில் திரண்ட அம்மன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், லாரி டிரைவர் கார்த்திக்கு ஆதரவாக, ராமநாதபிரபு தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தனது சகோதரரை தொலைபேசியில் தொடார்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வரச்சொன்னதன்பேரில், அவருடன் அம்மன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் அங்கு வந்தனர்.
அவர்களுடனும் போதையில் இருந்த ராமநாதபிரபு தகராறு செய்தார். மேலும் அவருடன் இருந்த அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர்களை பார்த்து, தங்களுக்கு ஆதரவாக பேசாமல் வெளியூர் நபருக்கு ஏன் ஆதரவாக பேசுகிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவழியாக இருதரப்பினரையும் சமாதானம் செய்து பிரச்சினையை மேலும் வளர்க்க வேண்டாம், அங்கிருந்து கலைந்து செல்லுமாறும், காருக்கும், லாரிக்கும் வழியை விடுமாறும் கூறியதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து காரை எடுத்துக் கொண்டு புறப்பட்ட ராமநாதபிரபு தன்னுடன் காரில் வந்த நண்பர்கள் சிவா, சாத்தையா ஆகியோரை அதே இடத்தில் இறக்கிவிட்டார். ஆத்திரம் தீராமல் தான் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணினார். சிறிது தூரம் சென்று விட்டு மீண்டு காரை திருப்பிய ராமநாதபிரபு அதிவேகமாக வந்த அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது காரை மூர்க்கத்தனமாக ஏற்றினார். மேலும் பின் நோக்கி காரை இயக்கி மீண்டும் ஒருமுறை ஏற்றினார். பின்னர் காரில் இருந்து அவர் குதித்தார்.
இதனை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியில் நிலைகுலைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இங்கே நடந்தது கனவா அல்லது நனவா என்று புரியாமல் மக்கள் நின்றனர். இந்த கோர சம்பவத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். த.மு.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் சலிமுல்லா கான், வர்த்தக அணி மாநில செயலாளர் பனைக்குளம் பரக்கத்துல்லா ஆகியோர் தலைமையில் காயம் அடைந்த 12 பேரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவம் நடந்த பகுதிக்கு ஒரு கிராமமே திரண்டு வந்தது. அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓலமிட்டு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் சாத்தையா உட்பட 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை செல்லும் வழியில் ராமநாதபிரபுவின் நண்பர் சாத்தையா பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது.
கை, கால் முறிவு, தலையில் காயம் அடைந்த மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தை ஏற்படுத்தியவர் கிராமமக்கள் கையில் சிக்கினால் அவரை அடித்தே கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் ராமநாதபிரபுவை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர் மீது கடுமையான காயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல், பொது மக்களுக்கு இடையூறு, தீங்கு விளைவித்தல், மரணத்தை ஏற்படுத்தக்கூடிய விபத்து, தாக்குதல், கொலை முயற்சி ஆகிய 5 பிரிவுகளில் கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சினிமாவை மிஞ்சும் அளவுக்கு, ஒரே கிராமத்தைச் சேர்ந்த 12 பேரை மூர்க்கத்தனமாக காரை கொண்டு ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பாரில் இருக்கை பிடிப்பது சம்பந்தமாக தனுஷ் கவுட் மற்றும் கேசவ் இடையே போட்டி ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவை கைது செய்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், கஜுல ராமா ரத்தை சேர்ந்தவர் தனுஷ் கவுட் (வயது 22). மூசாப்பேட்டையை சேர்ந்தவர் கேசவ். இருவரும் தனித்தனியாக குகட் பள்ளி மெயின் ரோட்டில் உள்ள பாரில் மது குடிக்க சென்றனர்.
அப்போது மதுபான பார் முழுவதும் கூட்டம் நிரம்பியது. மது குடித்துக் கொண்டு இருந்த ஒருவர் பாரில் இருந்து வெளியே சென்றார்.
அப்போது பாரில் இருக்கை பிடிப்பது சம்பந்தமாக தனுஷ் கவுட் மற்றும் கேசவ் இடையே போட்டி ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கேசவ் பீர் பாட்டிலை உடைத்து தனுஷ் கவுட் வயிற்றில் சரமாரியாக குத்தினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர் தனுஷ் கவுட் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவை கைது செய்தார்.
- அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொரட்டிகட்டில் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் விஷ்ணு (வயது32), யது கிருஷ்ணன் (29). சம்பவத்தன்று இரவு இவர்கள் இருவரும் திருச்சூர் ஆனந்தபுரத்தில் உள்ள கள்ளுக்கடையில் கள் குடித்துள்ளனர்.
அப்போது குடிபோதையில் அவர்களுக்கிடையே திடீரென தகராறு நடந்துள்ளது. இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்த நிலையில், ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணு, யது கிருஷ்ணனின் தலையில் ஆயுதத்தால் அடித்தார்.
இதில் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த புதுக்காடு போலீசார், சம்பவ இடத் துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு யது கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டது குறித்து வழக்கு பதிந்தனர்.
தம்பியை அடித்துக் கொன்ற விஷ்ணுவை தேடினர். மோதலில் காயமடைந்ததால் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்த அவரை போலீசார் கைது செய்தனர். சிகிச்சை முடிந்ததும் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட்ட தகராறிலேயே யது கிருஷ்ணனை விஷ்ணு கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், பிரவீனை கைது செய்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் டொம்பு சேரி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது33). எலக்ட்ரீசியன் வேைல பார்த்து வந்தார். இவரது அண்ணன் மருதமுத்து (36). இவரது மனைவி வீரலட்சுமி (32). இவரும் அதே பகுதியில் வசித்த பிரவீன் (24) என்பவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இவர்கள் கள்ளத்தொடர்பு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து ஊர் பெரியவர்கள் மூலம் பேசி அவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர்.
இனிமேல் இதுபோன்று செயல்பட்டால் போலீசில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். ஆனால் அதனையும் மீறி வீரலட்சுமி, பிரவீன் கள்ளத்தொடர்பு தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 26ந் தேதி வீரலட்சுமியுடன் பேசிக்கொண்டிருந்த பிரவீனை கணவர் மருதமுத்து கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் மருதமுத்துவை தினேஷ்குமார் (27) என்பவர் பிடித்துக்கொள்ள பிரவீன் கத்தியால் குத்த முயன்றார். ஆனால் தகராறை தடுக்க சென்ற ராஜா மீது கத்திக்குத்து விழுந்தது. பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், பிரவீனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பிரவீனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் உடந்தையாக இருந்த தினேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் நடராஜன் உத்தரவிட்டார்.
- பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன.
- சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.
நாகர்கோவில்:
கருங்கல் அருகே உள்ள மாங்கரை தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 24), எலக்ட்ரீசியன். இவர் கடந்த 16-ந்தேதி வேலைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள காட்டாற்று குளத்தில் சஜின் பிணமாக கிடந்தார்.
அவரது உடலை போலீ சார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன. எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.
இது தொடர்பாக கருங்கல் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் சஜினின் உறவினர்கள் இன்று காலை கருங்கல்-தொலையா வட்டம் சாலையில் மாங்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னரசு, ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், ஆழ்வார்குறிச்சி தனிப்பிரிவு ஏட்டு ரவி மற்றும் போலீசார் சென்றனர்.
- சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
கடையம் :
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கீழஆம்பூர் ஊராட்சி மன்றத்திற்கு பின்புறம் உள்ள நெல் களத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னரசு, ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் , ஆழ்வார்குறிச்சி தனிப்பிரிவு ஏட்டு ரவி மற்றும் போலீசார் சென்றனர். அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
மேலும் கொலையானவர் அந்த பகுதிகளில் 2 நாட்களாக மனநிலை சரியில்லாதது போல் சுற்றி திரிந்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 4 பேர் கைது
- பைக் மீது வேன் உரசியதால் கடத்தி கொலை செய்ததாக வாக்குமூலம்
சோளிங்கர்:
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஐயனேரி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(வயது 22). இசை குழு நடத்தி வந்தார். இவரும், சோளிங்கர் அடுத்த ஆயலாம்பேட்டை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து, பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் சரத்குமாரின் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், தலை தீபாவளிக்காக சரத்குமார் தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றார்.
கடந்த 24-ந் தேதி தலை தீபாவளியை கொண்டாடினர். அன்று இரவு 7 மணியளவில் சரத்குமார் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட மாமனார் உமாபதியுடன், சோளிங்கர் அடுத்த ஐப்பேடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார்.
அப்போது, கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பைக்குகளில் வந்த 7 பேர் கும்பல் திடீரென சரத்குமாரை சரமாரியாக தாக்கியது. அப்போது, தடுக்க முயன்ற உமாபதியை சரமாரியாக தாக்கினர்.
இதில் உமாபதி லேசான காயமடைந்தார். பின்னர், சரத்குமாரை அந்த கும்பல் பைக்கில் கடத்தி சென்று, சுமார் 2 கி.மீ தொலைவில் கூடலூர் அருகே உள்ள ஒரு மறை வான இடத்தில் வைத்து, சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியது.
இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நடத்திய விசாரணையில், ஐப்பேடு பகுதியை சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக சரத்குமாரை கடத்தி சென்று கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அரக்கோணம் ஏஎஸ்பி கிரீஸ் யாதவ், அரக்கோணம் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
தொடர்ந்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 'ஐப்பேடு பகுதியை சேர்ந்த தாமோதரன் (24), கோபி (24), அசோக் பாண்டியன் (24), துரைபாண்டியன் (23) ஆகிய 4 பேரை அரக்கோணம் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.
தகராறு
கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் வாக்குமூலத்தில் கூறியதாவது:-
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் ஞான கொள்ளை பகுதியில் இருந்து ஆர். கே.பேட்டை கிராமத்திற்கு நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சரத்குமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் வேனில் சென்றுள்ளனர்.
அப்போது ஐப்பேடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சென்ற பைக் மீது வேன் உரசியுள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் வேனில் சென்றவர்கள், பைக்கில் வந்த நபர்களை தாக்கியுள்ளனர். இதில் பைக்கில் வந்தவர்களை ஆர்.கே.பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
சரத்குமார் வேனில் வந்தவர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இந்த முன்விரோத தகராறில், எதிர்தரப்பைச் சேர்ந்த கோபி உள்ளிட்டோர் தங்களது கூட்டாளிகள் மூலம் சரத்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.
இதில் கோபி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இவ்வாறு கூறினர்.
- சிறுவன் அடிக்கடி மது குடித்துள்ளதால் கார்த்திக்ராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
- இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான் பாளையம் தெரு கேசவன் நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜ் (வயது 32). கூலித்தொழிலாளி.
இவரும் அதேபகுதியை சேர்ந்த இவரது உறவினரான 16 வயது சிறுவனும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுவன் அடிக்கடி மது குடித்துள்ளதால் கார்த்திக்ராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டு 2 பேரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு கார்த்திக் ராஜ் தனது வீட்டிற்கு மீரான் பாளையம் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு வந்த சிறுவன், கார்த்திக்ராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கார்த்திக்ராஜின் தலை மற்றும் முதுகில் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைதடுமாறிய கார்த்திக் ராஜ் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் சென்று தப்ப முயன்றுள்ளார்.
எனினும் அந்த சிறுவனும் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிவிட்டு கார்த்திக் ராஜை அரிவாளால் பலமுறை வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் ராஜ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விளாத்திகுளம் போலீசார் கார்த்திக் ராஜை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் கார்த்திக் ராஜ் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட கார்த்திக்ராஜிக்கு லதா (27) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.






