என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அஜித் குமாரை பல்வேறு இடங்களுக்கு போலீஸ் வேனில் அழைத்துச் சென்ற டிரைவர் அப்ரூவர் ஆகிறார்?
    X

    அஜித் குமாரை பல்வேறு இடங்களுக்கு போலீஸ் வேனில் அழைத்துச் சென்ற டிரைவர் அப்ரூவர் ஆகிறார்?

    • சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 12-ந்தேதி முதல் தங்களது விசாரணையை தொடங்கினர்.
    • ராமச்சந்திரனுக்கு கொலையில் நேரடி தொடர்பு இல்லை என்பதால், அவர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் (வயது 27) என்பவர் நகை திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அஜித்குமாரை பல்வேறு இடங்களுக்கு போலீஸ் வேனில் அழைத்துச் சென்ற ராமச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் தங்களது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 12-ந்தேதி முதல் தங்களது விசாரணையை தொடங்கினர். 20 நாட்களுக்கு மேலாக மதுரை, திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன்குமார் மற்றும் கோவில் பணியாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களையும் விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், சிறப்பு தனிப்படை போலீசார் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் கடந்த ஜூன் 27 மற்றும் 28-ந் தேதிகளில் அஜித் குமாரை எந்த எந்த இடத்திற்கு யார், யார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர் என்பது குறித்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும், போலீஸ் வேனில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டியுள்ளார்.

    இந்த வழக்கில் ராமச்சந்திரன் சாட்சியம் முக்கியமாக இருப்பதால் அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் குமாரை பல்வேறு இடங்களுக்கு வேனில் அழைத்துச் சென்ற ராமச்சந்திரனுக்கு கொலையில் நேரடி தொடர்பு இல்லை என்பதால், அவர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×