என் மலர்
சிவகங்கை
- 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
மேலும், நிவாரணத் தொகையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச் செய்தியறிந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
உடனடியாக மாவட்ட ஆட்சியரையும் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களையும் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
- திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
- காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பலர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ௯ பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு, காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 8 ஆம்புலன்ஸ்கள் வரழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- வருமனத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
- ரூ.1.2 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுதலை செய்து சிவகங்கை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை பெரிய கருப்பன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது வருமனத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
அதில், ரூ.1.2 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் பெரியகருப்பனை சிவகங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.
- இவ்விழாவிற்கு இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவரது மனைவி, இலங்கையை சேர்ந்த 5 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
- பலரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
திருப்பத்தூர்:
மறைந்த இலங்கை முன்னாள் மந்திரி எஸ்.ஆர்.எம்.ஆறுமுகம் தொண்டைமான்-ராஜலட்சுமி தம்பதியினரின் மகனும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஜீவன் குமரவேல் தொண்டமானுக்கும் திருப்பத்தூர் பிரபல கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் ராமேஸ்வரன்-பிரியா தம்பதியின் மகள் சீதை ஸ்ரீ நாச்சியாருக்கும் திருமணம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவரது மனைவி, இலங்கையை சேர்ந்த 5 அமைச்சர்கள் மற்றும் இலங்கை உவாமா கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செந்தில் தொண்டைமான், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கார்த்தி சிதம்பரம், அமைச்சர் பெரிய கருப்பன், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை, எச்.ராஜா, தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் சமூக அமைப்பு நிர்வாகிகள் என பலரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
- ஜாமீனில் வெளிவந்த 2 பேரும் பழனியப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
- கடந்த 27-ந் தேதி பழனியப்பன் பொன்னகர் பகுதியில் கட்டிட பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்தார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரியக்குடி ரெயில்வே கேட் பகுதியில் வசித்து வந்தவர் பொறியாளர் பழனியப்பன். இவர் பா.ஜ.க. நிர்வாகியாகவும் உள்ளார். இவருக்கு சொந்தமாக வணிக வளாக கட்டிடம் உள்ளது. இங்குள்ள ஒரு கடையை மூர்த்தினி வயல் கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் என்பவர் வாடகைக்கு எடுத்து நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சாந்தகுமாரின் நடவடிக்கையால் அவரை கடையை காலி செய்யுமாறு பழனியப்பன் கூறியுள்ளார். இதனால் 2 பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பழனியப்பனின் தாயார் அமுதா தன்னிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக சாந்தகுமார் காரைக்குடி போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் பழனியப்பன் மீதான முன் விரோதத்தில் போலியான அவணங்களை தயாரித்து சாந்தகுமார் பொய் புகார் அளித்ததாக தெரிகிறது.
இதையடுத்து சாந்தகுமாரையும் உடந்தையாக இருந்த அவரது நண்பர் கணேசன் என்பவரையும் காரைக்குடி தெற்கு போலீசார் கடந்த ஜூன் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த 2 பேரும் பழனியப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இதற்காக கூலிப்படையை நாடி உள்ளனர்.
கடந்த 27-ந் தேதி பழனியப்பன் பொன்னகர் பகுதியில் கட்டிட பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கூலிப்படையினர் அரிவாளால் சரமாரியாக வெட்டி பழனியப்பனை கொலை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பழனியப்பன் உறவினர்கள் 2 நாட்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காரைக்குடி ஏ.எஸ்.பி. ஆஷிஷ் புனியா பேச்சு வார்த்தை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து கூலிப்படையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான சாந்தகுமார், அவரது நண்பர் கணேசன் ஆகியோர் தலைமறைவாகினர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் நேற்று அழகப்பாபுரம் போலீசார் கைது செய்தனர்.
- 41 பேரின் குடும்பத்தினரையும் இன்று சென்னைக்கு வரவழைத்து நேரில் ஆறுதல் கூறினார் விஜய்.
- பாலியல் வன்கொடுமையால் சாலைகளில் 10, 15 வயது பிள்ளைகள் தனியாக நிற்க முடியவில்லை.
கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கினார் விஜய்.
அனுமதி உள்பட பல்வேறு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் இன்று சென்னைக்கு வரவழைத்து நேரில் ஆறுதல் கூறினார் விஜய். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது.
இதுவரை இல்லாத நடைமுறையாக பாதிக்கப்பட்டவர்களை தான் இருக்கும் இடதிற்கு அழைத்து வந்து அரசியல் தலைவர் ஒருவர் ஆறுதல் கூறுவது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து சிவகங்கையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கரூரில் மக்களுக்கே பாதுகாப்பு இல்லை.
அங்கு சென்றால் விஜய் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அனைவருக்கும் சந்தேகம் உள்ளது. அதையே அவரும் கருதியிருக்கலாம். அதனால் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறியிருக்கலாம்.
திமுக ஆட்சியில் கரூரில் 41 பேர் இறந்து விட்டனர், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் இறந்து விட்டனர், பாலியல் வன்கொடுமையால் சாலைகளில் 10, 15 வயது பிள்ளைகள் தனியாக நிற்க முடியவில்லை.
திமுக அரசு மக்கள் விரோதமாக இருப்பதால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்" என்று தெரிவித்தார்.
- அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாகும்.
- கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னையில் அழைத்து விஜய் பேசுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவாலயத்தில் குருபூஜையை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருதுபாண்டியர்களின் வீரம், தியாகம் உலக அளவில் போற்றப்பட்டு மதிக்கப்பட்டு வருகின்றது. எனது சார்பில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு வெள்ளிக் கவசத்தை அணிவித்து உள்ளேன்.
எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாத சூழ்நிலை நீடித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னையில் அழைத்து விஜய் பேசுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.
அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாகும். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க வை தொடங்கும்போது தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சட்டவிதியினை கொண்டு வந்தார். இதை எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது என சட்டவிதியை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிந்தால் போதுமென்று சட்ட திருத்தம் செய்துள்ளார். இதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இதனை சென்னை சிவில் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இறுதி தீர்ப்பை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் அசோகன், வழக்கறிஞர் சுந்தரபாண்டியன் உள்ளனர்.
- இன்றைக்கு வந்த நடிகர் விஜய் இந்தியை எதிர்த்துதான் அரசியல் செய்கிறார்.
- புது பொருள் விற்றால்தானே தனிக்கடை போட வேண்டும்.
நெற்குப்பை:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகில் 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு' என்ற தீர்மான ஏற்பு கூட்டம் மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 5 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இன்றைக்கு வந்த நடிகர் விஜய் இந்தியை எதிர்த்துதான் அரசியல் செய்கிறார். அதைத்தான் நாங்களும் செய்கிறோம். எங்களுடன் வந்து அவர் நிற்க வேண்டியதுதானே? புது பொருள் விற்றால்தானே தனிக்கடை போட வேண்டும்.
நான் எந்த மேடையிலும் விஜயை விமர்சிப்பது கிடையாது. ஏனென்றால் தி.மு.க. விஜய்க்கு அடுத்த முறை ராஜ்யசபா சீட்டு கொடுக்க வேண்டும்? ஏனென்றால் தி.மு.க.விற்கு அவர் வந்து விடுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சுத்திகரிப்பு ஆலைக்கு தடை விதிக்க வேண்டும் என மானாமதுரையில் பல்வேறு அமைப்பினர் சார்பில் தெரிவித்து வருகின்றனர்.
- சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி மானாமதுரையில் இன்று கடையடைப்பு போராட்டம் தொடங்கியது.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக தி.மு.க. தவிர அனைத்து கட்சியினர், வர்த்தகர்கள் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
13 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக்குகளில் சேகரமாகும் மருத்துவ கழிவுகளை சேகரித்து, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரிப்பு செய்வதென, அரசிடமும், சுற்றுச்சுழல் துறையிடம் அனுமதி பெற்றுள்ளனர்.
இங்கு மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை நிறுவினால் கிராம மக்கள் தொற்று நோய், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பிற்கு உள்ளாவார்கள். எனவே சுத்திகரிப்பு ஆலைக்கு தடை விதிக்க வேண்டும் என மானாமதுரையில் பல்வேறு அமைப்பினர் சார்பில் தெரிவித்து வருகின்றனர். ஆலை கட்டுமான பணியை நிறுத்தி வைக்குமாறு, முந்தைய கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டும், தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி மானாமதுரையில் இன்று கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. மானாமதுரை பழைய பஸ்நிலையம், மெயின் பஜார், சுந்தரபுரம் கடைவீதி, சிவகங்கை ரோடு, சிப்காட் ஆகிய பகுதிகளில் மருத்துவ கழிவு ஆலையை மூட வலியுறுத்தி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதையடுத்து சிப்காட் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அப்போது வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டு வந்து பங்கேற்று மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பொற்கொடி தலைமையில் சர்வ கட்சியினர், வர்த்தகர்களிடையே சமரச கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கூடுதல் சூப்பிரண்டு பிரான்சிஸ், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் மற்றும் மாசுகட்டுப்பாட்டு அலுவலர்கள் சர்வ கட்சியினர் கலந்துகொண்டு வர்த்தகர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூட அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். ஆனாலும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தததால் இன்று திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்று வருகிறது.
- திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் மனுக்கள் திருட்டு போனதாக புகார் கொடுத்திருந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சுற்று வட்டார கிராமங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தன. இந்த முகாம்களில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களை அதிகாரிகள் வாங்கி விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக கொண்டு சென்றனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்தன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்போது இருந்த தாசில்தார், திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் மனுக்கள் திருட்டு போனதாக புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஒருவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
- நம்பிக்கை துரோகத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
- இபிஎஸ் நல்ல பெயர் வாங்குவதற்காக கபடநாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
சிவகங்கையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு எம்.எல்.ஏ. பதவியை விட முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவன் என்பதையே பெருமையாகதான் நினைக்கிறேன். அதில் எனக்கு அக மகிழ்ச்சி இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்யக்கூடியவர். இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் நாம் மன்னித்துவிடலாம். ஆனால், நம்பிக்கை துரோகத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
நிச்சயம் அதற்கான பலனை அவர் வாழும் காலத்திலேயே அனுபவிப்பார். முக்குலத்தோர் சமூதாயத்திற்காக எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். அப்போதெல்லாம் செவி சாய்க்காத அவருக்கு இப்போது எங்கிருந்து தோன்றுகிறது.
எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும், அடிநலையில் இருக்கக்கூடிய மக்கள் வரை போய் சேர்ந்துவிட்டது. அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக கபடநாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தென் மாவட்டங்களில் நீங்கறே வந்து சிலையாக நின்றாலும், உங்களுக்கு வாக்கு கிடைக்காது.
தான் செய்த தவறுகளை மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழிப்போடும் செயல். என்னை பொறுத்தவரையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட கழகம் யார் ஒருவரும் பிரிக்கணும், அழிக்கணும் என்கிற வேலையில் இறங்கத் தேவையில்லை.
அதிமுக-வை வெளியில் இருந்து யாரும் வந்து அழிக்கத் தேவையில்லை. எடப்பாடி பழனிசாமியே அதை அழித்து முடித்து விடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.
- வேணி காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகர் ஒன்பதாவது வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் வேணி (வயது 41). இவருடன் அவரது வயதான தாயாரும் தங்கியுள்ளார். இந்தநிலையில் இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு மதுரை சென்றிருந்தார். அங்கு உறவினர்கள் சார்பில் பாண்டி கோவிலில் நடை பெற்ற கிடாவெட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று நள்ளிரவில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேணி, அச்சத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் அறைகளில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மேலும் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து வேணி காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பூட்டியிருந்த வீட்டில் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.






