என் மலர்
நீங்கள் தேடியது "நிகிதா"
- மற்றொரு பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ளது.
- திருப்புவனத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சென்றபோது தனது நகைகள் திருட்டு போனதாக பேராசிரியை நிகிதா திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அக்கோவிலின் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமாரை, மானாமதுரை தனிப்படை போலீசார் அழைத்துச்சென்று தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே நிகிதா அளித்த நகை திருட்டு புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சில நாட்களுக்கு முன்பு நிகிதா அளித்த புகார் மற்றும் வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ. வசம் திருப்புவனம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில் போலீசில் நிகிதா ஏற்கனவே அளித்த நகை திருட்டு புகார் தொடர்பாக சி.பி.ஐ. நேற்று புதிய வழக்குப்பதிவு செய்தது. அந்த புகாரில் என்னென்ன உள்ளது என சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-
கடந்த ஜூன் 27-ந் தேதி காலையில் பேராசிரியை நிகிதாவும், அவருடைய தாயார் சிவகாமியும் காரில் மடப்புரம் கோவிலுக்குச் சென்றுள்ளனர். கோவில் காவல் பணியில் இருப்பவர்களுக்கான சீருடையைப் போல தோற்றமளிக்கும் வகையில் உடை அணிந்து வந்த அஜித்குமார் அவரை அணுகி உள்ளார்.
நிகிதா தாயாரின் முதுமையை சாதகமாகப் பயன்படுத்தி, காரை நிறுத்த அஜித்குமாரே முன்வந்து சாவியை தன்னிடம் கொடுக்க வற்புறுத்தி வாங்கினார். பின்னர் கோவிலில் இருந்து வாகனத்திற்கு திரும்பிய பிறகு, தன் கைப்பை சிதைக்கப்பட்டு இருப்பதை நிகிதா பார்த்துள்ளார். சோதனை செய்தபோது, 6 பவுன் எடையுள்ள ஒரு சங்கிலி, 2½ பவுன் எடையுள்ள 2 தங்க வளையல்கள் மற்றும் ஒரு பவுன் எடையுள்ள கல் பதித்த 2 மோதிரங்கள் என மொத்தம் 9½ பவுன் தங்க நகைகள் காணாமல் போய் உள்ளன. அவற்றை கண்டுபிடித்து தர வேண்டும் என நிகிதா புகார் அளித்து உள்ளார்.
இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக போலீசார் அதே நாளில் அஜித்குமாரை அழைத்துச் சென்றனர். மறுநாள் இரவில் அவர் அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டதாக போலீசாரால் அறிவிக்கப்பட்டது. ஜூன் 29 அன்று மாலை 5.45 மணி முதல் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்த பிரேத பரிசோதனையில், அஜித்குமாரின் கால்கள், கைகள், மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் 44 வெளிப்புற காயங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றில் 19 காயங்கள் ஆழமானவை. தசை வரை நீண்டு இருந்தன. பிரேத பரிசோதனைக்கு சுமார் 12 முதல் 24 மணி நேரத்திற்கு முன்பு மரணம் நிகழ்ந்து இருக்கலாம் என்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் சிகிச்சை நிபுணர்களின் அறிக்கை கூறி உள்ளது. ஆனால் இறப்புக்கான சரியான காரணத்தை குறிப்பிடவில்லை. மற்றொரு பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ளது. திருப்புவனத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
நிகிதாவிடம் இருந்து உண்மையிலேயே நகை திருட்டு போனதா? மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவே அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்கி கொன்றனரா? என இந்த வழக்கில் சந்தேகம் எழுப்பப்பட்டது. அதன் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரிலேயே சி.பி.ஐ. இந்த நகை திருட்டு வழக்கையும் விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- போலீசாரால் கடந்த ஜூன் 28-ந் தேதி அஜித்குமார் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டார்
- இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் (வயது 27), நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை போலீசாரால் கடந்த ஜூன் 28-ந் தேதி கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர் பாக சிறப்பு தனிப்படையைச் சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன் குமார், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஜூன் 27-ந் தேதி கோவிலுக்கு வந்த நிகிதா காரை பார்க் செய்து தருமாறு அங்கிருந்த கோவில் பாதுகாப்பு ஊழியர் அஜித்குமாரிடம் கூறி சாவியை கொடுத்து உள்ளார். அவர் அதை அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் அருணிடம் கொடுத்து காரை கோவில் எதிரே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு 2 நிமிடத்தில் சாவியை நிகிதாவிடம் அஜித்கு மார் கொடுத்து விட்டார். ஆனால் நிகிதா கொடுத்த புகாரில் கார் சாவியை நீண்ட நேரம் கழித்து தந்ததாக தெரிவித்திருந்தார்.
மேலும் காரை அஜித்குமாரும் அவரது நண்பர் ஆட்டோ டிரைவர் அருணும் சேர்ந்து வடகரை வரை ஓட்டி வந்ததாக கூறப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகளும் முதல் நாள் விசாரணையை வடகரையில் இருந்து தான் தொடங்கினர். வழியில் உள்ள சி.சி. டி.வி., கேமரா காட்சிகளை பார்த்தபோது கார் வந்ததாக தெரிய வில்லை.
இதனிடையே காரை நிகிதாவே ஓட்டி சென்று, மீண்டும் அவரே ஓட்டி வருவது பதிவாகி இருந்தது. நிகிதாவின் காரை மடப்புரம் கோயில் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு 2 நிமிடத்தில் சாவியை ஒப்படைத்துள்ளனர். மீண்டும் பார்க்கிங்கில் இருந்து காரை எட்டு நிமிடத்தில் எடுத்து வந்து கொடுத்துள்ளனர். எனவே கோயிலுக்கு நிகிதா காரில் வந்த பின் கோயிலை விட்டு கார் வெளியே எங்கும் செல்லவில்லை என தெரிய வந்துள்ளது.
இவ்வாறு சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணையில் அவர் இவ்வாறு முரண்பட்ட தகவல்களை கூறியுள்ளதால், நிகிதா அஜித்குமார் மீது பொய் புகார் அளித்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- குற்றம் தெரியாதபோதுதான் சிபிஐ விசாரணை தேவை.
- சிபிஐக்கு மாற்றப்பட்டதால் இதுவரை என்ன நன்மை நடந்திருக்கிறது.
திருப்புவனம், மடப்புரத்தில் அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-
குற்றம் வெளிப்படையாக தெரிகிறது. நகை திருடினார் என்பது குற்றச்சாட்டு என்றால் ஏன் நகையை திரும்ப மீட்கவில்லை. ஏனென்றால் அவர் நகையை எடுக்கவில்லை என்று தானே அர்த்தம்.
அப்போ, பொய்யான குற்றச்சாட்டிற்கு நீ அடித்துக் கொன்று இருக்கிறாய்.
குற்றம் தெரியாதபோதுதான் சிபிஐ விசாரணை தேவை. இங்கே வெளிப்படையாகத் தெரிகிறது.
உங்கள் காவல்துறை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?.
சி.பி.சி.ஐ.டி.யிலிருந்து விசாரணையை சிபிஐக்கு மாற்றியதே எங்களை ஏமாற்றத்தான்.
சிபிஐக்கு எத்தனையோ வழக்குகள் மாற்றப்பட்டிருக்கிறது. சிபிஐக்கு மாற்றப்பட்டதால் இதுவரை என்ன நன்மை நடந்திருக்கிறது.
காவல்துறை முதலமைச்சரின் இலாகாவில் தானே இருக்கிறது. அப்போது, நேர்மையற்ற காவல்துறையின் தலைவர் நேர்மையற்றவர் தானே.
உங்களுடைய காவல்துறை நேர்மையாக விசாரிக்காது என்றால், அப்போது உங்களுடைய காவல்துறை நேர்மையற்றது.
நிகிதா மீது ஏன் இதுவரை விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கவில்லை?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டபோது அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர்.
- இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று ஒரு தரப்பினர் செயல்படுகின்றனர்.
தேனி:
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. மாநாடு நடந்த அதே இடத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முஸ்லிம் முன்னேற்ற மாநாடு நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இது வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் செயல்படும் நிகழ்வாகும். இந்த மாநாட்டிற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.
திருப்புவனத்தை சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பொறுப்பேற்று 'சாரிம்மா' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டபோது அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர். ஆனால் தற்போது அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டபோது குரல் கொடுக்க தயங்குகின்றனர். அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று ஒரு தரப்பினர் செயல்படுகின்றனர்.
அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை பாதுகாக்கும் அந்த சார் யார்? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
த.வெ.க. தலைவர் விஜய் முதல்வர் வேட்பாளராக அறிவித்து அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இது அவர்களின் விருப்பம். அதேபோல் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதும், இணையாமல் இருப்பதும் அவர்களது விருப்பம்.
ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசிர்வாதம் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடந்த ஆண்டைக்காட்டிலும் குறைந்த சிலைகளை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரது கருத்து கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அஜித்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்தான் நிகிதா.
- முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நிகிதாவுடன் இணைத்து பேசுகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). தனது காரில் இருந்த நகைகள் மாயம் என நிகிதா என்பவர் அளித்த புகாரின் பேரில், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற தனிப்படை போலீசார், கொடூரமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த பேராசிரியை நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது நிகிதா தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில் நிகிதா பெயரில் தனது புகைப்படம் பரப்பப்படுவதாக திருவள்ளூர் கிழக்கு பா.ஜ.க. மாவட்ட செயலாளர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
என் பெயர் ராஜினி. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளேன்.
அஜித்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்தான் நிகிதா. என் மண் என் மக்கள் யாத்திரைக்காக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நிகிதாவுடன் புகைப்படத்துடன் இணைத்து பேசுகிறார்கள்.
சமூக வலைதளத்திலும், ஊடகத்திலும் தவறாக செய்தி பரப்புகிறார்கள். இதை கொண்டுபோனது செந்தில் சரவணன் என்பவர். பேஸ்புக், டுவிட்டரில் அவர் ID தான் வெளிவருகிறது. சில செய்திகளையும் வெளியிட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மீது புகார் அளித்துள்ளேன். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அது என்னுடைய புகைப்படம். அண்ணாமலை என் அண்ணா. அவரை முன்னிறுத்தி தான் நாங்கள் உள்ளேயே வந்தோம். ஆனா அந்த போட்டோவை வைத்து இந்த மாதிரி அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். இது ஒரு லேடீசை கலங்கப்படுத்தியதுபோல் இல்லை. எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் வேற லெவலில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்ணின் வளர்ச்சியை சமூகத்தில் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
- எனக்கு எந்த பெரிய அதிகாரிகளும், முதலமைச்சரும் தெரியாது.
மதுரை:
போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த பேராசிரியை நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது நிகிதா தலைமறைவாக உள்ளார். அவருடைய வீடும் பூட்டிக்கிடக்கிறது.
இந்தநிலையில் நிகிதா பேசி வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது:- `இதனை மிகவும் வேதனையுடன் நான் வெளியிடுகிறேன். பெண் ஒருவர் பல்வேறு பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டம் முடித்து கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து சமூகத்தில் மிக உயரிய பொறுப்பிற்கு வருவது மிகப்பெரிய சவால்.
பெண்ணின் வளர்ச்சியை சமூகத்தில் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதுதான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. அஜித்குமார் இறந்தது மிகவும் வேதனையான சம்பவம். சம்பவத்தன்று புகார் தெரிவித்ததோடு நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். அதன்பின் என்ன நடந்தது என தெரியாது. என்னுடைய தந்தை முக்கிய பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு 2011-ம் ஆண்டு பலதரப்பினரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றதாக புகார் வந்துள்ளது. ஓய்வு பெற்ற பின்பு ஒரு அதிகாரிக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்பது இந்த சமூகத்தில் தெரிந்த ஒன்று.
அப்படி இருக்கும்போது இந்த குற்றச்சாட்டை எப்படி ஏற்க முடியும். திண்டுக்கல்லில் கல்லூரியில் பணியாற்றி வரும் நான் ஒரு நாள் மட்டும் கல்லூரிக்கு சென்றுவிட்டு தொடர்ந்து விடுப்பில் உள்ளேன். எனது தாய் கீழே விழுந்து அடிபட்டு பேச முடியாத அளவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு உதவியாக உள்ளேன்.
தற்போது எனக்கு சோதனையான காலம். என்னை பற்றி இப்போது பல்வேறு தரப்பினர் பேட்டியளித்து வருகிறார்கள். அவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று எனக்கு தெரியும். என்னுடைய சொந்த வாழ்க்கையை பேசுவதற்கு முன்பு அவர்களுடைய நிலையை யோசித்து பார்க்க வேண்டும். எனக்கு பெரிய அதிகாரிகள் மற்றும் தமிழக முதலமைச்சரை நன்கு தெரியும், அதை பயன்படுத்தி தான் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனக்கு எந்த பெரிய அதிகாரிகளும், முதலமைச்சரும் தெரியாது. என்னை பற்றி வேண்டுமென்றே தி.மு.க. நிர்வாகி ஒருவர் தூண்டிவிட்டு வருகிறார். காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நான் பொறுமையாக இருந்து வருவதால் குற்றவாளி கிடையாது. இது முற்றிலும் வேதனையான நேரம். அஜித்குமார் இறந்ததற்கு அவருடைய தாயாரிடம் நான் பலமுறை மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அந்த ஆடியோவில் அவர் பேசி உள்ளார்.
இதற்கிடையே நிகிதா தன் மீதான மோசடி வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் இருக்க கோவையில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் அமர்ந்திருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும்.
- ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.
காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம் எனவும் நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும். மேலும் ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.
- அஜித்குமார் வீட்டிற்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
- விரைவில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 28) நகை திருட்டு புகாரில் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அஜித்குமார் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் ஆறுதலும் தெரிவித்தும் உள்ளனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் அஜித்குமார் வீட்டிற்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அஜித்குமாரின் தாயாரிடம் த.வெ.க. துணையாக நிற்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து, நாளை மறுநாள் சென்னை சிவானந்தா சாலையில் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு, கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி கிடைக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடத்த தமிழக வெற்றிக்கழகத்தினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்து வேறு தேதியில் போராட்டம் நடத்த கூறியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- போலீஸ் நிலையத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் அவர்கள் தகவல் சொன்னதாக கூறப்படுகிறது.
- சுமார் 2 மணி நேரம் கடந்தும் போலீசார் யாரும் அங்கு செல்லாததால் தகவல் சொன்னவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கொல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது தற்போது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. நிகிதா மீது ஏற்கனவே பல்வேறு மோசடி புகார்கள் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பலர் போலீசில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நிகிதா, அவரது தாயார் ஒரு காரில் டிரைவருடன் வந்துள்ளனர். பின்னர் ஓட்டலில் அமர்ந்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர்.
இதைப்பார்த்து சிலர், அவர்களிடம் விசாரித்துள்ளனர். பின்னர் அவர்களை சிறைபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸ்நிலையத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் அவர்கள் தகவல் சொன்னதாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் கடந்தும் போலீசார் யாரும் அங்கு செல்லாததால் தகவல் சொன்னவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து நிகிதாவை விடுவித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
நிகிதா, தனது தாயாரை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அந்த கார் கோவையை நோக்கிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனால் நிகிதா கோவையில் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
நிகிதா, ஓட்டலில் அமர்ந்திருக்கும் காட்சி மற்றும் அவரை சிறைபிடித்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உரையாற்றிய ஆடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.






