என் மலர்
நீங்கள் தேடியது "police station"
- நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மின்வாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
- பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் எல்இடி திரை மற்றும் மேடை அமைக்கக்கூடாது.
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், தவெக-வுக்கு 11 நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி விதித்துள்ளது.
நிபந்தனைகள் வருமாறு:
நிகழச்சி நடத்தும் இடத்தில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் பிளக்ஸ், பேனர் வைக்கக்கூடாது, அதன்மீது தொண்டர்கள் ஏற கூடாது.
நிகழ்ச்சி நடைபெறும்போது தவெக தொண்டர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பாத வண்ணம் கூட்டத்தை நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மின்வாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும், முதலுதவி சிகிச்சைக்கான முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும்.
கூட்டத்தை முறையாக நடத்த தீயணைப்பு துறையினர் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் தொடர்பாக மாநகராட்சியிடமும் அனுமதி பெற வேண்டும்.
திருக்காம்புலியூர் ரவுண்டானா தேசிய நெடுஞ்சாலை என்பதால் ரோடு ரேஷ நடத்த தடை, கூட்டம் முடிந்ததும் கொடி, பேனரை அற்ற வேண்டும்.
பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் எல்இடி திரை மற்றும் மேடை அமைக்கக்கூடாது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்பு அவர்கள் சரண் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மாவோயிஸ்டு தலைவர்கள் பழங்குடியினரின் உண்மையான எதிரிகள்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் 16 நக்சலைட்டுகள் சரண் அடைந்தனர். போலீஸ் நிலையத் தில் மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்பு அவர்கள் சரண் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் அதில் இருந்து விலகி சரண் அடைந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது மாவோயிஸ்டு தலைவர்கள் பழங்குடியினரின் உண்மையான எதிரிகள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- பெண்ணின் தந்தை திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டார்.
- அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்திவாசன் (வயது30). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். நாளடைவில் கீர்த்திவாசனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இதற்கிடையே அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கீர்த்திவாசன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்த கீர்த்திவாசன் அப்பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அப்பெண் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அந்த பெண்ணின் தந்தை திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டார்.
இதையடுத்து கீர்த்திவாசனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காதலியை தன்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மிரட்டினார்.
இதனிடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே கீர்த்திவாசன் தான் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கீர்த்திவாசன் கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
- ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும்.
- ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.
காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம் எனவும் நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும். மேலும் ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.
- அஜித்குமார் வீட்டிற்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
- விரைவில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 28) நகை திருட்டு புகாரில் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அஜித்குமார் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் ஆறுதலும் தெரிவித்தும் உள்ளனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் அஜித்குமார் வீட்டிற்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அஜித்குமாரின் தாயாரிடம் த.வெ.க. துணையாக நிற்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து, நாளை மறுநாள் சென்னை சிவானந்தா சாலையில் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு, கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி கிடைக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடத்த தமிழக வெற்றிக்கழகத்தினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்து வேறு தேதியில் போராட்டம் நடத்த கூறியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- போலீஸ் நிலையத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் அவர்கள் தகவல் சொன்னதாக கூறப்படுகிறது.
- சுமார் 2 மணி நேரம் கடந்தும் போலீசார் யாரும் அங்கு செல்லாததால் தகவல் சொன்னவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கொல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது தற்போது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. நிகிதா மீது ஏற்கனவே பல்வேறு மோசடி புகார்கள் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பலர் போலீசில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நிகிதா, அவரது தாயார் ஒரு காரில் டிரைவருடன் வந்துள்ளனர். பின்னர் ஓட்டலில் அமர்ந்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர்.
இதைப்பார்த்து சிலர், அவர்களிடம் விசாரித்துள்ளனர். பின்னர் அவர்களை சிறைபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸ்நிலையத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் அவர்கள் தகவல் சொன்னதாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் கடந்தும் போலீசார் யாரும் அங்கு செல்லாததால் தகவல் சொன்னவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து நிகிதாவை விடுவித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
நிகிதா, தனது தாயாரை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அந்த கார் கோவையை நோக்கிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனால் நிகிதா கோவையில் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
நிகிதா, ஓட்டலில் அமர்ந்திருக்கும் காட்சி மற்றும் அவரை சிறைபிடித்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உரையாற்றிய ஆடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
- ஒரு தவறை மறைக்க பல தவறுகளை அடுத்தடுத்து செய்ததால் இந்த தனிப்படை போலீசார் திருப்புவனம் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.
- மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவே இந்த நகை மாயமான வழக்கில் போலீசார் இதுபோன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் கடந்த 27-ந்தேதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த நிகித்தா என்பவர் காரில் இருந்து 9½ பவுன் நகைகள் களவு போனது. அந்த நகைகளை கண்டுபிடிப்பதற்காக மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்தின் தனிப்படை போலீசார், கோவில் காவலாளி அஜித்குமாரை 27-ந்தேதி மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதில் தனிப்படை போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதன் தொடர்ச்சியாக சங்கரமணிகண்டன், ராஜா, பிரபு, ஆனந்த், கண்ணன், ராமச்சந்திரன் ஆகிய 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு நேரடியாக சம்பவ இடங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது அஜித்குமாரை அடித்துக் கொன்றதாக புகார் தெரிவித்த மக்கள் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்
இதன் தொடர்ச்சியாக அஜித்குமார் மர்ம மரண வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. அஜித்குமாரை அடித்துக் கொலை செய்ததாக குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து பேரையும் கொலை வழக்கில் திருப்புவனம் போலீசார் கைது செய்தனர். சம்பவத்தன்று போலீசார் நடத்திய கொடூரமாக தாக்குதல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது.
சம்பவத்தன்று 9½ பவுன் நகை திருட்டு போனதாக நிகித்தா என்பவர் சென்னையில் செல்வாக்குமிக்க ஒருவரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்திற்கு திருட்டு போன நகையை கண்டுபிடித்து கொடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
உடனடியாக சண்முக சுந்தரம் தனது கட்டுப்பாட்டில் உள்ள குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை அனுப்பி இந்த நகை திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டு உள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த 5 போலீசாரும், கோவில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
முதலில் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அங்கு வைத்து சரமாரியாக தாக்கியதால் அந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளார். அஜித்குமார் நண்பர்கள் அருண்குமார், லோகேஸ்வரன், சகோதரர் நவீன்குமார் ஆகியோரையும் அழைத்து விசாரணை என்ற பெயரில் தாக்கியுள்ளனர்.
அதற்குப் பின்னரும் திருடப்பட்ட நகை தொடர்பாக எந்த விவரமும் தெரியவராத நிலையில் ஒரு கட்டத்தில் தனிப்படை போலீசாரின் தாக்குதலை சமாளிக்க முடியாத அஜித்குமார், தான் மடப்புரம் கோவிலுக்கு பின்பக்கம் உள்ள அலுவலகத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் நகையை ஒளித்து வைத்திருப்பதாக தெரிவித்ததாகவும் அதனால் தாங்கள் அஜித்குமாரை அங்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் முதலில் தெரிவித்தனர்.
அங்கு சென்ற பின்னர் நகை எங்கே என்று கேட்டபோது அடி தாங்க முடியாமல்தான் அப்படி கூறியதாக அஜித்குமார் தெரிவித்துள்ளார். உண்மையில் தான் எந்த நகையையும் திருடவில்லை என்று கதறி அழுதுள்ளார். தங்களை ஏமாற்றியதாக கூறி ஆத்திரமடைந்த தனிப்படை போலீசார் கையில் கிடைத்த பிளாஸ்டிக் பைப் மற்றும் இரும்பு ராடு போன்றவற்றால் அவரை கடுமையாக தாக்கியதாகவும் அப்போது அவர் அவரது அலறல் சத்தம் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்ததாகவும் கூறப்படுகிறது.
அஜித்குமார் அலறல் சத்தத்தை தாங்கள் கேட்டதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். அவர் கடுமையான காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அவரை அவசர அவசரமாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் தனிப்படை போலீசார் சேர்த்துள்ளனர். அவர் உயிரிழந்ததும் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததும் தெரிய வந்திருக்கிறது.
ஒரு தவறை மறைக்க பல தவறுகளை அடுத்தடுத்து செய்ததால் இந்த தனிப்படை போலீசார் திருப்புவனம் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். அதே நேரத்தில் 9½ பவுன் நகை திருட்டு தொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் கடுமையாக விசாரிக்க உத்தரவிட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மற்றும் அவருக்கு மேல் உள்ள அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையாக இருந்தது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையின் கண்டனத்தை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் இதில் தொடர்புடைய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மற்றும் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது. மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவே இந்த நகை மாயமான வழக்கில் போலீசார் இதுபோன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
- காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித் குமாரின் தாயிடம் “"சாரி மா" என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன்.
- இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை?
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முதல்வர் மு.க.ஸ்டாலின், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித் குமாரின் தாயிடம் ""சாரி மா" என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் "சாரி" என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை?
சரி, ஒருவேளை மனம் உவந்து தான் முதல்வர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், இதோ மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காவல்நிலையங்களிலும், காவல்துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்திற்குறிய வகையிலும் இறந்தவர்களின் பட்டியல்:
1. பிரபாகரன் (வயது 45) - நாமக்கல் மாவட்டம்
2. சுலைமான் (வயது 44) - திருநெல்வேலி மாவட்டம்
3. தாடிவீரன் (வயது 38) - திருநெல்வேலி மாவட்டம்
4. விக்னேஷ் (வயது 25) - சென்னை மாவட்டம்
5. தங்கமணி (வயது 48) - திருவண்ணாமலை மாவட்டம்
6. அப்பு @ ராஜசேகர் (வயது 31) - சென்னை மாவட்டம்
7. சின்னதுரை (வயது 53) - புதுக்கோட்டை மாவட்டம்
8. தங்கபாண்டி (வயது 33) - விருதுநகர் மாவட்டம்
9. முருகாநந்தம் (வயது 38) - அரியலூர் மாவட்டம்
10. ஆகாஷ் (வயது 21) - சென்னை மாவட்டம்
11. கோகுல்ஸ்ரீ (வயது 17) - செங்கல்பட்டு மாவட்டம்
12. தங்கசாமி (வயது 26) - தென்காசி மாவட்டம்
13. கார்த்தி (வயது 30) - மதுரை மாவட்டம்
14. ராஜா (வயது 42) - விழுப்புரம் மாவட்டம்
15. சாந்தகுமார் (வயது 35) - திருவள்ளூர் மாவட்டம்
16. ஜெயகுமார் (வயது 60) - விருதுநகர் மாவட்டம்
17. அர்புதராஜ் (வயது 31) - விழுப்புரம் மாவட்டம்
18. பாஸ்கர் (வயது 39) - கடலூர் மாவட்டம்
19. பாலகுமார் (வயது 26) - இராமநாதபுரம் மாவட்டம்
20. திராவிடமணி (வயது 40) - திருச்சி மாவட்டம்
21. விக்னேஷ்வரன் (வயது 36) - புதுக்கோட்டை மாவட்டம்
22. சங்கர் (வயது 36) - கரூர் மாவட்டம்
23. செந்தில் (வயது 28) - தர்மபுரி மாவட்டம்
இவர்களது பெற்றோரிடமும், மனைவி-மக்களிடமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் ஃபோட்டோ-வீடியோ ஷூட் எப்பொழுது நடக்கும்? என்று வினவியுள்ளார்.
- அஜித்குமாரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சுமார் 44 இடங்களில் கடுமையான காயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 25 பேரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது27). இவர் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் கடந்த 3 மாதங்களாக காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 27-ந்தேதி கோவிலுக்கு வந்த பெண் ஒருவரின் காரில் இருந்த 10 பவுன் நகை மாயமானது. இது தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அஜித்குமாரை விசாரித்தனர். மேலும் அவரது சகோதரர் நவீன் மற்றும் ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரையும் திருப்புவனம் போலீசார் விடிய, விடிய விசாரித்தனர்.
இந்த நிலையில் விசாரணையின்போது அஜித்குமாரை போலீசார் தடியால் சரமாரியாக தாக்கினர். மேலும் மிளகாய்பொடி தூவியும் கொடூரமாக தாக்கிய நிலையில் அஜித்குமார் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அஜித்குமாரை போலீசார் அடித்துக்கொலை செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. இந்த நிலையில் மடப்புரம் போலீசார் ராஜா, சங்கரமணிகண்டன், பிரபு, ஆனந்த், கண்ணன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ்ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம், சஸ்பெண்டு செய்யப்பட்டார். யாரோ முக்கிய பிரமுகர் உத்தரவின் பெயரிலேயே போலீசார் அஜித்குமாரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளது மருத்துவ பரிசோதனையிலும் தெரிய வந்துள்ளது.
முகம், காது உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் பொடியை தூவி சித்ரவதை செய்த போலீசார் தலை முதல் உள்ளங்கால் வரை உடலில் எந்த பாகங்களையும் விட்டு வைக்காமல் காயம் ஏற்படும் வகையில் கம்பியில் கட்டி வைத்து இரும்பு ராடுகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அஜித்குமார் போலீசாரால் தாக்கப்படும் காட்சி சமூக வலைதளங்களிலும் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித்குமாரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சுமார் 44 இடங்களில் கடுமையான காயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் மேலும் உண்மை நிலவரத்தை கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே அஜித்குமார் மரணம் தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் திருப்புவனம் அண்ணாநகரை சேர்ந்த கார்த்திக் ராஜா வழக்கு தாக்கல் செய்தார்.
மேலும் அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் மாரீஸ்குமார் உள்ளிட்ட 5 பேரும் தனித்தனியே மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை சிறப்பு படையிடம் ஒப்படைத்தது யார்? காவலாளி அஜித்குமாரை 2 நாட்கள் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல போலீசாருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பியது ஏன்? பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே மக்களை தாக்கலாமா? சீருடையால் கிடைக்கும் அதிகாரம் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக தான் என்பதை போலீசார் ஏன் கருத்தில் கொள்ளவில்லை?
மேலும் இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் வருத்தம் அளிக்கக்கூடிய வகையில் இருக்கிறது. சட்ட விரோத காவல் மரணம் அடிப்படை உரிமைக்கு எதிரானது. திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கையையும், மடப்புரம் கோவில் செயல் அலுவலர் வீடியோ பதிவையும் மதுரை அரசு மருத்துவமனை டீன் சமர்ப்பித்துள்ள அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் உடனடியாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து சிறிது நேரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவமனை டீன் அருள் சுந்த ரேஷ்குமார் தாக்கல் செய்தார். அதை படித்து பார்த்த நீதிபதிகள் உடலில் ஒரு இடம் கூட விடாமல் அடித்துள்ளனர். மிளகாய் பொடி தூவி வெறித்தனமாக தாக்கியுள்ளனர். ஒருவரை கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள் கூட இந்த அளவுக்கு தாக்கியிருக்க மாட்டார்கள். இதனை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பதாகவே போலீசார் இப்படி ஒருவரை தாக்கலாமா? இந்த சம்பவத்தை இயக்க உத்தரவிட்டது யார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். மேலும் அஜித்குமார் கொலை சிறப்பு படை போலீசார் திட்டமிட்டு செய்ததாகும். ஒரு அரசு தனது குடிமகனை கொலை செய்துள்ளது. இதனை சாதாரண கொலை வழக்கு போல இல்லாமல் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
எனவே இந்த வழக்கு விசாரணை மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் அஜித்குமார் மரண வழக்கை உடனடியாக விசாரிக்க தொடங்க வேண்டும். இது தொடர்பாக ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சிவகங்கை மாவட்ட போலீசார் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். விசாரணை நடத்திய அறிக்கையை மாவட்ட நீதிபதி வருகிற 8-ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.
இதையடுத்து மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் உடனடியாக அஜித் மார் மரணம் தொடர்பான விசாரணையை இன்று தொடங்கியுள்ளார். இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிவகங்கை மாவட்ட போலீசிடம் இருந்து இன்று காலை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்யும் பணியில் நீதிபதி ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையை தொடங்கினார். அப்போது அஜித்குமார் தாக்கப்பட்ட போலீஸ் நிலையம் மற்றும் கோவில் வளாக பகுதிகள் ஆகியவற்றையும் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். இதுதொடர்பாக கோவில் ஊழியர்கள் அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் திருப்புவனம் போலீசார் உள்ளிட்ட 25 பேரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
வருகிற 8-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி தாக்கல் செய்யும் அறிக்கையில், காவலாளி அஜித்குமார் கொலை செய்யப்பட்டதற்கான முக்கிய காரணங்கள் மற்றும் அதற்கு தூண்டுதலாக இருந்த முக்கிய புள்ளிகள் குறித்த விபரமும் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- அஜித்குமார் தாயாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
- நவீனுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமார் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உயர்நீதிமன்ற மதுரைகிளையும் நேற்று முதல் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட அஜித்குமார் தாயாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அஜித்குமார் சகோதரருக்கு அரசு வேலையும், வீட்டு மனை பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தார்.
இந்த நிலையில், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் அஜித்குமார் சகோதருக்கு அரசு வேலைக்கான சான்றிதழ்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அரசு வேலைக்கான சான்றிதழ் மற்றும் வீட்டுமனை பட்டாவை உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தாரிடம் அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். நவீனுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- விசாரணை என்ற பெயரில் பத்திரகாளியம்மன் கோவில் கோ சாலைக்குள் வைத்து நகை கேட்டு பிரம்பால் தாக்குகின்றனர்.
- வீடியோ காட்சிகளை வெளியிட்ட நபருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளது.
இந்த நிலையில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமாரை சிறப்பு புலனாய்வு குழுவினர் அடித்து துன்புறுத்தும் கொடூரக் காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணை என்ற பெயரில் பத்திரகாளியம்மன் கோவில் கோ சாலைக்குள் வைத்து நகை கேட்டு பிரம்பால் தாக்குகின்றனர்.
போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் உயிரிழந்ததாக FIR-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அஜித்குமாரை போலீசார் பிரம்பால் தாக்கும் வீடியோ பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
இதனிடையே, வீடியோ காட்சிகளை வெளியிட்ட நபருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் இன்னும் அளிக்கவில்லை?
- யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸ் நிலையத்தில் வைத்து கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 5 போலீஸ்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை உடனடியாக தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, அஜித்குமார் மரண வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, அஜித்குமார் மரணம் தொடர்பாக நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். அதன் விவரம்:-
* அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள், ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யவில்லை.
* `ஏன் இந்த வழக்கில் காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
* ஒட்டுமொத்த காவல்துறையை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பிரேத பரிசோதனை அறிக்கையை அளிக்காதது ஏன்?
* பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் இன்னும் அளிக்கவில்லை?
* யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும்.
* சிவகங்கை மாவட்ட எஸ்பியை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்?, சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, அஜித்குமாரை, சிறப்பு புலனாய்வு குழுவினர் அடித்து விசாரிக்கும் வீடியோவை நீதிபதி முன்பு காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீடியோவை எடுத்த நபர் இன்று பிற்பகல் 3 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






