என் மலர்
நீங்கள் தேடியது "காவல்நிலையம்"
- கடந்த 3-ந்தேதி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது.
- தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று சீமான் கூறியுள்ளார்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல் துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு போலீசாரால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணத்துக்குநீதி வேண்டும்.
அதேபோல் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப்பொறுப் பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழும் காவல்நிலைய படுகொலைகளை தடுக்க கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜூலை 8-ந்தேதி மாலை 4 மணிக்கு திருப்புவனம் சந்தைத்திடல் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான தலைமை தாங்க உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி அறிவித்து இருந்தது.
இந்தநிலையில் சீமானின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஏற்கனவே அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக கடந்த 3-ந்தேதி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது.
மேலும் நாளை சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் தேரோட்டம் நடைபெறுவதுடன், திருப்புவனத்தில் வாரச்சந்தை கூட உள்ளதால் பாதுகாப்பு கருதி நாளை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருந்தபோதிலும் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று சீமான் கூறியுள்ளார்.
- போலீஸ் அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர்.
- சில கேள்விகளுக்கு சற்று யோசித்து விளக்கம் அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் கொடூர சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக மதுரை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்ததோடு மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேசை விசாரணை அதிகாரியாக நியமித்து வருகிற 8-ந்தேதி அஜித்குமார் கொலை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டு உத்தரவிட்ட மறுநாளே (2-ந்தேதி) நீதிபதி தனது விசாரணையை தொடங்கினார். இதற்காக திருப்புவனத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதல்நாளில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை திருப்புவனம் போலீசார் நீதிபதியிடம் வழங்கினர். அதனை தொடர்ந்து கோவில் ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. 2-வது நாளில் அஜித்குமார் தாய், அவரது சகோதரர் நவீன்குமார் மற்றும் உறவினர்களிடம் சுமார் 3 மணிநேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெற்றது. 3-வது நாளான நேற்று அஜித்குமார் மரணம் தொடர்பாக திருப்புவனம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
4-வது நாளான இன்று இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது. காலை 9 மணியளவில் திருப்புவனம் வந்த நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேரடியாக திருப்புவனம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிபதி சரிபார்த்தார்.
தொடர்ந்து போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரிடம் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றது முதல் இறக்கும் வரை போலீசார் நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு விளக்கம் பெறப்பட்டது.
நீதிபதி விசாரணையின் போது பல்வேறு கேள்விகளை கேட்டார். அதனை எதிர்பாராத போலீஸ் அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். சில கேள்விகளுக்கு சற்று யோசித்து விளக்கம் அளித்தனர்.
இன்றைய விசாரணையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், ஏ.டி.எஸ்.பி. சுகுமாறன் மற்றும் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், மானாமதுரை ஏ.டி.எஸ்.பி. போலீஸ் அலுவலக போலீசார், திருப்புவனம் போலீசார் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளனர்.
அவர்களிடம் நிகிதா கொடுத்த புகார், அஜித்குமாரை விசாரணை செய்ய உத்தரவு கொடுத்த அதிகாரி, தாக்குதலில் இறந்த பின் உயர் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் போன்றவை குறித்து நீதிபதி விசாரணை மேற்கொள்வார் என தெரிகிறது.
ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அனைத்து சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என தெரிகிறது. அதன்பின் அறிக்கை தயார் செய்யப்பட்டு அதனை 8-ந்தேதி நீதிபதி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவைப்படும் பட்சத்தில் மேலும் கால அவகாசம் கேட்கவும் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முடிவு செய்துள்ளார்.
- மதுரை ஐகோர்ட் அஜித்குமார் தொடர்பான வழக்கு விசாரணை விபரங்களை அறிக்கையாக வருகிற 8-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
- இன்னும் 4 நாட்கள் உள்ளதால் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27).
நகை திருடியதாக நிகிதா என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய கொடூர தாக்குதலில் அஜித்குமார் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அஜித்குமாரை தாக்கி கொலை செய்த 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரால் தாக்கி காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மதுரை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அஜித்குமார் கொலை தொடர்பாக விசாரிக்க மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் என்பவரை நியமித்தது.
மேலும் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிற 8-ந்தேதி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணையை உடனே தொடங்கினார். அதன்படி கடந்த 2 நாட்களாக திருப்புவனத்தில் நீதிபதி முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். முதல் நாளில் ஏ.டி.எஸ்.பி. சுகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், மடப்புரம் கோவில் ஊழியர்கள் ஆகியோரிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினார்.
2-வது நாளான நேற்று போலீசார் தாக்குவதை வீடியோ எடுத்த கோவில் ஊழியர் சக்தீஸ்வரனிடம் வீடியோவின் உண்மை தன்மை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து அஜித்குமாரின் தாய் மாலதி, அவரது சகோதரர் நவீன்குமார் மற்றும் உறவினர்கள் நீதிபதி முன் ஆஜராகி விளக்கமளித்தனர். விசாரணையின்போது சாட்சிகளின் வாக்கு மூலங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
3-வது நாளாக இன்று நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணையை தொடங்கினார். காலை 9 மணியளவில் திருப்புவனம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகைக்கு வந்த அவர் அஜித்குமாரை போலீசார் அழைத்து சென்றதை பார்த்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் அஜித்குமார் தாக்கப்பட்ட மடப்புரம் கோவில் பின்புறமுள்ள கோசாலை, திருப்புவனம் போலீஸ் நிலையம் ஆகிய இடங்களுக்கு சென்று நீதிபதி விசாரிக்க உள்ளார்.
மதுரை ஐகோர்ட் அஜித்குமார் தொடர்பான வழக்கு விசாரணை விபரங்களை அறிக்கையாக வருகிற 8-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இன்னும் 4 நாட்கள் உள்ளதால் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார்.
2 நாட்களாக சாட்சியங்களிடம் தனி அறையில் வைத்து வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில் அஜித்குமாரை தனிப்படை போலீசார் அழைத்து சென்று தாக்கப்பட்ட இடங்களை இன்று நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டு விபரங்களை சேகரிக்க உள்ளார். இதன் மூலம் இந்த வழக்கு விசாரணை வேகமெடுக்க தொடங்கி உள்ளது.
திருட்டு புகார் தொடர்பாக அஜித்குமாரை விசாரிக்க போலீஸ் உயர் அதிகாரிகள், தனிப்படை போலீசாருக்கு அழுத்தம் கொடுத்த தலைமை செயலக அதிகாரி யார்? எப்.ஐ.ஆர். பதியாமல் தனிப்படை போலீசார் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றது எப்படி? புகார் கொடுத்த நிகிதாவின் காரில் உண்மையிலேயே நகை இருந்ததா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் மர்மமாக உள்ளது. நீதிபதி அறிக்கை தாக்கல் செய்யும் போது மேற்கண்ட கேள்விகள் மீதான மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்குமார் போலீசாரால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் வழக்கின் தீவிரத் தன்மையை கருதி இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
மதுரை ஐகோர்ட்டில் வருகிற 8-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சி.பி.ஐ. எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுக்காமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று திருப்புவனம் வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை திருப்புவனம் போலீசாரிடம் இருந்து பெற்று சென்றனர்.
அவர்கள் வழக்கு விபரங்களை முழுமையாக அறிந்து கொண்டு 8-ந்தேதிக்கு பிறகு விசாரணையை தொடங்குவார்கள் என தெரிகிறது.
இந்த நிலையில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக விவரம் அறிந்தவர்கள் நீதிபதியிடம் நேரடியாக சாட்சியம் அளிக்கலாம் என்று அஜித் குமார் தரப்பு வக்கீல் சரவணன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து வக்கீல் சரவணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அஜித்குமார் போலீஸ் காவலில் மரணம் அடைந்தது தொடர்பாக விவரம் அறிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் நீதிபதி ஜான் சுந்தர்லாலிடம் சாட்சியம் அளிக்கலாம். இந்த விவகாரத்தில் தங்களுக்கு தெரிந்த உண்மைகளை எந்தவித அச்சமும் இல்லாமல் விசாரணை நடத்தும் நீதிபதியிடம் கூறலாம்.
நீதிபதி ஜான் சுந்தர்லால் வருகிற 6-ந்தேதி வரை அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவார். எனவே வருகிற 6-ந்தேதி வரை பொதுமக்கள் அஜித்குமார் மரணம் தொடர்பாக தெரிந்த விஷயங்கள் பற்றி அவரிடம் நேரடியாக சொல்லலாம்.
சாட்சியம் அளிக்க விரும்புபவர்கள் கோர்ட்டு நியமித்துள்ள ஊழியர்களை தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.
எங்களை பொறுத்தவரை காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் அரசு பதவிகளில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் நிகிதாவிடம் விசாரணை நடத்த தார்மீக வகையில் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவிலுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் என்பவர் கோவிலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
- கோவில் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, போலீசார் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு தான் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நீதிபதி முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
குறிப்பாக மடப்புரம் கோவில் பின்புறம் உள்ள கோசாலை பகுதியில் தனிப்படை போலீசார் அஜித்குமாரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ஐகோர்டிலும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. போலீசார் கம்பியால் அஜித்குமாரை கொடூரமாக தாக்கும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த தாக்குதலுக்கு பின் தான் அஜித்குமார் இறந்தார் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவம் நடந்த ஜூன் 28-ந்தேதியன்று சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் என்பவர் கோவிலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
அதில் அஜித்குமாரை அறநிலையத்துறை அலுவலகம் பின்புறம் அழைத்துச் செல்வது, உயிரிழந்த பின் கோவில் ஊழியர்கள் கார்த்திக் வேலு, வினோத் ஆகியோர் உதவியுடன் அஜித்குமாரை ஆட்டோவில் ஏற்றுவது போன்றவை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
உயர் அதிகாரியின் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர் நேரடியாக வந்து ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்றுள்ளார். எனவே அதில் உள்ள பதிவுகள் அழிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
கோவில் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, போலீசார் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு தான் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் தான் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச்செல்ல உத்தரவிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- காவலாளி அஜித்குமாரின் உடலில் 50 வெளிப்புற காயங்கள் இருந்தன.
- கண்கள் சிவந்து வீங்கியுள்ளன. காதுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 28) நகை திருட்டு புகாரில் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வழக்கை மதுரை மாவட்ட 4-வது கோர்ட்டின் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து வருகிறார். வருகிற 8-ந்தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் விரிவான அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில், அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில், காவலாளி அஜித்குமாரின் உடலில் 50 வெளிப்புற காயங்கள் இருந்தன. இதில் 12 சிராய்ப்பு காயங்கள், மீதி ரத்தக்கட்டு காயங்களாக இருந்துள்ளன.
ரத்தம் கன்றிய காயங்கள் ஒவ்வொன்றும் ஒரு காயமாக இருந்தாலும் அந்த காயத்தினுள்ளே பல்வேறு ரத்தக்கட்டு காயங்கள் அடங்கியுள்ளன. வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயத்துடன், மண்டை ஓட்டின் இரு பக்கங்கள், நடுமண்டை, தலைப்பகுதி முழுவதுமாக கட்டையால் அடித்த காயம், மூளையில் இரு இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட புண் இருந்துள்ளது. இடது கையில் 3 இடங்களில் சிகரெட் சூடு வைக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் அடித்ததால் ரத்த காயம் பல வகையாக காணப்படுகிறது.
கண்கள் சிவந்து வீங்கியுள்ளன. காதுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதயத்தில் இரு இடங்கள் மற்றும் கல்லீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
தரையில் இழுத்துச் சென்றதால் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது போலீசார் அடிக்கும் போது தற்காத்துக்கொள்ள போராடி இருந்ததாலும் சிராய்ப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நீதிபதி ஜான் சுந்தர்லால் 2-வது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகிறார்.
- வருகிற 8-ந்தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் விரிவான அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார், காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை எழுந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, அஜித்குமார் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதி விசாரணை நடத்தும் வகையில் மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான்சுந்தர் லால் சுரேசை நியமித்துள்ளது. அவர் முழுமையான விசாரணை நடத்தி வருகிற 8-ந்தேதி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர்லால் 2-வது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த விசாரணை முடிவில் வருகிற 8-ந்தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் விரிவான அறிக்கையை தாக்கல் செய்கிறார். அதன் பின்னரே இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், அஜித் குமார் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணையை எடுத்துள்ளது.
சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஐ.ஜி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- காவலாளி அஜித்குமார் நிகிதாவிடம் 500 ரூபாய் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- அஜித்குமார் நகையை திருடியதாக நிகிதா அளித்த புகார் மீதும் சந்தேகப் பார்வைகள் விழுந்துள்ளன.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்காமலேயே இருந்து வருகிறது.
கொலையுண்ட வாலிபர் அஜித்குமார், காரில் இருந்த தனது 10 சவரன் நகையை திருடிவிட்டதாக பேராசிரியையான நிகிதா என்பவர் புகார் அளித்திருந்தார். இதன் பேரிலேயே போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் வாய்மொழி உத்தரவின் பேரில் அடித்து விசாரித்த போதுதான் வாலிபர் அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
பேராசிரியை நிகிதா தனது அதிகார செல்வாக்கை பயன்படுத்தி சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதன் பிறகே வாலிபர் அஜித்குமார் சட்டவிரோதமாக காவலில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பரபரப்பான தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் நிகிதா மோசடி பேர் வழியாக வலம் வந்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த நிகிதா தற்போது தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர் 3 பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். அவர்களில் ஒருவர் மதுரையில் பிரபலமான அரசியல் கட்சி பிரமுகர் ஆவார்.
அதே நேரத்தில் முக்கிய பிரமுகர்கள் பலருடன் பழகி நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தி வைத்துள்ள நிகிதா தனது இந்த செல்வாக்கை பயன்படுத்திதான் நினைத்ததை சாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன்படியே வாலிபர் அஜித்குமார் விஷயத்திலும் அவர் நடந்து கொண்டிருப்பதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
காவலாளி அஜித்குமார் நிகிதாவிடம் 500 ரூபாய் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட அவமானம் காரணமாகவே அஜித்குமாரை பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நிகிதா தனது செல்வாக்கை பயன்படுத்தி அடித்து விசாரணை நடத்த அறிவுறுத்தினாரா? என்கிற கேள்விகளும் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நிகிதா வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.66 லட்சம் வரையில் மோசடி செய்திருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து அஜித்குமார் நகையை திருடியதாக நிகிதா அளித்த புகார் மீதும் சந்தேகப் பார்வைகள் விழுந்துள்ளன.
நகை எதுவும் திருட்டு போயிருந்தால் அந்த நகை தற்போது எங்கே? அதனை போலீசார் தேடி கண்டுபிடிக்காதது ஏன்? என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ள சமூக ஆர்வலர்கள், வாலிபர் அஜித் குமார் மீது அளிக்கப்பட்டது பொய் புகார்தானா? என்கிற கேள்விகளையும் பரவலாகவே முன்வைத்து இருக்கிறார்கள்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் வாலிபரின் குடும்பத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மனித உரிமை ஆர்வலரான ஹென்றி, நிகிதாவின் கடந்த கால செயல்பாடுகள் அவர் அளித்த புகார் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தி இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். மதுரையை சேர்ந்த வக்கீல் திருமுருகனும் என்பவர் வாலிபர் அஜித்குமார் மீது கூறப்பட்டது பொய் புகார் என்றே குற்றம் சாட்டி உள்ளார்.
இதைத் தொடர்ந்து நிகிதாவை கைது செய்து உரிய முறையில் விசாரணை நடத்தாதது ஏன்? என்கிற கேள்விகளையும் கேட்டுள்ள சமூக ஆர்வலர்கள் அஜித்குமாரின் கொலைக்கு காரணமான அனைவரையும் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வாலிபர் அஜித்குமார் மீது நிகிதா அளித்தது பொய் புகாரா? என்கிற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதன் முடிவில் பொய் புகார் அளித்தது உண்மைதான் என தெரிய வந்தால் அவர் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை பாயும் என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை கையில் எடுத்து விசாரணை நடத்தும் போதும், நிகிதா சிபாரிசுக்காக யார்-யாரிடம் பேசினார் என்பது பற்றிய தகவல்களை திரட்டி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
- வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரிசை எண் இட்டு, முறைப்படி லேப்டாப்பில் பதிவு செய்து கொண்டார்.
- கோவிலுக்கு சொந்தமான கோசாலை பகுதி ஆகிய இடங்களுக்கு சென்று நீதிபதி ஜான் சுந்தர்லால் ஆய்வு நடத்தினார்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட மதுரை ஐகோர்ட்டு அமர்வு, கடுமையான கண்டனங்களை தெரிவித்ததோடு மனித உரிமைகளை மீறும் இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. மேலும் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் நீதி விசாரணை நடத்தும் வகையில் மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான்சுந்தர் லால் சுரேசை நியமித்துள்ளது.
அவர் முழுமையான விசாரணை நடத்தி வருகிற 8-ந்தேதி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர்லால் நேற்று திருப்புவனம் போலீஸ் நிலையம் அருகிலுள்ள பயணியர் விடுதியில் வைத்து விசாரணையை தொடங்கினார்.
அப்போது அவரிடம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், சி.சி.டி.வி. காட்சிகள், சேகரிக்கப்பட்ட தடயங்கள் உள்ளிட்டவை சிவகங்கை மாவட்ட போலீசார் தரப்பில் ஒப்படைக்கப்பட்டது. ஆவணங்களை பெற்றுக்கொண்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் புகார், முதல் தகவல் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரிசை எண் இட்டு, முறைப்படி லேப்டாப்பில் பதிவு செய்து கொண்டார்.
பின்னர் மடப்புரம் கோவிலில் பணியில் இருந்த உதவியாளர் சக்தீஸ்வரன், கோவில் இணை ஆணையர் அலுவலக உதவியாளர் பெரியசாமி, உதவி ஆணையரின் டிரைவர் கார்த்திக்வேல், பாதுகாவலர்கள் குமார், வினோத்குமார், கோவில் சி.சி.டி.வி. ஆபரேட்டர் சீனிவாசன், பிரவீன், நகை மாயமான காரை இயக்கிய அருண் உள்ளிட்டோரிடம் 12 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடத்தினார். அவை அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. அதேபோல் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாகவும் நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணை நடத்தி வருகிறார். அதே பயணியர் விடுதியில் வைத்து அஜித்குமாரை போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன், கோவில் பாதுகாவலர்கள் வினோத், பெரியசாமி, பிரபு ஆகிய 4 பேரிட மும் தனித்தனியாக விரிவான விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அஜித்குமார், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் நடந்து கொள்ளும் விதம், அவரது பின்னணி தகவல்கள், கோவில் செயல் அலுவலர் மற்றும் சக ஊழியர்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அது தொடர்பாக அவர்கள் அளித்த பதில்கள் விரிவாக பதிவு செய்யப்பட்டன. மேலும் நகை மாயமானதாக புகார் கொடுத்த நிகிதா, கடந்த 27-ந்தேதி கோவிலுக்கு வந்த நேரம், அங்கு நடந்த விவாதம், உரையாடல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் மடப்புரம் கோவில், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீசாரின் டெம்போ வாகனம், அஜித்குமாரை அழைத்துச் சென்ற இடங்கள், விசாரணை நடத்திய இடங்கள், கொடூரமாக தனிப்படை போலீசார் தாக்கியதாக கூறப்படும் கோவிலுக்கு சொந்தமான கோசாலை பகுதி ஆகிய இடங்களுக்கு சென்று நீதிபதி ஜான் சுந்தர்லால் ஆய்வு நடத்தினார்.
இந்த விசாரணையின் போது மடப்புரம் கோவில் உதவி ஆணையர் அலுவலகத்தில் தனிப்படை போலீசார் அஜித்குமாரை அழைத்து வந்தபோது, நடைபெற்ற விசாரணைகள் குறித்தும், நகை திருட்டு புகார் அளித்த நிகிதா அஜித்குமாரிடம் கார் சாவியை ஒப்படைத்தது, திரும்ப பெற்றது குறித்த சாட்சியங்களையும் நீதிபதி ஜான் சுந்தர்லால் பதிவு செய்துகொண்டார்.
இந்த கள ஆய்வு மற்றும் விசாரணைக்கு பின்னர் பிற்பகலில் நீதிபதி ஜான் சுந்தர்லால், அஜித்குமார் கொலை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் 5 பேரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் அஜித்குமாரை அழைத்துச் சென்ற இடங்கள், மதுரை, திருப்புவனம், சிவகங்கை உள்ளிட்ட இடங்களுக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்று நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணை நடத்த இருக்கிறார்.
இந்த விசாரணை முடிவில் வருகிற 8-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் விரிவான அறிக்கையை தாக்கல் செய்கிறார். அதன் பின்னரே இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.
- அஜித்குமாரை காவலர்கள் பிரம்பால் தாக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- வீடியோ அஜித்குமார் மரண வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவ்வழக்கு தொடர்பான பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இதனை தொடர்ந்து, அஜித்குமாரை காவலர்கள் பிரம்பால் தாக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோ அஜித்குமார் மரண வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோவை எடுத்த சத்தீஸ்வரன் தனக்கும், தனது குடும்பத்திற்கும அச்சுறுத்தல் இருப்பதாக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார். அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான காவலர் ராஜா சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவடன் தொடர்பில் இருப்பதாக சத்தீஸ்வரன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக அரசின் ஆலோசனையின் படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- தனிப்படை போலீசார் உடனடியாக மாற்றுப்பணிகளில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் டிஜிபி அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்புவனம் போலீஸ் டி.எஸ்.பி. சண்முகசுந்தரத்தின் கீழ் செயல்பட்டு வந்த தனிப்படை போலீசாரே காவலாளி அஜித்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனிப்படையில் இடம்பெற்றிருந்த 5 போலீசார்தான் காவலாளி அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கி அவரை கொலை செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
தனிப்படை காவலர்களை பொறுத்தவரையில் அவர்கள் எப்போதுமே குற்ற வழக்குகளில் விசாரணை நடத்துவதில் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஏதாவது ஒரு வழியில் குற்றவாளியிடமிருந்து உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான வித்தையை அவர்கள் கற்று வைத்திருப்பார்கள். சில குற்ற வழக்குகளில் உண்மையிலேயே தவறு செய்திருந்த குற்றவாளி உண்மையை ஒத்துக்கொள்ள மறுப்பது வழக்கம்.
இது போன்ற நேரங்களில் அந்த குற்றவாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அடித்து உண்மையை வெளிக்கொண்டு வருவது காவல்துறையில் தொடர்ச்சியாக நடந்து கொண்டே தான் இருக்கிறது.
இது போன்ற சூழலில் தான் ஒன்றும் அறியாத அப்பாவியான காவலாளி அஜித் குமாரை தனிப்படை போலீசார் 5 பேர் சரமாரியாக தாக்கி கொலை செய்திருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து உயர்போலீஸ் அதிகாரிகளின் கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைப்பதற்கு டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மண்டல ஐ.ஜி.க்கள், போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் துணை கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோரின் கீழ் செயல்படும் சிறப்பு படைகள் நிரந்தரமாக செயல்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதாவது குற்ற வழக்குகள் நடைபெற்றால் அதில் துப்பு துலக்குவதற்காக மட்டுமே துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் ஆகியோர் தங்களுக்கு கீழ் பணியாற்ற தனிபடைகளை அமைத்துக் கொள்ளலாம் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையை அமைப்பதற்கும் மண்டல ஐஜிக்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்கள் ஆகியோரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் டிஜிபி அறிவுறுத்தி இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டுகள் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் மாநகர பகுதிகளில் துணை கமிஷனர்கள் உதவி கமிஷனர்கள் ஆகியோரின் கீழ் செயல்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் உடனடியாக மாற்றுப்பணிகளில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் டிஜிபி அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசாரை காவல் நிலைய பணிகள் சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசின் ஆலோசனையின் படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப்படை போலீசார் இனி விசாரணை கைதிகளிடம் எல்லை மீறி நடந்து அவர்களை அடித்து துன்புறுத்துவது முற்றிலுமாக தடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி உறுதி அளித்துள்ளார்.
- ஒரு தவறை மறைக்க பல தவறுகளை அடுத்தடுத்து செய்ததால் இந்த தனிப்படை போலீசார் திருப்புவனம் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.
- மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவே இந்த நகை மாயமான வழக்கில் போலீசார் இதுபோன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் கடந்த 27-ந்தேதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த நிகித்தா என்பவர் காரில் இருந்து 9½ பவுன் நகைகள் களவு போனது. அந்த நகைகளை கண்டுபிடிப்பதற்காக மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்தின் தனிப்படை போலீசார், கோவில் காவலாளி அஜித்குமாரை 27-ந்தேதி மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதில் தனிப்படை போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதன் தொடர்ச்சியாக சங்கரமணிகண்டன், ராஜா, பிரபு, ஆனந்த், கண்ணன், ராமச்சந்திரன் ஆகிய 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு நேரடியாக சம்பவ இடங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது அஜித்குமாரை அடித்துக் கொன்றதாக புகார் தெரிவித்த மக்கள் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்
இதன் தொடர்ச்சியாக அஜித்குமார் மர்ம மரண வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. அஜித்குமாரை அடித்துக் கொலை செய்ததாக குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து பேரையும் கொலை வழக்கில் திருப்புவனம் போலீசார் கைது செய்தனர். சம்பவத்தன்று போலீசார் நடத்திய கொடூரமாக தாக்குதல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது.
சம்பவத்தன்று 9½ பவுன் நகை திருட்டு போனதாக நிகித்தா என்பவர் சென்னையில் செல்வாக்குமிக்க ஒருவரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்திற்கு திருட்டு போன நகையை கண்டுபிடித்து கொடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
உடனடியாக சண்முக சுந்தரம் தனது கட்டுப்பாட்டில் உள்ள குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை அனுப்பி இந்த நகை திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டு உள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த 5 போலீசாரும், கோவில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
முதலில் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அங்கு வைத்து சரமாரியாக தாக்கியதால் அந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளார். அஜித்குமார் நண்பர்கள் அருண்குமார், லோகேஸ்வரன், சகோதரர் நவீன்குமார் ஆகியோரையும் அழைத்து விசாரணை என்ற பெயரில் தாக்கியுள்ளனர்.
அதற்குப் பின்னரும் திருடப்பட்ட நகை தொடர்பாக எந்த விவரமும் தெரியவராத நிலையில் ஒரு கட்டத்தில் தனிப்படை போலீசாரின் தாக்குதலை சமாளிக்க முடியாத அஜித்குமார், தான் மடப்புரம் கோவிலுக்கு பின்பக்கம் உள்ள அலுவலகத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் நகையை ஒளித்து வைத்திருப்பதாக தெரிவித்ததாகவும் அதனால் தாங்கள் அஜித்குமாரை அங்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் முதலில் தெரிவித்தனர்.
அங்கு சென்ற பின்னர் நகை எங்கே என்று கேட்டபோது அடி தாங்க முடியாமல்தான் அப்படி கூறியதாக அஜித்குமார் தெரிவித்துள்ளார். உண்மையில் தான் எந்த நகையையும் திருடவில்லை என்று கதறி அழுதுள்ளார். தங்களை ஏமாற்றியதாக கூறி ஆத்திரமடைந்த தனிப்படை போலீசார் கையில் கிடைத்த பிளாஸ்டிக் பைப் மற்றும் இரும்பு ராடு போன்றவற்றால் அவரை கடுமையாக தாக்கியதாகவும் அப்போது அவர் அவரது அலறல் சத்தம் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்ததாகவும் கூறப்படுகிறது.
அஜித்குமார் அலறல் சத்தத்தை தாங்கள் கேட்டதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். அவர் கடுமையான காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அவரை அவசர அவசரமாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் தனிப்படை போலீசார் சேர்த்துள்ளனர். அவர் உயிரிழந்ததும் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததும் தெரிய வந்திருக்கிறது.
ஒரு தவறை மறைக்க பல தவறுகளை அடுத்தடுத்து செய்ததால் இந்த தனிப்படை போலீசார் திருப்புவனம் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். அதே நேரத்தில் 9½ பவுன் நகை திருட்டு தொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் கடுமையாக விசாரிக்க உத்தரவிட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மற்றும் அவருக்கு மேல் உள்ள அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையாக இருந்தது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையின் கண்டனத்தை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் இதில் தொடர்புடைய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மற்றும் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது. மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவே இந்த நகை மாயமான வழக்கில் போலீசார் இதுபோன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
- காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித் குமாரின் தாயிடம் “"சாரி மா" என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன்.
- இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை?
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முதல்வர் மு.க.ஸ்டாலின், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித் குமாரின் தாயிடம் ""சாரி மா" என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் "சாரி" என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை?
சரி, ஒருவேளை மனம் உவந்து தான் முதல்வர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், இதோ மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காவல்நிலையங்களிலும், காவல்துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்திற்குறிய வகையிலும் இறந்தவர்களின் பட்டியல்:
1. பிரபாகரன் (வயது 45) - நாமக்கல் மாவட்டம்
2. சுலைமான் (வயது 44) - திருநெல்வேலி மாவட்டம்
3. தாடிவீரன் (வயது 38) - திருநெல்வேலி மாவட்டம்
4. விக்னேஷ் (வயது 25) - சென்னை மாவட்டம்
5. தங்கமணி (வயது 48) - திருவண்ணாமலை மாவட்டம்
6. அப்பு @ ராஜசேகர் (வயது 31) - சென்னை மாவட்டம்
7. சின்னதுரை (வயது 53) - புதுக்கோட்டை மாவட்டம்
8. தங்கபாண்டி (வயது 33) - விருதுநகர் மாவட்டம்
9. முருகாநந்தம் (வயது 38) - அரியலூர் மாவட்டம்
10. ஆகாஷ் (வயது 21) - சென்னை மாவட்டம்
11. கோகுல்ஸ்ரீ (வயது 17) - செங்கல்பட்டு மாவட்டம்
12. தங்கசாமி (வயது 26) - தென்காசி மாவட்டம்
13. கார்த்தி (வயது 30) - மதுரை மாவட்டம்
14. ராஜா (வயது 42) - விழுப்புரம் மாவட்டம்
15. சாந்தகுமார் (வயது 35) - திருவள்ளூர் மாவட்டம்
16. ஜெயகுமார் (வயது 60) - விருதுநகர் மாவட்டம்
17. அர்புதராஜ் (வயது 31) - விழுப்புரம் மாவட்டம்
18. பாஸ்கர் (வயது 39) - கடலூர் மாவட்டம்
19. பாலகுமார் (வயது 26) - இராமநாதபுரம் மாவட்டம்
20. திராவிடமணி (வயது 40) - திருச்சி மாவட்டம்
21. விக்னேஷ்வரன் (வயது 36) - புதுக்கோட்டை மாவட்டம்
22. சங்கர் (வயது 36) - கரூர் மாவட்டம்
23. செந்தில் (வயது 28) - தர்மபுரி மாவட்டம்
இவர்களது பெற்றோரிடமும், மனைவி-மக்களிடமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் ஃபோட்டோ-வீடியோ ஷூட் எப்பொழுது நடக்கும்? என்று வினவியுள்ளார்.






