என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காவலாளி மீதான தாக்குதல் பற்றி தெரிந்தவர்கள் நீதிபதியிடம் நேரடியாக சாட்சியம் அளிக்க அழைப்பு- தொடரும் தீவிர விசாரணை
- மதுரை ஐகோர்ட் அஜித்குமார் தொடர்பான வழக்கு விசாரணை விபரங்களை அறிக்கையாக வருகிற 8-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
- இன்னும் 4 நாட்கள் உள்ளதால் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27).
நகை திருடியதாக நிகிதா என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய கொடூர தாக்குதலில் அஜித்குமார் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அஜித்குமாரை தாக்கி கொலை செய்த 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரால் தாக்கி காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மதுரை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அஜித்குமார் கொலை தொடர்பாக விசாரிக்க மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் என்பவரை நியமித்தது.
மேலும் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிற 8-ந்தேதி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணையை உடனே தொடங்கினார். அதன்படி கடந்த 2 நாட்களாக திருப்புவனத்தில் நீதிபதி முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். முதல் நாளில் ஏ.டி.எஸ்.பி. சுகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், மடப்புரம் கோவில் ஊழியர்கள் ஆகியோரிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினார்.
2-வது நாளான நேற்று போலீசார் தாக்குவதை வீடியோ எடுத்த கோவில் ஊழியர் சக்தீஸ்வரனிடம் வீடியோவின் உண்மை தன்மை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து அஜித்குமாரின் தாய் மாலதி, அவரது சகோதரர் நவீன்குமார் மற்றும் உறவினர்கள் நீதிபதி முன் ஆஜராகி விளக்கமளித்தனர். விசாரணையின்போது சாட்சிகளின் வாக்கு மூலங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
3-வது நாளாக இன்று நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணையை தொடங்கினார். காலை 9 மணியளவில் திருப்புவனம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகைக்கு வந்த அவர் அஜித்குமாரை போலீசார் அழைத்து சென்றதை பார்த்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் அஜித்குமார் தாக்கப்பட்ட மடப்புரம் கோவில் பின்புறமுள்ள கோசாலை, திருப்புவனம் போலீஸ் நிலையம் ஆகிய இடங்களுக்கு சென்று நீதிபதி விசாரிக்க உள்ளார்.
மதுரை ஐகோர்ட் அஜித்குமார் தொடர்பான வழக்கு விசாரணை விபரங்களை அறிக்கையாக வருகிற 8-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இன்னும் 4 நாட்கள் உள்ளதால் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார்.
2 நாட்களாக சாட்சியங்களிடம் தனி அறையில் வைத்து வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில் அஜித்குமாரை தனிப்படை போலீசார் அழைத்து சென்று தாக்கப்பட்ட இடங்களை இன்று நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டு விபரங்களை சேகரிக்க உள்ளார். இதன் மூலம் இந்த வழக்கு விசாரணை வேகமெடுக்க தொடங்கி உள்ளது.
திருட்டு புகார் தொடர்பாக அஜித்குமாரை விசாரிக்க போலீஸ் உயர் அதிகாரிகள், தனிப்படை போலீசாருக்கு அழுத்தம் கொடுத்த தலைமை செயலக அதிகாரி யார்? எப்.ஐ.ஆர். பதியாமல் தனிப்படை போலீசார் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றது எப்படி? புகார் கொடுத்த நிகிதாவின் காரில் உண்மையிலேயே நகை இருந்ததா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் மர்மமாக உள்ளது. நீதிபதி அறிக்கை தாக்கல் செய்யும் போது மேற்கண்ட கேள்விகள் மீதான மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்குமார் போலீசாரால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் வழக்கின் தீவிரத் தன்மையை கருதி இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
மதுரை ஐகோர்ட்டில் வருகிற 8-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சி.பி.ஐ. எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுக்காமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று திருப்புவனம் வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை திருப்புவனம் போலீசாரிடம் இருந்து பெற்று சென்றனர்.
அவர்கள் வழக்கு விபரங்களை முழுமையாக அறிந்து கொண்டு 8-ந்தேதிக்கு பிறகு விசாரணையை தொடங்குவார்கள் என தெரிகிறது.
இந்த நிலையில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக விவரம் அறிந்தவர்கள் நீதிபதியிடம் நேரடியாக சாட்சியம் அளிக்கலாம் என்று அஜித் குமார் தரப்பு வக்கீல் சரவணன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து வக்கீல் சரவணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அஜித்குமார் போலீஸ் காவலில் மரணம் அடைந்தது தொடர்பாக விவரம் அறிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் நீதிபதி ஜான் சுந்தர்லாலிடம் சாட்சியம் அளிக்கலாம். இந்த விவகாரத்தில் தங்களுக்கு தெரிந்த உண்மைகளை எந்தவித அச்சமும் இல்லாமல் விசாரணை நடத்தும் நீதிபதியிடம் கூறலாம்.
நீதிபதி ஜான் சுந்தர்லால் வருகிற 6-ந்தேதி வரை அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவார். எனவே வருகிற 6-ந்தேதி வரை பொதுமக்கள் அஜித்குமார் மரணம் தொடர்பாக தெரிந்த விஷயங்கள் பற்றி அவரிடம் நேரடியாக சொல்லலாம்.
சாட்சியம் அளிக்க விரும்புபவர்கள் கோர்ட்டு நியமித்துள்ள ஊழியர்களை தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.
எங்களை பொறுத்தவரை காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் அரசு பதவிகளில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் நிகிதாவிடம் விசாரணை நடத்த தார்மீக வகையில் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






