என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth dead"

    • மின் மோட்டாரை நிறுத்திய போது அவரை மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்துள்ளார்.
    • மின்சாரம் தாக்கி வாலிபர்கள் 2 பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தியாகதுருகம்:

    கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் அரவிந்தன் (27) கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு தியாகதுருகம் பல்லகச்சேரி சாலையில் உள்ள தனது கார் உரிமையாளருக்கு சொந்தமான வாட்டர் சர்வீசில் காரை கழுவ சென்றார். அப்போது இவர் மின் மோட்டாரை நிறுத்திய போது அவரை மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்துள்ளார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாட்டர் சர்வீசில் வேலை பார்த்து வந்த தியாகதுருகம் கரிம்ஷா தக்கா பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அகமது மகன் ஷாகில் (18) அரவிந்தனை காப்பாற்ற முயன்றார்.

    அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் இவர்கள் 2 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரவிந்தன் மற்றும் ஷாகில் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வாட்டர் சர்வீஸ் உரிமையாளரான அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சையத் கலிபுல்லா மகன் ஷாஜன் (30) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர்கள் 2 பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.
    • ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து சேலம் வர திட்டமிட்டு பயணித்துள்ளார்.

    திருப்பூர்:

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பஸ், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்னத்தேகூர் அருகே சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 20 பயணிகள் உடல் கருகி பலியாகினர். இதில் திருப்பூரை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர், உடல் கருகி பலியான தகவல் வெளியாகி உள்ளது.

    திருப்பூர் பூலுவப்பட்டி தோட்டத்துபாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன்கள் ஜெயபிரகாஷ், யுவன் சங்கர் ராஜா (வயது 23). மொபட்டில் சென்று காய்கறி வியாபாரம் செய்யும் ராஜா, மிகவும் கஷ்டப்பட்டு தனது இரு மகன்களையும் படிக்க வைத்தார்.

    ஜெயபிரகாஷ் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பி.எஸ்சி. படிப்பு முடித்த யுவன் சங்கர்ராஜா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனியார் மருந்து கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்திலேயே திருப்பூருக்கு பெற்றோரை காண வந்தார்.

    அதன்பின் மீண்டும் ஐதராபாத் சென்று பணிபுரிந்து வந்தார். நீண்ட தூரத்தில் பணியாற்றிய அவர் தமிழக பகுதியிலும் வேலை தேடினார். இதைத்தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். இதற்கான நேர்காணலுக்கு யுவன் சங்கர் ராஜா அழைக்கப்பட்டார்.

    இதற்காக அவர் ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து சேலம் வர திட்டமிட்டு பயணித்துள்ளார். ஆம்னி பஸ்சின் 3-ம் நம்பர் இருக்கையில் இருந்த அவர் தீ விபத்தில் உடல் கருகி பலியானார். யுவன்சங்கர் ராஜா இறப்பு செய்தி கேள்விப்பட்டதும், அவரது பெற்றோர் கதறி துடித்தனர். உடனடியாக உறவினர்களுடன் கர்னூல் மாவட்டத்துக்கு சென்றனர்.

    யுவன் சங்கர் ராஜாவின் இறப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரது பெற்றோரிடம் ரத்தம் பெறப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்பிறகே அவரது உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தாம்பரத்தை சேர்ந்த 24 வயது வங்கி ஊழியரான பரமேஷ் என்பவரும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.
    • கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக பகுதியில் இன்று மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இன்று அதிகாலை தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தாம்பரத்தை சேர்ந்த 24 வயது வங்கி ஊழியரான பரமேஷ் என்பவரும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.

    இந்தநிலையில் ஓடத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பரமேசுக்கு வலிப்பு ஏற்பட்டது. தரையில் சுருண்டு விழுந்தார். அவரைப் பார்த்து மாரத்தானில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் பரமேஷ் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • மேடை முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.

    மதுரை:

    த.வெ.க. 2-வது மாநில மாநாடு நாளை மதுரை பாரபத்தியில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்குகிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தஞ்சை, மதுரையை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் நடத்த இருக்கின்றனர். 2 மணி நேரம் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு 4 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் விழா மேடைக்கு வருகிறார். தொடர்ந்து மேடை முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.

    நாளை நடைபெற உள்ள மாநாட்டில் த.வெ.க. விஜய் என்ன பேசப்போகிறார் என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே த.வெ.க. மாநாட்டுக்காக பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இனாம்கரிசல்குளத்தில் பேனர் வைக்க கம்பி எடுத்துச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் காளீஸ்வரன் (19) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • நாய் கடித்ததற்கான உரிய சிகிச்சை எடுக்காததால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எட்வின் பிரியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    ஓசூர் அருகே குப்பட்டி கிராமத்தை சேர்ந்த எட்வின் பிரியன் (24) என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாய் கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

    எட்வின் பிரியன் நாய் கடித்ததற்கான உரிய சிகிச்சை எடுக்காததால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எட்வின் பிரியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

    • கடந்த 3-ந்தேதி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது.
    • தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று சீமான் கூறியுள்ளார்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல் துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு போலீசாரால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணத்துக்குநீதி வேண்டும்.

    அதேபோல் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப்பொறுப் பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழும் காவல்நிலைய படுகொலைகளை தடுக்க கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜூலை 8-ந்தேதி மாலை 4 மணிக்கு திருப்புவனம் சந்தைத்திடல் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான தலைமை தாங்க உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி அறிவித்து இருந்தது.

    இந்தநிலையில் சீமானின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஏற்கனவே அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக கடந்த 3-ந்தேதி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது.

    மேலும் நாளை சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் தேரோட்டம் நடைபெறுவதுடன், திருப்புவனத்தில் வாரச்சந்தை கூட உள்ளதால் பாதுகாப்பு கருதி நாளை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இருந்தபோதிலும் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று சீமான் கூறியுள்ளார்.

    • போலீஸ் அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர்.
    • சில கேள்விகளுக்கு சற்று யோசித்து விளக்கம் அளித்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் கொடூர சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக மதுரை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்ததோடு மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேசை விசாரணை அதிகாரியாக நியமித்து வருகிற 8-ந்தேதி அஜித்குமார் கொலை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    ஐகோர்ட்டு உத்தரவிட்ட மறுநாளே (2-ந்தேதி) நீதிபதி தனது விசாரணையை தொடங்கினார். இதற்காக திருப்புவனத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதல்நாளில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை திருப்புவனம் போலீசார் நீதிபதியிடம் வழங்கினர். அதனை தொடர்ந்து கோவில் ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. 2-வது நாளில் அஜித்குமார் தாய், அவரது சகோதரர் நவீன்குமார் மற்றும் உறவினர்களிடம் சுமார் 3 மணிநேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெற்றது. 3-வது நாளான நேற்று அஜித்குமார் மரணம் தொடர்பாக திருப்புவனம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

    4-வது நாளான இன்று இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது. காலை 9 மணியளவில் திருப்புவனம் வந்த நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேரடியாக திருப்புவனம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிபதி சரிபார்த்தார்.

    தொடர்ந்து போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரிடம் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றது முதல் இறக்கும் வரை போலீசார் நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு விளக்கம் பெறப்பட்டது.

    நீதிபதி விசாரணையின் போது பல்வேறு கேள்விகளை கேட்டார். அதனை எதிர்பாராத போலீஸ் அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். சில கேள்விகளுக்கு சற்று யோசித்து விளக்கம் அளித்தனர்.

    இன்றைய விசாரணையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், ஏ.டி.எஸ்.பி. சுகுமாறன் மற்றும் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், மானாமதுரை ஏ.டி.எஸ்.பி. போலீஸ் அலுவலக போலீசார், திருப்புவனம் போலீசார் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளனர்.

    அவர்களிடம் நிகிதா கொடுத்த புகார், அஜித்குமாரை விசாரணை செய்ய உத்தரவு கொடுத்த அதிகாரி, தாக்குதலில் இறந்த பின் உயர் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் போன்றவை குறித்து நீதிபதி விசாரணை மேற்கொள்வார் என தெரிகிறது.

    ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அனைத்து சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என தெரிகிறது. அதன்பின் அறிக்கை தயார் செய்யப்பட்டு அதனை 8-ந்தேதி நீதிபதி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேவைப்படும் பட்சத்தில் மேலும் கால அவகாசம் கேட்கவும் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முடிவு செய்துள்ளார்.

    • மதுரை ஐகோர்ட் அஜித்குமார் தொடர்பான வழக்கு விசாரணை விபரங்களை அறிக்கையாக வருகிற 8-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
    • இன்னும் 4 நாட்கள் உள்ளதால் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27).

    நகை திருடியதாக நிகிதா என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய கொடூர தாக்குதலில் அஜித்குமார் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அஜித்குமாரை தாக்கி கொலை செய்த 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

    போலீசாரால் தாக்கி காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மதுரை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அஜித்குமார் கொலை தொடர்பாக விசாரிக்க மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் என்பவரை நியமித்தது.

    மேலும் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிற 8-ந்தேதி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இதைதொடர்ந்து நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணையை உடனே தொடங்கினார். அதன்படி கடந்த 2 நாட்களாக திருப்புவனத்தில் நீதிபதி முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். முதல் நாளில் ஏ.டி.எஸ்.பி. சுகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், மடப்புரம் கோவில் ஊழியர்கள் ஆகியோரிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினார்.

    2-வது நாளான நேற்று போலீசார் தாக்குவதை வீடியோ எடுத்த கோவில் ஊழியர் சக்தீஸ்வரனிடம் வீடியோவின் உண்மை தன்மை குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அஜித்குமாரின் தாய் மாலதி, அவரது சகோதரர் நவீன்குமார் மற்றும் உறவினர்கள் நீதிபதி முன் ஆஜராகி விளக்கமளித்தனர். விசாரணையின்போது சாட்சிகளின் வாக்கு மூலங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

    3-வது நாளாக இன்று நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணையை தொடங்கினார். காலை 9 மணியளவில் திருப்புவனம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகைக்கு வந்த அவர் அஜித்குமாரை போலீசார் அழைத்து சென்றதை பார்த்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

    பின்னர் அஜித்குமார் தாக்கப்பட்ட மடப்புரம் கோவில் பின்புறமுள்ள கோசாலை, திருப்புவனம் போலீஸ் நிலையம் ஆகிய இடங்களுக்கு சென்று நீதிபதி விசாரிக்க உள்ளார்.

    மதுரை ஐகோர்ட் அஜித்குமார் தொடர்பான வழக்கு விசாரணை விபரங்களை அறிக்கையாக வருகிற 8-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இன்னும் 4 நாட்கள் உள்ளதால் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார்.

    2 நாட்களாக சாட்சியங்களிடம் தனி அறையில் வைத்து வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில் அஜித்குமாரை தனிப்படை போலீசார் அழைத்து சென்று தாக்கப்பட்ட இடங்களை இன்று நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டு விபரங்களை சேகரிக்க உள்ளார். இதன் மூலம் இந்த வழக்கு விசாரணை வேகமெடுக்க தொடங்கி உள்ளது.

    திருட்டு புகார் தொடர்பாக அஜித்குமாரை விசாரிக்க போலீஸ் உயர் அதிகாரிகள், தனிப்படை போலீசாருக்கு அழுத்தம் கொடுத்த தலைமை செயலக அதிகாரி யார்? எப்.ஐ.ஆர். பதியாமல் தனிப்படை போலீசார் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றது எப்படி? புகார் கொடுத்த நிகிதாவின் காரில் உண்மையிலேயே நகை இருந்ததா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் மர்மமாக உள்ளது. நீதிபதி அறிக்கை தாக்கல் செய்யும் போது மேற்கண்ட கேள்விகள் மீதான மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அஜித்குமார் போலீசாரால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் வழக்கின் தீவிரத் தன்மையை கருதி இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    மதுரை ஐகோர்ட்டில் வருகிற 8-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சி.பி.ஐ. எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுக்காமல் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று திருப்புவனம் வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை திருப்புவனம் போலீசாரிடம் இருந்து பெற்று சென்றனர்.

    அவர்கள் வழக்கு விபரங்களை முழுமையாக அறிந்து கொண்டு 8-ந்தேதிக்கு பிறகு விசாரணையை தொடங்குவார்கள் என தெரிகிறது.

    இந்த நிலையில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக விவரம் அறிந்தவர்கள் நீதிபதியிடம் நேரடியாக சாட்சியம் அளிக்கலாம் என்று அஜித் குமார் தரப்பு வக்கீல் சரவணன் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து வக்கீல் சரவணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அஜித்குமார் போலீஸ் காவலில் மரணம் அடைந்தது தொடர்பாக விவரம் அறிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் நீதிபதி ஜான் சுந்தர்லாலிடம் சாட்சியம் அளிக்கலாம். இந்த விவகாரத்தில் தங்களுக்கு தெரிந்த உண்மைகளை எந்தவித அச்சமும் இல்லாமல் விசாரணை நடத்தும் நீதிபதியிடம் கூறலாம்.

    நீதிபதி ஜான் சுந்தர்லால் வருகிற 6-ந்தேதி வரை அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவார். எனவே வருகிற 6-ந்தேதி வரை பொதுமக்கள் அஜித்குமார் மரணம் தொடர்பாக தெரிந்த விஷயங்கள் பற்றி அவரிடம் நேரடியாக சொல்லலாம்.

    சாட்சியம் அளிக்க விரும்புபவர்கள் கோர்ட்டு நியமித்துள்ள ஊழியர்களை தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.

    எங்களை பொறுத்தவரை காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் அரசு பதவிகளில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் நிகிதாவிடம் விசாரணை நடத்த தார்மீக வகையில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும்.
    • ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

    காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேலும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம் எனவும் நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும். மேலும் ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார். 

    • கோவிலுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் என்பவர் கோவிலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
    • கோவில் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, போலீசார் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு தான் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நீதிபதி முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    குறிப்பாக மடப்புரம் கோவில் பின்புறம் உள்ள கோசாலை பகுதியில் தனிப்படை போலீசார் அஜித்குமாரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

    இது தொடர்பான வீடியோ ஐகோர்டிலும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. போலீசார் கம்பியால் அஜித்குமாரை கொடூரமாக தாக்கும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த தாக்குதலுக்கு பின் தான் அஜித்குமார் இறந்தார் என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் சம்பவம் நடந்த ஜூன் 28-ந்தேதியன்று சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் என்பவர் கோவிலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

    அதில் அஜித்குமாரை அறநிலையத்துறை அலுவலகம் பின்புறம் அழைத்துச் செல்வது, உயிரிழந்த பின் கோவில் ஊழியர்கள் கார்த்திக் வேலு, வினோத் ஆகியோர் உதவியுடன் அஜித்குமாரை ஆட்டோவில் ஏற்றுவது போன்றவை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    உயர் அதிகாரியின் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர் நேரடியாக வந்து ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்றுள்ளார். எனவே அதில் உள்ள பதிவுகள் அழிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

    கோவில் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, போலீசார் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு தான் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் தான் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச்செல்ல உத்தரவிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    • அஜித்குமார் வீட்டிற்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
    • விரைவில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 28) நகை திருட்டு புகாரில் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அஜித்குமார் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் ஆறுதலும் தெரிவித்தும் உள்ளனர்.

    இதனிடையே, நேற்று முன்தினம் அஜித்குமார் வீட்டிற்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அஜித்குமாரின் தாயாரிடம் த.வெ.க. துணையாக நிற்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து, நாளை மறுநாள் சென்னை சிவானந்தா சாலையில் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு, கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி கிடைக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடத்த தமிழக வெற்றிக்கழகத்தினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்து வேறு தேதியில் போராட்டம் நடத்த கூறியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • போலீஸ் நிலையத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் அவர்கள் தகவல் சொன்னதாக கூறப்படுகிறது.
    • சுமார் 2 மணி நேரம் கடந்தும் போலீசார் யாரும் அங்கு செல்லாததால் தகவல் சொன்னவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    கொல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது தற்போது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. நிகிதா மீது ஏற்கனவே பல்வேறு மோசடி புகார்கள் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பலர் போலீசில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

    இந்தநிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நிகிதா, அவரது தாயார் ஒரு காரில் டிரைவருடன் வந்துள்ளனர். பின்னர் ஓட்டலில் அமர்ந்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர்.

    இதைப்பார்த்து சிலர், அவர்களிடம் விசாரித்துள்ளனர். பின்னர் அவர்களை சிறைபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸ்நிலையத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் அவர்கள் தகவல் சொன்னதாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் கடந்தும் போலீசார் யாரும் அங்கு செல்லாததால் தகவல் சொன்னவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து நிகிதாவை விடுவித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

    நிகிதா, தனது தாயாரை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அந்த கார் கோவையை நோக்கிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனால் நிகிதா கோவையில் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    நிகிதா, ஓட்டலில் அமர்ந்திருக்கும் காட்சி மற்றும் அவரை சிறைபிடித்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உரையாற்றிய ஆடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

    ×