என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆந்திரா ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூர் வாலிபர் பலி- நேர்காணலுக்கு சென்ற போது உயிரிழந்த சோகம்
- சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.
- ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து சேலம் வர திட்டமிட்டு பயணித்துள்ளார்.
திருப்பூர்:
ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பஸ், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்னத்தேகூர் அருகே சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 20 பயணிகள் உடல் கருகி பலியாகினர். இதில் திருப்பூரை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர், உடல் கருகி பலியான தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பூர் பூலுவப்பட்டி தோட்டத்துபாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன்கள் ஜெயபிரகாஷ், யுவன் சங்கர் ராஜா (வயது 23). மொபட்டில் சென்று காய்கறி வியாபாரம் செய்யும் ராஜா, மிகவும் கஷ்டப்பட்டு தனது இரு மகன்களையும் படிக்க வைத்தார்.
ஜெயபிரகாஷ் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பி.எஸ்சி. படிப்பு முடித்த யுவன் சங்கர்ராஜா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனியார் மருந்து கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்திலேயே திருப்பூருக்கு பெற்றோரை காண வந்தார்.
அதன்பின் மீண்டும் ஐதராபாத் சென்று பணிபுரிந்து வந்தார். நீண்ட தூரத்தில் பணியாற்றிய அவர் தமிழக பகுதியிலும் வேலை தேடினார். இதைத்தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். இதற்கான நேர்காணலுக்கு யுவன் சங்கர் ராஜா அழைக்கப்பட்டார்.
இதற்காக அவர் ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து சேலம் வர திட்டமிட்டு பயணித்துள்ளார். ஆம்னி பஸ்சின் 3-ம் நம்பர் இருக்கையில் இருந்த அவர் தீ விபத்தில் உடல் கருகி பலியானார். யுவன்சங்கர் ராஜா இறப்பு செய்தி கேள்விப்பட்டதும், அவரது பெற்றோர் கதறி துடித்தனர். உடனடியாக உறவினர்களுடன் கர்னூல் மாவட்டத்துக்கு சென்றனர்.
யுவன் சங்கர் ராஜாவின் இறப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரது பெற்றோரிடம் ரத்தம் பெறப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்பிறகே அவரது உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






