search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus Fire Accident"

    • பதறிபோன டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு, பஸ்சில் இருந்த மாணவர்கள் அனைவரையும் எழுப்பினர்.
    • சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி யில் தற்போது 2-வது சீசன் தொடங்கியுள்ளது.

    இதனையடுத்து, ஊட்டிக்கு பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தற்போது ஊட்டியில் இதமான காலநிலை நிலவி வருகிறது. வார விடுமுறை தினம் என்பதால், நேற்றும், இன்றும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அவர்கள் ஊட்டியில் நிலவும் சிதோஷ்ண நிலையை அனுபவித்தும் இயற்கை காட்சிகளையும் கண்டு ரசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீலகிரிக்கு சுற்றுலா வர முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு ஒரு சுற்றுலா பஸ்சில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், நாமக்கல் ராசிபுரத்தில் இருந்து நீலகிரிக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் இன்று அதிகாலை கோவை வந்து, மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரிக்கு மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் மாணவர்கள் அனைவரும் பஸ்சில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

    பஸ் மேட்டுப்பாளையம் அடுத்த கல்லார் தூரிப்பாலம் பகுதியில் வந்த போது திடீரென பஸ்சின் பின்பக்க சக்கரம் தீ பிடித்து எரிந்தது. இதனை பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் தங்கள் வாகனத்தை வேகமாக இயக்கி பஸ்சை முந்தி சென்று, டிரைவரிடம் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டதும் பதறிபோன டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு, பஸ்சில் இருந்த மாணவர்கள் அனைவரையும் எழுப்பினர்.

    மாணவர்கள் எழுந்து பார்த்த போது, பஸ்சின் பின் பகுதியில் தீ பிடித்து கொண்டிருந்தது. இதனால் மாணவர்கள் அனைவரும் எழுந்து, அவசர, அவசரமாக வெளியில் ஓடி வந்தனர். சற்று நேரத்தில் பஸ் முழுவதும் தீ பிடித்து எரிய தொடங்கியது.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, பஸ்சில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீ மள,மளவென எரிந்து கொண்டிருந்தால் சற்று சிரமம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

    இந்த தீவிபத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. பஸ்சில் இருந்த பொருட்களும் எரிந்து விட்டதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் அனைவரும் உயிர் தப்பினர்.

    பின்னால் வந்த வாகன ஓட்டிகள் சரியான நேரத்தில் பார்த்து டிரைவரிடம் சொன்னதாலும், மாணவர்கள் உடனடியாக பஸ்சை விட்டு கீழே இறங்கியதாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். பஸ் எதனால் தீ பிடித்து எரிந்தது, தீபிடித்தற்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த வாரம் தென்காசியில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலையில் ஊட்டி மலைப்பாதையில் மீண்டும் சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்களின் சுற்றுலா பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகளையும், சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • மேட்டூர் அடுத்த புதுச்சாம்பள்ளி பகுதியை பஸ் கடக்கும்போது, திடீரென அந்த பஸ்சின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது.
    • தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடாய் காட்சி அளித்தது. பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீக்கிரையானது.

    மேட்டூர்:

    கோவையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.

    நள்ளிரவு ஒரு மணியளவில், சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த புதுச்சாம்பள்ளி பகுதியை பஸ் கடக்கும்போது, திடீரென அந்த பஸ்சின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது.

    இதை பார்த்த டிரைவர் சாலையிலேயே பஸ்சை நிறுத்திவிட்டு, பயணிகளை உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தார். இதனையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். அதற்குள் பஸ் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பஸ் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    அப்போது சில பயணிகளுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கோவையை சேர்ந்த தாமோதரன் (வயசு 38), அவரது மனைவி வினோதினி (30), சந்தோஷ் (28) உட்பட 10 பேர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற பயணிகள் தீக்காயம் இன்றி தப்பினர்.

    இந்த சம்பவம் குறித்து மேட்டூர் தீயணைப்பு நிலையத்தினர் மற்றும் மற்றும் கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து, சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடாய் காட்சி அளித்தது. பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீக்கிரையானது. இதுகுறித்து கருமலைகூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நள்ளிரவில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×