என் மலர்
இந்தியா

ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீ விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு - ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
- காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார்.
- உடனடி உதவிக்காக ஆந்திரப் பிரதேச முதல்வர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு தெலுங்கானா முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீவிபத்தின்போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது கண்ணாடி ஜன்னலை உடைத்து பலர் குதித்து உயிர் தப்பினர். இதில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளதாகவும்,18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கர்னூல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பேருந்து தீ விபத்து சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள இரங்கலில், இந்த விபத்தை பேரழிவு என்று குறிப்பிட்டு, காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்து உள்ளார். சம்பவ இடத்தை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறு மூத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்து, உடனடி உதவிக்காக ஆந்திரப் பிரதேச முதல்வர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், ஹெல்ப்லைனை நிறுவவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
பேருந்து தீ விபத்து சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் நடந்த ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் உயிர் இழப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்






