என் மலர்
திருப்பூர்
- திருப்பூர் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் ஆணையாளரை நியமிக்க வேண்டும்.
- தென்னை நார் தொழில் மின்கட்டண உயர்வு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின்கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. திருப்பூரில் தொழில்கள் நலிவடைந்து பிற மாநிலங்களுக்கு பனியன் தொழில்கள் இடம்பெயர்ந்துள்ளன. இருக்கும் தொழிலை காப்பாற்றாமல் முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று, தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வாருங்கள் என்று அழைப்பு விடுகிறார்.
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அன்னிய செலாவணியை ஈட்டி கொடுக்கும் திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை உயர்வால் தொழிலாளர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தென்னை நார் தொழில் மின்கட்டண உயர்வு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் ஆணையாளரை நியமிக்க வேண்டும். ரூ.160 கோடி கடன் பெற்று சாலை அமைப்பதாக கூறினார்கள். ஆனால் சாலைகள் முறையாக அமைக்காமல் பணம் சூறையாடப்பட்டுள்ளது. தண்ணீர் வரி, பாதாள சாக்கடை கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்காக அவசர கூட்டம் மாநகராட்சியில் நடத்துவதாக தகவல் வருகிறது. இதை எதிர்த்து அ.தி.மு.க. கடுமையாக போராடும். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க.வின் அதிகாரபூர்வமான வலைதளத்தில் கேவலமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். இதுவரை முதலமைச்சர் அதை கண்டிக்கவில்லை. அந்த பதிவை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும். அதுதான் நாகரீக அரசியலுக்கு வழிவகுக்கும். ஒருநாள் பொறுத்திருப்போம். மாற்றம் இல்லை என்றால் நாங்களும் இதே முறையை கையாளுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பகுதி செயலாளர் அரிகரசுதன் ஆகியோர் உடனிருந்தனர்.
- புதுமண தம்பதியினர் கடந்த 7-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்துக்காக திருப்பூர் வந்தனர்.
- முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் காங்கயம் ரோடு, விஜயாபுரத்தைச் சேர்ந்தவர் அக்பர் அலி, ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி அலிமா பிபி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மூத்த மகள் அனீஸ் (வயது 25). இவருக்கும் மதுரையை சேர்ந்த முகமது இம்ரான் (29) என்பவருக்கும் கடந்த மாதம் 28-ந்தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
புதுமண தம்பதியினர் கடந்த 7-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்துக்காக திருப்பூர் வந்தனர். இங்கு குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடினர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரில் பொருட்கள் வாங்குவதற்காக புதுமண தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது பள்ளக்காட்டுப்புதூர் அருகே சென்றபோது அனீசின் சேலை மோட்டார் சைக்கிளின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் நடுரோட்டில் கீழே விழுந்தார்.
அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை அங்கிருந்து மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து திருப்பூர் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமாகி 20 நாட்களில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூரின் பங்களிப்பு 68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
- சமீபத்தில் கையெழுத்தான இங்கிலாந்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வெகு விரைவில் கையெழுத்தாகவுள்ளது.
நல்லூர்:
இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூரின் பங்களிப்பு 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் தொழில் துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி கூறியதாவது:-
கடந்த 2024-25ம் நிதியாண்டு கணக்கின் அடிப்படையில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.40000 கோடி இலக்கினை எட்டியுள்ளது. இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகிறது. கடந்த ஆண்டில் இது 54 சதவீதமாக இருந்தது.
ஏற்றுமதிக்கான பல்வேறு சலுகைகள் குறைக்கப்பட்ட சூழ்நிலை, பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி, அபரிதமான வரி மற்றும் மின்கட்டண உயர்வு , ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக வளர்ந்த பொருளாதார நாடுகளின் மந்த நிலை , செங்கடல் பிரச்சனை, தாறுமாறாக உயர்ந்த கப்பல் போக்குவரத்து கட்டணம், கன்டெய்னர் பற்றாக்குறை போன்ற பல்வேறு சவால்களை சந்தித்த சூழ்நிலையிலும் இந்த வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம் என்றால் அது உண்மையிலேயே வரலாற்று சாதனைதான்.
சமீபத்தில் கையெழுத்தான இங்கிலாந்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வெகு விரைவில் கையெழுத்தாகவுள்ளது. அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தம், இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடம் கையெழுத்தாகவுள்ளது.
ஐரோப்பாவுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் போன்ற சாதகமான வாய்ப்புகளால் வரும் காலங்களில் பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சி மிக பிரமாண்டமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
போர்க்கால அடிப்படையில் தொழில்துறை தொடர்ந்து வைக்கும் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும், அவ்வாறு உதவும்பட்சத்தில் இன்றைய வளர்ச்சி அடுத்த 5 வருடங்களில் இரட்டிப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் வேதனையான சாதனைகள்தான் நிகழ்ந்துள்ளது .
- வரி விதிப்பு என்பது வானத்தை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசன் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில் பா.ஜ.க., மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா மதுரை வருவதன் மூலம் ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பது பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல. அ.தி.மு.க., த.மா.கா., உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளுக்கும் பலம் சேர்க்கும்.
தற்போது தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா., மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் வலுவான, பலமான கூட்டணியாக மக்களுடைய ஆதரவு பெற்ற கூட்டணியாக உள்ளது. எங்களது நோக்கம் ஆட்சி மாற்றம். இந்த முக்கிய நோக்கத்திற்கு தமிழகத்தில் உள்ள புதிய கட்சிகளாக இருந்தாலும் சரி, பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது த.மா.கா.வின் விருப்பம்.
கல்வியில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு அரசியல் கட்சியின் தலைவர்கள்-பொறுப்பாளர்கள் பரிசு வழங்குவது வழக்கமான ஒன்றுதான். அப்படி இருக்கும்போது பெற்றோர்களே மாணவர்களை அழைத்துக் கொண்டு வரும்போது அதை வாழ்த்துவது நமது கடமையாக இருக்கிறது. அதைப்பற்றி விமர்சிப்பதோ, அரசியல் ஆக்குவதோ கூடாது.
ஐ.பி.எல்., வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது கர்நாடக காங்கிரஸ் ஆட்சியின் சரியான திட்டமிடல் இல்லாதது மற்றும் போலீசாரின் செயல் இழந்த பணிதான் காரணம்.
அதனை தமிழகத்தில் அமைச்சர், கோவில் திருவிழாவுடன் ஒப்பிட்டால் அது மசூதி, ஆலயத்திற்கும் சேரும். தமிழகத்தில் வழிபாட்டு தலங்களில் இப்படி திருவிழா நடந்தால் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் என பொறுப்பில் இருக்கும் அமைச்சர் கூறுகின்றார் என்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
தமிழகத்தில் நடைபெறும் 4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் சாதனை ஒன்றும் இல்லை. வேதனையான சாதனைகள் தான் உள்ளன. மக்களுக்கு கொடுத்துள்ள எந்த ஒரு வாக்குறுதியையும் தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை .எங்கு பார்த்தாலும் ஆர்ப்பா ட்டம்-போராட்டம் நடை பெற்று வருகிறது. 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட நிலை யிலேயே உள்ளன. இந்த அரசு தொடர்ந்து செயல்ப டுவது வெட்கக்கேடான செயல்.
எந்தவிதமான ஒரு கட்டுப்பாட்டையும் ஏற்படுத்த காவல்துறையால் முடியவில்லை . அரசின் செயல்பாடும் அதற்கு ஏற்றவாறு அமையவில்லை. வரும் 10 மாத காலங்களில் அவர்களால் இதை எந்த விதத்திலும் சரி செய்ய முடியாது என்ற அவநம்பிக்கைக்கு மக்கள் சென்றுள்ளனர்.
எனவே எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகின்றன. மேலும் முக்கியமாக மக்கள் மீது சுமையை அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். வரி விதிப்பு என்பது வானத்தை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது . இதனை வேடிக்கை பார்க்கும் அரசாக செயல்பட்டுக் கொ ண்டிருப்பது வருந்தத்தக்கது. திருப்பூர் மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் குப்பை கள் தேங்கி கிடக்கின்றன. சாலை வசதி சரியில்லாமல் குண்டும் குழியுமாக காண ப்படுகிறது. இதனால் தொழில் வளர்ச்சிக்கான சூழ்நிலை திருப்பூரில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பூரில் உள்ள தொழில் அனைத்தும் ஒடிசா, மத்தியப்பிரதேசம், பீகார் என வெளிமாநிலங்களுக்கு போகிறது.
- நல்லாட்சி அமைந்திட நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவை சார்பில் தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, 15 வேலம்பாளையம், சிறுபூலுவபட்டியில் திண்ணை பிரசாரம் நடை பெற்றது.
இதில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
திருப்பூர் மாநகராட்சியில் குப்பை, வரி, சொத்து வரி என தி.மு.க., அரசு எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்களுக்கு கஷ்ட காலம் தான். திருப்பூரில் உள்ள தொழில் அனைத்தும் ஒடிசா, மத்தியப்பிரதேசம், பீகார் என வெளிமாநிலங்களுக்கு போகிறது. அங்குள்ள தொழிலதிபர்களுக்கு மின் கட்டண சலுகை, வட்டியில்லா கடன் என ஏராளமான சலுகைகளை அந்த மாநில அரசுகள் வழங்குகின்றன.
இதன் காரணமாக திருப்பூரில் உள்ள பெரும்பாலான தொழில்கள் அந்த மாநிலங்களுக்கு செல்வதாக என்னிடம் பேசிய தொழிலதிபர்கள் தெரிவித்தார்கள். ஆனால் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ ஒவ்வொரு நாடாக சென்று அங்குள்ள தொழிலதிபர்களை எல்லாம் தமிழ்நாட்டுக்கு வாருங்கள் என அழைக்கிறார். இது ஒரு கேலிக்கூத்தாக இருக்கிறது.
எங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கி, எங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பு தாருங்கள் என மத்தியப்பிரதேச முதலமைச்சர் திருப்பூர் வந்து அழைக்கிறார். பீகார் முதலமைச்சர் கோவை வந்து அழைக்கிறார். ஆனால் நமது முதலமைச்சரோ இங்கிருக்கும் தொழிலதிபர்களை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஒப்பந்தம் போட்டு, ஏதோ வெளிநாட்டினர் இங்கு வந்து புதிதாக தொழில் தொடங்குவது போல் நாடகம் நடத்தி வருகிறார்.
9 அமாவாசைகளில் இந்த நாடகம் முடிவுக்கு வரப்போகிறது. விரைவில் லஞ்ச, ஊழல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். நல்லாட்சி அமைந்திட நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- அமராவதி அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் தற்போது 82 அடி உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை பாசன வசதிக்குட்பட்ட 8 பழைய ராஜ வாய்க்கால்களான ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இன்று காலை அமராவதி அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், ஈஸ்வரசாமி எம்.பி., மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை 135 நாட்களில் 80 நாட்கள் தண்ணீர் திறப்பு, 58 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்று அடிப்படையில் விநாடிக்கு 300 கன அடி வீதம் 2073.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7520 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அமராவதி அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் தற்போது 82 அடி உள்ளது. நீர்வரத்து 374 கனஅடி உள்ளது. அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் உடுமலை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், வீரர்களை காணும் ஆர்வத்தில் சென்று நெரிசலில் சிக்கியுள்ளார்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு நிறைவுபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை அகமதாபாத்தில் எதிர்கொண்டது.
இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று, கோப்பையை வென்றது. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.
இதையடுத்து பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் வீரர்களை காணும் ஆர்வத்தில் சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் என குடும்பத்தினருடன் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த காமாட்சி தேவி(28) என்பவர் உயிரிழந்துள்ளார். அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், வீரர்களை காணும் ஆர்வத்தில் சென்று நெரிசலில் சிக்கியுள்ளார். இன்று பிற்பகல் 2 மணிக்கு காமாட்சி உடல் பெங்களூருவில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறது. காமாட்சி தேவியின் தந்தை மூர்த்தி உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் தாளாளராக உள்ளார்.
- திருநகர் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
- கொங்கனகிரி கோவில், ஆர்.என்.புரம் ஒரு பகுதி, கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
அனுப்பர்பாளையம்:
கே.வி.வேலம்பாளையம், திருநகர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
இதனால் ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்னு நகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்னபுரி லே-அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே-அவுட், திருமுருகன் பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி, டி.டி.பி.மில், திரு நகர்,
பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகர், எடுகாடு ஒரு பகுதி, கே.வி.ஆர்.நகர் பிரதான சாலை, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ். கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, கே.ஆர்.ஆர். தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், தொடக்கப்பள்ளி 1-வது மற்றும் 2-வது தெரு, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துச்சாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர்.நகர் வடக்கு மற்றும் தெற்கு, பாத்திமா நகர், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், திரு.வி.க. நகர், எல்.ஐ.சி. காலனி, ராயபுரம், தெற்கு தோட்டம், எஸ்.பி.ஐ. காலனி, குமரப்பாபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைபாளையம், ஜே.ஜே.நகர், திருவள்ளுவர் நகர், கொங்கனகிரி கோவில், ஆர்.என்.புரம் ஒரு பகுதி, கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கடந்த 24-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
- கடந்த 10 நாட்களாக அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமணலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
அருவிக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து வனப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்பு அவ்வப்போது மழை பெய்து வந்ததால் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது.
கடந்த 10 நாட்களாக அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தண்ணீரின் சீற்றம் குறைந்து அருவி இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்தோடு அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
- கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திருப்பூர் திரும்புகின்றனர்.
- வடமாநிலத்தவர்களின் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை சோதனை செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூா்:
திருப்பூாில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. பனியன் நிறுவனங்களில் திருப்பூரை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திருப்பூர் திரும்புகின்றனர். இதனால் வழக்கத்தைவிட திருப்பூர் பஸ் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதையடுத்து போலீசார் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நிற்பவர்கள் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களின் உடமைகளை சோதனை செய்து வருகின்றனர். மேலும் திருப்பூரில் வங்கதேசத்தினர் ஊடுருவல் உள்ளதா? என்பது குறித்து வடமாநிலத்தவர்களின் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை சோதனை செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பருவமழை துவங்கும் முன்பாகவே அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் 10 நாட்களில் அணை நிரம்பி வழியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரித்து முழு கொள்ளளவை எட்டுவதுண்டு.
கடந்த ஜனவரி மாதம் முதல் 3 மாதங்களுக்கு மழை இல்லாத நிலையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து மே மாத துவக்கத்தில் 46 அடியாக சரிவடைந்தது. இந்நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 5 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் மழை வெளுத்து வாங்குகிறது. தமிழ்நாடு-கேரள எல்லை பகுதியான மறையூர், காந்தளூர், கோவில் கடவு போன்ற பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை நீடித்து வருவதால் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தேனாறு, கூட்டாறு போன்றவற்றிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் ,வால்பாறை மற்றும் கேரள வனப்பகுதி போன்றவற்றில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் அனைத்து பகுதிகளிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது
கடந்த 22-ந்தேதி அணையின் நீர்மட்டம் 47 .74 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 109 கன அடியாக இருந்தது. 23-ந்தேதி அணையின் நீர்மட்டம் 47.90 அடியாக உயர்ந்தது. 25ந்தேதி அணையின் நீர்வரத்து 233 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 48 அடியாக உயர்ந்தது. 26-ந் தேதி அணைக்கு நீர்வரத்து 1590 கன அடியாக உயர்ந்தது. 27 மற்றும் 28-ந்தேதியில் அணையின் நீர்வரத்து 4809, 4850 கன அடி என புதிய உச்சத்தை தொட்டது.
இதனால் அணையின் நீர்மட்டம் 63 அடியை எட்டியது. தொடர்ந்து இரவு பகலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை நீடிப்பதால் நீரூற்றுகளும் சிற்றாறுகளும் உருவாகி அணையை வந்தடைவதால் அணையின் நீர்மட்டம் 68 அடியை தாண்டி உள்ளது.
இன்று காலை நிலவரப்படி அமராவதி அணைக்கு 3769 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 68.57 அடியாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைய துவங்கியதால் ஒரே வாரத்தில் அணையின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் 10 நாட்களில் அணை நிரம்பி வழியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பருவமழை துவங்கும் முன்பாகவே அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை , திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பிஏபி., திட்டத்தில் பாசன வசதி பெறுகின்றன. 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலமாகவும் பாலாறு மூலமும் தண்ணீர் வருகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அணையில் நீர்மட்டம் 53.92 அடியாக உள்ளது. அணைக்கு 252 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 1167 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.
- பிப்ரவரி மாதத்தில் தேர்தல் அறிவிப்புகள் வந்துவிடும் என்பதால் பணிகளை விரைந்து செயல்படுத்தி முடிக்க வேண்டும்.
அனுப்பர்பாளையம்:
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. மாநகர பொறுப்பாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது திருப்பூர் வடக்கு தொகுதி மற்றும் அவிநாசி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும். பொதுமக்களிடம் பூத் கமிட்டி ஏஜெண்டுகள் எவ்வாறு அணுக வேண்டும். அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்களை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுடன் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.
மேலும் தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார். குறிப்பாக வரும் டிசம்பர் மாதத்திற்குள் 2 தொகுதிகளிலும் முழுமையாக ஆய்வு செய்து, எந்தெந்த வாக்கு சாவடிகளில் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பதை கண்டறிந்து அங்கு வாக்கு வங்கியை உயர்த்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.
அ.தி.மு.க.,-பா.ஜ.க. எந்தெந்த வாக்கு சாவடிகளில் வாக்கு அதிகம் வைத்துள்ளது, அங்கு நம்முடைய வாக்குகளை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக இந்த பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். பிப்ரவரி மாதத்தில் தேர்தல் அறிவிப்புகள் வந்துவிடும் என்பதால் பணிகளை விரைந்து செயல்படுத்தி முடிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.