என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ்"

    • நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது.
    • பஸ் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் வழியாக இன்று காலை நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது.

    டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததனால் சாலையோரம் சறுக்கி இறங்கிய அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சில பயணிகள் சிறிய காயங்களுடன் தப்பினர்.

    தகவல் அறிந்த உடனே கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சொந்த ஊர் சொல்வதற்காக வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
    • பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் மீது அரசு சரியான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும்.

    சென்னை:

    பண்டிகை காலம் என்றாலே ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. எத்தனை முறை அரசு எச்சரித்தாலும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதில் உறுதியாக உள்ளனர்.

    தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதன் தேவையை கருத்தில் கொண்டு கட்டணங்களை 3 மடங்கு உயர்த்தி விட்டனர்.

    சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன.

    காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்ததால் முன்பதிவையும் நிறுத்தி விட்டனர். அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால் மக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நாடி செல்கிறார்கள்.

    சொந்த ஊர் சொல்வதற்காக வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதை அறிந்த ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் தங்களது இணையதளத்தில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர். சென்னையில் இருந்து நெல்கைக்கு வழக்கமாக இருந்த கட்டணமான ரூ.1,800 தற்போது ரூ.5,000 வரை உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கும் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் செய்வதறியாது தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் அரசு எச்சரிப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

    எனவே பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் மீது அரசு சரியான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும். விசேஷ நாட்களை பயன்படுத்தி இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.

    மேலும் கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்கினால் ஆம்னி பஸ்களின் பயன்பாடு குறையும். கட்டணத்தையும் குறைக்க வழியுண்டு. எனவே தென் மாவட்டங்களுக்கு பகல் நேர ரெயில்களை கூடுதலாக இயக்க வேண்டும். முன்பதிவு இல்லாத ரெயில் சேவையை அதிகரித்தால் ஏழை, நடுத்தர மக்கள் பயணம் செய்ய உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

    • குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைக்கு ரூ.1400 முதல் ரூ.1800 வரை வசூலிக்கிறார்கள்.
    • தென் மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கும் பிற பகுதிகளில் இயக்கக்கூடிய ஆம்னி பஸ்களிலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சென்னை:

    பண்டிகை காலம் என்றாலே ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. எத்தனை முறை அரசு எச்சரித்தாலும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதில் உறுதியாக உள்ளனர்.

    தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதன் தேவையை கருத்தில் கொண்டு கட்டணங்களை 3 மடங்கு உயர்த்தி விட்டனர்.

    சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன.

    காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்ததால் முன்பதிவையும் நிறுத்தி விட்டனர். அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால் மக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நாடி செல்கிறார்கள்.

    சொந்த ஊர் சொல்வதற்காக வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதை அறிந்த ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் தங்களது இணையதளத்தில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர். சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ஏ.சி. இருக்கைக்கு ரூ.600 முதல் ரூ.900 ரூபாய் வசூலிக்கப்படும்.

    ஆனால் இப்போது ரூ.2000 முதல் ரூ.3000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஆம்னி பஸ்சில் இந்த கட்டணம் ரூ.3989 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைக்கு ரூ.1400 முதல் ரூ.1800 வரை வசூலிக்கிறார்கள்.

    ஏ.சி. படுக்கை வசதிக்கு மதுரைக்கு ரூ.2000 முதல் ரூ.3200 வரை வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.2000 முதல் கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏ.சி. படுக்கை வசதி கட்டணம் ரூ.3500. ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.2,700 கட்டணம் தற்போது நிர்ணயித்து உள்ளனர்.

    இதே போல நாகர்கோவிலுக்கு குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.2460 கட்டணம் அதிகபட்சமாக வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.3363 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்தக் கட்டணம் தீபாவளி நெருங்கும் நேரத்தில் இன்னும் அதன் தேவையை பொருத்து உயர்த்தி கொள்வார்கள். அதிக கட்டணம் வசூலிப்பதால் நடுத்தர மக்கள் குடும்பமாக பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதே போல தென் மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கும் பிற பகுதிகளில் இயக்கக்கூடிய ஆம்னி பஸ்களிலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த போதிலும் தனியார் பஸ் ஆபரேட்டர்கள் வெளிப்படையாக தங்களது இணையதளத்தில் கூடுதல் கட்டணத்தை அறிவித்து முன்பதிவு செய்கிறார்கள். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் அரசு எச்சரிப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

    எனவே பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் மீது அரசு சரியான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும். விசேஷ நாட்களை பயன்படுத்தி இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.

    மேலும் கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்கினால் ஆம்னி பஸ்களின் பயன்பாடு குறையும். கட்டணத்தையும் குறைக்க வழியுண்டு. எனவே தென் மாவட்டங்களுக்கு பகல் நேர ரெயில்களை கூடுதலாக இயக்க வேண்டும். முன்பதிவு இல்லாத ரெயில் சேவையை அதிகரித்தால் ஏழை, நடுத்தர மக்கள் பயணம் செய்ய உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

    • சில இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
    • பல இடங்களில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3,347 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் 106 புதிய வழித்தடங்களை கண்டறிந்து அதில் 409 மாநகர பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 74 வழித்தடங்களில் 123 பஸ்களுடன் மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    சென்னையில் தினமும் 32 லட்சம் பயணிகள் மாநகர பஸ் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் மொத்தம் 4,400 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த பஸ் நிறுத்தங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டவை ஆகும்.

    அதன் பிறகு சென்னை நகரம் எவ்வளவோ மாற்றம் கண்டுள்ளது. சென்னையில் தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் 3 வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன. பல சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் இருக்கும் சில பஸ் நிறுத்தங்களில் சாலைகள் குறுகலாக மாறி விட்டன. இதனால் அந்த இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சென்னையில் பல இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் நடந்து வருகிறது. சாலையில் ஒருபுறம் அல்லது இருபுறமும் தோண்டப்பட்டு பணிகள் நடப்பதால் அந்த இடங்களிலும் சாலைகள் சுருங்கி விட்டன.

    சில இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த இடங்களில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதும், பஸ்சுக்காக காத்திருப்பதும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற இடங்களில் இருக்கும் பஸ் நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்த இடமில்லாமல் டிரைவர்கள் சற்று தூரம் தள்ளி சென்று நிறுத்துகிறார்கள். இதனால் பயணிகள் பஸ்சை பிடிக்க ஓடிச்சென்று ஏற வேண்டிய நிலை உள்ளது. மேலும் பல இடங்களில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இதுவும் பயணிகளுக்கு பஸ் ஏறுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

    இதையடுத்து சென்னையில் நெரிசலான பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களை 50 முதல் 100 மீட்டர் தூரம் வரை மாற்றுவதற்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக பயணிகள் மத்தியில் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. எந்தெந்த இடங்களில் பஸ் நிறுத்தத்தை மாற்ற வேண்டும் என்பதை அறிய தனியார் நிறுவனம் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் பயணிகள் கூறும் கருத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள பல இடங்களிலும் பஸ் நிறுத்தங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கீழ்த்தட்டபள்ளம் நெடுஞ்சாலையில் உலா வந்தது.
    • பஸ் டிரைவர் சாதுரியமாக பஸ்சை வேகமாக பின்னோக்கி இயக்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கீழ்த்தட்டபள்ளம், குஞ்சபனை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    அதிலும் குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள குடியிருப்புகள், தேயிலை தோட்டங்களில் உலா வருவதுடன் அவ்வப்போது சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறிப்பதுமாக உள்ளன.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கீழ்த்தட்டபள்ளம் நெடுஞ்சாலையில் உலா வந்தது.

    அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் கோத்தகிரி நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை காட்டு யானை வழிமறித்து வண்டியின் அருகே சென்றது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    இந்த நிலையில் பஸ் டிரைவர் சாதுரியமாக பஸ்சை வேகமாக பின்னோக்கி இயக்கினார். இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகளை பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்து வெளியிட்டு உள்ளனர்.

    கடந்த ஆண்டு இதே பகுதியில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து மற்றும் காரை ஒரு காட்டு யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் காட்டு யானைகள் மீண்டும் இந்த ரோட்டில் வாகனங்களை வழிமறித்து தாக்க முயல்வதால் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்தவனப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பஸ் நிலையத்தில் மது போதையில் இருந்த முதியவர் பஸ்சில் ஏறி டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார்.
    • பஸ்சில் இருந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஒங்கோல் பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை நிறுத்தி வைத்திருந்தனர். கண்டக்டர், டிரைவர் இருவரும் சாவியை பஸ்சிலேயே விட்டு விட்டு ஓய்வு அறைக்கு சென்றனர்.

    அப்போது பஸ் நிலையத்தில் மது போதையில் இருந்த முதியவர் பஸ்சில் ஏறி டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார்.

    பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சை வேகமாக ஓட்டி சென்றார்.

    முதியவர் பஸ்சை கடத்திச் செல்வது குறித்து பஸ் நிலையத்தில் உள்ள புறக் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் உடனடியாக வேனில் பஸ்சை விரட்டி சென்றனர்.

    முதியவர் பஸ்சை தாறுமாறாக வேகமாக ஓட்டி சென்றார். பின்னர் ஒரு வழியாக ஒங்கோல்-கர்னூல் இடையே உள்ள மேம்பாலத்தில் பஸ்சை மடக்கி பிடித்தனர்.

    பஸ்சில் இருந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பஸ்சை விபத்தில் சிக்காமல் ஓட்டி சென்றதால் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

    டிரைவரின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பஸ்சை மீட்ட அதிகாரிகள் அதை போக்குவரத்து பணிமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெண் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு டிக்கெட்டுடன் பதிவிட்டிருந்தார்.
    • சிலர் தமிழக அரசை விமர்சனமும் செய்தனர்.

    சென்னை:

    தமிழக அரசு 'விடியல் பயண' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, சாதாரண கட்டண மாநகர பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், ''மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்று போர்டு போட்ட பஸ்சில் காசு வாங்கிக்கொண்டு பெண்களுக்கு, ஆண்களுக்கான டிக்கெட் தருகிறார்கள். என்ன இது?" என்று பெண் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு டிக்கெட்டுடன் பதிவிட்டிருந்தார். அதில், திருச்சியில் இருந்து முசிறி செல்ல ஆண் ஒருவருக்கு ரூ.42 வீதம் 2 பேருக்கு ரூ.84 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பலரும் பகிர்ந்தனர். சிலர் தமிழக அரசை விமர்சனமும் செய்தனர். இதனைத்தொடர்ந்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ''மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பது விடியல் பயணத் திட்டத்தின் கீழ் வரும் பஸ் அல்ல. இது திருச்சியில் இருந்து முசிறிக்கு செல்லும் பி.எஸ்.-4 புறநகர் பஸ் (நீல நிறம்). இதற்கு பயண கட்டணம் உண்டு. பஸ்சின் கண்டக்டர் மின்னணு பயணச்சீட்டில் பயணி விவரம் மகளிர் என வருவதற்கு பதிலாக, தவறுதலாக ஆண் என குறிப்பிட்டு பயணச்சீட்டு வழங்கியுள்ளார் என்று துணை மேலாளர் வணிகம் கூட்டாண்மை (சேலம் புறநகர் பேருந்து) தெரிவித்துள்ளார். தவறான தகவலை பரப்பாதீர்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.

    • நெரிசல் மிகுந்த பயணத்தின்போது மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் படும் கஷ்டங்கள் மற்றும் வேதனைகள் சொல்லி மாளாது.
    • குறிப்பாக மாலையில் கல்வி நிறுவன வளாகங்களில் இருந்து பஸ் சேவைகளை தொடங்குவதற்கும் உத்தேசித்துள்ளது.

    சென்னை:

    எந்திர மயமான சென்னை மாநகரில் பஸ் போக்குவரத்து, மின்சார ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரெயில் போக்குவரத்து என உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தும் எளிமையான போக்குவரத்தாக பஸ் போக்குவரத்து திகழ்கிறது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 27 பணிமனைகளில் இருந்து தினசரி 3 ஆயிரத்து 233 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் தினசரி சுமார் 40 லட்சம் பேர் பயணிக்கிறார்கள்.

    பெரும்பாலும் மாநகர பஸ்களில் கூட்டம் அலைமோதும். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் மாநகர பஸ்களில் கால் ஊன்ற இடம் இல்லாத அளவுக்கு கடுமையான நெரிசல் காணப்படும். இத்தகைய நெரிசல் மிகுந்த பயணத்தின்போது மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் படும் கஷ்டங்கள் மற்றும் வேதனைகள் சொல்லி மாளாது.

    இவற்றை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெண் பயணிகள் அதிகமாக பயணிக்கும் வழித்தடங்களில் மகளிர் மட்டும் பயணிக்கும் வகையில் 50 மகளிர் சிறப்பு பஸ்களை இயக்கலாம் என்று ஆலோசித்து உள்ளது.

    இதே போன்று, மாணவ-மாணவிகள் பஸ்களில் இருக்கையில் அமர்ந்தபடி பயணிப்பதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு என தனியாக 50 (நடைகள்) சிறப்பு பஸ் சேவை இயக்கவும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தேசித்துள்ளது.

    அதாவது, பள்ளி, கல்லூரி நேரங்களில் குறிப்பாக காலை மற்றும் மாலையில் கல்வி நிறுவன வளாகங்களுக்குள் நேரடியாக சென்று பஸ் சேவைகள் அளிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாலையில் கல்வி நிறுவன வளாகங்களில் இருந்து பஸ் சேவைகளை தொடங்குவதற்கும் உத்தேசித்துள்ளது.

    இதற்காக சுமார் 25 கல்வி நிறுவனங்களை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இதில் சுமார் 4 கல்லூரிகள் அடங்குவதோடு பெரும்பாலான பள்ளிகள் பெண்கள் மட்டும் பயிலும் மேல்நிலைப்பள்ளிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மகளிர் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்தும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பஸ் சேவை குறித்தும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது தமிழக அரசுக்கு பரிசீலனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயன்பாடு இன்றி 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • தீ விபத்தில் பஸ் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த அரசு போக்குவரத்து பணிமனை வளாகத்தில் 65-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பயன்பாடு இன்றி 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை பணிமனையில் இருந்து கடலூருக்கு இயக்கப்பட இருந்த அரசு பஸ் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பொறி ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ வேகமாக பரவி மளமளவென எரிய தொடங்கியது.

    இதனை பார்த்த ஊழியர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து பஸ்சில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் பஸ் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பணிமனை வளாகத்தில் வேறு எந்த பகுதிக்கும் தீ பரவவில்லை. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்து சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து பணிமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • உணவகத்தில் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ் டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.
    • அமைச்சர் சிவசங்கர் தனியாக சென்று அந்த டிரைவர் கண்டக்டரிடம் பேச்சு கொடுத்தார்.

    அரியலூர்:

    கோவையில் கொடீசியா வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு 100 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு தனது காரின் மூலமாக அரியலூர் நோக்கி புறப்பட்டார்.

    அப்போது அமைச்சர் சிவசங்கர் கரூர்-மாயனூர் இடையே ஒரு உணவகத்தில் காரை நிறுத்தி டீ குடித்தார். அந்த உணவகத்தில் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ் டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.

    இதை கவனித்த அமைச்சர் சிவசங்கர் தனியாக சென்று அந்த டிரைவர் கண்டக்டரிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவர்களிடம் உணவு மற்றும் காபி, டீ ஆகியவற்றை உண்பதற்கு உங்களுக்கென்று குறிப்பிட்ட இடத்தினை அரசு ஒதுக்கி இருக்கிறது. அங்கு நிறுத்தாமல் ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள். உங்களின் இந்த செயல்பாடுகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றால் யார் பதில் சொல்வது என்று வினவியுள்ளார்.

    அமைச்சர் பேண்ட், சர்ட்டுடன் பயணியை போல இருந்ததால் சரியாக அடையாளம் கண்டு கொள்ளாத அப்போது அவர்கள் சற்று புலம்பியவாறு ஏன் சார் இதெல்லாம் கேட்குறீங்க? உங்க வேலையை பருங்க என்பது போல பதில் அளித்துள்ளனர். உடனே அமைச்சர் சிரித்தவாறு, நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா? என கேட்டார்.

    நீங்கா யாருன்னு தெரியலையே என டிரைவர், கண்டக்டர் கூறினார்கள். அதற்கு அமைச்சர் சிவசங்கர், நான் தான்பா உங்கள் போக்குவரத்து துறை அமைச்சர் என கூறியதும் அதிர்ச்சி அடைந்த டிரைவர், கண்டக்டர் இருவரும் அவரிடம் என்ன சொல்வது என தெரியாமல் விழித்தனர். உடனே அமைச்சர் சிவசங்கர், இனி இதுபோன்று நடக்காமல் உங்களுக்கு உரிய இடங்களில் மட்டும் பேருந்தை நிறுத்தி உணவருந்தி விட்டு எடுத்து செல்லுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

    அதிர்ச்சியில் இருந்து மீளாத டிரைவர், கண்டக்டர் இருவரும் இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று கூறினர். பின்னர் அங்கிருந்து தனது காரில் புறப்பட்டு அரியலூர் நோக்கி சென்றார்.

    • பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தும் மாற்று பஸ் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குத்திட்டை கிராம பஸ் நிறுத்தத்தில் சிதம்பரத்திலிருந்து குறிஞ்சிப்பாடி மகளிர் இலவச பேருந்து சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென பின்பக்க படிக்கட்டின் கீழ் உள்ள டயரில் இருந்து அதிக அளவில் புகையும் துர்நாற்றமும் ஏற்பட்டதால் உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

    பஸ் டயர் தேய்மானம் ஆகி உள்ளே உள்ள டியூப் ஆகியவை சூடு ஏறி புகை வந்துள்ளது என தெரிகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில் பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தும் மாற்று பஸ் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசின் போக்குவரத்து துறைக்கு பயணிகள் பழுது இல்லா பஸ்சை இயக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது.
    • இந்த சம்பவத்தின்போது பின்னால் வேறு பஸ்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    கடையநல்லூர்:

    மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த சங்கரன் (வயது 55) என்பவர் ஓட்டி சென்றார்.

    பஸ் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் உள்ள மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலை சென்றபோது திடீரென பஸ் சக்கரத்தின் அச்சு முறிந்தது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது. எனவே பஸ்சின் பின்பக்கம் அமர்ந்திருந்த 3 மாணவர்கள் உள்பட பஸ்சில் இருந்த 40 பயணிகளும் பஸ்சின் உள்ளே தூக்கி வீசப்பட்டனர். இதில் பின்பகுதியில் இருந்த 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகள் பாதுகாப்பாக மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தின்போது பின்னால் வேறு பஸ்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ்சின் சக்கரம் கழன்று சாலையில் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×