என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Bus"

    • நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது.
    • பஸ் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் வழியாக இன்று காலை நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது.

    டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததனால் சாலையோரம் சறுக்கி இறங்கிய அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சில பயணிகள் சிறிய காயங்களுடன் தப்பினர்.

    தகவல் அறிந்த உடனே கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • நெல்லூர் சென்ற போலீசார் பேருந்தை மீட்டதுடன், கடத்தி சென்ற ஒடிசாவை சேர்ந்தவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரசு பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதிக்கு செல்ல இருந்த அரசுப் பேருந்தை மர்ம நபர் கடத்தி சென்றதால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், நடத்துநர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில், தமிழ்நாட்டு பேருந்தை பிடித்து வைத்துள்ளதாக ஆந்திர மாநிலம் நெல்லூர் போலீசார் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின்பேரில், நெல்லூர் சென்ற போலீசார் பேருந்தை மீட்டதுடன், கடத்தி சென்ற ஒடிசாவை சேர்ந்தவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    பேருந்து நிலைய மேலாளர் ராம்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் ஒடிசாவை சேர்ந்த ஞானராஜன் சாகு (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது.
    • இந்த சம்பவத்தின்போது பின்னால் வேறு பஸ்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    கடையநல்லூர்:

    மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த சங்கரன் (வயது 55) என்பவர் ஓட்டி சென்றார்.

    பஸ் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் உள்ள மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலை சென்றபோது திடீரென பஸ் சக்கரத்தின் அச்சு முறிந்தது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது. எனவே பஸ்சின் பின்பக்கம் அமர்ந்திருந்த 3 மாணவர்கள் உள்பட பஸ்சில் இருந்த 40 பயணிகளும் பஸ்சின் உள்ளே தூக்கி வீசப்பட்டனர். இதில் பின்பகுதியில் இருந்த 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகள் பாதுகாப்பாக மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தின்போது பின்னால் வேறு பஸ்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ்சின் சக்கரம் கழன்று சாலையில் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
    • நீதிமன்ற அறிவுரையின்படியே தற்போது மக்கள் கருத்துக் கேட்பு நடைபெறுகிறது.

    அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது.

    * அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது.

    * பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு விரும்பவில்லை.

    * பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர்.

    * நீதிமன்ற அறிவுரையின்படியே தற்போது மக்கள் கருத்துக் கேட்பு நடைபெறுகிறது.

    * தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக கருத்து கேட்டு நீதிமன்றத்திடம் விவரம் அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசுப் பேருந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
    • பேருந்து விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

    கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    அரசுப் பேருந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
    • SETC அரசு பேருந்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு பயணம் செய்தார்.

    சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்திலிருந்து உளுந்தூர்பேட்டை வரை SETC அரசு பேருந்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு பயணம் செய்தார்.

    அப்போது அரசு பேருந்து ஓட்டுநரிடம் அவரது பிரச்சனைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அரசு பேருந்தில் பயணம் செய்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் சிவசங்கர் பகிர்ந்துள்ளார்.

    • 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்.
    • கழுத்து வலியால் மிகவும் அவதிப்படுவதாக அமீன் அகமது அன்சாரி பஸ் பயணிகளிடம் புலம்பி உள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு அவரது தந்தை உயிரிழந்ததையடுத்து கருணை அடிப்படையில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டது.

    அமீன் அகமது அன்சாரி 7 அடி உயரம் உள்ளார். 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் தினமும் சுமார் 10 மணி நேரம் தலைகுனிந்தபடி வேலை செய்ததால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார். இதனால் அவருக்கு கழுத்து, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதற்கு அவர் சிகிச்சையும் பெற்று வந்தார்.

    கழுத்து வலியால் மிகவும் அவதிப்படுவதாக அவர் பஸ் பயணிகளிடம் புலம்பி உள்ளார். மேலும் அவர் தனக்கு வேறு வேலை வழங்குமாறு போக்குவரத்துக் கழகத்திடம் கோரிக்கையும் வைத்துள்ளார்.

    10 மணி நேர கண்டக்டர் பணியில் அமீன் அகமது அன்சாரி டிக்கெட் வழங்க குனிந்து போராடுவது தொடர்பாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த புகைப்படம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

    இதையடுத்து போக்குவரத்து அமைச்சர் பொன்னம் பிரபாகர் அமீன் அகமது அன்சாரியை பொருத்தமான பணியில் நியமிக்க உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானா போக்குவரத்து தலையகத்தில் அவரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    • பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார்.
    • கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கோத்தக்கோட்டையில் அரசு பஸ் உரிய இடத்தில் நிற்காமல் சென்றதால் அதன் பின்னாலேயே பிளஸ் 2 மாணவி நீண்ட தூரம் ஓடினார்.

    பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார். மாணவி அதில் ஏறிய வீடியோ வைரலானது.

    கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.

    பொதுத்தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி பஸ் பின்னாலேயே ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பஸ் ஓட்டுநர் - நடத்துநரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

    • பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது.
    • ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    காரைக்குடி:

    திருச்சியில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு நேற்று மாலை 5 மணி அளவில் அரசு பஸ் வந்தது. காரைக்குடி வருமானவரித்துறை அலுவலகம் அருகே வரும்போது அரசு பேருந்தில் திடீரென பிரேக் செயல்படவில்லை. டிரவைர் பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் பலனில்லை.

    தொடர்ந்து தாறுமாறாக சென்ற அரசு பஸ்சை சாலை தடுப்பின் மீது மோதி நிறுத்த முயன்றுள்ளார். ஆனாலும் பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதுவையில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியே 8 பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • அப்போது மிக கனமழை பெய்யத் தொடங்கியது. பஸ்சில் வைப்பர் வேலை செய்யாததால் பஸ்சை இயக்க டிரைவர் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதுவையில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியே 8 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அரசு பஸ்கள் சரியான பராமரிப்பு பணிகள் செய்யப்படாதது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் போக்குவரத்து கழகத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது.

    இந்த நிலையில் புதுவையில் இருந்து  5.40 மணிக்கு சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியே பஸ் இயக்கப்பட்டது.

    அப்போது மிக கனமழை பெய்யத் தொடங்கியது. பஸ்சில் வைப்பர் வேலை செய்யாததால் பஸ்சை இயக்க டிரைவர் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார். கையில் காகிதத்தை வைத்துக் கொண்டு அவ்வப்போது கண்ணாடியை துடைத்த வாறு பஸ் இயக்கினார்.

    இருந்தபோதிலும் மழை அதிக அளவில் பெய்ததால் சாலையில் முழுவதும் தெரியாத நிலை ஏற்பட்டது. பஸ்சை சிறிது நேரம் நிறுத்தி கண்ணாடியை துடைத்த பிறகு இயக்கினார். இதனை அறிந்த பயணிகள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

    இதன் வீடியோவை பஸ்சில் பயணித்த ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக அரசு கவனம் செலுத்தி பஸ்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நேற்று 3 மணி அளவில் தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • மலைப்பகுதியில் இயக்கப்ப டும் அரசு பஸ்கள் நல்ல தரத்துடன் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மரைகிராமங்கள் உள்ளன.

    இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, திருப்பூர், போன்ற பகுதிகளுக்கு தாளவாடியில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ் மூலமாக சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று 3 மணி அளவில் தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    தமிழகம்-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் அருகே செல்லும் போது அடந்த வனப்பகுதியில் பஸ் பழுதாகி நின்றது.

    டிரைவர் மேற்கொண்டு பஸ்சை இயக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கடும் அவதிபட்டனர். பின்னர் 1 மணி நேரத்திற்க்கு பிறகு தாளவாடியில் இருந்து குளியாடா செல்லும் அரசு பஸ்சில் பயணிகள் அனைவரும் சத்தியமங்கலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி பயணிகள் கூறும்போது:-

    மலைப்பகுதியில் பழைய பஸ்கள் மட்டுமே இயக்கப் படுவதால் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. எனவே மலைப்பகுதியில் இயக்கப்ப டும் அரசு பஸ்கள் நல்ல தரத்துடன் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

    • போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது என்ற விவரங்கள் பத்திரிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    அரசு பஸ்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) பொது மேலாளர், திருப்பூர் மண்டல அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்த பஸ்களில் பயணிகள் பயணம் செய்யும் போது, பயண சீட்டை பெற்றுக் கொண்டு கட்டண தொகை கொடுக்கும் போது, நடத்துனர்கள் 10 ரூபாய் நாணயத்தை பெற மறுக்கின்றனர் என, சென்னை இந்திய ரிசர்வ் வங்கி துணை பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது என்ற விவரங்கள் பத்திரிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் அனைத்தும் சட்ட பூர்வமானவை.

    எனவே இனி வருகிற காலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிடெட் திருப்பூர் மண்டல பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் பயண சீட்டு கட்டணம் கொடுக்கும் போது, 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் அதனை மறுக்காமல் நடத்துனர்கள் பயண சீட்டு கொடுக்க வேண்டும். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து கிளை மேலாளர்களும் தகவல் பலகை மூலமாக இந்த தகவலை அனைத்து நடத்துனர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வராத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×