search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டக்டர்"

    • புதிய தாழ்தள பஸ்களில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க வசதி
    • டிரைவர்-கண்டக்டர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் அறிவுரை

    சென்னை:

    சென்னையில் ஓடும் புதிய தாழ்தள பஸ்களில் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் சென்று பயணம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் மாற்றுத் திறனாளிகளை ஏற்றி இறக்கு வதற்கு டிரைவர்-கண்டக்டர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் அறிவுரைகளை வழங்கி உள்ளது.

    மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் பயணிக்க முற்படும் போது, சக்கர நாற்காலிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் உள்ள சாய்தளத்தை உபயோகப்படுத்தி அவர்கள் ஏறு வதற்கு உதவி செய்ய வேண்டும்.

    பயணம் செய்யும் போது அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் சக்கர நாற்காலிகளை பஸ்சில் அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் 'லாக்' செய்ய கண்டக்டர்கள் உதவ வேண்டும்.

    அதேபோல் மாற்றுத் திறனாளிகள் இறங்கும் போது சாய்தள படிக்கட்டை இயக்கி சக்கர நாற்காலியுடன் பஸ்சில் இருந்து பாதுகாப்பாக இறங்க உதவ வேண்டும். இதில் எவ்வித புகாரும் வராத வகையில் டிரைவர்-கண்டக்டர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளிக்கு சென்றதும் பஸ்சில் நடந்த சம்பவத்தை ஆசிரியர்களிடம் மாணவி தெரிவித்தார்.
    • பள்ளி மாணவியிடம் அத்துமீறியது குறித்து போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் பெரும்பில்லிச்சேரி பகுதியை சேர்ந்தவர் சஜன்(வயது37). தனியார் பஸ் கண்டக்டராக பணியாற்றுகிறார். திருச்சூர்- கொடுங்கல்லூர் வழித் தடத்தில் இயக்கப்பட்ட பஸ்சில் கண்டக்டராக இருக்கிறார். நேற்று காலை வழக்கம்போல் சஜன் பணிக்கு சென்றார். அப்போது அவரது பஸ்சில் இரிஞ்சாலக்குடா பஸ்நிலையத்தில் இருந்து பள்ளி மாணவி ஒருவர் ஏறினார்.

    அந்த மாணவியிடம் கண்டக்டர் சஜன் தவறாக நடந்துள்ளார். மேலும் மாணவிக்கு 'கட்டாய முத்தம்' கொடுத்துள்ளார். சக பயணிகள் மத்தியில் பஸ்சில் கண்டக்டர் திடீரென 'கட்டாய முத்தம்' கொடுத்ததால் மாணவி அதிர்ச்சியடைந்தார். பள்ளிக்கு சென்றதும் பஸ்சில் நடந்த சம்பவத்தை ஆசிரியர்களிடம் மாணவி தெரிவித்தார்.

    இதையடுத்து ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை கூறியிருக்கின்றனர். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் சகோதரர், தனது நண்பர்கள் சிலருடன் மாலையில் பஸ் நிலையத்துக்கு சென்றார். மாணவி காலையில் சென்ற தனியார் பஸ்சை தடுத்துநிறுத்தினர்.

    மாணவியிடம் தவறாக நடந்த கண்டக்டர் சஜனை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். பள்ளி மாணவியிடம் அத்துமீறியது குறித்து போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கண்டக்டர் சஜனை கைது செய்தனர். ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிக்கு கண்டக்டர் 'கட்டாய முத்தம்' கொடுத்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாற்றுத்திறனாளியை மாநகர பஸ் ஏற்றாமல் சென்றதால் பஸ்நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநகர அரசு பஸ்(எண்101)சென்றது. பூந்தமல்லி அருகே கல்லறை தோட்டம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அந்த பஸ் கடந்து சென்றபோது பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    ஆனால் அந்த பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியை மாநகர பஸ் ஏற்றாமல் சென்றதால் பஸ்நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சமூக ஆர்வலர் ஒருவர் உடனடியாக அந்த மாற்றுதிறனாளியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அந்த மாநகர பஸ்சை விரட்டி வந்தார். சிறிது தூரத்தில் அந்த பஸ்சை மடக்க நிறுத்தி மாற்றுத்திறனாளியை ஏற்ற மறுத்து வந்தது தொடர்பாக டிரைவர், கண்டக்டரிடம் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த பஸ்சில் இருந்த கண்டக்டர் ஆவேசமாக சமூக ஆர்வலரை ஒருமையில் தரக்குறைவாக பேசினார். மேலும் எதுவும் செய்யமுடியாது என்று மிரட்டும் வகையில் கூறினார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மாற்றுத்திறனாளி பின்னர் அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.

    கண்டக்டரும், டிரைவரும் வாக்குவாதம் செய்யும் காட்சியை சமூகஆர்வலர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.

    சென்னை:

    மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நாளை நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்த போராட்டத்துக்கு ஆதரவாக ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கத்தினரும் ஒன்று சேர்ந்து மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர்.

    சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    இந்த போராட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்களும் டிரைவர், கண்டக்டர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இதனால் பஸ் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என தெரிகிறது.

    இதையொட்டி சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகர போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், கிளை மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களில் செயல்படும் சில தொழிற் சங்கங்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (16-ந் தேதி) அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

    எனவே போக்குவரத்து டிரைவர் கண்டக்டர்கள், தொழிலாளர்கள் அனை வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் பணிக்கு வரவேண்டும். டிரைவர், கண்டக்டர்களுக்கு 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.

    அவ்வாறு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுமாறு தூண்டிவிடும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த சுற்றறிக்கை அனைத்து பணிமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நோட்டீஸ் போர்டிலும் ஒட்டப்பட்டுள்ளது.

    • ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார்.
    • அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் எல்.பி. நகரில், அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கண்டக்டர் கங்காதரன் பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.

    தில்சுக் நகர் செல்வதற்காக, அந்த பஸ்சில் இளம் பெண் ஒருவர் ஏறினார்.

    கண்டக்டர் கங்காதரனிடம், அந்த பெண் இலவச பயண டிக்கெட் கேட்டார்.

    உடனே கண்டக்டர், ஆதார் அட்டையை காண்பிக்கும்படி கேட்டார்.

    இதைக் கேட்டதுமே அந்த பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. யாரை பார்த்து ஆதார் அட்டை கேட்கிறாய்? என்று கேள்வி கேட்டு, கண்டக்டரை சரமாரியாக திட்டினார்.

    இதனால், திடுக்கிட்ட கண்டக்டர், அடையாள அட்டை இல்லாமல், பஸ்சில் பயணிக்க முடியாது, ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கண்டக்டரை எட்டி உதைத்து தாக்க தொடங்கினார். அப்போதுதான் அந்த பெண், குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

    பிறகு, அந்த பெண், திடீரென ரூ.500 நோட்டை கண்டக்டரிடம் தந்து டிக்கெட் கேட்டார்.

    500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று கண்டக்டர் கூறினார்.

    இதைக் கேட்டதும், அந்த பெண்ணுக்கு மீண்டும் கோபம் அதிகமாகிவிட்டது. அதனால், கண்டக்டரை எட்டி காலால் உதைத்தார். பிறகு, அவரது முகத்திலேயே எச்சிலை துப்பினார்.

    சினிமாவில் வரும் சண்டை காட்சி போல கண்டக்டரை காலால் உதைத்து புரட்டி எடுத்தார்.

    இதனை பார்த்து, பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ந்து போனார்கள் யாருமே அந்த பெண்ணிடம் நெருங்கவில்லை. ஒரு பெண் இதனை தடுக்க அருகில் வந்தார்.

    அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.

    பஸ்சை அருகில் உள்ள போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இது குறித்து கண்டக்டர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போதையில் கண்டக்டர் மற்றும் பெண்ணை தாக்கியது தொடர்பாக இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேண்ட் சட்டை அணிந்து இளம்பெண் பஸ்சில் கண்டக்டரை தாக்கும் காட்சிகளை பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர் .

    அது தெலுங்கானாவில் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஆத்திரமடைந்த அசிம்கான் கண்டக்டரிடம் தகராறு செய்தார். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், அடி சுந்தரவாடா பஸ் நிலையத்தில் இருந்து உட்னூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் கான் என்ற கண்டக்டர் பணியில் இருந்தார்.

    அப்போது அன்ஸ்னாபூரை சேர்ந்த அசிம் கான் என்பவர் பஸ்சில் ஏறினார். அவர் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கினார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அசிம்கானுக்கு சீட் கிடைக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அசிம்கான் கண்டக்டரிடம் தகராறு செய்தார். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.

    இதையடுத்து கண்டக்டர் பணத்தை திருப்பி கொடுத்து அசின் கானை பஸ்சிலிருந்து கீழே இறக்கினார்.

    அப்போது அசிம் கான் கண்டக்டரை தாக்கினார். அவரை கீழே தள்ளி கன்னத்தைக் கடித்து துப்பினார்.

    இதில் கண்டக்டரின் கன்னத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனைக் கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    அசிம் கானை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோதலில் காயமடைந்த தாஸ் மற்றும் பாபு ஆகிய 2 பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • தாராபுரம் பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 8.30 மணி அளவில் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்தநிலையில் அங்குள்ள டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வரும் தாராபுரம் தெற்கு தெருவை சேர்ந்த தாஸ் (வயது 35) என்பவர் கடைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது டீக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சின் டிரைவர் பாபு சாப்பிட்டு விட்டு பஸ்சின் ஜன்னல் வழியாக கை கழுவிய தண்ணீரை ஊற்றியுள்ளார். அந்த தண்ணீர் தாஸ் மீது பட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தாஸ், தண்ணீரை பார்த்து ஊற்ற முடியாதா? என்று டிரைவர் பாபுவிடம் கேட்டுள்ளார். மேலும் டீ கடையில் உள்ள ஜக்கில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து பாபு மீது ஊற்றியுள்ளார். இதனால் 2 பேருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி அடிக்க தொடங்கினர்.

    இதையறிந்து அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மோதலில் காயமடைந்த தாஸ் மற்றும் பாபு ஆகிய 2 பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பஸ்சை எடுக்காமல் அப்படியே நிறுத்தினர். சுமார் அரை மணி நேரம் பஸ்சை எடுக்காமல் போராட்டம் நடத்தியதால் பயணிகள் கடும் சிரமப்பட்டனர். வெளியூர் மற்றும் வேலைக்கு செல்லக்கூடிய பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு டிரைவர்கள் பஸ்சை இயக்கினர். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாராபுரம் பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    • காயமடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • தலைமறைவாக உள்ள ரஞ்சித் என்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பருத்தியூர் கிராமத்திற்கு தடம் எண் 33 என்ற டவுன் பஸ் சென்றது. இந்த பஸ்சை டிரைவர் பிரபாகர் ஓட்டினார். கண்டக்டராக குமார் பணிபுரிந்தார். இந்தநிலையில் தேவனூர் புதூர் பஸ் நிறுத்த பகுதியில் இருந்து 3 பேர் பஸ்சில் ஏறினார்கள்.

    குடிபோதையில் இருந்த அவர்கள் கண்டக்டரிடம் தங்களை இலவசமாக உடுமலைக்கு அழைத்துச் செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு கண்டக்டர் டிக்கெட் எடுக்குமாறு கூறினார். ஆனால் அவர்கள் டிக்கெட் எடுக்க மறுத்துவிட்டனர். பின்னர் கண்டக்டர் சின்னப்புதூர் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆசாமிகளை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் பஸ்சை பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் புங்கமுத்தூர் பிரிவில் பஸ்சை வழிமறித்து செங்கல் மற்றும் கல்லைக்கொண்டு டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டர், டிரைவரை தாக்கிய போதை ஆசாமிகள் திண்டுக்கல் தாடிக்கொம்பு கீழத்தெருவை சேர்ந்த மனோகரன் மகன் ஆனந்தன் (22) , கோவை மாவட்டம் கோட்டூர் அங்கலகுறிச்சியை சேர்ந்த சுந்தரேஸ்வரன் மகன் மகேந்திரபிரசாத் (19)ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரஞ்சித் என்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பணிமனை ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • தமிழரசன் வழங்கிய பயணச்சீட்டு, திருடு போன பயணச்சீட்டு என தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை நடைபெற்றது. இதில் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் பயணச்சீட்டுகள் திருட்டு போனது தெரியவந்தது. தொடர்ந்து திருட்டு போன பயணச்சீட்டுகளின் எண்களைக் கண்டறிந்து போக்குவரத்து துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி விழுப்புரத்தில் அரசு பஸ்சில் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர்கள் பயணச்சீட்டை சோதனை செய்தனர். அந்த பஸ்சின் கண்டக்டர் தமிழரசன் வழங்கிய பயணச்சீட்டு, திருடு போன பயணச்சீட்டு என தெரியவந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி பணிமனை மேலாளர் முருகன், கண்டக்டர் தமிழரசனிடம் விசாரணை நடத்தினார். இதில் அவர் பயணச்சீட்டுகளை திருடியதை ஒப்புக்கொண்டார். திருட்டு போன பயணச்சீட்டுகளின் மொத்தமதிப்பு ரூ.9 லட்சத்து 2 ஆயிரத்து 520 ஆகும்.

    இதனை தொடர்ந்து பணிமனை மேலாளர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் கண்டக்டர் தமிழரசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்க்கும் கண்டக்டரே பயணச்சீட்டுகளை திருடி அரசு பஸ் பயணிகளிடம் வழங்கிய சம்பவம் பணிமனை ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பயணிகள் டிரைவரிடம் சென்று கேட்டபோது, அவர் குடிபோதையில் பஸ்சினை இயக்கியது தெரியவந்தது.
    • அலறியடித்து ஓடிவந்த பெண்கள், நடந்தவைகளை போலீசாரிடம் கூறினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டில் இருந்து மரக்காணம் வழியாக ஓமீப்பேருக்கு தடம் எண் 61-ல் மகளிருக்கான இலவச பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் இன்று காலை 10 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கீழ்புத்துப்பட்டிலிருந்து புறப்பட்டது. இந்த பஸ் கிழக்கு கடற்கரை சாலையில் ஆலப்பாக்கம் அருகே காலை 10.30 மணியளவில் வந்த போது, சாலையில் சென்ற வாகனங்களை மோதுவது போல சென்றது. இதனால் பஸ்சில் சென்ற பயணிகள் அலறினர். இதையடுத்து பெண் பயணிகள் டிரைவரிடம் சென்று கேட்டபோது, அவர் குடிபோதையில் பஸ்சினை இயக்கியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெண் பயணிகள் பஸ்சினை சாலையோரத்தில் நிறுத்த சொல்லி டிரைவரிடம் வலியுறுத்தினர்.

    சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதுவதை போல பஸ்சினை ஓட்டிய டிரைவர், ஒரு வழியாக சமாளித்து நிறுத்தினார். இதையடுத்து பஸ்சில் பயணம் செய்த பெண் பயணிகள், அலறியடித்து கீழே இறங்கினர். அப்போது கூனிமேட்டில் நடந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழாவில் பங்கேற்ற மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார், மரக்காணத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அலறியடித்து ஓடிவந்த பெண்கள், நடந்தவைகளை போலீசாரிடம் கூறினர். உடனடியாக சாலையோரத்தில் இருந்த பஸ்சிற்குள் போலீசார் சென்றனர். அங்கிருந்த டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தியதில், டிரைவர் குடிபோதையில் இருந்ததை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து டிரைவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இது குறித்து 4 மாணவிகள் அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
    • மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து தங்கம் தியேட்டர், கோட்டாம்பட்டி பிரிவு, வக்கம்பாளையம், கருப்பம்பாளையம், சிங்காநல்லூர், சீனிவாசபுரம், குஞ்சுபாளையம் வழியாக பொள்ளாச்சிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் ஆனைமலையை சேர்ந்த 57 வயது நபர் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    பொள்ளாச்சி சிங்காநல்லூர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் அந்த பஸ்சில் தினமும் பள்ளிக்கு சென்று வந்தனர்.மாணவிகள் பயணிக்கும் போது கண்டக்டர், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து 4 மாணவிகள் அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

    சம்பவத்தன்று பஸ் ஜமீன்கொட்டாம் பட்டி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் கோட்டூர் போலீசர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து போலீசார் சிறை பிடிக்கப்பட்ட பஸ்சை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். இது குறித்து போலீசார் மாணவிகள் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகள் ஏறும் முன்பே பஸ் திடீரென இயக்கப்பட்டு எலக்ட்ரானிக் கதவு மூடப்பட்டது.
    • காது வலியால் துடித்த மோனிஷா தனது பெற்றோரிடம் கண்டக்டர் தன் கன்னத்தில் அறைந்த தகவலை தெரிவித்தார்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், இவரது மகள் மோனிஷா (வயது 15). இவர் மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை 4.30 மணி முதல் 5.15 மணி வரை நடந்த ஆங்கிலம் சிறப்பு வகுப்பில் பயின்றுவிட்டு அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் தனது வீட்டுக்கு செல்வதற்காக தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் அரசு பஸ்சில் ஏற முயன்றார். பஸ்சில் நிற்க கூட இடம் இல்லாத நிலையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி மோனிஷா படிக்கட்டில் நின்று கொண்டு நெரிசலில் சிக்கி தவித்தார்.

    பயணிகள் ஏறும் முன்பே பஸ் திடீரென இயக்கப்பட்டு எலக்ட்ரானிக் கதவு மூடப்பட்டது. பஸ்சில் கூட்டம் முண்டியடித்தால் எரிச்சலடைந்த அந்த பஸ் கண்டக்டர் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த மோனிஷாவை கன்னத்தில் பளார் பளார் என 3 முறை தாக்கி தனது கோபத்தை அந்த மாணவியின் மீது காட்டியுள்ளார்.

    காது வலியால் துடித்த மோனிஷா தனது பெற்றோரிடம் கண்டக்டர் தன் கன்னத்தில் அறைந்த தகவலை தெரிவித்தார். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், தனது பெற்றோருடன் மாமல்லபுரம் போலீஸ் நிலையம் வந்த மாணவி மோனிஷா தன்னை தாக்கிய கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் செய்தார். இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் தாம்பரம் போக்குவரத்து பணிமனைக்கு தகவல் அனுப்பி சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×