என் மலர்
நீங்கள் தேடியது "conductor"
- மாணவி, கண்டக்டரிடம் பாக்கி சில்லறையை தருமாறு கேட்டபடி இருந்தார்.
- சம்பவ இடத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று மாணவி தனது வீட்டை அடைந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது நெடுமங்காடு. இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு வருவதற்காக நெடுமங்காடு டெப்போவில் இருந்த அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, மாணவி தன்னிடம் இருந்த 100 ரூபாயை கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். மாணவியிடம் டிக்கெட்டை கொடுத்த கண்டக்டர், கட்டணம் போக மீதி தொகையை திருப்பி கொடுக்கவில்லை. சற்று நேரத்தில் தருவதாக கூறி இருக்கிறார்.
ஆனால் கண்டக்டர் சில்லறை பாக்கியை தரவில்லை. இதனால் மாணவி, கண்டக்டரிடம் பாக்கி சில்லறையை தருமாறு கேட்டபடி இருந்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த கண்டக்டர், மாணவியை திட்டி அவமானப்படுத்தி இருக்கிறார்.
மேலும் பாக்கி சில்லறையை கொடுக்காமல், அந்த மாணவியை நடுவழியிலேயே பஸ்சில் இருந்து வலுக்கட்டாயமாக இறங்க செய்தார். மாணவியிடம் வேறு பணம் இல்லாததால், வேறு பஸ்சில் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தார். அவர், கண்ணீர் வடிந்தபடியே தனது வீட்டிற்கு நடந்து சென்றார்.
சம்பவ இடத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று தனது வீட்டை அடைந்தார். தன்னிடம் அரசு பஸ் கண்டக்டர் நடந்த விதம் குறித்து தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையடுத்து மாணவியின் தந்தை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போவுக்கு சென்று, மாணவியை நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டரை சந்தித்து தட்டிக்கேட்டார். அப்போது மாணவியின் தந்தையையும் அந்த கண்டக்டர் தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் செய்ய மாணவியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
- பஸ்சில் வந்த 2 வாலிபர்களும், தனது நண்பர்கள் சிலருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.
- பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஒரு அரசு பஸ் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு சென்றது.
பஸ்சை டிரைவர் சனல்குமார் இயக்கினார். கண்டக்டராக தனசேகரன் இருந்தார். அந்த பஸ் இரவில் தூத்துக்குடியை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு பஸ் நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது பஸ்சில் 2 வாலிபர்கள் ஏறினார்கள். அவர்கள் இருவரும் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தனர். இருவரையும் பஸ்சுக்குள் வருமாறு கண்டக்டர் தனசேகரன் கூறினார்.
ஆனால் அவர்கள் இருவரும் பஸ்சுக்குள் வருவதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் அந்த வாலிபர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது பற்றி பஸ்சில் வந்த 2 வாலிபர்களும், தனது நண்பர்கள் சிலருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை பகுதியில் அந்த பஸ் வந்தபோது வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து வழி மறித்தனர். இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பின்னர் அந்த வாலிபர்கள் பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் பஸ்சின் கண்ணாடியையும் கல்வீசி உடைத்தனர்.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்தபடி கீழே இறங்கினார்கள். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
படுகாயம் அடைந்த டிரைவர் சனல்குமார், கண்டக்டர் தனசேகரன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் பஸ்சில் இருந்த பயணிகளை போலீசார் மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இது குறித்து டிரைவர் சனல்குமார் தூத்துக்குடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை கைப்பற்றி விசாரணை நடக்கிறது.
டிரைவர், கண்டக்டரை தாக்கிய வாலிபர்கள் முகம் வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இதையடுத்து அந்த வாலிபர்கள் யார்? என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், வாலிபர்கள் குடிபோதையில் டிரைவர், கண்டக்டரை தாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. வாலிபர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பஸ் டிரைவர் திடீரென அதிவேகமாக பஸ்சை ஓட்டி திடீர் பிரேக் போட்டார்.
- உத்திரபிரசாந்த் தொடர்ந்து கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் சில்லரை கொடுக்குமாறு மன்றாடினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே தமிழக பகுதியான பெரம்பையை அடுத்த நடுப்பாளையம் ஆண்டவர் நகரை சேர்ந்தவர் உத்திரபிரசாந்த் (வயது50). விவசாய கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று மதியம் உத்திரபிரசாந்த் பி.எஸ்.பாளையத்தில் விதை நெல் விடும் வேலைக்காக வில்லியனூரில் இருந்து தனியார் பஸ்சில் புறப்பட்டு சென்றார். அப்போது பஸ் கண்டக்டரிடம் ரூ.500 கொடுத்து டிக்கெட் எடுத்தார். ஆனால் மீதி பணத்தை கண்டக்டர் கொடுக்கவில்லை.
இதனை உத்திரபிரசாந்த் கேட்ட போது பி.எஸ்.பாளையம் சென்றதும் தருவதாக கண்டக்டர் கூறியதாக தெரிகிறது. ஆனால் பி.எஸ்.பாளையம் பஸ் நிறுத்தம் சென்றும் மீதி சில்லரையை கண்டக்டர் தரவில்லை.
இதனை உத்திரபிரசாந்த் கேட்ட போது தற்போது சில்லரை இல்லை என்று கண்டக்டர் தெரிவித்தார். ஆனால் சில்லரை வாங்காமல் பஸ்சில் இருந்து இறங்க மாட்டேன் என்று உத்திரபிரசாந்த் கூறினார்.
அப்போது பஸ் டிரைவர் திடீரென அதிவேகமாக பஸ்சை ஓட்டி திடீர் பிரேக் போட்டார். இதனால் உத்திரபிரசாந்த் தடுமாறி கீழே விழ முயன்றார். ஆனாலும் சுதாரித்துக்கொண்டு உத்திரபிரசாந்த் தொடர்ந்து கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் சில்லரை கொடுக்குமாறு மன்றாடினார்.
ஆனால் அவர்கள் சில்லரை கொடுக்க மறுத்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டி உத்திரபிரசாந்த்தை பஸ்சை விட்டு கீழே இறங்காவிட்டால் இங்கேயே கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று அவரது மார்பில் கையை வைத்து தள்ளினர்.
இதனால் பஸ் படிகட்டில் இருந்து விழுந்ததில் உத்திரபிரசாந்த் தலையில் பலத்த காயமடைந்தார். ஆனால் டிரைவரும், கண்டக்டரும் பஸ்சை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உத்திரபிரசாந்த்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து உத்திரபிரசாந்த்தின் மகன் விஜயராகவன் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விஷ்ணு பலத்த காயமடைந்து வலியால் துடித்தான்.
- போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பந்தப்பட்ட பஸ்சில் பணியில் இருந்த டிரைவர்-கண்டக்டர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்த அணைப்பதி பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவரது மகன் விஷ்ணு (வயது 10). குன்னத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் ஊருக்கு செல்வதற்காக குன்னத்தூர் பஸ் நிலையத்திற்கு சென்றான். அங்கிருந்து அணை அணைப்பதி பகுதி வழியாக செல்லும் பஸ்சிற்கு பதிலாக ஆதியூர் வழியாக செல்லும் 10-ம் நம்பர் பஸ்சில் விஷ்ணு ஏறியுள்ளான்.
சிறிது தூரம் சென்றதும், பஸ் வேறு தடத்தில் செல்வதை கண்ட சிறுவன் அதிர்ச்சியடைந்து, பஸ்சை நிறுத்தும்படி கண்டக்டரிடம் தெரிவித்துள்ளான். பலமுறை கூறியும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த விஷ்ணு, ஓடும் பேருந்தில் இருந்து குதித்துள்ளான்.
இதில் விஷ்ணு பலத்த காயமடைந்து வலியால் துடித்தான். உடனே அப்பகுதி பொதுமக்கள் அவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து ள்ளனர். பின்னர் இது குறித்து குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
குன்னத்தூர் போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவனிடம் விசாரணை நடத்தினர். அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பந்தப்பட்ட பஸ்சில் பணியில் இருந்த டிரைவர்-கண்டக்டர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சை நிறுத்தாததால் பள்ளி மாணவன் பஸ்சில் இருந்து குதித்த சம்பவம் குன்னத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போக்குவரத்து நெரிசல் காரணமாக தனியார் பஸ்களுக்கு வழி கொடுக்க முடியாமல் அரசு பஸ் சென்றது.
- தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
கும்பகோணத்தில் இருந்து 2 தனியார் பஸ்கள் தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது தஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து வல்லத்திற்கு நகர அரசு பஸ் புறப்பட்டது.
நகரப் பஸ்சை ஓட்டுனர் கனகராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக தனியார் பஸ்களுக்கு வழி கொடுக்க முடியாமல் அரசு பஸ் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனியார் பஸ்சுக்கு வழி கொடுக்காதால், ஆத்திரமடைந்த தனியார் பஸ் கண்டக்டர்கள் அரசு பஸ்சை ஆற்றுப்பாலம் அருகே வழிமறித்து ஓட்டுனர் கனகராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அரசு பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சாலையில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தாக்குதல் நடத்திய தனியார் பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து காவல்து றையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பஸ் அங்கிருந்து கிளம்பும்போது மாணவர்கள் பீர் பாட்டிலை பஸ் மீது வீசி எறிந்துள்ளனர்.
- தன்னை தாக்க முயன்ற பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
ராயபுரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 39). பஸ் கண்டக்டர். தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் தயானந்த மூர்த்தி (வயது 57). பஸ் டிரைவர். தண்டையார்பேட்டை பஸ் டிப்போவை சேர்ந்த பஸ் நேற்று தடம் எண் 44 கட் பிராட்வேயில் இருந்து ஐ.ஓ.சி. வரை செல்லும் பஸ்சில் தண்டையார்பேட்டை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் ஏறிய 5 பள்ளி மாணவர்கள் பஸ்சில் பின்புற படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்ததை தொடர்ந்து, பயணிகளுக்கு தொல்லை கொடுத்து ரகளை செய்துள்ளனர்.
பின்னர் பஸ் தண்டையார்பேட்டை மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் கண்டக்டர் பள்ளி மாணவர்களை கண்டித்துள்ளார். இதனால் அதில் ஒரு மாணவன் சாலையில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து கண்டக்டரை தாக்க முயன்றார். அப்போது கண்டக்டர் அதைத் தடுத்துள்ளார். மேலும், பஸ் அங்கிருந்து கிளம்பும்போது மாணவர்கள் பீர் பாட்டிலை பஸ் மீது வீசி எறிந்துள்ளனர்.
இது தொடர்பாக கண்டக்டர் தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் எதிரே பஸ்சை நிறுத்தி கண்டக்டர் அதன் முன் நின்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து கண்டக்டர் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தன்னை தாக்க முயன்ற பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பஸ் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வோம் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
தஞ்சாவூர்:
பெரம்பலூர் மாவட்டம் பாடலூரை சேர்ந்தவர் அழகுதுரை (வயது 39 ) அரசு பஸ் டிரைவர். திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (44) அரசு பஸ் கண்டக்டர். இவர்கள் தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை வழித்தட பஸ்சில் பணிபுரிகின்றனர்.
நேற்று தஞ்சை- பட்டுக்கோட்டை வழித்தட பஸ்சை இயக்கினர். இரவில் கடைசி நடையாக பட்டுக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு பயணிகளை இறக்கிவிட்டு பஸ்சை தஞ்சை ஜெபமாலைபுரம் பணிமனைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் பயணிகளிடம் வசூலித்த டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை பணிமனை அலுவலர்களிடம் சமர்பித்தனர். இதையடுத்து அதிகாலை 2 மணியளவில் இருவரும் வீட்டுக்கு செல்வதற்காக அருகே உள்ள பஸ் நிறுத்தம் சென்று அந்த வழியாக வரும் அரசு பஸ்சில் ஏறி புதிய பஸ் நிலையம் செல்ல முடிவு செய்தனர். அதன்படி இருவரும் பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
சீனிவாசபுரம் செக்கடி பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்து நிறுத்தி பணம் கொடுக்குமாறு மிரட்டினர். இதற்கு அழகுத்துரை, ஆறுமுகம் மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் சரமாரியாக இருவரையும் தாக்கி ரூ.3500 ரொக்கம், வெள்ளி செயின், வாட்ஜ் ஆகியவற்றை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி சென்றனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த அழகுத்துரை, ஆறுமுகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து இன்று அதிகாலை 4 மணியளவில் ஜெபமாலைபுரம் பணிமனையில் இருந்து 50-க்கும் மேற்ப்பட்ட பஸ்களை இயக்காமல் ஏராளமான டிரைவர், கண்டக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பஸ் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சுமார் 1 மணி நேரத்திற்கும் நேரமாக இந்த போராட்டம் நீடித்தது.
தகவல் அறிந்து போக்குவரத்து அதிகாரிகள், மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வோம் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்று தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து பஸ்களை இயக்கினர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அரசு பஸ் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- போக்குவரத்து அதிகாரியிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கலிங்கபட்டிக்கு செல்லும் அரசு பஸ் வன்னியம்பட்டி, பெருமாள் தேவன்பட்டி, அட்டைமில், கீழராஜகுலராமன், வடகரை, கொருக்காம்பட்டி வழியாக தினசரி மகளிர் கட்டணமில்லா பஸ்சாக இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள கிராமப்பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்- கலிங்கபட்டி பஸ் சரியாக இயக்கப்படாதது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து கழகத்தில் சிலர் புகார் அளித்தனர்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கலிங்கபட்டிக்கு காலை 10.30 மணிக்கு அந்த பஸ் புறப்பட்டது. பஸ்சில் கொருக்கும்பட்டியில் கல்லூரி மாணவி ஒருவர் ஏறி உள்ளார்.
அப்போது அவரிடம் நடத்துநர் தங்கவேலு, பஸ் சரியாக வர வில்லை என உங்கள் ஊரில் இருந்து புகார் அளித்துள்ள தாக கூறி மாணவியை அவதூறாக பேசி உள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், ரகுராமன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஸ்ரீவில்லி புத்தூர் போக்குவரத்து கழகத்திற்கு வந்த ரகுராமன் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட கண்டக்டர், மாணவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 15 நாட்களில் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பணிமனை மேலாளர் உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
- கண்டக்டரை தாக்கிய அகதிகள் கைது செய்யப்பட்டனர்.
- சந்திரன் டிக்கெட் எடுக்கும்படி கேட்டார்.
மதுரை
தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்தவர் சந்திரன் (53). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக உள்ளார். நேற்று இரவு இவர் பணியில் இருந்த பஸ் பழங்காநத்தத்திற்கு வந்தது. அங்கு 2 பேர் ஏறினர். அவர்களிடம் சந்திரன் டிக்கெட் எடுக்கும்படி கேட்டார். அவர்கள் மறுத்தனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த இருவரும் கண்டக்டரை தாக்கினர். இது குறித்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கூத்தியார்குண்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த துரைராஜ் மகன் அரவிந்தன் (22), திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சைந்தன் (31) ஆகியோரை கைது செய்தனர்.
- பஸ்சிலேயே மயங்கி விழுந்தார்.
- பஸ்சை ஓட்டுநர் பல்லடம் அரசு மருத்துவ மனைக்குகொண்டு சென்றார்.
பல்லடம் :
கோவையில் இருந்து 25 பயணிகளுடன் மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் பல்லடம் பஸ் நிலைய த்திற்குள் பயணிக ளை இறக்கிவிட்டு மேலும் சில பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் ஓட்டினார். இந்தநிலையில் பஸ்ஸின் நடத்துனர் சீனி (வயது 51) என்பவருக்கு, திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு பஸ்சி லேயே மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்த பயணிகள் அவரை தாங்கி பிடித்து தண்ணீர் கொடுத்து, அவரை உட்கார வைத்தனர். இதற்குள் பஸ்சை ஓட்டுநர் பல்லடம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அந்த பஸ் மீண்டும் மதுரை நோக்கி புறப்பட்டது. பல்லடத்தில் ஓடும் பஸ்ஸில் நடத்துனர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.