search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver"

    • சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.

    சென்னை:

    மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நாளை நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்த போராட்டத்துக்கு ஆதரவாக ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கத்தினரும் ஒன்று சேர்ந்து மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர்.

    சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    இந்த போராட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்களும் டிரைவர், கண்டக்டர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இதனால் பஸ் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என தெரிகிறது.

    இதையொட்டி சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகர போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், கிளை மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களில் செயல்படும் சில தொழிற் சங்கங்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (16-ந் தேதி) அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

    எனவே போக்குவரத்து டிரைவர் கண்டக்டர்கள், தொழிலாளர்கள் அனை வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் பணிக்கு வரவேண்டும். டிரைவர், கண்டக்டர்களுக்கு 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.

    அவ்வாறு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுமாறு தூண்டிவிடும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த சுற்றறிக்கை அனைத்து பணிமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நோட்டீஸ் போர்டிலும் ஒட்டப்பட்டுள்ளது.

    • பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரீத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • டிரைவர் பரீத்தின் மறைவுக்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள செம்பரக்கல் பகுதியை சேர்ந்தவர் பரீத் (வயது49). இவர் கேரள அரசு போக்குவரத்து கழக தம்பனூர் சென்ட்ரல் பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பஸ்சை ஓட்டிச்சென்றார்.

    கருநாகப்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரீத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பின்பு நெஞ்சுவலி தாங்க முடியாமல் பஸ்சுக்குள்ளேயே சுருண்டு படுத்தார். இதையடுத்து அவர் கருநாகப்பள்ளி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பின்பு மேல்சிகிச்சைக்காக வந்தனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதும், பரீத் தான் ஓட்டிவந்த பஸ்சை கவனமாக மெதுவாக ஓட்டிச்சென்று ரோட்டோரமாக நிறுத்தி விட்டார். இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்து வந்த 30 பயணிகள் தப்பினர்.

    பயணிகளை காப்பாற்றி விட்டு, தனது உயிரை விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டிரைவர் பரீத்தின் மறைவுக்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • புதிதாக பாஸ்புக் வேண்டும் என தனது புகைப்படத்தை கொடுத்து ஏழுமலையின் பெயரில் புதிய பாஸ்புக்கை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் சத்யா நகரில் வசித்து வருபவர் ஏழுமலை. இவர் மாநகரப் பேருந்து பஸ் கண்டக்டராக கே.கே. நகர் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் 24- ந் தேதி அசோக் நகர் பகுதியில் இருந்து கே.கே. நகர் பணிமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக அதே பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வரும் அலெக்சாண்டர் ராஜா என்பவர் ஏழுமலையின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி உள்ளார். அப்போது கே.கே. நகர் பணிமனையின் அருகில் ஏழுமலையின் இருசக்கர வாகனம் விபத்துக்கு உள்ளானது.

    ஏழுமலைக்கு அசோக் நகரில் உள்ள இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. கடந்த 13-ந் தேதி வங்கி கணக்கில் இருந்து 800 ரூபாய் எடுக்கப்பட்டது. அதற்கான குறுஞ்செய்தி தனது செல்போனுக்கு வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை அசோக் நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் விசாரித்தார்.

    அப்போது வேறு ஒரு நபர் ஆதார் எண் மற்றும் ஏ.டி.எம். கார்டை காண்பித்து தனது பாஸ்புக் காணவில்லை என்றும் இதனால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து 800 ரூபாயை எடுத்து கொண்டு சென்றது தெரிய வந்தது. ஏழுமலையின் கை யெழுத்தை அலெக்சாண்டர் ராஜாவே போலியாக போட்டு பணம் கேட்டு உள்ளார். கையெழுத்தில் சந்தேகம் ஏற்படவே வங்கி அதிகாரிகள் அவரை விசாரித்துள்ளனர். நீண்ட காலமாக தனது கையெழுத்து மாறி உள்ளதாகவும் தற்போது தான் நேரடியாக வங்கிக்கு வந்து பணம் எடுப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த ஏழுமலை சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் வங்கி அதிகாரிகளிடம் கேட்டார். அப்போதுதான் டிரைவர் அலெக்சாண்டர் ராஜா தனது பெயரில் போலியாக ஆதார் அட்டையில் புகைப் படத்தை மார்பிங் செய்து வங்கியில் கொடுத்ததும் அதேபோல் தனக்கு பாஸ்புக் இல்லை என்றும் புதிதாக பாஸ்புக் வேண்டும் என தனது புகைப்படத்தை கொடுத்து ஏழுமலையின் பெயரில் புதிய பாஸ்புக்கை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதுமட்டுமின்றி ஏழுமலையின் வங்கிக் கணக்கில் இருந்து 10 லட்ச ரூபாய் தனக்கு கடன் வேண்டுமென இந்தியன் வங்கிக் கிளையில் கேட்டு அதற்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொடுத்து உள்ளார்.

    நேற்று மீண்டும் ஏழுமலைக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இந்தியன் வங்கி மூலம் பத்து லட்ச ரூபாய் கடன் பெற்றுக் கொள்ளலாம் என வந்து உள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

    அதன் பிறகு ஏழுமலை நண்பர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக வங்கிக்கு வந்த அலெக்சாண்டர் ராஜாவை பிடித்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லிப்ட் கேட்டபோது கீழே விழுந்த ஏழுமலையின் மணிபர்சில் இருந்து ஆவணங்களை எடுத்து அலெக்சாண்டர் ராஜா கைவரிசை காட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    • மோதலில் காயமடைந்த தாஸ் மற்றும் பாபு ஆகிய 2 பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • தாராபுரம் பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 8.30 மணி அளவில் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்தநிலையில் அங்குள்ள டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வரும் தாராபுரம் தெற்கு தெருவை சேர்ந்த தாஸ் (வயது 35) என்பவர் கடைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது டீக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சின் டிரைவர் பாபு சாப்பிட்டு விட்டு பஸ்சின் ஜன்னல் வழியாக கை கழுவிய தண்ணீரை ஊற்றியுள்ளார். அந்த தண்ணீர் தாஸ் மீது பட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தாஸ், தண்ணீரை பார்த்து ஊற்ற முடியாதா? என்று டிரைவர் பாபுவிடம் கேட்டுள்ளார். மேலும் டீ கடையில் உள்ள ஜக்கில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து பாபு மீது ஊற்றியுள்ளார். இதனால் 2 பேருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி அடிக்க தொடங்கினர்.

    இதையறிந்து அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மோதலில் காயமடைந்த தாஸ் மற்றும் பாபு ஆகிய 2 பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பஸ்சை எடுக்காமல் அப்படியே நிறுத்தினர். சுமார் அரை மணி நேரம் பஸ்சை எடுக்காமல் போராட்டம் நடத்தியதால் பயணிகள் கடும் சிரமப்பட்டனர். வெளியூர் மற்றும் வேலைக்கு செல்லக்கூடிய பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு டிரைவர்கள் பஸ்சை இயக்கினர். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாராபுரம் பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    • சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
    • கண்டெய்னர் லாரியின் டிரைவரான நெல்லையை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவர் படுகாயம் அடைந்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை 7 மணி அளவில் ஒரு மினி ஆட்டோ வந்து கொண்டிருந்தது. மினி ஆட்டோவை விழுப்புரத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அரக்கோணம் பகுதியை சேர்ந்த சுதர்சன் மற்றும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரகாசம் ஆகியோரும் வந்தனர்.

    சேலம்-சென்னை புறவழிச் சாலையில் வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மினி ஆட்டோ வந்தபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் மினி ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதில் டிரைவர் பிரவீன்குமார், சுதர்சன் மற்றும் பிரகாசம் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் அங்கிருந்த சுங்கச்சாவடி பணியாளர்களுடன் சேர்ந்து கிரேன் எந்திரத்தை பயன்படுத்தி 3 பேர் உடலையும் மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியின் டிரைவரான நெல்லையை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரி சங்கரி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த விபத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மினி ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை.
    • மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள அதானி பெர்த்தில் கண்டெய்னர் லாரியை டிரைவர் குமரேசன் என்பவர் இன்று அதிகாலை ஓட்டி சென்றார். அப்போது அவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, துறைமுக உள்பகுதி கடலில் கவிழ்ந்து தலைக்குப்புற விழுந்தது. உடனடியாக அங்கிருந்த துறைமுக பணியாளர்கள், டிரைவர் குமரேசனை மீட்டனர். காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிவகாசி தண்ணீர் சப்ளை நிறுவனத்தில் வேலை பார்த்த டிரைவர் மயங்கி விழுந்து இறந்தார்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரின் மர்மச்சாவு தொடர் பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள் ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த வர் சத்தியபிரியன் (வயது 17).

    இவர் சிவகாசியில் இயங்கி வரும் தனியார் தண் ணீர் சப்ளை நிறுவனத்தில் வேலை டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வழக்கம்போல் தனது பெற்றோரிடம் கூறி விட்டு வேலைக்கு சென்ற சத்தியபிரியன் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு லாரியில் தண்ணீர் சப்ளை செய்வதற் காக சென்றார். மீண்டும் திரும்பிய நிலையில் திடீரென்று மயங்கி கீேழ விழுந்தார். உடனடியாக அங்கிருந்த–வர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அவரை பரிசோ தித்த டாக்டர்கள் ஏற்கனவே சத்தியபிரியன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து அவரது தந்தை வெயிலப்பன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி சிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரை வரின் மர்மச்சாவு தொடர் பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகராஜ் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை பாட்டை காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 32)டிரைவர். இவர் தனது உறவினருடன் அதே பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த திண்டிவனம் ரேசனைப் பகுதியை சேர்ந்த ராசு திடீரென நாகராஜை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இதில் நாகராஜ் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகராஜ் கொடுத்த புகாரின் ேபரில் ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர், மாணவி தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள எச்சநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சண்முகத்தாய். இவரது மகன் கதிரேசன் (24), டிரைவர். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். தனக்கு வாழ விருப்பமில்லை என்றும், தான் சாகப்போவதாகவும் அடிக்கடி தாயிடம் கூறிவந்தார். சம்பவத்தன்று வெளியே செல்வதற்காக தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் சண்முகத்தாய் வெளியே சென்று விட்டு திரும்பி வந்த போது கதிரேசன் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து சூலக்கரை போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

    சிவகாசி அரசிகொல்லன் தெருவை சேர்ந்தவர் விமலாதேவி.இவரது மகள் கவுசிகா. அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று தோழிக்கு பரிசு பொருள் வாங்குவதற்காக கடைக்கு செல்ல வேண்டும் என கவுசிகா தாயிடம் கூறியுள்ளார். அப்போது அருகில் உள்ள கடையில் மளிகை பொருள் வாங்கி வருமாறு கவுசிகாவிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் கவுசிகா கோபித்துக் கொண்டு மறுத்துவிட்டார். இதனால் விமலாதேவி கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் உள்அறையில் கவுசிகா தூக்கில் தொங்கியபடி இருந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அக்கம் பக்கத்தினர் பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • யாராவது அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரிகை பக்கம் கோட்ட சாதனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா.

    இவரது மகன் பாலாஜி (வயது 35). டிரைவரான இவருக்கு திருமணமாகி ராதா என்ற மனைவியும், விஷ்னு,ஜோதி மூர்த்தி என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவியும் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் பாலாஜி தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் பாலாஜி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வீடு வெளிப்புறம் பூட்டிருந்த நிலையில், உறவினர்கள் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாலாஜி பாதி அழுகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடனே பாலாஜியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை வேறு யாராவது அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • இளம்பெண் வாடகை காரை முன்பதிவு செய்தார். முன்பதிவு செய்த சில நிமிடங்களிலேயே அவரது குழந்தை அழ ஆரம்பித்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 32 வயது மதிப்புள்ள ஒரு இளம்பெண் 6 வயது சிறுமி மற்றும் 9 மாத கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தனது வீட்டிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது மகளின் பள்ளிக்கு சென்றுள்ளார்.

    அங்கு பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் அவர் தனது வீட்டிற்கு புறப்பட முயன்றார். அப்போது அந்த இளம்பெண் வாடகை காரை முன்பதிவு செய்தார். முன்பதிவு செய்த சில நிமிடங்களிலேயே அவரது குழந்தை அழ ஆரம்பித்தது. அப்போது ஒரு ஆட்டோவை அழைத்து புறப்பட தயாரானார்.

    அந்த நேரத்தில் வாடகை கார் டிரைவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு தான் 5 கிலோ மீட்டர் தூரம் காரை ஓட்டி வந்து விட்டதாகவும், விரைவில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்துவிடுவேன் என்று கூறி உள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் சில நிமிடங்கள் காத்திருந்தார். ஆனாலும் கார் வரவில்லை.

    இதையடுத்து அவர் தனது குழந்தைகளுடன் வாடகை ஆட்டோவில் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் வாடகை கார் டிரைவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு வந்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் அந்த இளம்பெண் கார் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

    முன்பதிவு செய்த காரை ரத்து செய்ததால் ஆத்திரம் அடைந்த கார் டிரைவர் அந்த இளம்பெண்ணின் வாட்ஸ் அப்பிற்கு ஆபாச போட்டோ, வீடியோக்களை அனுப்பி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்தனர்.
    • மனைவி ராதாபுஷ்பம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    நெல்லையில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவராக தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த பெத்தநாடார்பட்டி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கார்மேகம் (வயது 47) என்பவர் பணியில் இருந்தார். கண் டக்டராக வண்ணமுத்துக் குமரன் டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருந்தார்.

    இந்த பேருந்து ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, டிரைவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே பஸ்சை ஓரங்கட்டி நிறுத்திய அவர் தொடர்ந்து இயக்க முடியாமல் தவித்தார். இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து கண்டக்டர் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். சற்று தெளிவான நிலையில் இருந்த டிரைவர் கார்மேகன் தொடர்ந்து பஸ்சை இயக்கியவாறு ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் வந்து சேர்ந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் டிக்கெட் எடுத்திருந்த பயணிகள் மட்டும் வேறு பஸ்சில் ஏற்றிவிடப்பட்டனர்.

    பின்னர் டிரைவர் கார் மேகத்தை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு கண்டக்டர் வண்ணமுத்துக்குமரன் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்து வந்தனர். இது பற்றிய தகவல் அவரது மனைவி ராதாபுஷ்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். இதற்கிடையே நேற்று இரவு சிகிச்சை பலனின்றி டிரைவர் கார் மேகம் பரிதாபமாக இறந் தார். உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தைரியமாக பஸ்சை ஓட்டி வந்து பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்ட டிரைவர் சிகிச்சையின்போது உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இறந்த டிரைவருக்கு கார்த்திக் என்ற மகனும், மோனிகா என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து டிரைவரின் மனைவி ராதாபுஷ்பம் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×