என் மலர்tooltip icon

    ஈரோடு

    • நேற்று இரவு சிறுவன் சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
    • சிறுவன் சாய்சரண் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை மருத்துவர்கள் அகற்றினர்.

    ஈரோடு:

    ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணிக்-மகாலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் சாய் சரண் என்ற மகன் இருந்தான்.

    நேற்று இரவு சிறுவன் சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது திடீரென சிறுவன் சாய்சரண் மூச்சு விட சிரமப்பட்டு திணறினான்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாய்சரணின் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவி உடன் சிறுவனை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவனின் மூச்சு குழாயில் வாழைப்பழம் அடைத்திருப்பதாக கூறினார். மேலும் சிறுவனின் நிலைமை மோசமாக உள்ளது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார். இதை அடுத்து சிறுவனை அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதைக் கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். அதன் பின்னர் சிறுவன் சாய்சரண் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை மருத்துவர்கள் அகற்றினர்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அர்ஜுனன் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.

    கோபி:

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று இரவு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நல்லகவுண்டன் பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

    இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்துக்கு கோபி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க தொண்டரான அர்ஜுனன் (43) என்பவரும் வந்திருந்தார். அவர் கூட்டம் நடந்த இடத்தின் அருகே உள்ள கோபி -சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேச்சை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

    அப்போது அர்ஜுனன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அர்ஜுனன் பரிதாபமாக இறந்தார்.

    மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அர்ஜுனன் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இறந்த அர்ஜுனன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் எடப்பாடியில் இருந்து கார் மூலமாக கோபிசெட்டிபாளையம் வந்தார். பின்னர் அவர் நேரடியாக கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அர்ஜுனன் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அர்ஜுனன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மாவட்ட கட்சி சார்பாக ரூ.10 லட்சத்திற்கான வரைவோலையை வழங்கினார். கட்சி தலைமை சார்பாக மேலும் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.

    அப்போது முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
    • அதிமுகவிற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்.

    கோபிச்செட்டிப்பாளையத்திற்கு பிரசாரத்திற்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் கூட்டத்தில், கோபிச்செட்டிப்பாளையத்தில் LED திரையில் வீடியோக்களை காண்பித்து, செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

    அப்போது மக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது கோபி தொகுதி முதன்மை தொகுதியாக மாற நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோபிசெட்டிபாளையமே அதிரும் வகையில் கூட்டம் கூடியுள்ளது. யார் யாரோ கனவு காண்கிறார்கள், அந்த கனவை அனைத்து மக்களும் வெள்ளமாக திறண்டு நொறுக்கிவிட்டீர்கள்.

    50 ஆண்டுகளாக போராடி வந்த அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியது. மாநில நிதியிலேயே அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றினேன்.

    கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு எந்த திட்டமும் செய்யப்படவில்லை.

    டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது ஓடோடி சென்று பார்த்தேன். விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் ஓடோடி சென்று உதவி செய்த இயக்கம் அதிமுக.

    இந்தத் தொகுதியில் ஒருவர் எம்எல்ஏவாக இருந்தார். நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஓட்டு வாங்குவதற்கு உங்களை வந்து அணுகினார். ஆனால் ராஜினாமா செய்வதற்கு உங்களை கேட்டாரா?

    அதிமுகவிற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்.

    அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கான நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஆனால் இந்தத் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ பங்குபெறவில்லை

    அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அவர் காரணம் சொன்னார்.

    ஆனால் இப்போது யார் படத்தை வைத்துக்கொண்டு மாற்றுக் கட்சியில் சேர்ந்தீர்கள்?

    உங்களுக்கு அடையாளம் கொடுத்தது அதிமுக. பதவி கொடுத்தது அதிமுக.

    எம்ஜிஆர் ஆட்சியில் MLA-வாக இருந்தார். ஜெயலலிதா மற்றும் எனது ஆட்சியில் அமைச்சராக இருந்தார். அப்பொதெல்லாம் தூய்மையான ஆட்சி தரவில்லையா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம்.
    • அர்ஜுனன், பிரசார கூட்டத்திற்கு இடையே நின்று கொண்டிருந்தார்.

    ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். இதில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டனர்.

    இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான அர்ஜுனன், பிரசார கூட்டத்திற்கு இடையே நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   

    • எந்தப் படம் சட்டையில் வைத்திருந்தாலும் என் தலைவர் ரசிப்பார்.
    • அ.தி.மு.க. எங்குள்ளது என்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டனர் என தெரிவித்தார்.

    ஈரோடு:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு, த.வெ.க. உயர்மட்ட மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, த.வெ.க.வில் இணைந்த பின் சொந்த ஊரான கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கோபிச்செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்கள் மற்றும் த.வெ.க.வினர் மத்தியில் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

    தமிழ்நாட்டை நாளை ஆளப்போகும் தலைவர் விஜய். விஜய் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

    எந்தப் படம் சட்டையில் வைத்திருந்தாலும் என் தலைவர் ரசிப்பார். எல்லோரையும் அரவணைப்பவர் விஜய்.

    நான் பார்த்த முதல் தலைவர் எம்.ஜி.ஆர், 2-வது தலைவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளே தமிழகத்தை ஆள வேண்டுமா? அல்லது புதிய தலைமுறையினர் ஆள வேண்டுமா?

    எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியாக இருந்ததைபோல் விஜய்க்கும் வழிகாட்டியாக இருப்பேன்.

    காலங்கள் கனிந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் நம்முடைய கூட்டணி வலிமையாக மாறும். நம்மோடு இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் வருவார்கள்.

    அ.தி.மு.க. எங்குள்ளது என்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டனர். எடப்பாடி பழனிசாமி ஒரு தேர்தல் வெற்றியாவது பெற்றிருக்கிறாரா? என்றார்.

    • கவர்னர் ஆர்.என்.ரவி திமிருடன் பேசுகிறார், அவரது திமிரை அடக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டு மாணவர்கள் ஆங்கிலம் படிப்பதால் கவர்னருக்கு ஏன் வயிறு எரிகிறது.

    ஈரோடு:

    மக்களுக்கும், திமுக அரசுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை கெடுக்க சதி செய்வதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசியதாவது:-

    * பா.ஜ.க. ஆட்சியில் தான் பஹல்காம் தாக்குதல், செங்கோட்டை தாக்குதல் நடந்துள்ளது.

    * பயங்கரவாத தாக்குதலை தடுக்காத பா.ஜ.க. ஆட்சியை கவர்னர் புகழ்ந்து பேசுகிறார்.

    * கவர்னர் ஆர்.என்.ரவி திமிருடன் பேசுகிறார், அவரது திமிரை அடக்க வேண்டும்.

    * தமிழ்நாட்டு மாணவர்கள் ஆங்கிலம் படிப்பதால் கவர்னருக்கு ஏன் வயிறு எரிகிறது.

    * தமிழ் மொழிப்பற்று குறித்து எங்களுக்கு கவர்னர் பாடம் எடுக்க வேண்டாம்.

    * தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதாக கவர்னர் அவதூறு பரப்புகிறார்.

    * மக்களுக்கும், திமுக அரசுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை கெடுக்க சதி செய்கிறார்கள்.

    * கவர்னர் ஆர்.என்.ரவி இப்படியே தொடர்ந்து பேசினால் தான் எங்களுக்கு வேலை ஈஸி என்றார். 

    • தமிழக விவசாயிகளுக்காக பிரதமரை சந்திக்காதது ஏன்?
    • எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல...

    ஈரோடு:

    ஈரோட்டில் அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி தமிழக விவசாயிகளுக்காக பிரதமரை சந்திக்காதது ஏன்?

    * கார் மாறி மாறிச்சென்று பிரதமரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி தமிழக விவசாயிகளுக்காக பிரதமரிடம் கோரிக்கை வைக்காதது ஏன்?

    * எடப்பாடி பழனிசாமி மேற்கு மண்டலத்திற்கு செய்த பச்சை துரோகங்களில் Latest Addition கோவை மெட்ரோ ரெயில் திட்டம் ரத்தானது.

    * எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, உழவர்களுக்கு துரோகம் செய்யும் துரோகி.

    * முதுகெலும்பை இழந்து கர்ச்சீப்பை முகத்தில்வைத்து சுற்றுவதால் தான் எடப்பாடி பழனிசாமிக்கு பத்து தோல்வி பழனிசாமி பெயரை கொடுத்துள்ளது என்றார்.

    • வரி வசூலிப்பதற்கு மட்டும் தமிழ்நாடு, நிதி ஒதுக்கும்போது பட்டை நாமம் போடுகிறது பா.ஜ.க.
    • SIR மூலம் மக்களின் வாக்குரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோட்டில் அரசு விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    * கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

    * தமிழகத்திற்கான திட்டங்கள் நிராகரிக்கும் போது மட்டும் மத்திய அரசு கம்பி கட்டும் கதை சொல்கிறது.

    * ஒவ்வொரு முறை பிரதமரை சந்திக்கும்போதும் புதிய ரெயில்பாதை திட்டங்கள் குறித்த கோரிக்கையை முன்வைப்பேன்.

    * தி.மு.க. அரசு எதைக்கேட்டாலும் தரக்கூடாது என மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்துவிட்டது.

    * வரி வசூலிப்பதற்கு மட்டும் தமிழ்நாடு, நிதி ஒதுக்கும்போது பட்டை நாமம் போடுகிறது பா.ஜ.க.

    * SIR மூலம் மக்களின் வாக்குரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள்.

    * வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருப்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ளுங்கள் அதுதான் மிகவும் முக்கியம் என்றார். 

    • தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்காது.
    • 400 திருக்கோவில்களில் 500-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் ரூ.605 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன்பின் அவர் பேசியதாவது:-

    * தந்தை பெரியாரை தந்த ஈரோட்டிற்கு வந்ததில் திராவிட இயக்கத்தின் முதல் தொண்டனாக பெருமைக்கொள்கிறேன்.

    * தந்தை பெரியார் இல்லை என்றால் திராவிட இயக்கங்கள் இல்லை.

    * தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்காது.

    * ஜவுளி, மஞ்சள், கைத்தறி ஆகியவற்றுக்கு புகழ்பெற்ற நகரம் ஈரோடு.

    * டிசம்பர் 10-ந்தேதிக்குள் ஈரோட்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறும்.

    * ஈரோடு மண்டலத்தில் 400 திருக்கோவில்களில் 500-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    * மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் ரூ.1000 வழங்கப்படும்.

    * ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.9,327 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் 68.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    * கோடிசெட்டிப்பாளையம் நகராட்சிக்கு ரூ.4.50 கோடியில் அலுவலக கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.

    * புஞ்சை புளியம்பட்டி, கோபிசெட்டிப்பாளையம் நகராட்சிகளுக்கு புதிய அலுவலகங்கள் கட்டித்தரப்படும்.

    * சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சட்ட சிக்கல்களை தீர்க்க வல்லுநர் குழு அமைக்கப்ழுடும்.

    * ஈரோடு மாவட்டத்தில் 90 கிராம விவசாயிகளின் திட்ட அனுமதி பட்டாக்கள் நிரந்தர பட்டாக்களாக மாற்றப்படும்.

    * தோணிமடுவுவில் புதிய தடுப்பணை கட்டப்படும்.

    * பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என்றார். 

    • சொன்னால் சொன்னதை செய்வேன் என்பதற்கு சாட்சி தான் பொல்லான் சிலை.
    • என்னுடைய சார்பில் அருந்ததியினர் மசோதாவை அறிமுகப்படுத்த கலைஞர் கேட்டுக் கொண்டார்.

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * மாவீரன் பொல்லான் சிலையை திறந்து வைத்ததில் பெருமையும் வீரமும் அடைகிறேன்.

    * சொன்னால் சொன்னதை செய்பவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

    * சொன்னால் சொன்னதை செய்வேன் என்பதற்கு சாட்சி தான் பொல்லான் சிலை.

    * தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக இருந்தவர் மாவீரன் பொல்லான்.

    * அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டு சட்டம், மக்களுக்கு ஒளிவிளக்காக திகழ்கிறது.

    * அருந்ததியினரில் 3,944 மாணவர்கள் பொறியியலும், 193 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கிறார்கள்.

    * என்னுடைய சார்பில் அருந்ததியினர் மசோதாவை அறிமுகப்படுத்த கலைஞர் கேட்டுக் கொண்டார்.

    * ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பில் என்னுடைய பங்கு இருந்ததை எண்ணி பெருமையடைகிறேன்.

    * அருந்ததியினர் மக்களுக்கு தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    * கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கரூரில் அருந்ததியின மாணவர்களுக்கு 26 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

    * தி.மு.க. அரசின் சட்டம் எப்போதும் வெற்றியை பெறுவது தான் வரலாறு என பாராட்டு கிடைத்துள்ளது.

    * அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் உண்மையான வளர்ச்சி.

    * எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசின் லட்சியத்தை நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடருவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    • இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோபி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிப்பதாக கூறி செங்கோட்டையன் தெரிவித்தார். இதனால் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    இதனிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இது குறித்து செங்கோட்டையன் தெரிவிக்கையில், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பாக செங்கோட்டையன் கோர்ட்டில் வழக்கு தொடருவதாக தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் கட்சியில் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல் பரவியது. அதாவது வருகிற 27-ந்தேதி நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இது உண்மையா? அல்லது வதந்தியா? என தெரியவில்லை. எனினும் இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜவுளி வணிக வளாகத்தில் உள்ள 240 கடைகளை அடைத்து வியாபாரிகள் வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜவுளி வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் ஈரோடு கனி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சார்பில் 240 கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    வணிக வளாகத்தில் முகப்பு வாயிலை அவலப்படுத்தி தரவேண்டும். 2022-23 ஆம் ஆண்டில் கட்டிட பயன்பாட்டிற்கு முன்பே வசூலித்த பிப்ரவரி, மார்ச் மாத வாடகை தொகையை கழித்து தொடர்ந்து வாடகை செலுத்த வகை செய்ய வேண்டும்.

    ஜவுளி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் வாடகையை குறைத்து தர வேண்டும். வணிக வளாகத்திற்கு பொருட்கள் வாங்க வரும் வியாபாரிகள், வாடிக்கையாளர்களிடம் வளாகத்தின் மேல் பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது.

    வணிக வளாக பகுதியை சுற்றி வியாபாரிகளை பாதிக்கும் வகையில் எந்தவித சாலையோர தற்காலிக கடைகளை நடத்த அனுமதிக்க கூடாது. வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு போதுமான பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    வணிக வளாக உட்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் போதுமான மின் விளக்குகள் அமைத்தும், கழிவறைகளை சரியான முறையில் பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்ள நிரந்தரமாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் போன்ற 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜவுளி வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

    இது தொடர்பாக பலமுறை அதிகாரிகள் சந்தித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று ஜவுளி வணிக வளாகத்தில் உள்ள 240 கடைகளை அடைத்து வியாபாரிகள் வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க மாநகர செயலாளர் சுப்ரமணியம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜவுளி வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது உங்களது 7 கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது வியாபாரிகள் இன்னும் ஒரு வாரத்தில் 7 கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம், என்றனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    ×