என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election campaign"

    • தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
    • 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக திட்டவட்டம்.

    வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் நண்பகல் 12 முதல் 3 மணிவரை தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.

    நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் QR Code உடன் நுழைவுச்சீட்டு பெற்ற 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக திட்டவட்டம்.

    தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு கர்ப்பிணி, முதியோர், மாணவ- மாணவியர் உள்ளிட்டோர் கட்டாயமாக வரவேண்டாம் என தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி கொல்லமங்கலம் பகுதியில் நாளை நடைபெற உள்ளது.
    • QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

    வேலூரில் நாளை விஜய் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 23ஆம் தேதி) திங்கள்கிழமை, வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லமங்கலம் பகுதியில் மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற உள்ளது.

    காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

    QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.

    பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வகையிலான வாகனங்களிலோ பின்தொடர்வதை அறவே தவிர்த்திட வேண்டும்.

    காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஊடகவியலாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    நேரலை இணைப்பு (Live Feed) வழங்க உள்ளதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் மற்றும் தனிநபர்களின் ட்ரோன்களுக்கு அனுமதி இல்லை.

    QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள கழக நிர்வாகிகளுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    குறிப்பாக, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நிர்வாகிகளின் வசதிக்காக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

    அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தனியாரிடம் 6 ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • நாளை எடப்பாடி பழனிசாமி பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அதன்படி அ.தி.மு.க வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழக முழுவதும் ஒவ்வொரு தொகுதி வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரசார கூட்டத்தில் தி.மு.க.வை கடுமையாக சாடி அ.தி.மு.க சாதனைகளை எடுத்துரைத்து வருகிறார்.

    இதுவரை தமிழக முழுவதும் 181 தொகுதிகளில் அவர் பிரசாரம் முடித்துள்ளார். இந்நிலையில் 182-வது தொகுதியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரியப்பம்பாளையம் பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதற்காக அந்தப் பகுதியில் தனியாரிடம் 6 ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பணிகள் அனைத்தும் முடிவடைந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை எடப்பாடி பழனிசாமி பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் அவர் பங்கேற்கும் போது அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என பேசி வருகிறார். இதனால் நாளை நடைபெறும் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டங்கள் குறித்து பேச வாய்ப்பு இருப்பதால் இந்த கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேர்தல் பிரசாரத்துக்கான வாகனங்களை பல்வேறு அதிநவீன வசதிகளுடன் பிரத்தியேகமாக வடிவமைத்து வருகிறது.
    • சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார வாகனங்களுக்கான ஆர்டர்களும் பெறப்பட்டு உள்ளன.

    தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

    இதையொட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் மும்ரமாக ஈடுபட்டு உள்ளன. அதன்பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருகின்றனர்.

    தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 12,582 ஊராட்சிகள் மற்றும் 16 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. எனவே அரசியல் கட்சி தலைவர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், கொள்கை பரப்பு செயலாளர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் மாநில அளவிலான அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சுமார் 30-40 நாட்களுக்கு இந்த பிரசாரம் நடைபெற உள்ளது. மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அதிகபட்சம் 2 ஆயிரம் கி.மீ. வரை வாகனங்களில் சென்று தேர்தல் பிரசாரம் செய்யும் நிலை உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அதற்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

    கோவை சிவானந்தா காலனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தேர்தல் பிரசாரத்துக்கான வாகனங்களை பல்வேறு அதிநவீன வசதிகளுடன் பிரத்தியேகமாக வடிவமைத்து வருகிறது. இதற்கான பணிகளில் அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் மும்முரமாக ஈடுட்டு வருகின்றனர். மேலும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார வாகனங்களுக்கான ஆர்டர்களும் பெறப்பட்டு உள்ளன.

    ஒரு பிரசார வாகனம் தயாரிக்க 20 முதல் 40 நாட்கள் வரை ஆகும் என்பதால் இப்போதே பல்வேறு கட்சிகள் சார்பில் வாகனங்கள் முன்கூட்டியே கொண்டுவந்து விடப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள் அங்கு பிரிக்கப்பட்டு தேர்தல் பிரசாரத்திற்கு ஏற்ப பிரத்தியேக வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் இந்த வாகனத்தின் உட்புற கட்டமைப்புகள், தலைவர்கள் அமரும் வசதி, ஹைட்ராலிக் ஏணி மூலம் வாகனத்தின் மேல் வந்து உரையாற்றும் வசதி, வாகனத்தில் இருந்தபடி வெளியில் உள்ள கூட்டங்களை கண்காணிப்பதற்காக அகன்ற டி.வி.யுடன் இணைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகள் செய்யப்படுகின்றன.

    மேலும் அந்த வாகனத்திற்குள் தலைவருடன் 3-5 நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் அமர வசதியாக குஷன் இருக்கைகள், படுக்கை வசதி, போன்றவையும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதேபோல ஒருசில பிரசார வாகனங்களில் சமைப்பதற்கான பேன்ட்ரி யார்டு மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்படுகின்றன. தேர்தல் பிரசார வாகனத்திற்கு உள்ளேயே "பேக்ஸ், பிரிண்டர் எந்திர வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

    தேர்தல் பிரசார வாகனங்களில் தலைவர்கள், நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதால் குண்டும் குழியுமான ரோடுகளில் "அலுங்காமல் குலுங்காமல்" செல்லும் வகையில் "ஏர் சஸ்பென்ஷன்" வசதி செய்யப்படுகிறது.

    அதேபோல பெண் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகைகள் பயன்படுத்துவதற்கான பிரசார வாகனங்களும் மும்முரமாக தயாராகின்றன. இந்த வாகனங்களில் கழிப்பறை, உடை அலங்கார பகுதி போன்ற சிறப்பு வசதிகளை செய்து தர வேண்டியது உள்ளது. எனவே ஆர்டர் செய்யும்போதே பெண் தலைவர்களுக்கான வாகனமா என்று கேட்டு அதற்கேற்ப சொகுசு வசதியுடன் பிரசார வாகன உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.

    தேர்தல் சுற்றுப்பயணத்தில் பிரசார வாகனங்கள் மிகவும் முக்கியமானவை என்று தனியார் நிறுவன உரிமையாளர் ரியாஸ் கூறுகிறார், இவர் மேற்கண்ட பணிகளில் கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    எனது தந்தை காலத்தில் தொடங்கி தற்போது வரை அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் நடிகர்களுக்கு தேர்தல் பிரசார வாகனங்களை செய்து வழங்கி வருகிறோம். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும் தேர்தல் பிரசார வாகனங்களை தயார் செய்து கொடுத்து வருகிறோம்.

    ஒவ்வொரு கட்சிகளும் அவரவர் வசதிக்கு ஏற்ப வாகனத்தில் வசதிகளை செய்து தர கூறுவார்கள். அவற்றை சரியாக செய்து கொடுக்க வேண்டும். பிரசார வாகனத்தில் தலைவர்கள் மிகவும் எதிர்பார்ப்பது, சாலையில் செல்லும்போது வாகனம் குலுங்க கூடாது என்பதுதான். ஏனெனில் சில தலைவர்கள் 2 ஆயிரம் கிலோமீட்டர் வரை சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டியது உள்ளது.

    மேலும் அந்த வாகனத்தில் உள்ள ஆடியோ வசதி மற்றும் போகஸ் விளக்குகள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் கேமிரா வசதிகள் மற்றும் வாகனம் பழுது ஏற்படாமல் எப்போதும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். பிரசார வாகனத்திற்கு உள்ளே இருபுறமும், ஏ.சி. வசதி செய்து கொடுப்போம்.

    நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால் வாகனங்களை மிகச் சிறப்பாக தயார் செய்து கொடுத்து வருகிறோம். அதேபோல தற்போது "கேரவன்கள் பயன்பாடு அதிகரித்து உள்ளது. சுற்றுலா செல்பவர்கள், வசதியானவர்கள் வெளியில் செல்வதற்கு கேரவன் போன்ற வசதி நிறைந்த வாகனங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதனால் அனைத்து வசதிகளுடன கூடிய சொகுசு வாகனங்களின் தேவை தற்போது பொதுவாகவே அதிகரித்து வருகிறது.

    பிரசார வாகனம் தயாரானதும் அந்தந்த கட்சி தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள் மற்றும் கூட்டணி கட்சி கொடிகள், சட்டசபை தேர்தலுக்கு அந்த கட்சி அறிவித்திருக்கும் கொள்கை லோகோ ஆகியவையும் பிரசார வாகனத்தில் பெயிண்டிங் செய்யப்பட்டு இறுதி வடிவம் பெற்று சம்பந்தப்பட்ட அரசியல் பிரபலங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என்றார். 

    • 5 ஆண்டு கால சாதனைகளையும் மக்களிடம் எடுத்து சொல்ல பரப்புரை பயணம் தொடங்க உள்ளோம்.
    • 4 துறைகளில் பல சீரிய திட்டங்களை வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தமிழ்நாட்டில் அனைவரும் கல்வி கற்க வேண்டுமென முதலமைச்சர் பல திட்டங்களை அறிவித்துள்ளார் என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அனைவரும் கல்வி கற்க வேண்டுமென முதலமைச்சர் பல திட்டங்களை அறிவித்துள்ளார்.

    கல்வி, மருத்துவம், உணவு பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகிய 4 துறைகளில் பல சீரிய திட்டங்களை வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் நாளை முதல் திராவிட முன்னேற்றக் கழகம் பிரச்சாரத்தை தொடங்குகிறது.

    திமுக அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களையும், 5 ஆண்டு கால சாதனைகளையும் மக்களிடம் எடுத்து சொல்ல பரப்புரை பயணம் தொடங்க உள்ளோம்.

    திமுக மீது சொல்லப்படும் குற்றங்களை பொதுமக்களிடம் விளக்க தமிழ்நாடு தலைகுனியாது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் மற்றும் துரோகம் செய்யும் அரசாக மத்திய அரசு உள்ளது. தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களையும் மத்திய பாஜக அரசு வழங்கவில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • பீகார் தேர்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ந் தேதியும், 11-ந் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, அசாதுதின் ஒவைசி எம்.பி.யின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன.

    பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 6-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது.

    பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி வினோத்சிங் குஞ்சியால் தெரிவித்தார்.

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்நிலையில், 2ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை (11ம் தேதி) நடைபெறுகிறது.

    இதனால், கட்சி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர்.

    பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர்.

    மீதிமுள்ள 122 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

    வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    • ராஷ்டீரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம்.
    • காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பீகாரில் பிரசாரம் செய்தார்.

    பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் ஐக்கிய ஜனதாதளம்- பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், எதிர்கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பீகாரில் பிரசாரம் செய்தார். பெகுசராய் பகுதியில் அவர் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக ஓட்டு சேகரித்தார்.

    முன்னதாக பாட்னா விமான நிலையத்தில் பிரியங்கா காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    ஒரு கோடி வேலை வாய்ப்புகளை வழங்குவதாக பா.ஜ.க கூட்டணி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இதுவரை அவர்கள் அதை வழங்காதது ஏன்? இப்போது அதைப்பற்றி கூறுவது ஏன்?

    பீகாரில் மெகா கூட்டணி ஏன் ஆட்சி அமைக்காது. நிச்சயமாக நாங்கள் ஆட்சி அமைப்போம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டது.
    • முதலில் ராகுல் காந்தி முசாபர்பூரில் உள்ள சகரா தொகுதியில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந்தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரியணையில் அமரப்போவது யார்? என்பது நவம்பர் 14-ந் தேதி தெரியும்.

    பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு)- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர களப் பணியாற்றி வருகிறது.

    நிதிஷ் குமாரிடம் இருந்து ஆட்சியை இந்த முறை கைப்பற்றி விடவேண்டும் என்ற வேட்கையில் எதிர்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி (ராஷ்டிரிய ஜனதா தளம்)-காங்கிரசின் மகா பந்தன் கூட்டணி இருக்கிறது.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். ஆனால் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பிரசாரத்தை இன்னும் தொடங்கவில்லை.

    தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டது. கூட்டணி கட்சியினரே 12 தொகுதிகளில் மோதும் நிலை உருவாகியுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக ராகுல் காந்திக்கும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல் வெளியானது. முதல்-மந்திரி வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை.

    இந்த நிலையில் ராகுல் காந்தி பீகாரில் நாளை தேர்தல் பிரசாரம் செய்கிறார். முசாபர்பூர், தர்பங்கா ஆகிய 2 இடங்களில் அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.

    முதலில் ராகுல் காந்தி முசாபர்பூரில் உள்ள சகரா தொகுதியில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    ராகுல் காந்தி பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்கிறார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ரத்தோர் தெரிவித்தார்.

    பின்னர் ராகுல் காந்தி தர்பாங்காவில் பிரசாரம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    • மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பில் இந்த நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
    • தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்காக மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மதுரை:

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. காங்கிரஸ், த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் சென்று ஆதரவு திரட்டும் பணியில் மும்முரம் காட்டி வருகிறது.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் தீவிர சுற்றுப்பயணம் செய்து அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் தி.மு.க.வுக்கும் ஆதரவு திரட்டி வருகிறார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதி வாரியாக "தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம்" என்கிற பிரசார பயணத்தை நடத்தி வருகிறார்.

    த.வெ.க. தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வந்த நிலையில் கரூர் சம்பவத்தை அடுத்து அவரது சுற்றுப்பயணம் சில வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் தமிழகத்தில் மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களையும் மாநில அரசின் குறைபாடுகளையும், தி.மு.க.வுக்கு எதிரான விமர்சனங்களையும் முன்னெடுக்கும் வகையில் தேர்தல் பணியை தொடங்கி உள்ளன.

    பா.ஜ.க. மதுரையில் நாளை மறுநாள் 12-ந்தேதி முதல் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" என்ற பெயரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளது. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த பிரசார சுற்றுப்பயணத்தை மதுரையில் இருந்து தொடங்க திட்டமிட்டு உள்ளார்.

    இதற்காக மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பில் இந்த நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். அங்கு தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்காக மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த முதல் கட்ட பிரசார சுற்றுப்பயண தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பங்கேற்பதாக இருந்த நிலையில் அவரது வருகை திடீரென ரத்து செய்யப்பட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடக்க விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வின் பிரசார சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

    அந்த வகையில், பா.ஜ.க. பிரசார பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் பங்கேற்க இருக்கிறார்கள். இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாநகர், மதுரை புறநகர், மதுரை புறநகர் மேற்கு, மதுரை புறநகர் மேற்கு மற்றும் அண்டை மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து 12-ந் தேதி நடைபெறும் பா.ஜ.க. பிரசார பயண தொடக்க விழாவில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க.வின் முக்கிய கூட்டணி கட்சியான பா.ஜ.க. பிரசார பயணத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சியினரும் பங்கேற்க ஆர்வம் காட்டி வருவதால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • எல்லோருக்கும் 1,000 ரூபாய் தருவதில்லை, கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.
    • நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பிரசாரமாக திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரசார வாகனத்தில் நின்று உரையாற்றினார்.

    அப்போது, விஜய் ஆளும் தி.மு.க. அரசு மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.-வை சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.

    பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ஓசி, ஓசி என சொல்லிக் காட்டுகிறார்கள்.

    எல்லோருக்கும் 1,000 ரூபாய் தருவதில்லை, கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.

    கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொடுக்கும்; பெண்கள் பாதுகாப்பில், சட்ட பிரச்னைகளில் No Compromise.

    நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்.

    திருச்சியில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்காமல் மணல் அள்ளுவதில் தி.மு.க. அரசு நன்றாக காசு பார்க்கின்றது

    அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு கொடுக்கப்படும் என தி.மு.க சொன்னது செய்ததா? இப்படியே நம்ம கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியது தான். தி.மு.க-வினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை

    டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு எனும் வாக்குறுதி என்ன ஆனது? மாணவர்களின் கல்வி கடன் ரத்து எனும் வாக்குறுதி என்ன ஆனது?

    அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் எனும் வாக்குறுதி என்ன ஆனது? மின்கட்டண கணக்கீடு மாதம் தோறும் எடுப்பதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓய்வெடுக்கும் வசதி, நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வேனில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
    • விஜய்யின் சுற்றுப் பயண திட்டங்களை முக்கிய நிர்வாகிகள் தயார் செய்து வருகிறார்கள்.

    மதுரை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில் அடுத்த கட்டமாக தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தயாராகி வருகிறார். விஜய் பிரசாரம் செய்வதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பிரசார வேன் பஞ்சாப் மாநிலத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஓய்வெடுக்கும் வசதி, நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வேனில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேனுக்குள் லிப்ட் வசதியும் உள்ளது.

    பிரசாரத்தின் போது மக்கள் மத்தியில் பேசவும், பொது மக்களை சந்திக்கவும் இந்த லிப்ட் வழியாக வேனின் மேல் பகுதிக்கு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரசார வேன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) விஜய் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரசாரத்தை அவர் திருச்சியில் இருந்து தொடங்க உள்ளார். இதை உறுதிப்படுத்திய திருச்சி நிர்வாகிகள் பிரமாண்டமான ஏற்பாடுகளுக்கு தயாராகி வருகிறார்கள்.

    விஜய்யின் சுற்றுப் பயண திட்டங்களை முக்கிய நிர்வாகிகள் தயார் செய்து வருகிறார்கள். 234 தொகுதிகளையும் உள்ளடக்கி சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும்படி விஜய் கூறி இருக்கிறார். அதற்கு ஏற்ப பயண திட்டங்கள் தயாராகி வருகிறது.

    • பல்வேறு அமைப்பு சார்ந்த பிரதிநிதிகளை சந்தித்து உரையாட உள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி விழாக்கோலம் பூண்டுள்ளது.

    திருச்சி:

    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சி பயணத்தை கடந்த மாதம் 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார்.

    பின்னர் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 25-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகிய மூன்று நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.

    நாளை திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே மாலை 4 மணிக்கு திறந்த வேனில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    பின்னர் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் மாலை 5.30 மணிக்கும், லால்குடி சட்டமன்ற தொகுதியில் லால்குடியில் இரவு 7:00 மணிக்கும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    நாளை மறுநாள் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணச்சநல்லூர் கடை வீதியில் மாலை 4:00 மணிக்கும், துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் பேருந்து நிலையம் அருகாமையில் மாலை 5.30 மணிக்கும்,

    முசிறி சட்டமன்ற தொகுதியில் முசிறி கைகாட்டி அருகாமையில் இரவு 7 மணிக்கும் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன் தொடர்ச்சியாக வருகிற 25-ந் தேதி திங்கட்கிழமை மணப்பாறையில் மாலை 4 மணிக்கும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி புத்தூர் நான்கு ரோட்டில் மாலை 5.30 மணிக்கும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் முன்பு இரவு 7 மணிக்கும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி விழாக்கோலம் பூண்டுள்ளது.

    அவரை வரவேற்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள் மற்றும் அலங்கா ரவளைவுகள் கொடி தோரணங்கள் கட்டி வருகின்றனர்.

    இந்த மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்தின் போது கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு சார்ந்த பிரதிநிதிகளை சந்தித்து உரையாட உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் 9 இடங்களிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், வடக்கு மாவட்ட செயலாளர் மு. பரஞ்ஜோதி, மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    முன்னதாக நாளை பிற்பகல் திருச்சி வருகை தரும் எடப்பாடி பழனிசாமி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகாமையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஓய்வெடுக்கிறார்

    மூன்று நாட்களும் அதே விடுதியில் தங்கி இருந்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

    ×