search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Priyanka Gandhi"

    • விவசாயிகள், பெண்கள், இளைஞர்களின் பிரச்சனைகளை பிரதமர் கண்டுகொள்ளவில்லை.
    • இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார் பிரியங்கா காந்தி.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் சகாரன்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார்.

    அட்டூழியங்களுக்கும் அநீதிக்கும் எதிராக மக்கள் நிற்கிறார்கள். இதற்கு இந்த மாபெரும் கூட்டமே சான்று. தேர்தல் பத்திரம் ஒரு வெளிப்படையான திட்டம் என பிரதமர் மோடி கூறுகிறார். பிறகு ஏன் நன்கொடையாளர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டது? விவசாயிகள், பெண்கள், இளைஞர்களின் பிரச்சனைகளை பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஊழல் செய்யாமல் தேர்தல் நடத்தினால் பா.ஜ.க. 180க்கும் குறைவான தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என கூறினார்.

    • வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தனது தொகுதியில் ரோடு-ஷோ சென்று ஆதரவு திரட்டினார்.
    • பிரியங்கா காந்தி பிரசாரம் செய்யும் போது, ராகுல் காந்தியும் அவருடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 20 தொகுதிகளிலும் மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    பெரும்பாலான தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவுகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் 8 நாட்களே இருப்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி போட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சி இருந்துவரும் நிலையில், கேரளாவில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதனால் அங்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலில் எதிரெதிராக இருந்து மல்லுக்கட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    கேரளாவில் வயநாடு, திருவனந்தபுரம், அட்டிங்கல், பத்தினம்திட்டா, மாவேலிக்கரை, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், சாலக்குடி, ஆலத்தூர், பாலக்காடு, கோழிக்கோடு, வடகரா, கண்ணூர், காசர்கோடு ஆகிய 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    அந்த தொகுதிகள் மட்டுமின்றி, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தனது தொகுதியில் ரோடு-ஷோ சென்று ஆதரவு திரட்டினார். பின்பு அவர் தேர்தல் பிரசாரத்தை நேற்று மீண்டும் தொடங்கினார்.

    அவர் நேற்று வயநாட்டில் ரோடு-ஷோ சென்றது மட்டுமின்றி, கோழிக்கோடு கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார். ராகுல் காந்தி கேரளாவில் தொடர்ந்து ஒரு வாரம் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    அவர் வயநாடு தொகுதியில் இன்று 2-வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். மற்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் ஆதரவு திரட்டுகிறார்.

    இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரியங்கா காந்தி வருகிற 20-ந்தேதி கேரளா வருகிறார். அவர் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, சாலக்குடி ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பிரியங்கா காந்தி பிரசாரம் செய்யும் போது, ராகுல் காந்தியும் அவருடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரியங்கா காந்தியும் கேரளா வர உள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • கடந்த 75 ஆண்டுகளாக நாட்டில் எந்தப் பணியும் செய்யவில்லை என்கின்றனர்.
    • இன்னும் எத்தனை நாட்கள் காங்கிரசை விமர்சனம் செய்வீர்கள் என்றார் பிரியங்கா.

    டேராடூன்:

    உத்தரகான்ட் மாநிலம் ராம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இங்குள்ள ராம் நகருடன் எங்கள் குடும்பத்துக்கு நீண்ட தொடர்பு உள்ளது.

    காங்கிரசை இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் விமர்சனம் செய்வீர்கள்? கடந்த 10 ஆண்டாக காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லை.

    10 ஆண்டாக முழு பெரும்பான்மையுடன் உள்ள பா.ஜ.க. இம்முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என கூறுகிறது.

    கடந்த 75 ஆண்டுகளாக நாட்டில் எந்தப் பணியும் செய்யவில்லை என்கின்றனர். அப்படி எதுவும் செய்யவில்லை என்றால் ஐஐடி, ஐஐஎம் மற்றும் எய்ம்ஸ் ஆகியவை எப்படி வந்து இருக்கும்? சந்திரயான் விண்கலம் விண்ணில் இறங்கி சாதனை படைத்துள்ளது.

    முதல் பிரதமர் நேரு கட்டமைக்கவில்லை என்றால் இது எப்படி சாத்தியம் ஆகியிருக்கும்?

    இமாசலப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி தேவ பூமி என வர்ணித்தார். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, சில மாதங்களுக்குப் பிறகு ஒரு பேரழிவு ஏற்பட்டபோது, மாநில மக்களுக்கு நிவாரணமாக ஒரு பைசா கூட மோடி அரசு வழங்கவில்லை. அனைத்து நிவாரணங்களும் மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து வழங்கியது என தெரிவித்தார்.

    • காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி வருகிறார்.
    • பிரியங்கா கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்ட விரும்பியதால் அங்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. தலைவர்களும் முற்றுகையிட்டு வருகிறார்கள்.

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி வருகிறார். நெல்லை மற்றும் கோவையில் அவர் பிரசாரம் செய்கிறார்.

    அதை தொடர்ந்து வருகிற 15-ந் தேதி பிரியங்கா காந்தி தமிழகம் வருகிறார். சேலம் பகுதியில் அவரது பிரசாரத்துக்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரியங்கா கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்ட விரும்பியதால் அங்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    விமானத்தில் 15-ந்தேதி திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கரூர் செல்கிறார். கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் ரோடு ஷோ செய்கிறார். இதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள்.

    கரூர் பிரசாரத்தை முடித்துவிட்டு திருச்சி திரும்பும் பிரியங்கா அங்கிருந்து வேறு மாநில பிரசாரத்துக்கு செல்வதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    • ராகுல் காந்தி ஒரே நாளில் 3 இடங்களில் பிரசார கூட்டங்களில் பேசும் வகையில் பயண திட்டம் தயாரித்துள்ளனர்.
    • அடுத்த வார இறுதியில் இருந்து ஒவ்வொருவராக வர இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகிய மூவரும் வர இருப்பதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. அடுத்த வார இறுதியில் இருந்து ஒவ்வொருவராக வர இருக்கிறார்கள்.

    ராகுல் காந்தி ஒரே நாளில் 3 இடங்களில் பிரசார கூட்டங்களில் பேசும் வகையில் பயண திட்டம் தயாரித்துள்ளனர். ராகுல் செல்ல முடியாத இடங்களுக்கு பிரியங்காவும், அதேபோல் கார்கேவும் செல்வார்கள். தமிழகம் முழுவதும் இவர்கள் செல்லும் வகையில் பயண திட்டங்களை தயார் செய்து டெல்லி தலைமைக்கு அனுப்பி இருக்கிறார்கள். தலைவர்கள் வருகைக்கான தேதி உறுதியானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    • அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது.
    • இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மீட்கும் முக்கிய முகமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கருதப்பட்டார்.

    ஆனால் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரியங்காவின் செல்வாக்கு உத்தரபிரதே சத்தில் குறைய தொடங்கியது.

    காங்கிரசை தூக்கி நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் அவருக்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. அதோடு உத்தரபிரதேசம் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பும் அளிக்கப்பட்டது. எனினும் அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது.

    சோனியா காந்தியால் மட்டும் தனது ரேபரேலி தொகுதியை தக்க வைக்க முடிந்தது. இந்த நிலையில் பிரியங்கா மீண்டும் உத்தர பிரதேசம் அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளார். இந்த முறை அவரை ரேபரேலியில் களம் இறக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது.

    கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ரேபரேலி தொகுதி எம்.பி.யாக இருந்த சோனியா, தற்போது பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாகிவிட்டார். இத னால் பிரியங்காவை ரேபரேலியில் போட்டியிட வைக்க காங்கிரஸ் விரும்புகிறது.

    இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே இங்கு பிரியங்கா போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியால் தோற்கடிக்கப்பட்ட ராகுல்காந்தி, அங்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதற்கான அடிப்படை வேலைகளை காங்கிரசுக்காக ஒரு தனியார் நிறுவனம் அமேதியில் செய்து வருகிறது. இதன் அறிக்கையை பொறுத்து அமேதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ராகுல் முடிவு செய்வார்.

    உத்தரபிரதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ராகுலின் யாத்திரையில் அமேதி முக்கிய இடம் பிடித்தது. எனினும் கடந்த முறையை போல் அவர் போட்டியிடும் 2 தொகுதிகளில் ஒன்றாகவே அமேதி இருக்க வாய்ப்பு உள்ளது.

    உத்தரபிரதேசத்தின் 80 பாராளுமன்ற தொகுதி களில் 17 தொகுதிகளை பெற்று சமாஜ்வாடியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. அமேதி தேர்தல் அமைப்பாளராக ராகுலுக்கு மிகவும் நெருக்கமான தேவானந்த மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 17 தொகுதிகளில் அமேதியும், ரேபரேலியும் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

    • உ.பி.யின் அலிகாரில் இன்று நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையில் பிரியங்கா பங்கேற்றார்.
    • இந்த யாத்திரையில் லோக்தளம் கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். 

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஜமால்பூரில் நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி இன்று கலந்து கொண்டார். இதில் லோக்தளம் கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். 

    இந்த யாத்திரை அம்ரோஹா, சம்பல், புலந்த்சாஹர், அலிகார், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா வழியாக பதேபூர் சிக்ரி செல்கிறது. இதில் ராகுல் காந்தியுடன் திறந்த ஜீப்பில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் அமர்ந்து கொண்டு தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தவாறு சென்றார். அப்போது பிரியங்கா காந்தி பேசியதாவது:

    பா.ஜ.க. 10 ஆண்டாக ஆட்சியில் உள்ளது. ஜி20 மாநாடு போன்ற பல பெரிய நிகழ்வுகள் நடந்தன. இதுபோன்ற நிகழ்வுகளால் நாட்டின் மரியாதை கூடுகிறது என எல்லோரும் சொன்னார்கள். நாங்கள் கூட ஒப்புக்கொள்கிறோம்.

    நாட்டின் மரியாதையில் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தொடர்பில்லையா? இளைஞர்களுக்கு வேலை இல்லை, விவசாயிகள் இன்னும் சாலையில் அமர்ந்திருக்கிறார்கள். பணவீக்கம் நாட்டு மக்களுக்கு சுமையாக இருக்கிறது. இதை எல்லாம் நான் சுட்டிக்காட்டி கேள்வி கேட்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

    காங்கிரஸ், சமாஜ்வாதி இடையேயான தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில், யாத்திரை நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த யாத்திரை இந்தியா கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

    இன்று மாலை ஆக்ராவில் நடைபெற உள்ள யாத்திரையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க உள்ளார்.

    • ஆக்ராவில் நடக்கும் ராகுல் காந்தி பாத யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்.
    • மார்ச் மாதம் முதல் வாரம் ராகுல் காந்தியின் பாத யாத்திரை மத்திய பிரதேசத்துக்கு செல்ல உள்ளது.

    லக்னோ:

    காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது இந்த பாத யாத்திரை உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று மொரதாபாத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

    இருவரும் காரின் மேலே அமர்ந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். பொதுமக்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்தபடியும், கைகளை அசைத்தபடியும் சென்றனர். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் பலர் ஆர்வமுடன் கை குலுக்கினர். பாதயாத்திரையை ஒட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதேபோல் சம்பல், அம்ரேகா, கத்ரஸ், அலிகர், ஆக்ரா, பதேப்பூர் சிக்கிரி மாவட்டங்களில் நடக்கும் பாத யாத்திரையிலும் பிரியங்கா கலந்துகொள்வார் என தெரிய வந்துள்ளது.

    ஆக்ராவில் நாளை நடக்கும் ராகுல் பாத யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொள்வார் என அறிவிக்கப் பட்டுள்ளது.

    இதையடுத்து, மார்ச் முதல் வாரம் ராகுல் காந்தியின் யாத்திரை மத்திய பிரதேசத்துக்குச் செல்ல உள்ளது. அந்த யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதி.
    • பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் தன்னால் பங்கேற்க முடியவில்லை.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வயிற்று தொற்று காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு பிரியங்கா காந்தி 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட தகவல் உறுதியானது.

    கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக உத்தரபிரதேசத்தில் நடைபெறும் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் தன்னால் பங்கேற்க முடியவில்லை.

    துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். நான் குணமடைந்தவுடன் அங்கு வருவேன். உ.பி.யில் மக்கள், எனது நண்பர்கள் அனைவருக்கும் நியாய யாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பிரியங்கா காந்தி 'எக்ஸ்' இணைய தளத்தில் பிரியங்காகாந்தி பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் காந்தியின் நீதிக்கான ஒற்றுமை பயணத்தில் கலந்துக் கொள்ள திட்டம்.
    • உடல்நலக் குறைவால் நடை பயணத்தில் கலந்து கொள்ள இயலவில்லை.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக் குறைவால் உ.பி.யில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ராகுல் காந்தியின் நீதிக்கான ஒற்றுமை பயணத்தில் அவர் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது நடைபயணத்தில் கலந்து கொள்ளவில்லை.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில், "உடல் நலம் தேறியதும் யாத்திரையில் பங்கேற்க உள்ளேன். யாத்திரையில் பங்கேற்றுள்ள தனது சகோதரர் மற்றும் கட்சியினருக்கு வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

    • உலகில் எங்காவது போர் நடந்தால், அங்குள்ள நமது குடிமக்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதுதான் முதல் வேலையாக இருக்கும்.
    • வேலையின்மையும், பணவீக்க உயர்வும்தான் முக்கியமான பிரச்சனைகள்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, நேற்று தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், இஸ்ரேலில் வேலை செய்ய ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனத்தில் இந்திய வாலிபர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் வீடியோ இடம் பெற்றிருந்தது.

    அந்த வலைத்தளத்தில், பிரியங்கா ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    உலகில் எங்காவது போர் நடந்தால், அங்குள்ள நமது குடிமக்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதுதான் முதல் வேலையாக இருக்கும். ஆனால் இன்றைய சூழ்நிலையில், இளைஞர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போர் நடக்கும் இஸ்ரேலுக்கு செல்கின்றனர். அவர்களை செல்லவிடாமல் மத்திய அரசால் தடுக்க முடியவில்லை.

    அந்த இளைஞர்களுக்கு இந்தியாவில் ஏன் வேலை கிடைக்கவில்லை? 2 நாட்களாக வரிசையில் நிற்கும் அவர்கள், நம் நாட்டின் பிள்ளைகள் இல்லையா? இந்திய இளைஞர்களின் உயிரை தியாகம் செய்வதற்கு இஸ்ரேலுக்கு என்ன அடிப்படையில் இந்திய அரசு அனுமதி அளித்தது?

    அதை இளைஞர்களின் தனிப்பட்ட பிரச்சனையாக மத்திய அரசு சித்தரிக்கிறது. உண்மையில், 'மோடி உத்தரவாதம்', 'ஆண்டுக்கு 2 கோடிபேருக்கு வேலை', '5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்' என்று சொல்வதெல்லாம் வெற்று கோஷங்கள்.

    வேலையின்மையும், பணவீக்க உயர்வும்தான் முக்கியமான பிரச்சனைகள். அவற்றுக்கு பா.ஜனதா அரசிடம் எந்த தீர்வும் இல்லை. அதை இளைஞர்களும் உணர்ந்து கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மகளிர் காங்கிரஸ் தலைவி வக்கீல் சுதா தலைமையில் 52 பானைகளில் பொங்கல் வைத்தனர்.
    • பொங்கல் பொங்கியதும் பொங்கலோ பொங்கல்... ராகுல், பிரியங்கா வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள்.

    சென்னை:

    பொங்கல் திருநாளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடி மகிழ்வார்கள். தமிழக மகளிர் காங்கிரசார் சார்பில் பிரியங்கா காந்தியின் 52-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை பொங்கல் விழாவாக கொண்டாடினார்கள். முதலில் கேக் வெட்டினார்கள்.

    அதைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மகளிர் காங்கிரஸ் தலைவி வக்கீல் சுதா தலைமையில் 52 பானைகளில் பொங்கல் வைத்தனர்.

    பொங்கல் பொங்கியதும் பொங்கலோ பொங்கல்... ராகுல், பிரியங்கா வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள். பொங்கல் விழாவையொட்டி பவன் வளாகத்தில் கரும்பு, வாழை, மஞ்சள் குலைகளால் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

    அதை தொடர்ந்து பிரியங்கா பிறந்தநாள் விழா அரங்கத்தில் நடந்தது. விழாவில் சுமார் 500 பெண்களுக்கு புடவை, பாத்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வழங்கினார். நிகழ்ச்சியில் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, சுமதி, அன்பரசு, எஸ்.ஏ.வாசு, அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×