என் மலர்
இந்தியா

சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் பிரியங்கா சந்திப்பு
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.
- மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று தேநீர் விருந்தளித்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
காப்பீடு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு, அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட 'விபி ஜி ராம் ஜி' மசோதா உள்ளிட்டவை விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் தொடங்கிய போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதன்பின், விவாதங்களில் அக்கட்சிகள் பங்கேற்றன.
இதற்கிடையே, ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெறும் போது, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா எம்.பி.க்களுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம்.
இந்நிலையில், நேற்றும் சபாநாயகர் ஓம்பிர்லா தேநீர் விருந்து அளித்தார். இந்த முறை எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அருகே காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா அமர்ந்திருந்தார்.
அப்போது, எத்தியோப்பியா, ஜோர்டான் மற்றும் ஓமன் பயணம் குறித்து மோடியிடம் பிரியங்கா கேட்டார்.அதற்கு மோடி, பயணம் சிறப்பாக அமைந்ததாக தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






