search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக"

    • காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர்
    • நாம் தாயாக மதிக்கும் பசுவை, கறிக்காக கொடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் உணர்வுகளோடு வெட்கமேயில்லாமல் விளையாடுகின்றனர்

    உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகிநாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது,

    "காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர். அதாவது, பசுவதையை எந்தத் தடைகளும் இன்றி அனுமதிக்கப் போகிறார்கள் என்று அதற்கு அர்த்தம். நாம் தாயாக மதிக்கும் பசுவை, கறிக்காக கொடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் உணர்வுகளோடு வெட்கமேயில்லாமல் விளையாடுகின்றனர்.

    அதாவது, ஒருவரது வீட்டில் நான்கு அறைகள் இருந்தால், அதில் இரண்டை அவர்களே எடுத்துச் சென்று விடுவார்கள். அதுமட்டுமின்றி, பெண்களின் நகைகளை கைப்பற்றுவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது, இதை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

    கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவர்கள் முயலுகின்றனர்.

    நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

    நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் சதி செய்து வருகிறது. ராமரின் பிறப்பிடமான அயோத்திக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் ராமர் இருப்பதைக் கேள்விக்குள்ளாக்கினர். ஆனால் தெய்வம் அனைவருக்கும் உள்ளது. இது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு.

    'பாரத் மாதா கி ஜெய்' மற்றும் 'வந்தே மாதரம்' என்று முழக்கமிட தயங்குபவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது" என்று அவர் தெரிவித்தார்.

    • கம்யூனிஸ்டுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் புனிதமற்ற தொடர்பு உள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
    • ஜெயராஜனுக்கு ஆதரவாக, முதல்-மந்திரி பினராயி விஜயன், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    தென் மாநிலங்களில் தொகுதிகளை கைப்பற்ற பாரதிய ஜனதா இந்த பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு முயற்சிகளை கையாண்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலரும் அடிக்கடி தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தீவிர சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர்.

    இதில் கேரள மாநிலத்தில் 20 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் போட்டியிட்டன. இந்த முறை கேரளாவில் ஒரு தொகுதியையாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சுரேஷ்கோபி உள்ளிட்ட பல பிரபலங்களை பாரதிய ஜனதா களம் இறக்கியது. மேலும் மற்ற கட்சிகளை சேர்ந்த பிரபலங்கள் சிலர் பாரதிய ஜனதாவில் இணைந்தனர். இதில் முன்னாள் முதல்-மந்திரிகள் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, கருணாகரன் மகள் பத்மஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

    இதனை இடது சாரி கூட்டணி குறை கூறி வந்த நிலையில், அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான ஈ.பி.ஜெயராஜன், பாரதிய ஜனதாவில் இணைய உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு காரணம் அவர், தற்போது தேர்தல் நடைபெறும் சூழலில் பாரதிய ஜனதாவின் கேரள மாநில பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசியது தான். திருவனந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டது.

    இந்த சந்திப்பு விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயராஜன், நான், எல்.டி.எப். கன்வீனர். என்னை சந்திக்க பலர் வருகிறார்கள். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா முக்கிய தலைவர்கள் அனைவரும் என்னை சந்திக்க வந்துள்ளனர். ஜவடேகருடனான சந்திப்பு தனிப்பட்டது. எனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

    ஆனால் காங்கிரஸ் கட்சி, இந்த சந்திப்பு, முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தெரிந்தே நடந்துள்ளது. கம்யூனிஸ்டுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் புனிதமற்ற தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் ஜெயராஜனுக்கு ஆதரவாக, முதல்-மந்திரி பினராயி விஜயன், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ஜவடேகரை சந்திப்பதில் தவறில்லை. இங்கு தேர்தல் மூலம் பா.ஜனதாவுக்கு எதுவும் கிடைக்காது. ஈ.பி.ஜெயராஜன் மீதான குற்றச்சாட்டுகள், கம்யூனிஸ்டு எதிர்ப்பு பிரசாரத்தின் ஒரு பகுதி என்றனர். இருப்பினும் ஜெயராஜன் இன்னும் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    • 2019-ல் போன்றே தற்போதும் சிறப்பானதொரு வெற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெறும் என எதிர்பார்க்கலாம்.
    • ராஜஸ்தானில் காங்கிரஸ் பல இடங்களை வென்று அமோக வெற்றி பெறும்.

    புதுடெல்லி :

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மோடி சர்கார் போய்விட்டது. சில நாட்களாக பிஜேபி சர்கார் தான். அதுவும் நேற்றிலிருந்து என்.டி.ஏ., சர்கார்.

    ஏப்ரல் 19 முதல் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றத்தை கவனித்தீர்களா?

    ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 19 வரை காங்கிரசின் தேர்தல் அறிக்கை பிரதமர் மோடியால் புறக்கணிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் அறிக்கை புதிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

    நன்றி, பிரதமரே! எனக்கூறியுள்ளார்.

    மற்றொரு பதிவில்,

    நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்களில் இருந்து வரும் செய்திகள் காங்கிரசுக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது.

    2019-ல் போன்றே தற்போதும் சிறப்பானதொரு வெற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெறும் என எதிர்பார்க்கலாம்.

    கர்நாடகாவில் நேற்று தேர்தல் நடந்த 14 தொகுதிகளில், 2019ல் காங்கிரஸ் தனது 1 மதிப்பெண்ணில் இருந்து பெரும் முன்னேற்றம் அடையும்.

    ராஜஸ்தானில் காங்கிரஸ் பல இடங்களை வென்று அமோக வெற்றி பெறும் என பதிவிட்டுள்ளார்.

    • தேசத்தின் நலன் கருதி இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
    • விடுதலை சிறுத்தை போட்டியிட்ட 3 தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை.

    இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தை கட்சி தமிழகத்தில் காங்கிரசை ஆதரித்து பிரசாரம் செய்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் 5 தொகுதிகளில் விடுதலை சிறுத்தை போட்டியிட்டது. அதில் ஒரு தொகுதியில் வாபஸ் பெற்றது. மற்றொரு தொகுதியில் மனு நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 3 தொகுதியில் இளம் வேட்பாளர்களை நிறுத்தியது.

    இந்த நிலையில் பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவக்குமார் ஆகியோர் அழைப்பின் பேரில் இருவரையும் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

    அப்போது குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி ஏற்படும் நிலையில் தங்கள் கட்சி வேட்பாளர்களால் வெற்றி வாய்ப்பு இழக்கின்ற நிலையை தவிர்க்கவும் பா.ஜ.க.வை ஒன்று சேர்ந்து வீழ்த்தவும் இதுவே நல்ல நேரம் என்பதால் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தினார்.

    அதனை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் விடுதலை சிறுத்தை போட்டியிட்ட 3 தொகுதி வேட்பாளர்களையும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

    மேலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டார்.

    இது குறித்து திருமாவளவன் கூறியதாவது:-

    கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளோம். விடுதலை சிறுத்தை போட்டியிட்ட 3 தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை.

    பா.ஜனதாவுக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பெங்களூர் சென்ட்ரல், தெற்கு, புறநகர் பகுதியில் முக்கிய இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தேன். தேசத்தின் நலன் கருதி இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிச்சாங் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே.

    மதுரை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.115 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு ரூ.160.61 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிச்சாங் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி.

    பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம் என்று தெரிவித்துள்ளார்.


    • அரசு 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
    • முதல் மந்திரியின் இந்த விமர்சனம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி அடுத்த வாரம் 3 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடியை கருநாக பாம்பு என தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி ஆவேசமாக விமர்சனம் செய்துள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு மூன்று சட்டங்களை திரும்ப பெற செய்வதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு மோடிக்கு எதிராக போராடினார்கள்.


    இதனால் அரசு 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் விவசாயிகள் அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் படி மோடியை வற்புறுத்தினார்கள்.

    இந்த சம்பவத்தை மோடி ஒருபோதும் மறக்க மாட்டார். அவர் கருநாகம் போன்றவர். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்று விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கி விவசாயிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 400 இடங்களில் வெற்றி பெற நினைக்கிறார்.

    அதுபோல் நடந்தால் விவசாயிகளை கடிக்க மோடி மீண்டும் வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல் மந்திரியின் இந்த விமர்சனம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார்.
    • வருகிற மே 4-ந்தேதி வரை தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளார்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெறும் என்பதால் அரசியல் கட்சியினர் ஓய்வெடுக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் தற்போது வெப்ப அலை வீசி வரும் நிலையில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது.

    இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் படையெடுத்து இங்கு தங்கி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில் கொடைக்கானல் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார். வருகிற மே 4-ந்தேதி வரை இங்குள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்கள், ரோடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் தலைமையில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி, டி.ஐ.ஜி. அபிநவ், எஸ்.பி. பிரதீப், கொடைக்கானல் ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

    2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு ஓய்வுக்காக மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் 1 வாரம் தங்கினார். பின்னர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று தமிழக முதலமைச்சரானார். பாராளுமன்ற தேர்தலிலும் இதே போன்ற வெற்றியை பெற வேண்டும் என்று சென்டிமெண்டாக அதே விடுதியில் தங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் வருகையை முன்னிட்டு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் அவர் தங்கும் விடுதி மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே தமிழக பா.ஜ.க. தலைவரும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு வருகை தந்தார். பாம்பார்புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் அண்ணாமலை இன்று கொடைக்கானலில் இருந்து தனது சொந்த ஊருக்கு செல்கிறார். மேலும் மற்ற மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கொடைக்கானலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் படையெடுத்து வருவதால் விடுதிகள் நிரம்பி வருகிறது.

    • டெல்லி தலித் மேயர் பதவியை பாஜக அனுமதிக்கவில்லை என கண்டித்து ஆம் ஆத்மி மாநகராட்சியில் போராட்டம் நடத்தியது
    • மேயர் தேர்தல் ரத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர ஆலோசித்து வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.

    டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். 10 எம்.பி.க்கள் (7 லோக்சபா மற்றும் 3ராஜ்யசபா) மற்றும் 14 எம்.எல்.ஏ.க்கள் (டெல்லி சட்டசபையில் உள்ள மொத்தமுள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் ஐந்தில் ஒரு பங்கு) மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

    இதன் மூலம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 274 ஆக உள்ளது. ஒரு வேட்பாளருக்கு மேயர் பதவிக்கு 138 வாக்குகள் தேவை .இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 134 கவுன்சிலர்களும் பாஜக வுக்கு 105 கவுன்சிலர்கள் உள்ளனர்.



    ஆம் ஆத்மிக்கு 134 கவுன்சிலர்கள், 13 எம்எல்ஏக்கள் மற்றும் 3 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர் . இதில் 3 சுயேச்சை கவுன்சிலர்களில் ஒருவரின் ஆதரவு ஆம் ஆத்மிக்கு உள்ளது. இதனால் ஆம் ஆத்மிக்கு ஆதரவு 151 ஆக உயர்ந்தது.

    மேலும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளருக்கு 9 காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆதரவும் கிடைக்க இருந்தது.ஆம் ஆத்மிக்கு மொத்த ஆதரவு 160 ஆக உயரும் சூழ்நிலையால் மேயர் தேர்தலில் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.




    டெல்லி மேயர்,துணை மேயர் பதவிக்கான தேர்தல் இன்று 26- ந் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில் மேயர் தேர்தலை கவர்னர் அலுவலகம் நேற்று ரத்து செய்தது. டெல்லி தலித் மேயர் பதவியை பாஜக அனுமதிக்கவில்லை என கண்டித்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

    ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் "தலித் விரோதி பாஜக" என்ற போஸ்டர்களை ஏந்தி கோஷமிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேயர் தேர்தல் ரத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.

    • பிரியங்காவுக்கு நெருக்கடி கொடுக்கவே வருண்காந்தியை முன்னிலைப்படுத்த அமித்ஷா திட்டமிட்டு இருந்தார்.
    • வேறு சாதாரண வேட்பாளரை நிறுத்தினால் பிரியங்கா சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் தொகுதியாகும்.

    காங்கிரஸ் தலைவர் சோனியா அந்த தொகுதியில் இருந்துதான் பாராளுமன்றத்துக்கு தேர்வானார். இந்த தடவை அந்த தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காகவே சோனியா அங்கு போட்டியிடுவதை தவிர்த்து மேல்சபை எம்.பி.யாகி இருக்கிறார்.

    முதன் முதலாக தேர்தல் களத்துக்கு வரும் பிரியங்காவுக்கு முதல் தேர்தலிலேயே நெருக்கடி கொடுத்து தோல்வியை பெரியதாக கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவும் தீவிரமாகி உள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இது தொடர்பாக பல தடவை ஆய்வு செய்தனர்.

    இறுதியில் மேனகா காந்தியின் மகன் வருண்காந்தியை பிரியங்காவுக்கு எதிராக களம் இறக்கலாம் என்று முடிவு செய்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் வருண்காந்தியை அழைத்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களது திட்டத்தை அறிந்த வருண்காந்தி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    வருண்காந்தி பிரியங்காவின் தம்பி ஆவார். அவர் உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் இருந்து 2 தடவை பாராளுமன்றத்துக்கு எம்.பி.யாக தேர்வாகி உள்ளார். இந்த தடவையும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்து இருந்தார்.

    ஆனால் அவருக்கு அந்த தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. பிரியாங்கவை எதிர்த்து ரேபரேலி தொகுதியில் போட்டியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டார். ஆனால் சகோதரியை எதிர்த்து தன்னால் போட்டியிட இயலாது என்று வருண்காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

    பிரியங்காவுக்கு நெருக்கடி கொடுக்கவே வருண்காந்தியை முன்னிலைப்படுத்த அமித்ஷா திட்டமிட்டு இருந்தார். வருண்காந்தி மறுத்து உள்ளதால் அமித்ஷா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். வேறு சாதாரண வேட்பாளரை நிறுத்தினால் பிரியங்கா சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    இது காங்கிரஸ் கட்சிக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மாறி விடும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள். அந்த நிலையை தடுத்து நிறுத்தவே வருண்காந்தி உதவியை அவர்கள் நாடினார்கள். ஆனால் வருண்காந்தி மறுத்து விட்டதால் வேறு யாரை பிரியங்காவை எதிர்த்து நிறுத்தலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள்.

    முன்னாள் மத்திய மந்திரி உமாபாரதியை பிரியங்காவுக்கு எதிராக நிறுத்தலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பஜ்ரங்தள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான வினய் கத்தியர், சமாஜ்வாடி முன்னாள் தலைவர் மனோஜ்பாண்டே மற்றும் அரச குடும்பத்தை சேர்ந்த ராகேஷ் பிரதாப்சிங் ஆகியோரது பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

    • கேரள மாநிலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தனது வாக்கை பதிவு செய்தார்.
    • திருவனந்தபுரத்தில் 15 ஆண்டுகளாக என்ன மாதிரியான ஆட்சி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும்.

    கேரளா:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    கேரள மாநிலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தனது வாக்கை பதிவு செய்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    தேர்தல் எப்போது ஒரே மாதிரி இருப்பதில், எந்த ஒரு விஷயத்திலும் ஒரு மாற்றம் வரவேண்டும். ஒரே மாதிரியான வடிவத்தில் ஆட்சியிருந்தால் நன்றாக இருக்காது. திருவனந்தபுரத்தில் 15 ஆண்டுகளாக என்ன மாதிரியான ஆட்சி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்.

    புதிய ஆட்சி வந்தால் தானே மாற்றங்கள் எப்படி இருக்கும் என்று நம்மால் உணர முடியும். 15 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல ஒரு ஆட்சி வரும் என்று என் மனதில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.

    தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை. இதுவரை பிஜேபி கேரளாவில் வந்ததில்லை என்றும், இந்த முறை பிஜேபி வந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். பத்து முறை கீழே விழுந்த பிஜேபி இந்த முறை கண்டிப்பாக கேரளாவில் தனது ஆட்சியை பிடிப்பார்கள். கண்டிப்பாக திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய இடங்களில் பிஜேபி வெற்றி பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சுரேஷ் கோபி கண்டிப்பாக வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போதைய மக்களவை தேர்தலில் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன.
    • காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் ஆனி ராஜா உள்ளிட்ட வேட்பாளர்களை கம்யூனிஸ்டு கட்சிகள் களமிறக்கி உள்ளன.

    திருவனந்தபுரம்:

    தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இருக்கின்ற நிலையில், கேரள மாநில மக்களவை தேர்தலில் அந்த கட்சிகள் தனித்தனியாக களம் காணுகின்றன. இதனால் அந்த கட்சிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணியே ஆட்சி செய்து வருகிறது. இதனால் அங்கு பலம் பொருந்திய கட்சியாகவே கம்யூனிஸ்டு கட்சிகள் இருந்து வருகின்றன.

    அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டு தான் மக்களவை தொகுதிகள். இங்குள்ள 20 மக்களவை தொகுதிகளில் 19 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்தவர்கள் தான் எம்.பி.க்களாக உள்ளனர். அதிலும் 16 தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் வசம் இருக்கிறது.

    இப்படிப்பட்ட சூழலில் தற்போதைய மக்களவை தேர்தலில் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன. மக்களவை தொகுதிகளில் ஏற்கனவே செல்வாக்கு மிக்க காங்கிரஸ் கட்சியுடன் போட்டியிடும் அதே நேரத்தில், பாரதிய ஜனதாவையும் கம்யூனிஸ்டு கட்சிகள் சமாளிக்க வேண்டிய நிலைக்கு இந்த தேர்தலில் தள்ளப்பட்டுள்ளது.

    ஏனென்றால் கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு பெருகி வருவது தான் அதற்கு காரணம். 2014 தேர்தலின் போது பாரதிய ஜனதாவுக்கு 10 சதவீத வாக்குகளும், அதன் தலைமையிலான கூட்டணிக்கு 11 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

    அந்த வாக்கு சதவீதம் 2019 தேர்தலில் அதிகரித்தது. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 13 சதவீத வாக்குகளும், அதன் தலைமையிலான கூட்டணிக்கு 16 சதவீத வாக்குகளும் கிடைத்தன. 2014 தேர்தலை விட 2019 தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு அதிக சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

    தற்போது அதன் செல்வாக்கு கேரளாவில் மேலும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.அதனை வைத்து கேரளாவில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி அங்கு கால்பதித்துவிட வேண்டும் என்ற இலக்குடன் செயல் பட்டது. அதற்கு தகுந்தாற் போல் வேட்பாளர்களை பாரதிய ஜனதா களமிறக்கி இருக்கிறது.

    இதன் காரணமாக தற்போதைய தேர்தலில் கேரளாவில் சில தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றும் என்று கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் கேரள மக்களவை தேர்தலில் களம் காணுகின்றன.

    மாநிலத்தில் தங்களின் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கை அதிகரித்து மக்களவை தேர்தலில் வெற்றிபெறும் முனைப்பில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் ஆனி ராஜா உள்ளிட்ட வேட்பாளர்களை கம்யூனிஸ்டு கட்சிகள் களமிறக்கி உள்ளன.

    மேலும் அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் செய்தன. சில மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்துள்ள நிலையில் கம்யூனிஸ்டு கட்சிகள் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது.

    தேசிய அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு கேரள உதவுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் முடிவு வந்தபிறகே அந்த கேள்விக்கான பதில் தெரியவரும்.

    • கர்நாடகாவில் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்
    • ஓபிசி சமூகத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். அவர்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்துள்ளது

    தற்போது கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது.

    கர்நாடகாவில் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, இவ்வாறு தெரிவித்தார்.

    அக்கூட்டத்தில் பேசிய மோடி, "மீண்டும் ஒருமுறை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்காத மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் முஸ்லிம் மதத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து பின்கதவு வழியாக இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓபிசி மக்களிடமிருந்து பெருமளவிலான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் எதிர்கால தலைமுறைகளை அழிக்கும் இந்த ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. 2004ல் கர்நாடகாவில் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது, அரசியல் சாசன சிற்பி டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை முதுகில் காங்கிரஸ் குத்தியது

    "ஓபிசி சமூகத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். அவர்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்துள்ளது. காங்கிரஸ் சமூக நீதியை கொலை செய்துள்ளது. அரசியலமைப்பை மீறி பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்துள்ளது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், கர்நாடகாவில் ஓபிசி இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு காங்கிரஸ்தான் மாற்றியது என மோடி கூறியது அப்பட்டமான பொய் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    மோடி அரசுடன் கூட்டணி அமைத்திருக்கும் தேவ கவுடா தான், 1995ஆம் ஆண்டு இஸ்லாமியர்களை ஓபிசி பட்டியலில் இணைத்தார். ஆனால், அதனை காங்கிரஸ் தான் செய்தது என மோடி தெரிவித்திருக்கிறார்.

    முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என்று ஒரு காலத்தில் தம்பட்டம் அடித்த தேவகவுடா இன்னும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரா? அல்லது நரேந்திர மோடியிடம் சரணடைந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரா? என்பதை கர்நாடக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று சித்தராமையா கூறினார்.

    1995 ஆம் ஆண்டில், தேவகவுடா அரசாங்கம் கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீட்டை ஓபிசி ஒதுக்கீட்டிற்குள் 2பி என்ற தனித்துவமான வகைப்பாட்டின் கீழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்தாண்டு அம்மாநில பாஜக அரசு ரத்து செய்து, முஸ்லிம்களை பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டில் சேர்த்தது.

    ஆனால் பாஜக அரசின் இந்த முடிவை அமல்படுத்த கூடாது என்று உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் மீண்டும் ஓபிசி பட்டியலில் முஸ்லிம்களை காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது.

    ×