என் மலர்
நீங்கள் தேடியது "vanathi srinivasan"
- வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றனர்.
- இந்த சம்பவத்தை கண்டித்து நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
கோவையில் நேற்று இரவில், விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.
வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றனர்.
பாதிப்புக்குள்ளான அம்மாணவி, இன்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என ஆளும் திமுக அரசை அதிமுக, தவெக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த சம்பவத்தை கண்டித்து நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக கட்சி சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே பாஜக. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
முன்னதாக இந்த சம்பவத்தை கண்டித்து இன்றும் நாளையும் பாஜக சார்வில் போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார்.
- வடமாநில பெண்கள் பற்றி தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியது கண்டனத்திற்குரியது.
- கல்விக்காக தி.மு.க. நடத்திய விழா ஒரு நாடகம் போன்று இருந்தது.
கோவை:
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி தமிழகத்திற்கு பெருமையும், சிறப்பும் சேர்த்து இருக்கிறார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 5-ந் தேதி கோவை வருகிறார். 4-ந் தேதி சென்னைக்கு வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு நடக்கிறது.
வடமாநில பெண்கள் பற்றி தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியது கண்டனத்திற்குரியது. டி.ஆர்.பி. ராஜா மட்டுமின்றி, தி.மு.க. மூத்த தலைவர்களும் வட இந்திய தொழிலாளர் பற்றி அவமரியாதையாக பேசி வருவது என்பது முதல் முறையல்ல.
வேத காலத்தில் இருந்து பெண்களுக்கு என்று சிறப்பான தனி இடம் இந்தியாவில் உள்ளது. இந்திய சுதந்திரம் மறுமலர்ச்சி ஆகியவற்றில் வட இந்திய பெண்களும் பங்களித்து உள்ளனர்.
வட இந்தியாவில் பெண்களில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை பின்தங்கி உள்ளது என்றால் காங்கிரஸ் கட்சியிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும். ஏனென்றால் நீண்ட காலம் ஆட்சியில் இருந்து கல்வி ஆகியவற்றுக்கு அடித்தளம் இடுவதற்கு தவறியது காங்கிரஸ் கட்சி தான்.
கடந்த 11 வருடங்களாக அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் வங்கி கணக்கு, தொழில் துவங்குவதற்கு பெண்களுக்கான சிறப்பு திட்டம் என இந்திய பெண்கள் அடுத்த தளத்திற்கு வேகமாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கும் போது அரசியலுக்காக வடக்கு, தெற்கு என்று அவமானப்படுத்த வேண்டாம் என்பது எங்களுடைய கோரிக்கை ஆகும்.
கல்விக்காக தி.மு.க. நடத்திய விழா ஒரு நாடகம் போன்று இருந்தது. அவர்களுக்கு தேவைப்படக் கூடிய முக்கியமான நபர்களை அழைத்து கல்வியை பற்றி பேச வைத்துள்ளனர்.
பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறைகள் இல்லாமல், மரத்தடியில் பாடம் நடத்தும் நிலை தான் உள்ளது.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், ஜாதி ரீதியான மோதல்கள் இதையும் அவர்கள் சாதனையில் சேர்த்துக் கொள்வார்களா?. இதையெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்களை கூப்பிட்டு விளம்பரத்திற்காக நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்..
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், சிவகார்த்திகேயன் தி.மு.க. அரசை புகழ்ந்து பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறும்போது, தங்கள் மீதான விமர்சனங்களுக்கு இது போன்ற சினிமா பிரபலங்களை வைத்து பதில் சொல்வது தி.மு.க. அரசிற்கு புதிதல்ல. காலம் காலமாக அவர்கள் இதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்றார்.
- வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.
- நமது இந்தியாவும் வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.
கோவை:
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் டி.வி, ஏசி உள்பட பல்வேறு பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜி.எஸ்.டி. வரி குறைப்பை தொடர்ந்து கோவையில் உள்ள டீக்கடை, உணவு பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் பொருட்கள் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அங்கு நேரில் சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.
காந்திபுரத்தில் உள்ள ஒரு இனிப்பு கடைக்கு சென்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., ஜி.எஸ்.டி. வரி குறைப்புக்கு பிறகு அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது கடையின் ஊழியர், முன்பு ஒரு கிலோ மைசூர் பாகு ரூ.420-க்கு விற்பனையானது. ஜி.எஸ்.டி குறைப்புக்கு பிறகு ரூ.380-க்கு விற்பனையாகி வருகிறது.
சிப்ஸ் ஒரு கிலோ ரூ.640-க்கு விற்பனையாகியது. தற்போது ஒரு கிலோ சிப்ஸ் ரூ.540-க்கு விற்பனையானது. விலை குறைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாடிக்கையாளர்களும் சந்தோஷமாக பொருட்கள் வாங்கி செல்கின்றனர். நாங்களும் மன நிறைவோடு இருக்கிறோம். 2 பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்கள் தற்போது விலை குறைந்ததை தொடர்ந்து 3 பொருட்கள் வாங்கி செல்கின்றனர் என்றார்.
அப்போது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. இதற்கு நடவடிக்கை எடுத்தது யார் தெரியுமா? என கடையின் ஊழியரிடம் கேட்டார். அதற்கு அவர் பிரதமர் மோடி என்றார். உடனே அவருக்கு நன்றி கூறுங்கள் என அவர் தெரிவித்தார். கடை ஊழியரும் நிச்சயமாக பிரதமருக்கு நன்றி. பிரதமர் வந்த பிறகு நிறைய முயற்சிகள் எடுத்து வருகிறார். நமது இந்தியாவும் வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.
அதன்பின் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கருத்து கேட்டறிந்தார். அப்போது ஒரு வாடிக்கையாளர், நான் மோட்டார் சைக்கிள் வாங்க வாகன ஷோரூமுக்கு சென்றேன். அவர்கள் இன்னும் சில நாட்களில் ஜி.எஸ்.டி. வரி குறைந்துவிடும். அதன்பின்னர் வந்து எடுத்து கொள்ளுங்கள் என்றனர். மேலும் இந்த கடையில் பொருட்கள் வாங்கும் போது, நேற்றை விட பொருட்கள் விலை குறைத்து விற்கப்படுவதகவும் தெரிவித்தார்.
இதையடுத்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறும்போது, பிரதமரின் ஒரே நோக்கம் விலை குறைப்பு என்பது சாதாரண மக்களிடம் சென்றடைய வேண்டும் . எவ்வளவு குறைக்கப்பட்டு உள்ளது. 5 மற்றும் 15 சதவீதம் என்று குறைந்துள்ளது. அது மக்களுக்கு தெரியவேண்டும் என அவர் தெரிவித்தார்.
- பா.ஜ.க. கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
- 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
கோவை:
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில், கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். விழாவில் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று. துணை குடியரசு தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் நிச்சயமாக வெற்றி பெறுவார். அவர் தான் துணை குடியரசு தலைவராக பதவி ஏற்க உள்ளார்.
இதற்காக இன்று கோவை பா.ஜ.க. சார்பில் பல்வேறு கோவில்களில் சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றிக்காகவும், பிரதமர் நரேந்திர மோடி நலனுக்காகவும் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. கோவையில் மட்டும் 25 கோவில்களில் இந்த பூஜை நடக்கிறது.
பா.ஜ.க. கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன். இந்திய தேசத்தின் துணை குடியரசு தலைவராக, தமிழராக அவரது பணி சிறக்க வேண்டும். மக்கள் சார்ந்த பணி பா.ஜ.க தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.
அதே நேரத்தில் தமிழ், தமிழர் என்று பேசுகின்ற தி.மு.க துரோகம் செய்து கொண்டு இருக்கிறார்கள். முன்பு ஜனாதிபதியாக பிரதிபா பாட்டில் தேர்வு செய்யப்பட்டபோது மும்பையை சேர்ந்த மாநில கட்சிகளும், தற்போது ஜனாதிபதியாக இருக்கக்கூடிய திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது ஒடிசா மாநில கட்சிகளும் ஒற்றுமையாக அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்காமல், தி.மு.க. தனது செயலினால் சிறுமைப்படுத்துகிறது.
தேசிய ஜனநாயககூட்டணியில் பல்வேறு கட்சிகள் இருக்கிறார்கள். கூட்டணியை பலப்படுத்த வேண்டும். அதற்காக அனைவரையும் ஓரணியில் சேர்க்க வேண்டும். அதனை நான் பா.ஜ.கவும் நினைக்கிறது. அதற்கு ஏற்ப செயல்பட்டு கொண்டும் இருக்கிறது.
அ.தி.மு.க.வுக்குள் நிலவும் பிரச்சனை கூட்டணியின் வெற்றியை பாதிக்காது. அந்தந்த கட்சி பிரச்சனைகளை அந்தந்த கட்சி தலைவர்களே சரி செய்து விடுவார்கள்.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். கூட்டணிக் கட்சி எண்ணிக்கையையும் தாண்டி ஒரு கணக்கு இருக்கிறது. அந்த கணக்கு தேர்தல் வெற்றி தரும். கூட்டணி குழப்பங்களும் சரி செய்யப்படும்.
கே.ஏ.செங்கோட்டையன், ஹரித்துவார் புனிதமான இடம் என்பதால் அங்கு சென்று உள்ளார். அ.தி.முகவில் பிரச்சனை என்றால் டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களை சந்திப்பதாக கேட்பது தவறு. செங்கோட்டையன் அமித்ஷாவை பார்த்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளதா?.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் சுதாகர், வேலுமயில், ராஜன், அர்ஜூனன், மணிகண்டன், கிருஷ்ண பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை.
- தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவது உறுதி.
கோவை:
கோவை பீளமேட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இன்று எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி நடந்த புகைப்பட கண்காட்சியை பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்று இந்திய நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாள். 1974-ம் வருடம் ஜூன் 25-ந்தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மூலம் செயல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன் தீமைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் நெருக்கடியான அந்த காலகட்டத்தில் இந்திய ஜனநாயகம் எப்படி இருந்தது என்பது குறித்து இளைஞர்களிடம் எடுத்துக் கூறுவதற்காக இந்த கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இன்று தி.மு.க., காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நெருக்கடி நிலை காலகட்டத்தில் தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் கொடுமைகளை அனுபவித்தார்கள். அரசியல் கட்சியினர் சிறைகளில் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள்.
எதற்காக நாங்கள் இதைச் சொல்கிறோம். கடந்த கால வரலாற்றை மறக்கக்கூடாது. இதற்காக காங்கிரஸ் கட்சி இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்கக்கூடாது என்பதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
இன்று திருப்பூரில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் நெருக்கடி நிலை உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாங்கள் கல்வியில் அரசியல் செய்யவில்லை. தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கொண்டுவரப்பட்டது. தனது அரசின் தோல்விகளை மறைக்கவே தி.மு.க.வினர் மத்திய அரசை குறை கூறுகிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை.
முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது.
கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா தெளிவாக பேசி விட்டார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை தாங்குகிறது. தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ் குமார், எஸ்.ஆர். சேகர், வீர தமிழச்சி சரஸ்வதி, காளப்பட்டி மண்டல தலைவர் உமாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 2026-ல் கூட்டணி ஆட்சி என நான் சொல்ல மாட்டேன். நான் பா.ஜ.க. ஆட்சி என்றுதான் சொல்வேன்- அண்ணாமலை.
- தேசிய தலைமை எடுக்கும் முடிவே இங்கு நடக்கும்.
தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அண்ணாமலை "2026-ல் கூட்டணி ஆட்சி என நான் சொல்ல மாட்டேன். நான் பா.ஜ.க. ஆட்சி என்றுதான் சொல்வேன். தேர்தலின் போது கூட்டணியில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து பேசி எவ்வளவு இடங்களில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்வார்கள். என்னை பொறுத்தவரை 2026-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்றுதான் சொல்வேன்.
நான் பா.ஜ.கவின் தொண்டன். உயிர் உள்ளவரை இந்த கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். மற்ற கட்சி வளர்ப்பதற்காக நான் இல்லை. கட்சி எடுக்கும் முடிவுக்கு தொண்டனாக நான் கட்டுப்படுவேன். எங்கு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமோ அங்கு வாயை மூடிக்கொண்டு இருக்கிறேன். எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில 2026-ல் கூட்டணி ஆட்சி என நான் சொல்ல மாட்டேன். நான் பா.ஜ.க. ஆட்சி என்றுதான் சொல்வேன் என அண்ணாமலை கூறியது அவரது கருத்து என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் கூறுகையில் "அண்ணாமலை சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து. தேசிய தலைமை எடுக்கும் முடிவே இங்கு நடக்கும். கட்சியின் நிலைப்பாடு எதுவோ, அதன்படியே செயல்படுவோம்" என்றார்.
- மாநாடு முருக பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மாநாடாக- மனவேதனைக்கு தீர்வு தரும் மாநாடாக அமையும்.
- சினிமா ஷூட்டிங்கில் காமிரா முன்பு வந்து பேசிவிட்டு பின்னர் மறந்து விடுவது போல நிஜவாழ்க்கையிலும் நடந்து வருகிறார்.
கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் இன்று நலம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பின்னர், முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக, அவர் கோவையில் வீடு- வீடாக சென்று பொதுமக்களிடம் நோட்டீஸ்களை வழங்கினார்.
தொடர்ந்து வானதி சீனிவாசன் நிருபர்களிடம் பேசியதாவது:-
மதுரையில் வருகிற 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. தொடர்ந்து, தமிழகத்தில் முருகன் கோவில்கள் உள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகிறோம். இந்த மாநாடு முருக பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மாநாடாக- மனவேதனைக்கு தீர்வு தரும் மாநாடாக அமையும்.
நடிகர் கமலஹாசன் 2 தேர்தல்களில் போட்டியிட்டார். அப்போது அவரை நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார். மேலும், மேல்சபை எம்.பி. பதவிக்காக தி.மு.க. கூட்டணிக்கு சென்று உள்ளார்.
சினிமா ஷூட்டிங்கில் காமிரா முன்பு வந்து பேசிவிட்டு பின்னர் மறந்து விடுவது போல நிஜவாழ்க்கையிலும் நடந்து வருகிறார். எப்படியாவது பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற சுயநலத்துடன், தன்னை நம்பிய வாக்காளர்களுக்கு துரோகம் செய்து உள்ளார்.
பொதுமக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற முடியாமல், தி.மு.க.வின் பின்னால் ஒளிந்துகொண்டு இந்த பதவியை பெற்று உள்ளார்.
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது அண்ணன் அழகிரியும் சந்தித்து பேசியது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அண்ணன்- தம்பிகள் பிரிவது சேருவது இயல்பு.
அதே நேரத்தில் மதுரையில் முதலமைச்சர் பார்வையிட சென்றபோது அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை துணி போட்டு மூடி வைத்திருந்த சம்பவம் தவறானது.
கோவையிலும் பல இடங்களிலும் உள்ள குப்பைகளை இதுபோன்று தான் மறைத்து வைத்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சட்டசபையில் நான் பேசும் போது மட்டும் மைக் ஆப் செய்யப்பட்டு வருகிறது.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் 6 மாதத்தில் பல கட்சிகள் இணையும்.
கோவை:
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜ.க என்பது ஜனநாயக ரீதியில் இயங்கூடிய ஒரு கட்சி. பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை தனது பதவியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கட்சி பணியிலும் சரி, தேர்தல் பணியிலும் சரி அவர் சிறப்பாகவே தனது பணியை செய்துள்ளார்.
பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் ஏற்கனவே அமைச்சர், எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கட்சி விரிவுபடுகிற போது கட்சியில் இணைபவர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி அவர்களின் செயல்பாட்டை பா.ஜ.க. பார்த்து வருகிறது. நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க. கட்சி சிறப்பாக செயல்படும். அவரது செயல்பாட்டால் நன்மைகள் கிடைக்கும்.
நான் மாநில தலைவராக அல்ல, தேசிய தலைவராக இருக்கிறேன். இந்தி தெரியாத எனக்கு பெரிய பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கிறது பா.ஜ.க. பொறுப்பு வேண்டும் என்று நானாக எப்போதும் கேட்டதில்லை. கட்சி கொடுக்கும் பணிகளை செய்கிறேன்.
தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படும். இந்த கூட்டணியின் ஒரே நோக்கம் 2026-ல் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்புவது தான்.
2026-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி பற்றி தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
சட்டசபையில் நான் பேசும் போது மட்டும் மைக் ஆப் செய்யப்பட்டு வருகிறது. மற்ற கட்சி தலைவர்கள் பேசும் போது அவர்களின் பேச்சு நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆனால் நான் பேசுவது மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. சட்டசபையில் பேரவை தலைவரின் செயல்பாடு திருப்தியாக இல்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் 6 மாதத்தில் மேலும் பல கட்சிகள் இணையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அரசியலில் அடையாளம் காணப்பட்டவர்.
- தமிழுக்கும், இந்திய தேசியத்திற்கும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குமரி அனந்தன் மறைவுக்கு பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்பட்ட குமரிஅனந்தன் மறைந்தார் என்ற செய்தியறிந்து பெரும் துயரம் அடைந்தேன்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அரசியலில் அடையாளம் காணப்பட்டு, தன் தமிழால், பேச்சாற்றலால் இளைஞர்களிடம் தேசப்பக்தியை விதைத்தவர். தமிழுக்கும், இந்திய தேசியத்திற்கும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.
குமரிஅனந்தன் அவர்களின் மறைவால் வாடும் தெலுங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநர், பாஜக மூத்த தலைவர் அக்கா டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி...
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தமிழ் கற்பிக்க நிரந்தர ஆசிரியர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை?
- உண்மையை மறைத்து, நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று, மோடி அரசு மீது பழிசுமத்த முயற்சிக்கிறார் கனிமொழி.
பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் கற்பிக்க நிரந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என, பாராளுமன்றத்தில், மத்திய அரசு அளித்துள்ளதாக" தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியிருக்கிறார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும், மத்திய அரசில் 15 ஆண்டுகள் தி.மு.க. அங்கம் வகித்தபோதும் தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருந்தன.
அப்போது, தமிழ் கற்பிக்க நிரந்தர ஆசிரியர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை? அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி இதை கேட்டிருக்கலாமே? மத்திய அமைச்சர் பதவிக்காக, பசையான துறைகளுக்காக சோனியா காந்தியிடம் சண்டை போட்ட தி.மு.க., கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்களை நியமிக்க சண்டை போட்டிருக்கலாமே?
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை எனக்கூறும் கனிமொழி, இந்தப் பள்ளிகளில் எப்போது நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இருந்தனர்? தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் எப்போது நியமிக்கப்பட்டனர்? என்பதையும் சொல்ல வேண்டும்.
ஆனால், உண்மை என்ன தெரியுமா?
2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. கூட்டணி அரசு அமையும் முன்பு வரை, தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் கூட இல்லை. மோடி அவர்கள் பிரதமரான பிறகுதான், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளை விருப்பப் பாடமாக கற்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டது.
தமிழே இல்லாமல் இருந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் வந்ததே பிரதமர் மோடி ஆட்சியில்தான். இந்த உண்மையை மறைத்து, நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று, மோடி அரசு மீது பழிசுமத்த முயற்சிக்கிறார் கனிமொழி.
புதிய தேசிய கல்விக் கொள்கை முழுமையாக நடைமுறைக்கு வந்த பிறகு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், அந்தந்த மாநில மொழிப் பாடங்கள் கட்டாயமாக்கப்படும். அப்போது நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கொண்டு வந்ததே பிரதமர் மோடிதான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க. ஆட்சியில் தான், மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
- சிறுபான்மை வாக்கு வங்கிக்காக, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறை கூடாது.
சென்னை:
பாரதிய ஜனதா மகளிர் அணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தீபாவளிக்கு முந்தைய தினம் அக்டோபர் 23-ம் தேதி கார்வெடிப்பு சம்பவம் நடந்து நான்கு நாட்கள், கோவை பக்கமே எட்டிப் பார்க்காத அமைச்சர் செந்தில் பாலாஜி பா.ஜ.க. முழு அடைப்பு போராட்டம் அறிவித்ததும் கோவைக்கு பறந்து வந்திருக்கிறார்.
முதலில் இதனை 'சிலிண்டர் வெடிப்பு' எனக் கூறி மறைக்கப் பார்த்தார்கள். ஆனால், பா.ஜ.க. இந்த விவகாரத்தை மக்களிடம் கொண்டு சென்று அரசுக்கு அழுத்தம் கொடுத்த பிறகே உண்மை வெளிவந்தது.
ஜமேசா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 75 கிலோ வெடிப் பொருட்கள் உள்ளிட்ட தகவல்கள் மக்களின் அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தன.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உண்மையை வெளிப்படுத்திய பிறகே, காவல் துறையும் அதனை ஒப்புக் கொண்டிருக்கிறது. 'கோவையில் எந்த பதற்றமும் இல்லை. எல்லாம் இயல்பாகவே இருக்கிறது, பா.ஜ.க. தான் அரசியல் செய்து வருகிறது' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார்.
'கோவையில் 3,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகர், புறநகர் பகுதிகளில் சுமார் 40 சோதனை சாவடிகள் அமைத்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் கடந்தும் விசாரிக்க வேண்டி இருப்பதால்தான் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு முதல்-அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அதே பேட்டியில் கூறி இருக்கிறார்.
'கோவையில் எந்த பதற்றமும் இல்லை. இயல்பு நிலை தான் நீடிக்கிறது' என்றால் 3,000 போலீசார் ஏன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்? 40 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஏன் கண்காணிக்க வேண்டும்? மாநிலம் கடந்தும் ஏன் விசாரணை நடத்த வேண்டும்?
3,000 காவல் துறையினரை குவிக்க வேண்டிய அளவுக்கு, 40 சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிக்க வேண்டிய அளவுக்கு, மாநில காவல்துறையால் விசாரிக்க முடியாமல் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமானதால்தான், அக்டோபர் 31-ந்தேதி திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.
இந்த முழு அடைப்பு போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தான் அமைச்சர் கோவைக்கு வந்திருக்கிறார் என்பது அவரது பேட்டியிலிருந்து தெள்ளத்தெளிவாக தெரிகிறது. முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று வணிகர்கள், தொழில் துறையினரை அமைச்சர் மிரட்டி இருப்பதாகவும் தகவல் வருகிறது. முழு அடைப்பு போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்து இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. முழு அடைப்பு போராட்டம் என்பது ஜனநாயக வழியிலான அறப்போராட்டம். அமைச்சரின் மிரட்டலுக்கு எல்லாம் பா.ஜ.க. ஒருபோதும் அஞ்சாது. இந்த மிரட்டல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
அமைச்சர் இப்படி, மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை உயர் அதிகாரிகளை இரு பக்கமும் அமர வைத்துக் கொண்டு, பதற்றத்துடன் பேட்டி அளிப்பதற்குப் பதிலாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். கோவையில் ஏன் கார் வெடித்து சிதறியது? அதில் உயிரிழந்தவரின் வீட்டில் எதற்காக 75 கிலோ வெடிப்பொருட்களை வைத்திருந்தார்கள்?
இதுபோன்ற நிலை ஏன் தமிழகத்தில் ஏற்பட்டது? இதனை எப்படி தடுப்பது? என்பது பற்றியெல்லாம் அமைச்சர் சிந்திக்க வேண்டுமே தவிர, பா.ஜ.க. முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறதே என்று கவலைப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து அரசியல் நடத்த வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. பயங்கரவாதத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சி பா.ஜ.க. தான். இதுவரை 200 நிர்வாகிகளை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் இழந்திருக்கின்றன. 1998-ல் பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானியை கொல்வதற்காகத்தான், கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. அப்போதும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தான் இருந்தது.
இப்போதும் தி.மு.க. ஆட்சியில் தான், மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சிறுபான்மை வாக்கு வங்கிக்காக, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறை கூடாது. இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கோரிக்கை. அதனை வலியுறுத்தவே அக்டோபர் 31-ம் தேதி திங்கட்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ‘சமூக நீதி’ என்பது அனைவருக்கும் ‘சம நீதி’யை வழங்குவது தான். அதைத்தான் பா.ஜ.க. அரசு செய்து வருகிறது.
- தி.மு.க.வின் சமூக நீதி என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிரானதாகவே எப்போதும் உள்ளது.
கோவை:
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு ஆதரவு இருக்கும் அதே வேளையில் சில மாநில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
10 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பா.ஜ.க.வின் சமநீதி கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும் என பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (இடபிள்யு எஸ்) 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 103-வது திருத்தம் செல்லும் என்று, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பானது பொது பட்டியலில் உள்ள ஏழைகளுக்கு காலங்காலமாக இழைக்கப்பட்ட அநீதிக்கு மருந்தாக அமைந்துள்ளது.
இந்த தீர்ப்பை கடுமையாக எதிர்த்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றும், தமிழக மண்ணில் இருந்து, சமூக நீதிக்கான குரலை, நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுவரை இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராத, பொதுப்பட்டியலில் உள்ள ஏழைகள், உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியாமலும், அரசு வேலைவாய்ப்புகளை பெற முடியாமலும் இருந்தனர்.
இந்த சமூக அநீதியை சரி செய்யவே, கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது.
'சமூக நீதி' என்பது அனைவருக்கும் 'சம நீதி'யை வழங்குவது தான். அதைத்தான் பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. ஆனால், தி.மு.க.வின் சமூக நீதி என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிரானதாகவே எப்போதும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக வெறுப்புணர்வை விதைத்து, அதன் மூலம் அரசியல் நடத்தி வரும் கட்சிதான் தி.மு.க.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் பிராமணர்கள் மட்டும் பயன்பெறவில்லை. அப்படியொரு பிரசாரத்தை தி.மு.க. செய்து வருகிறது. தமிழகத்தில் பிராமணர்கள் மட்டுமல்லாது, வேளாளர், முதலியார், செட்டியார், ரெட்டியார், நாயுடு உள்ளிட்ட 60-க்கும் அதிகமான சமூகத்தினர், இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்குள் வருகின்றனர். தங்களது அரசியல் ஆதாயத்திற்காக இந்த சமூகத்தினரையும் பலி கொடுக்க தி.மு.க. தயாராகிவிட்டது.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டை, உயர் ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்று அதனை எதிர்க்கும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் திரும்ப திரும்ப கூறி வருகின்றன. சட்டத்தில் எங்கும் உயர் ஜாதி ஏழைகள் என்று குறிப்பிடப்படவில்லை.
இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராத சமூகங்களை, உயர் ஜாதி என்று சட்டம் அழைக்கவில்லை. பொதுப்பட்டியலுக்குள் வைத்துள்ளது. உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று எதுவும் கிடையாது. சட்டத்தில் இல்லாத ஒன்றை திரும்பத் திரும்ப கூறுவது கடும் கண்டனத்திற்குரியது.
அனைவருக்கும் சம நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய பா.ஜ.க. அரசு உறுதியாக உள்ளது. அதனால் தான் பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என அனைவருக்கும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்த சிக்கல்கள் பலவற்றுக்கு மத்திய பா.ஜ.க. அரசு தீர்வு கண்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 'எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்' என்பதுதான் பா.ஜ.க. அரசின் கொள்கை.
10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் மீது இரு அவைகளிலும் விவாதத்திற்கு வந்தபோது, அதனை தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரித்தன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் காங்கிரஸ் வரவேற்றுள்ளது. அப்படியெனில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் சொல்ல வருகிறாரா என்பது தெரியவில்லை.
10 சதவீத இட ஒதுக்கீடு பற்றி தவறாக பிரசாரம் செய்யாமல், காலங்காலமாக, இட ஒதுக்கீடு கிடைக்காமல், பாதிக்கப்பட்டு வந்த ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பெறுவதற்கான உரிய சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






