என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமல்: இனிப்பு கடையில் விலை குறைவு குறித்து கேட்டறிந்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
    X

    ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமல்: இனிப்பு கடையில் விலை குறைவு குறித்து கேட்டறிந்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

    • வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.
    • நமது இந்தியாவும் வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.

    கோவை:

    ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் டி.வி, ஏசி உள்பட பல்வேறு பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஜி.எஸ்.டி. வரி குறைப்பை தொடர்ந்து கோவையில் உள்ள டீக்கடை, உணவு பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் பொருட்கள் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அங்கு நேரில் சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.

    காந்திபுரத்தில் உள்ள ஒரு இனிப்பு கடைக்கு சென்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., ஜி.எஸ்.டி. வரி குறைப்புக்கு பிறகு அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

    அப்போது கடையின் ஊழியர், முன்பு ஒரு கிலோ மைசூர் பாகு ரூ.420-க்கு விற்பனையானது. ஜி.எஸ்.டி குறைப்புக்கு பிறகு ரூ.380-க்கு விற்பனையாகி வருகிறது.

    சிப்ஸ் ஒரு கிலோ ரூ.640-க்கு விற்பனையாகியது. தற்போது ஒரு கிலோ சிப்ஸ் ரூ.540-க்கு விற்பனையானது. விலை குறைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    வாடிக்கையாளர்களும் சந்தோஷமாக பொருட்கள் வாங்கி செல்கின்றனர். நாங்களும் மன நிறைவோடு இருக்கிறோம். 2 பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்கள் தற்போது விலை குறைந்ததை தொடர்ந்து 3 பொருட்கள் வாங்கி செல்கின்றனர் என்றார்.

    அப்போது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. இதற்கு நடவடிக்கை எடுத்தது யார் தெரியுமா? என கடையின் ஊழியரிடம் கேட்டார். அதற்கு அவர் பிரதமர் மோடி என்றார். உடனே அவருக்கு நன்றி கூறுங்கள் என அவர் தெரிவித்தார். கடை ஊழியரும் நிச்சயமாக பிரதமருக்கு நன்றி. பிரதமர் வந்த பிறகு நிறைய முயற்சிகள் எடுத்து வருகிறார். நமது இந்தியாவும் வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.

    அதன்பின் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கருத்து கேட்டறிந்தார். அப்போது ஒரு வாடிக்கையாளர், நான் மோட்டார் சைக்கிள் வாங்க வாகன ஷோரூமுக்கு சென்றேன். அவர்கள் இன்னும் சில நாட்களில் ஜி.எஸ்.டி. வரி குறைந்துவிடும். அதன்பின்னர் வந்து எடுத்து கொள்ளுங்கள் என்றனர். மேலும் இந்த கடையில் பொருட்கள் வாங்கும் போது, நேற்றை விட பொருட்கள் விலை குறைத்து விற்கப்படுவதகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறும்போது, பிரதமரின் ஒரே நோக்கம் விலை குறைப்பு என்பது சாதாரண மக்களிடம் சென்றடைய வேண்டும் . எவ்வளவு குறைக்கப்பட்டு உள்ளது. 5 மற்றும் 15 சதவீதம் என்று குறைந்துள்ளது. அது மக்களுக்கு தெரியவேண்டும் என அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×