என் மலர்
நீங்கள் தேடியது "பாஜக"
- திருப்பரங்குன்றம் மலைப்பாதை முன்பு கூடியவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தல்
- கலைந்து செல்லுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது
திருவண்ணாமலை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன், முருகன் மற்றும் விஷ்ணு கோயில்களில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை கார்த்திகை தீபம். நேற்று கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டது. அதுபோல மதுரை திருப்பரங்குன்றத்திலும் ஏற்றப்பட்டது.
ஆனால் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு மாறாக வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவியது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. போலீசார், போராட்டக்காரர்கள் தள்ளுமுள்ளு என தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவ சிஐஎஸ்எஃப் வீரர்கள் மலைமீது ஏற அனுமதி மறுக்கப்பட்டது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டது. இதில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்து, தனி நீதிபதியே வழக்கை விசாரிப்பார் என உத்தரவிட்டனர். அதனைத்தொடர்ந்து வழக்கை மீண்டும் கையிலெடுத்த நீதிபதி, 144 தடை உத்தரவை ரத்து செய்து மீண்டும் தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டார். காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் பாஜவினர் மற்றும் இந்து அமைப்பினர் சிலர் தீபமேற்ற மலைமீது ஏற முயன்றனர். ஆனால் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக அவர்களிடம் போலீசார் தெரிவித்து மலையேற அனுமதி மறுத்தனர். இதனால் மீண்டும் போலீசாருக்கும் - திருப்பரங்குன்றம் மலைப்பாதை முன்பு கூடியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் கலையவில்லை என்றால் கைது நடவடிக்கை தொடரும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விரைந்தனர். நயினார் நாகேந்திரனும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் கலைந்து செல்லுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுக்கும் ஆத்திக சக்திகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி
- அனைத்து இல்லங்களிலும் அகல் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் மீண்டும் தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை வரவேற்பதாக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை இதயம் நெகிழ வரவேற்கிறேன்!
தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுக்கும் ஆத்திக சக்திகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியைப் பறைசாற்றும் விதம் நூற்றாண்டு நிகழ்வு அரங்கேறியுள்ளது. முருக பக்தர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முருக பக்தர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இதைக் கொண்டாடும் விதமாக, அனைத்து இல்லங்களிலும் அகல் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என்றும் நம் இல்லங்களில் நாளை காலை "வெற்றிவேல்! வீரவேல்!'' என மாக்கோலமிட வேண்டுமெனவும் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
வெற்றிவேல்! வீரவேல்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- தி.மு.க. அரசு தோல்வி பயத்தில் நடுநடுங்கி போய் உள்ளது.
- 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு அவசியமே இல்லை.
நெல்லை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பிரசார பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வரவேற்பு எங்கள் கூட்டணியின் வெற்றிக்கான அறிகுறி ஆகும்.
கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு கிராமத்தில் சுற்றுப் பயணம் சென்றபோது அங்கு மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. ஆரம்ப சுகாதார நிலைய வசதி கூட இல்லை. வீடுகளில் தீபம் ஏற்றுவது போலவே கார்த்திகை நாளன்று கோவில்களிலும் தீபம் ஏற்றப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றுவதில் யாருக்கு என்ன பிரச்சனை இருக்கிறது? முதலில் அந்த மலைக்கு பிரச்சனை செய்தார்கள். ஆனால் குன்றம் குமரனுக்கு என தீர்ப்பு வந்தது .
முதலமைச்சரின் காவல்துறை எந்த வேலையும் செய்யவில்லை. கோவில்களுக்கு எதிரான வேலை என்றால் முதல் ஆளாக வந்து விடுகிறார்கள். நேற்று திருப்பரங்குன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அறநிலையத்துறை சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்துமேல் முறையீடு செய்துள்ளார்கள். பிரச்சனையை உருவாக்க வேண்டும். கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறது.
வாக்கு வங்கியை குறிவைத்து இது போன்ற நடவடிக்கையை தி.மு.க அரசு மேற்கொள்கிறது. தி.மு.க. அரசு ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றினால் கலவரம் வரும் என்று பேசுகிறார். அதற்கான வாய்ப்பே இல்லை.
தீபம் ஏற்றுவதற்கு இஸ்லாமியர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு 2 மதத்தினரும் ஒன்றாகவே இருக்கின்றனர். முதலமைச்சரின் பிரித்தாலும் சூழ்ச்சியினாலேயே தற்போது இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானத்தை வேரறுப்போம் என்று கூறியுள்ளார். அதனை முருகன் பார்த்துக் கொள்வார். இன்று 3 மணி வரை நேரம் இருக்கிறது. நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பரணி தீபத்தை மலை மீது ஏற்றுவோம். இந்த தீர்ப்புக்கு அறநிலையத்துறை தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தி.மு.க. அரசு தோல்வி பயத்தில் நடுநடுங்கி போய் உள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு அவசியமே இல்லை. அவ்வாறு பிறப்பித்தாலும் 3 பேர் வரை செல்வதற்கு அனுமதி உள்ளது.
ஓ.பி.எஸ். டெல்லிக்கு சென்று வந்தது தெரியும். ஆனால் எதற்காக சென்று வந்தார் என்பது எனக்கு தெரியாது. தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும். அதனை வரவேற்கும் கட்சிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நமது கொடி பறக்கும். இனி யாருடனும் ரகசிய சந்திப்புகள் என்பது கிடையாது. நேரடி சந்திப்பு தான் இருக்கும். தமிழக வெற்றிக் கழகத்தில் தி.மு.க. அமைச்சர்கள் சேருவார்கள் என்று ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். அதே போல் பா.ஜ.க.விற்கும் வருவார்களா? என்று கேட்கிறீர்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
- பாஜக கூட்டணியில் இடம்பெற்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
- செங்கோட்டையன் எங்களைவிட்டு போய்விட்டார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க. தொண் டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கி தனி அணியாக செயல் பட்டு வருகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் பாஜவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு எடப்பாடி தலைமையிலான அதிமுக தற்போது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் கூட்டணி வைத்துள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்ட பின் பாஜக ஓபிஎஸ்-ஐ கண்டுகொள்ளாமல் தவிர்த்து வந்தது. ஒரு கட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் சசிகலா, தினகரன் ஆகியிருடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதற்கிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு மூத்த தலைவர் செங்கோட்டையன் அண்மையில் அதிரடியாக விஜயின் தவெகவில் இணைந்தார்.
இந்த சூழலில் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாகி உள்ள சூழலில் ஓபிஎஸ் டெல்லி பயணப்பட்டுள்ளார். அங்கு பாஜகவின் அமித் ஷாவை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.
அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் கூறினார். இந்த சந்திப்பின் பின் சென்னை திரும்பியுள்ள ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழக அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். செங்கோட்டையன் எங்களைவிட்டு போய்விட்டார். செங்கோட்டையனை பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை" என்றார்.
- 12 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 10 மையங்களில் தொடங்கியது.
- பாஜக வேட்பாளர்கள் சுமன்குமார் குப்தா, தனிகா ஜெயின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
டெல்லி சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆம்ஆத்மியிடம் இருந்து ஆட்சியை கைப் பற்றியது.
டெல்லி மாநகராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ந்தேதி நடைபெற்றது. இதில் 9 வார்டு பாஜக வசமும், எஞ்சிய 3 வார்டுகள் ஆம்ஆத்மி வசமும் இருந்தன.
12 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 10 மையங்களில் தொடங்கியது.
இதில் பா.ஜனதா, ஆம் ஆத்மி ஆகியவை தலா 2 வார்டுகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸ், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் தலா 1 வார்டுகளை கைப் பற்றியது. மற்ற சில வார்டு களில் பா.ஜனதா முன்னி லையில் உள்ளன.
பாஜக வேட்பாளர்கள் சுமன்குமார் குப்தா, தனிகா ஜெயின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
- ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும்.
- பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மாடலால் ஆட்சி மிக சிறப்போடு செயல்பட்டு கொண்டிருப்பதால் அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் தமிழ்நாட்டில் எடுபடாது.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார். ஆளுநர் பதவியை எல்லாம் எதிர்பார்த்து அவருக்கு கிடைக்காமல் இருந்ததால் நானும் கட்சியில் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ள என்னை 'பி' டீம் என்று கூறியுள்ளார்.
நாங்கள் எது பி டீம், எது 'சி' டீம், எது சிலீப்பர் செல் என்றெல்லாம் தெரிவித்து விட்டோம். நாங்கள் உண்மையான திராவிட மாடல் ஆட்சிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் துணை நிற்பவர்கள். அதில் என்றும் மாற்றமும் கிடையாது.
ஆதவ் அர்ஜூனாவின் ஜோசியத்திற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. எங்கள் அமைச்சர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் பார்க்கிற கிளி ஜோசியதற்கெல்லாம் பதில் இல்லை.
நான் தி.மு.க.விற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பழைய பல்லவியையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு புதிய ராகம் கிடைக்கவில்லை. ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும். பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அன்றைக்கு சாதாரண உறுப்பினர், மாவட்டச் செயலாளர்தான். ஆனால் நாங்கள் நல்ல பொறுப்பில் இருந்தவர்கள். அதனால் எடப்பாடி பழனிசாமியை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதியது கிடையாது என்றார்.
- இந்துக்கள் எத்தனை கடவுள்களை நம்புகிறார்கள்? மூன்று கோடி கடவுள்களா? ஏன் இவ்வளவு பேர் இருக்கிறார்கள்?
- கடவுளின் புகைப்படத்துடன் எதையாவது தேடுபவர்கள் இந்துக்கள் அல்ல, பிச்சைக்காரர்கள்.
இந்து தெய்வங்கள் குறித்து கேலியாக பேசியதாக, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரேவந்த் ரெட்டி மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் பாஜக மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "இந்துக்கள் எத்தனை கடவுள்களை நம்புகிறார்கள்? மூன்று கோடி கடவுள்களா? ஏன் இவ்வளவு பேர் இருக்கிறார்கள்? திருமணமாகாதவர்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார் - அனுமன். இரண்டு முறை திருமணம் செய்பவர்களுக்கு இன்னொரு கடவுள் இருக்கிறார். மது அருந்துபவர்களுக்கு இன்னொரு கடவுள் இருக்கிறார். கோழி பலிக்கு ஒன்று இருக்கிறது; பருப்பிற்கும் அரிசிக்கும் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு கடவுள் இருக்கிறார்," எனக் கூறினார்.
ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்து அம்மாநில எதிர்க்கட்சியினரிடமிருந்து கண்டனங்களை பெற்றுவருகிறது. அவரின் இந்த பேச்சு இந்து நம்பிக்கைகளை அவமதித்ததாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதுகுறித்து பாஜக தலைவர் பிரவீன் கூறுகையில், ரெட்டியின் கருத்துக்களால் மாநிலம் முழுவதும் உள்ள இந்துக்கள் வெட்கப்படுகிறார்கள். காங்கிரசுக்கும், ரேவந்த் ரெட்டிக்கும் வெட்கமில்லை. எல்லா கூட்டங்களிலும், முஸ்லிம்களால்தான் காங்கிரஸ் உருவானது என்று கூறுகிறார்கள். முதலமைச்சர் மன்னிப்பு கேட்டு தனது கருத்துகளை திரும்பப் பெற வேண்டும்," என்று அவர் கூறினார்.
பி.ஆர்.எஸ் தலைவர் ராகேஷ் ரெட்டி அனுகுலா, இந்து தெய்வங்களை கேலி செய்வது இப்போதெல்லாம் அனைவருக்கும் ஒரு ஃபேஷனாகிவிட்டது என்றார். மேலும், கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ரேவந்த் ரெட்டி பேசுவது துரதிர்ஷ்டவசமானது. அவர் உடனடியாக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்து கடவுள்கள் குறித்த தனது கருத்துடன் ரேவந்த் ரெட்டி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, பாஜகவைத் தாக்கி, "கடவுளின் புகைப்படத்துடன் எதையாவது தேடுபவர்கள் இந்துக்கள் அல்ல, பிச்சைக்காரர்கள்" என கூறியிருந்தார். "கடவுள் கோயிலில் இருக்க வேண்டும். பக்தி இதயத்தில் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் உண்மையான இந்துக்கள். பாஜக தலைவர்கள் சாலைகளில் கடவுளின் புகைப்படத்தை வைத்து வாக்கு சேகரிக்கிறார்கள்," என பேசியிருந்தார். இதற்கும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன.
- யார் எந்த கட்சிக்கு சென்றாலும் 2026-ல் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும்.
- தமிழ்நாட்டில் கூட்டணியை பொறுத்துதான் ஆட்சி அமையும் என எப்போதும் சொல்லமுடியாது.
மதுரையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன்,
"பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக ஆட்சி அமைக்கவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது. இந்த கூற்று ஏற்றுகொள்ள முடியாதது. தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அல்ல, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் அமித்ஷா கூறியுள்ளார்.
அதிமுகவின் உட்கட்சி பூசல் என்பது வெறும் கண்துடைப்பு. தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்கள், அதை நிறைவேற்றினார்களா? என்பதைத்தான் பார்க்கவேண்டும். திமுக வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? எல்லா இடங்களிலும் போதைப்பொருள். இதையெல்லாம் தாண்டி மக்கள் ஓட்டுப் போடுவார்களா?
யார் எந்த கட்சிக்கு சென்றாலும் 2026-ல் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். மக்கள் மனதில் மாற்றம் வந்துள்ளது. பீகார் போல இங்கும் மாற்றம் நிகழும். திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் அனைத்தும் எங்களுக்குதான் வரும். தமிழ்நாட்டில் கூட்டணியை பொறுத்துதான் ஆட்சி அமையும் என எப்போதும் சொல்லமுடியாது. எண்பது வரலாறுகளில் கூட்டணி இல்லாமல் எம்ஜிஆர் எவ்வாறு வெற்றிப்பெற்றார்? அண்ணாமலை எங்கள் கட்சியில் இருந்தவர்.
கட்சியின் மாநிலத்தலைவராக இருந்தவர். அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கமாட்டார். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் எடப்பாடி தலைமையில் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். கலவரத்தை தூண்டக்கூடிய கதாநாயகனாக சு.வெங்கடேசன் இருப்பார் என சந்தேகமாக இருக்கிறது. அப்படி கலவரம் நிகழ்ந்தால் சு. வெங்கடேசன்தான் பொறுப்பு. தீபம் ஏற்றுவதில் சு. வெங்கடேசனுக்கோ, அவரது குடும்பத்திற்கோ, அவர்சார்ந்த கட்சிக்கோ எதாவது பிரச்சனை இருக்கிறதா?" என தெரிவித்தார்.
- எஸ்.ஐ.ஆரில் எந்தவிதமான குளறுபடியும் இல்லை.
- எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை.
தென்காசி:
ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நோக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக காசி தமிழ் சங்கமம் 4.0 என்ற நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.
இதையொட்டி தெற்கே உள்ள காசியாம் தென்காசியில் இருந்து வடக்கே உள்ள காசி நோக்கி அகத்திய முனிவர் வாகன பயணம் இன்று தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி மூலம் வாகன பயணத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஜோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, தென்காசி பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ண முரளி என்கிற குட்டியப்பா எம்.எல்.ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாரணாசிக்கு புறப்பட்ட 15 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு எங்கு சென்றாலும் தமிழ் மொழி பற்றியும் அதன் கலாச்சாரத்தை பற்றியும் பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வாழும் பாண்டிய மன்னராக பாரத பிரதமர் செயல்பட்டு காசியில் தமிழ் சங்கம் மாநாட்டினை 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
எஸ்.ஐ.ஆரில் எந்த விதமான குளறுபடியும் இல்லை. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கி விடக்கூடாது என்பதற்காக தான் தி.மு.க. போராடுகிறது.
மேலும், 50 வருட கால அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து விட்டு, அப்போது நல்லாட்சி இல்லாதது போல் தற்போது த.வெ.க.வின் மூலம் நல்லாட்சி கொடுப்பேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளது வருத்தமாக உள்ளது.
பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் சக்தியோடு உள்ளதால், பொங்கலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையும். அ.தி.மு.க.வில் இருந்து தற்போது செங்கோட்டையன் த.வெ.க.விற்கு சென்று உள்ள நிலையில், அங்கிருந்து எங்கு செல்வார் என்று தெரியாது.
எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் கூட அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் சக்தி கை ஓங்கி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
- மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் மத்திய அரசு ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பியது.
- அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு ஆய்வு செய்த பிறகு பாதிப்பு விவரங்கள் தெரியவரும்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு பேரணியை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தஞ்சையில் எப்போதெல்லாம் மழையால் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக ஓடிவந்து ஆய்வு செய்து நிவாரணம் அளிப்பதில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெய்த அடை மழை காலத்தில் துணை முதலமைச்சர் விரைந்து வந்து பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தினால் தான் கொள்முதல் செய்ய முடியும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் மத்திய அரசு ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பியது.
அந்தக் குழுவினரும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தனர். ஆனால் ஈரப்பதம் தளர்வு செய்ய முடியாது என மத்திய அரசு கூறியது. இதிலிருந்தே மத்திய பா.ஜ.க அரசு தமிழக விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருவது தெளிவாக தெரிகிறது.
தற்போது பெய்த தொடர் மழையால் ஆங்காங்கே மழை சேதம் இருக்கிறது. இதுகுறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு ஆய்வு செய்த பிறகு பாதிப்பு விவரங்கள் தெரியவரும். அதன் அறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பித்த பிறகு அவர் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார் என்றார்.
- சர்தார் படேலின் பெருமைகளை மறைக்க காங்கிரஸ் முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
- மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.
குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடைபெற்ற சர்தார் படேல் 150 ஆண்டு நிகழ்வில் மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி. நட்டா காங்கிரசை காரசாரமாக விமர்சித்துக்கொண்டிருந்தார். சர்தார் படேலின் பெருமைகளை மறைக்க காங்கிரஸ் முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போது மேடைக்கு முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மற்ற அதிகாரிகள் தூக்கிச் சென்றனர். ஆனால் நட்டா இவை எதையும் பொருட்படுத்தாமல் தனது உரையை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இந்த வீடியோவை எக்ஸில் பகிர்ந்துள்ள இந்திய இளைஞர் காங்கிரஸ், ஜே.பி. நட்டா பேசிக்கொண்டிருந்தபோது, பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் மேடை அருகே மயங்கி விழுந்துள்ளார்.
இருப்பினும், நட்டா தனது பேச்சை நிறுத்தவில்லை .மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.
கண் முன்னால் ஒருவர் விழுந்ததைக் கூடப் பொருட்படுத்தாத பாஜக தலைவர்கள், பணவீக்கம், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள் போன்ற பொதுமக்களின் கஷ்டங்களைப் பற்றி எப்படி அக்கறை செலுத்துவார்கள்?
அதிகாரம் மட்டுமே முக்கியம், பொதுமக்களின் கஷ்டங்கள் ஒரு பொருட்டல்ல என்பதே பாஜகவின் யதார்த்தம். பாஜக மனித நேயத்தை விற்றுவிட்டது என்று சாட்டியுள்ளது.
இதற்கிடையே மயங்கி விழுந்தவர், நீண்ட நேரம் நின்றதால் சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ உதவிக்கு பின் அவர் உடல்நிலை சீரானதாக கூறப்படுகிறது.
- தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா?
- அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா?
தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!
அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்!
வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் ஒன்றிய பா.ஜ.க. அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்!






