என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டையன்"

    • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    இந்த நிலையில், த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.


    • எஸ்.ஐ.ஆரில் எந்தவிதமான குளறுபடியும் இல்லை.
    • எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை.

    தென்காசி:

    ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நோக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக காசி தமிழ் சங்கமம் 4.0 என்ற நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.

    இதையொட்டி தெற்கே உள்ள காசியாம் தென்காசியில் இருந்து வடக்கே உள்ள காசி நோக்கி அகத்திய முனிவர் வாகன பயணம் இன்று தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி மூலம் வாகன பயணத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஜோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, தென்காசி பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ண முரளி என்கிற குட்டியப்பா எம்.எல்.ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாரணாசிக்கு புறப்பட்ட 15 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு எங்கு சென்றாலும் தமிழ் மொழி பற்றியும் அதன் கலாச்சாரத்தை பற்றியும் பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வாழும் பாண்டிய மன்னராக பாரத பிரதமர் செயல்பட்டு காசியில் தமிழ் சங்கம் மாநாட்டினை 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

    எஸ்.ஐ.ஆரில் எந்த விதமான குளறுபடியும் இல்லை. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கி விடக்கூடாது என்பதற்காக தான் தி.மு.க. போராடுகிறது.

    மேலும், 50 வருட கால அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து விட்டு, அப்போது நல்லாட்சி இல்லாதது போல் தற்போது த.வெ.க.வின் மூலம் நல்லாட்சி கொடுப்பேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளது வருத்தமாக உள்ளது.

    பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் சக்தியோடு உள்ளதால், பொங்கலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையும். அ.தி.மு.க.வில் இருந்து தற்போது செங்கோட்டையன் த.வெ.க.விற்கு சென்று உள்ள நிலையில், அங்கிருந்து எங்கு செல்வார் என்று தெரியாது.

    எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் கூட அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் சக்தி கை ஓங்கி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

    • கெடுதல் செய்தவர்களை ஆண்டவர் பார்த்துக்கொள்வார் என இபிஎஸ் விமர்சனம்
    • அனைத்திற்கும் மக்கள் பதில் சொல்வார் என செங்கோட்டையன் பதில்

    "எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை" என தவெக நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

    கோவை விமான நிலையத்தில், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "அவர் பெரிய தலைவர் அல்ல; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. என்னை பொறுத்தவரை தெளிவாக உள்ளேன். மக்கள் பதில் அளிப்பார்கள்" என தெரிவித்தார். முன்னதாக அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் இணைந்த நிலையில், நேற்று கோபிச்செட்டிபாளைய பிரச்சாரத்தில் அவரை தாக்கி பேசியிருந்த எடப்பாடி பழனிசாமி,

    "வாக்குகளை கேட்க வீடு வீடாக வந்தவர், ராஜினாமா செய்ய மக்களிடம் அனுமதி கேட்டாரா?. அவரை அடையாளப்படுத்தியது, பதவி கொடுத்தது அதிமுக. ஆனால் இன்று மாற்றுக்கட்சிக்கு சென்றிருக்கிறார். இவரா உங்களுக்கு நன்மை செய்ய போகிறார்? இவர் மக்கள் மீது அக்கறை கொண்டவரா? எடுத்த எடுப்பில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. கட்சியின் விதிமுறைகளை மீறியதாலேயே நீக்கம் செய்தோம். கடந்த 2-3 ஆண்டுகளாகவே உள்ளிருந்தே கட்சிக்கு துரோகம் செய்தவர். நல்லது செய்தவர்களுக்கு நல்லதே நடக்கும். கெடுதல் செய்தவர்களை ஆண்டவர் பார்த்துக்கொள்வார்." என விமர்சித்துப் பேசியிருந்தார்.

    இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு தவெக நிர்வாகி செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

     

    • இபிஎஸ் மனதில் அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் முழுக்க நிறைந்திருப்பது அமித்ஷா மட்டும்தான்.
    • அடிமைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    ஈரோடு எழுமாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், அமித்ஷா ஆலோசனைபடியே செங்கோட்டையன் வேறு கட்சியில் சேர்ந்துள்ளார். செங்கோட்டையன் கட்சி மாறவில்லை. ஒரே கட்சியின் வேறொரு கிளைக்கு மாறி இருக்கிறார்.

    தனது கட்சி பெயரில் உள்ள திராவிடத்தை மறந்துவிட்டார் இபிஎஸ். ஆளுநர் திராவிடத்தை அவமதித்தபோது இபிஎஸ் எனது எதிர்ப்பும் கூறவில்லை. 

    இபிஎஸ் மனதில் அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் முழுக்க நிறைந்திருப்பது அமித்ஷா மட்டும்தான்.

    அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூட பாஜகவிடம் எந்தக் கட்சியில் சேரலாம் என அனுமதி வாங்கி தான் சேர்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் அதிமுக உட்பட பல கட்சிகளுக்கு அமித்ஷா வீடுதான் தலைமை அலுவலகமாக உள்ளது.

    அடிமைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்." என்று தெரிவித்தார் 

    • வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
    • அதிமுகவிற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்.

    கோபிச்செட்டிப்பாளையத்திற்கு பிரசாரத்திற்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் கூட்டத்தில், கோபிச்செட்டிப்பாளையத்தில் LED திரையில் வீடியோக்களை காண்பித்து, செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

    அப்போது மக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது கோபி தொகுதி முதன்மை தொகுதியாக மாற நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோபிசெட்டிபாளையமே அதிரும் வகையில் கூட்டம் கூடியுள்ளது. யார் யாரோ கனவு காண்கிறார்கள், அந்த கனவை அனைத்து மக்களும் வெள்ளமாக திறண்டு நொறுக்கிவிட்டீர்கள்.

    50 ஆண்டுகளாக போராடி வந்த அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியது. மாநில நிதியிலேயே அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றினேன்.

    கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு எந்த திட்டமும் செய்யப்படவில்லை.

    டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது ஓடோடி சென்று பார்த்தேன். விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் ஓடோடி சென்று உதவி செய்த இயக்கம் அதிமுக.

    இந்தத் தொகுதியில் ஒருவர் எம்எல்ஏவாக இருந்தார். நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஓட்டு வாங்குவதற்கு உங்களை வந்து அணுகினார். ஆனால் ராஜினாமா செய்வதற்கு உங்களை கேட்டாரா?

    அதிமுகவிற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்.

    அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கான நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஆனால் இந்தத் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ பங்குபெறவில்லை

    அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அவர் காரணம் சொன்னார்.

    ஆனால் இப்போது யார் படத்தை வைத்துக்கொண்டு மாற்றுக் கட்சியில் சேர்ந்தீர்கள்?

    உங்களுக்கு அடையாளம் கொடுத்தது அதிமுக. பதவி கொடுத்தது அதிமுக.

    எம்ஜிஆர் ஆட்சியில் MLA-வாக இருந்தார். ஜெயலலிதா மற்றும் எனது ஆட்சியில் அமைச்சராக இருந்தார். அப்பொதெல்லாம் தூய்மையான ஆட்சி தரவில்லையா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுப்போம்.
    • பா.ஜ.க.வால் அ.தி.மு.க உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. அந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு ஆய்வு அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவோம்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மீதான சந்தேகங்களை எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் எழுப்பும்போது இதன் மீதான விவாதம் தீவிரமாக இருக்கும்.

    எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்யும் சூழல் உருவாகி இருப்பது கவலைக்குரியது.

    இந்த நேரத்தில் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை உறுதி செய்ய இந்திய அரசு, இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் உண்மையான பூர்வகுடிகளின் வாக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது.

    கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுப்போம்.

    செங்கோட்டையன் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் என்றாலும், தற்போதைய அ.தி.மு.க சூழலில் அவரது நிலை அந்தக் கட்சிக்கு சாதகமானது அல்ல. த.வெ.க.வில் அவர் இணைந்தது அவரது சொந்த விருப்பம்.

    பா.ஜ.க.வால் அ.தி.மு.க உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு சென்றது பா.ஜ.க நடத்திய சித்து விளையாட்டின் விளைவு என்றார். 

    • எந்தப் படம் சட்டையில் வைத்திருந்தாலும் என் தலைவர் ரசிப்பார்.
    • அ.தி.மு.க. எங்குள்ளது என்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டனர் என தெரிவித்தார்.

    ஈரோடு:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு, த.வெ.க. உயர்மட்ட மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, த.வெ.க.வில் இணைந்த பின் சொந்த ஊரான கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கோபிச்செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்கள் மற்றும் த.வெ.க.வினர் மத்தியில் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

    தமிழ்நாட்டை நாளை ஆளப்போகும் தலைவர் விஜய். விஜய் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

    எந்தப் படம் சட்டையில் வைத்திருந்தாலும் என் தலைவர் ரசிப்பார். எல்லோரையும் அரவணைப்பவர் விஜய்.

    நான் பார்த்த முதல் தலைவர் எம்.ஜி.ஆர், 2-வது தலைவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளே தமிழகத்தை ஆள வேண்டுமா? அல்லது புதிய தலைமுறையினர் ஆள வேண்டுமா?

    எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியாக இருந்ததைபோல் விஜய்க்கும் வழிகாட்டியாக இருப்பேன்.

    காலங்கள் கனிந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் நம்முடைய கூட்டணி வலிமையாக மாறும். நம்மோடு இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் வருவார்கள்.

    அ.தி.மு.க. எங்குள்ளது என்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டனர். எடப்பாடி பழனிசாமி ஒரு தேர்தல் வெற்றியாவது பெற்றிருக்கிறாரா? என்றார்.

    • செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
    • செங்கோட்டையனுக்கு பிறகு நானும் த.வெ.க.வில் இணைவதாக சொல்கின்றனர்.

    சென்னை:

    50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், புலிக்கு வாலாக இருக்கலாம், எலிக்கு தலையாக இருக்கக்கூடாது என செங்கேட்டையன் த.வெ.க.வில் இணைந்தது குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

    மேலும் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. செங்கோட்டையனுக்கு பிறகு நானும் த.வெ.க.வில் இணைவதாக சொல்கின்றனர். மூச்சு உள்ள வரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன் என்று ஜெயக்குமார் கூறினார். 

    • த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு இழுத்து வர வேண்டும் என்பது தான் செங்கோட்டையனுக்கு அசைன்மென்ட்.
    • தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் புனிதமான ஆட்சி தான் நடைபெறுகிறது.

    புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல் தான் செங்கோட்டையன்.

    * த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு இழுத்து வர வேண்டும் என்பது தான் செங்கோட்டையனுக்கு அசைன்மென்ட்.

    * அமித் ஷா அழைத்தால் ஓடுவார். இன்றைக்கும் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கிக்கொண்டிருப்பவர்.

    * செங்கோட்டையனை பா.ஜ.க. ஏமாற்றி இருந்தால் அவர் ஏன் த.வெ.க.வுக்கு செல்ல வேண்டும்?

    * செங்கோட்டையன் ராஜினாமா செய்யும் முடிவிற்கு வந்த பிறகு நட்பு ரீதியில் வாருங்கள் என்று சேகர்பாபு அழைத்து இருக்கலாம்.

    * தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் புனிதமான ஆட்சி தான் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜயுடன் கலந்து பேசி என்ன முடிவுகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அவர் கருத்தை கேட்டுச் சொல்கிறேன்.
    • இன்று மக்கள் இருக்கின்ற மனநிலையில் அவர்களுக்கு ஒரு புதிய இயக்கம் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வில் இணைபவர்கள் குறித்து வெளியே சொன்னால் பிரச்சனை உருவாகும். நேற்று தான் கட்சியில் இணைந்துள்ளேன். இனிதான் பிரசாரம் செய்ய வேண்டும். இன்று சொந்த நிகழ்வுக்காக கோவை செல்கிறேன்.

    அதில் கலந்துகொண்டு வந்த பின், விஜயுடன் கலந்து பேசி என்ன முடிவுகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அவர் கருத்தை கேட்டுச் சொல்கிறேன்.

    நான் எப்படி செயல்பட்டு இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எந்த நிலையில் நின்று பாடுபடுவேன் என்று நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழகத்தில் வெற்றி நடை போடுவதற்கு அயராது உழைப்பேன்.

    விஜயுடன் இணைந்து கோபி செட்டிபாளையத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வது தொடர்பாக விரைவில் அவருடன் கலந்து பேசி எப்படி பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்வேன்.

    இன்று மக்கள் இருக்கின்ற மனநிலையில் அவர்களுக்கு ஒரு புதிய இயக்கம் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. மக்களால் நேசிக்கப்படுகிற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்றைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.

    2026-ம் ஆண்டு மக்கள் சக்தியால் விஜய் ஆட்சி பீடத்தில் அமருகிற காலம் உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செங்கோட்டையன் இன்று தனது வீட்டை விட்டு வெளியே சென்றபோது தனது வாகனத்தில் த.வெ.க. கட்சிக்கொடி கட்டி இருந்தார்.

    • தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர்.
    • மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) நியமிக்கப்படுகிறார்.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர். தாம் சார்ந்திருந்த கழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்; அனைவரிடத்திலும் எளிமையோடும் அன்போடும் பண்போடும் பழகி, நன்மதிப்பைப் பெற்றவர். மூத்த அரசியல் தலைவர், முன்னாள் அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட, எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி, கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார்.

    மேலும் கூடுதலாக, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும் கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களோடும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை, மேற்கண்ட இம்மாவட்டங்களில் மேற்கொள்வார்.

    மேலும், அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி சத்தியபாமா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் திரு. வெங்கடாசலம், திரு. முத்துக்கிருஷ்ணன் மற்றும் பிற புதிய உறுப்பினர்களையும் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    கழகத் தோழர்களும் நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளார்.

    • த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.
    • விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார்.

    அ.தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைவதாக கூறப்பட்டது. செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் இணைவதாக நேற்று முதல் தகவல் வெளியாகி வந்தது.

    இந்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பேருந்தில் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.

    தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசானா, புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பனையூர் அலுவலகம் வந்தார். இதற்கிடையே, செங்கோட்டையனும் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை புஸ்சி ஆனந்த் வரவேற்று அழைத்து சென்றார்.

    இதனை தொடர்ந்து, த.வெ.க. அலுவலகத்திற்கு தலைவர் விஜய், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதர் அர்ஜூனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர்.

    இதன்பின் நடைபெற்ற இணைப்பு விழாவில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் இணைந்தனர்.

    இந்நிலையில், த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, எம்ஜிஆர் நினைவிடத்திற்கும், ஜெயலலிதா நினைவிடத்திற்கும் சென்ற செங்கோட்டையன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சத்தியபாமா ஆகியோரும் உடன் மரியாதை செலுத்தினர்.

    ×