search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jayalalitha"

    • 1984ல் 2 எம்.பி.க்களை கொண்டிருந்த பா.ஜ.க. 2014ல் ஆட்சி அமைத்தது
    • ஜெயலலிதா 39 மக்களவை தொகுதிகளையும் வெல்வதற்கு வியூகம் அமைத்தார்

    2014 மக்களவை தேர்தல் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல திருப்புமுனைகளை உருவாக்கியது.

    அந்த தேர்தலில் ஆட்சியை இழந்த தேசிய கட்சியான காங்கிரஸ், பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஆனால், 1984ல் 2 எம்.பி.க்கள் மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

    2014ல் காங்கிரஸ் சார்பில் பிரதமரான மன்மோகன் சிங்கின் ஆட்சி, 2ஜி மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ள நேர்ந்தது.

    தி.மு.க., காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருந்தது.

    மன்மோகன் சிங் தேர்தலில் போட்டியிட விருப்பமின்றி விலகிய நிலையில், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பா.ஜ.க., பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது.

    அந்த காலகட்டத்தில் தமிழகத்தில், ஜெயலலிதா 39 மக்களவை தொகுதிகளையும் வெல்வதற்கு வியூகம் அமைத்தார்.


    நாடெங்கிலும் "மோடி, மோடி" எனும் பா.ஜ.க. ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் "மோடியா, இந்த லேடியா?" என ஜெயலலிதா தமிழக வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பி வாக்கு சேகரித்து வந்தார்.

    பிற மாநில அரசியல் தலைவர்கள் காங்கிரஸ் கூட்டணி (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) அல்லது பா.ஜ.க. கூட்டணி (தேசிய ஜனநாயக கூட்டணி) எனும் நிலைப்பாட்டை எடுத்து வந்த நிலையில் ஜெயலலிதாவின் "மோடியா?, லேடியா?" முழக்கம், அரசியல் விமர்சகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

    ஆச்சரியம் அளிக்கும் வகையில் அ.தி.மு.க. 37 இடங்களில் வென்றது.


    இந்நிலையில், 18-வது மக்களவைக்கான தேர்தல் வரும் மாதங்களில் நடைபெறவுள்ளது.

    இன்று, தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில், மாதப்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அவர் தனது உரையில், "ஜெயலலிதா ஆட்சிக்கு பிறகு நல்லாட்சி தமிழகத்தில் அமையவில்லை" என கூறியது அரசியல் விமர்சகர்களால் பெரிதும் விவாதிக்கப்படுகிறது.

    தன்னை எதிர்த்து "மோடியா? இந்த லேடியா?" என முழக்கமிட்டு வென்ற ஜெயலலிதாவை புகழ்வதன் மூலம் ஜெயலலிதாவின் ஆளுமைக்கு முன் தனது ஆளுமை தமிழகத்தில் வெற்றிக்கு வழிவகுக்காது என மோடி கருதுகிறாரா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், கல்லூரி மாணவர்களுக்கும் மாணவியர்களுக்கும் மடிக்கணினி, தாலிக்கு தங்கம் திட்டம்,  பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறை என ஜெயலலிதாவின் பெரும்பாலான திட்டங்கள் அவருக்கு கணிசமாக பெண்கள் வாக்குவங்கியை உருவாக்கி இருந்தது.

    பெண்கள் வாக்குகள் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.விற்கு செல்லாமல் பா.ஜ.க.விற்கே கிடைக்க செய்யும் முயற்சியாகவும் இது இருக்கக் கூடும் என சில விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன.
    • நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்கலாம்.

    தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சசிகலா, அவருடைய அண்ணி இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை காலம் நிறைவுற்ற நிலையில், பொருட்களை ஏலம் விடுமாறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்கலாம் என்று பெங்களூரு நீதிமன்றம் தெரிவித்தது.

    அந்த வகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்கம், வெள்ளி நகைகளை மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளலாம் என்று பெங்களூரு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அதன்படி பெங்களூருவில் இருந்து 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள் மொத்தமாக 6 பெட்டகங்களில் தமிழகத்திற்கு கொண்டுவரப்படுகிறது. இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தற்போது தமிழகம் வரவிருக்கும் ஜெயலலிதா நகைகளின் மதிப்பு பல கோடிகள் வரை இருக்கும். இந்த வழக்கில், வழக்கு கட்டணமாக ரூ. 5 கோடியை கர்நாடகாவுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கொடநாடு எஸ்டேட்டுக்கு நானும், ஜெயலலிதாவும் ஒன்றாகவே இதுவரை வந்துள்ளோம்.
    • ஆகஸ்டு மாதத்துக்குள் பணியை முடித்து திறப்பு விழா நடைபெறும்.

    கோத்தகிரி:

    தமிழக அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலிமைமிக்க தலைவராக வலம் வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவரது நிழலாக பின் தொடர்ந்தவர் சசிகலா.

    இவர்களுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இருவரும் ஓய்வெடுப்பதற்காக கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு செல்வதற்கு வழக்கம்.

    கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர், ஜெயலலிதாவும், சசிகலாவும் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று ஓய்வெடுத்தனர்.

    அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஜெயிலுக்கு சென்றார். இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இதில் இன்னும் மர்மம் விலகவில்லை.

    இதையடுத்து ஜெயிலில் இருந்து வெளியில் வந்த சசிகலா, கொடநாடு எஸ்டேட் செல்வதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சசிகலா கொடநாடு எஸ்டேட்டுக்கு வருகை தந்தார்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றார். அவரை அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வரவேற்றனர்.

    இதனை தொடர்ந்து சசிகலா நேற்று இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.

    தொடர்ந்து இன்று காலை கொடநாடு எஸ்டேட் வளாகத்தில் மறைந்த ஜெயலலிதாவின் நினைவாக நினைவு மண்டபம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த பூஜையில் சசிகலா கலந்து கொண்டு மண்டபம் அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார். இந்த பூஜையில் எஸ்டேட்டில் பணியாற்றும் அதிகாரிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மணிமண்டபத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அமைக்கப்பட உள்ளது.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொடநாடு மிகவும் பிடித்த இடமாக இருந்தது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களும், நாங்களும் ஒரு குடும்பமாகவே இருந்து வந்தோம்.

    கொடநாடு எஸ்டேட்டுக்கு நானும், ஜெயலலிதாவும் ஒன்றாகவே இதுவரை வந்துள்ளோம். அவரது மறைவுக்கு பிறகு என்னால் இங்கு தனியாக வர முடியவில்லை. தற்போது தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வந்துள்ளேன்.

    இந்த நல்ல நாளில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்துள்ளேன். சுற்றுலாதலமான கொடநாடு காட்சி முனை அருகே இந்த இடம் இருப்பதால் நினைவு மண்டபத்தை பொதுமக்களும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆகஸ்டு மாதத்துக்குள் பணியை முடித்து திறப்பு விழா நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து, சசிகலா, கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களிடம் நலம் விசாரித்து, குறைகளையும் கேட்டறிந்தார்.

    3 நாள் பயணத்தை முடித்து கொண்டு நாளை கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காரில் புறப்பட்டு, சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்கிறார்.

    • ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார்.
    • அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன்.

    தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முறையாக கொடநாடு எஸ்டேட்டிற்கு இன்று சசிகலா சென்றிருந்தார். அங்கு, பங்களா முன்பு ஜெயலலிதா சிலை வைக்க பூமி பூஜையில் பங்கேற்றார்.

    சசிகலா, கடைசியாக 2016ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் இங்கே தங்கியிருந்தனர்.

    2017ல் இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகும் சசிகலா இங்கு வராமலேயே இருந்தார். இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா இன்று கொடநாடு சென்றார்.

    அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது:-

    கொடநாடு தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பார்க்க வந்தேன். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை!

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார் என நம்புகிறேன்.

    கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்குப் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். விரைவில் அவரது சிலை திறக்கப்படும்.

    அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும்!

    அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர வேண்டும்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2005 செப்டம்பர் மாதம் மதுரையில் தன் கட்சியின் பெயரை விஜயகாந்த் அறிவித்தார்.
    • இரு பெரும் கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி கொண்ட கட்சி தே.மு.தி.க.

    தமிழ் திரையுலகில் ரஜினி, கமல் என இரு நடிகர்கள் முன்னிலையில் இருந்த காலகட்டத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வரத் தொடங்கியவர் நடிகர் விஜயகாந்த்.

    தனது திரைப்படங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதனை துணிச்சலாக தட்டி கேட்கும் கதாநாயகனாக பல வேடங்களில் நடித்தார். அது போன்ற காட்சிகளில் நடிக்கும் போது ஆளும் கட்சி அரசியல்வாதிகளை குறி வைத்து கேள்வி கேட்கும் வகையில் பல வசனங்கள் அவருக்கென எழுதப்பட்டு வந்தது. அவை ரசிகர்களிடமும் பலத்த வரவேற்பை பெற்று வந்ததால், தொடர்ந்து தனது படங்களில் இந்த பாணியை விஜயகாந்த் கடைபிடித்து வந்தார்.

    அவருக்கு தமிழக அரசியலில் நுழையும் ஆர்வம் இருப்பதாக பல்வேறு அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். அக்காலகட்டத்தில் இதனை விஜயகாந்த் மறுக்கவோ, ஒப்புக்கொள்ளவோ இல்லை.

    ஆனால், தனது ரசிகர் மன்ற அன்பர்களை கொண்டு சமூக நலப் பணிகளில் இடைநிறுத்தம் இல்லாமல் தொடர்ந்து சமூக சேவையாற்றி வருவதை தொடர்ந்தார்.

    திரையுலகில் ஒரு உயர் நிலையை எட்டியிருந்த விஜயகாந்த், 2005 செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரையில் ஒரு மாநாடு நடத்தினார். அதில், அரசியல் கட்சியை தொடங்க போவதாகவும், அதற்கு பெயர் "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" என்றும் விஜயகாந்த அறிவித்தார்.


    அ.தி.மு.க.வில் ஜெயலலிதா, தி.மு.க.-வில் கருணாநிதி உயிருடனும், நல்ல உடல்நலத்துடனும் கட்சி பணி ஆற்றி வந்த காலத்திலேயே இரு கட்சிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக அவர்களை எதிர்த்து செயல்பட்டு தனது கட்சியை முன்னிறுத்தினார். இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோயம்பேட்டில் உள்ள தனக்கு சொந்தமான கல்யாண மண்டபத்தை தனது கட்சியின் தலைமையகமாக கொண்டு தீவிர அரசியலில் நுழைந்தார் விஜயகாந்த்.

    2006 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் 234 இடங்களிலும் அவர் கட்சி போட்டியிட்டது. ஆனால், "கருப்பு எம்.ஜி.ஆர்." என அழைக்கப்பட்ட அக்கட்சியின் தலைவரான விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் வென்றாலும், 8 சதவீத வாக்குகள் மட்டுமே தே.மு.தி.க.வால் பெற முடிந்தது. தே.மு.தி.க.வின் பிற வேட்பாளர்களில் பலர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.

    2009 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் 39 இடங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 இடம் என 40 இடங்களில் போட்டியிட்டும் தே.மு.தி.க.-வால் குறைந்த அளவு வாக்குகளே பெற முடிந்தது.

    இருபெரும் கட்சிகளுக்கு மாற்றாக தன்னை அதுவரை முன்னிறுத்தி வந்த விஜயகாந்த், 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வினருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.

    இக்கூட்டணி 202 இடங்களை பிடித்தது. போட்டியிட்ட 40 இடங்களில் 29 இடங்களில் தே.மு.தி.க. வென்றது. இதன் மூலம், தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி எதிர்கட்சியாக சட்டசபைக்குள் அக்கட்சி காலடி எடுத்து வைத்தது. இந்த வெற்றியின் காரணமாக தே.மு.தி.க.விற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் நிரந்தர சின்னம் ஒதுக்கப்பட்டது.


    2016 பிப்ரவரி மாதம், 8 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தனது எம்.எல்.ஏ. பதவியை விஜயகாந்த் ராஜினாமா செய்தார்.

    2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க. போட்டியிட்டது. ஆனால், விஜயகாந்தின் அரசியல் வியூகம் அவரே எதிர்பாராத விதமாக அவருக்கு அதிர்ச்சி தோல்வியை தந்தது. அவரது கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களையும் பறி கொடுத்தது.

    இதை தொடர்ந்து விஜயகாந்தின் கட்சி இறங்குமுகத்தை சந்திக்க துவங்கியது.

    அவரது மைத்துனரான எல்.கே. சுதீஷ் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என பல நிர்வாகிகள் குற்றம் சாட்ட துவங்கினர்; ஒரு சிலர் கட்சியை விட்டு வெளியேறினர்.

    விஜயகாந்தின் உடல்நிலையில் ஏற்பட்ட ஆரோக்கிய குறைபாடுகளால், அவர் தொண்டர்களை சந்திப்பதை குறைத்து கொண்டார். இது பல யூகங்களுக்கு வழிவகுத்தது.



    அரிதாக தொலைக்காட்சிகளில் விஜயகாந்த் தோன்றும் போது அவரது உற்சாகமான பேச்சை எதிர்பார்த்த ரசிகர்களும் தொண்டர்களும், அதற்கு மாறாக அவர் உடல்நலம் குன்றிய தோற்றத்துடன் காணப்படுவதை கண்டு உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.

    இது மேலும் தே.மு.தி.க.விற்கு சரிவை ஏற்படுத்துவதாக அமைந்தது. சிறிது சிறிதாக அரசியல் அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டு வந்த விஜயகாந்தின் கட்சியான தே.மு.தி.க. மக்களிடையே செல்வாக்கை இழக்க தொடங்கியது. கட்சி பணியை விஜயகாந்தின் மனைவி கவனித்து வந்தாலும் தே.மு.தி.க.வால் செல்வாக்கான கட்சியாக வளர முடியவில்லை.

    ஜெயலலிதாவுடன் சுமுக உறவில் இருந்திருந்தால், தே.மு.தி.க. வளர்ச்சி பெற்றிருக்கும் என சில விமர்சகர்களும், மாற்று கட்சியாக முன்னிறுத்தி களம் இறங்கிய ஒருவர் இரு கட்சியினருடனும் கூட்டணி வைத்து கொள்ளாமல் தனது அரசியல் பாதையை வகுத்து சென்றிருக்க வேண்டும் என வேறு சில விமர்சகர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • தேமுதிகவின் வாக்கு வங்கி ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து வருகிறது
    • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு பிரேமலதா செல்லவில்லை

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்த விஜயகாந்த், தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகியவற்றிற்கு மாற்றாக கடந்த 2005 செப்டம்பர் 14 அன்று "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" (DMDK) எனும் புதிய கட்சியை தொடங்கினார். இக்கட்சிக்கு முரசு சின்னம், தேர்தல் சின்னமாக கிடைத்தது.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இக்கட்சியின் வாக்கு வங்கி சதவீதம், 2006 (சட்டசபை) - 8.38, 2009 (பாராளுமன்றம்) - 10.08, 2011 (சட்டசபை) - 7.88, 2014 (பாராளுமன்றம்) - 5.19, 2016 (சட்டசபை) - 2.39, 2019 (பாராளுமன்றம்) - 2.19 என தேர்தலுக்கு தேர்தல் குறைந்தவாறு உள்ளது.

    2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 29 சட்டசபை இடங்களை கைப்பற்றிய தேமுதிக, பதிவான வாக்குகளில் 6 சதவீதத்துக்கும் குறைவாக பெற்று, தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. அக்கட்சியின் சார்பில் வெற்றி பெறாததால் மாநில கட்சி அந்தஸ்தையும், முரசு சின்னத்தையும் இழக்கும் அபாய கட்டத்திற்கே வந்தது.

    சமீப சில வருடங்களாக அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், அக்கட்சியின் நிர்வாகிகளில் பலர் வேறு கட்சிகளுக்கு வெளியேறினர்; தொண்டர்களும் குறைய தொடங்கினர்.

    இந்நிலையில், டிசம்பர் 14 அன்று தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், பொது செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    தொடர்ந்து பிரேமலதா உரையாற்றும் போது, "பெண்களுக்கு அரசியல் ஒரு பெரும் சவால். ஜெயலலிதா சந்திக்காத சவால்களே இல்லை. விஜயகாந்திற்கு எம்.ஜி.ஆர்.தான் குரு; எனக்கு ஜெயலலிதாதான் ரோல் மாடல்" என குறிப்பிட்டார்.


    மேலும், மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு செல்லவில்லை. இந்த செயல் விமர்சகர்களால் முக்கியத்துவம் அளித்து பேசப்படுகிறது

    பல சவால்களை வெற்றிகரமாக எதிர் கொண்ட "இரும்பு பெண்மணி" என அழைக்கப்பட்ட மறைந்த அதிமுகவின் பொது செயலாளர் ஜெயலலிதா ஒரு ஆளுமை மிக்க தலைவராக கருதப்பட்டவர். தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பக் கூடிய பெண் அரசியல் தலைவர்கள் இன்னும் உருவாகவில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

    இப்பின்னணியில், பிரேமலதாவின் உரையும், மறைந்த அதிமுக தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதும், ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப அவர் முன்னெடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    அதிமுகவின் பெரும் தலைவர்களை நினைவுகூர்ந்த அவரது பேச்சிலும், நினைவகங்களுக்கு செல்வதில் திமுகவை புறந்தள்ளுவதை போல் நடந்து கொண்டதும் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளன.

    பா.ஜ.க.வை உதறி விட்டு தேர்தலை சந்திக்க உள்ள அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு தேமுதிக தயாராக உள்ளதாக அதிமுக தலைவர்களுக்கு மறைமுகமாக பிரேமலதா விடுக்கும் செய்தியாக சில விமர்சகர்கள் இதை கணிக்கின்றனர்.

    "கருப்பு எம்.ஜி.ஆர்." என ரசிகர்களால் அழைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். இடத்தை நிரப்ப விஜயகாந்த் முயன்றது போல், ஜெயலலிதாவிற்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி அதிமுகவின் வாக்கு வங்கியின் ஒரு பகுதியை அறுவடை செய்ய பிரேமலதா நினைக்கலாம் என்பது சில விமர்சகர்களின் கணிப்பு.

    இப்பின்னணியில், வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக எதிர்நோக்கப்படுகிறது.


    ஸ்டாலினே முதல்வர் வேட்பாளராக நிற்பாரா அல்லது தனது மகன் உதயநிதியை முன்னிறுத்துவாரா என்பது தெரியவில்லை.

    2017ல் சசிகலாவால் தேர்வு செய்யப்பட்டு 2021 வரை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி களத்தில் இறங்க போகும் முதல் தேர்தல் இதுதான்.

    திமுகவையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் பா.ஜ.க. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் என்ன சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதும் தற்போது தெளிவாகவில்லை.

    இவர்களுக்கு நடுவே தேமுதிக பொது செயலாளரின் கணக்குகள் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    • மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கும் சென்று மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி எதிர்க்கட்சித் தலைவரான அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அடையாறில் உள்ள தனது வீட்டில் உள்ள ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதன் பிறகு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கும் சென்று மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், ரமணா, வளர்மதி, கோகுல இந்திரா, கடம்பூர் ராஜூ, டி.கே.எம். சின்னையா, மாதவரம் மூர்த்தி, கமலக்கண்ணன்.

    மாவட்டச் செயலாளர்கள் தி.நகர் சத்யா, வெங்க டேஷ்பாபு, வேளச்சேரி அசோக், விருகை ரவி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆர்.ஜே.ராஜேஷ், கே.பி.கந்தன், வாலாஜாபாத் கணே சன் மற்றும் பெரும் பாக்கம் ராஜசேகர், துரைப் பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, கழக மாணவரணி துணைச் செயலாளர் வக்கீல் ஆ.பழனி, இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் வி.சுனில், வடபழனி சத்திய நாராயணமூர்த்தி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம். அம்மா நூற்றாண்டு கனவை நெஞ்சில் நிலை நிறுத்தி மக்களுக்கான ஒரே இயக்கம் அ.இ.அ.தி.மு.க. என்பதை நம் செயலில் உறுதிப்படுத்துவோம் என்றும் மக்கள் பணியே மகேசன் பணியாகக் கொண்டு அயராது உழைப்போம். பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றியே போட்டோவுக்கு மட்டும் போஸ் கொடுக்கும் பொம்மை முதல்-அமைச்சர் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். முடிவு கட்டுவோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளை ஏலம் விடக்கோரி மனு
    • முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    வழக்கு விசாரணை முடிவடைந்து, குற்றவாளிகள் தண்டனை அனுபவித்த நிலையில், அரசு வழக்கறிஞர் ஒருவரை நியமித்து சொத்துகள் ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அத்துடன் சொத்து குவிப்பு வழக்கில் என்னென்ன இணைக்கப்பட்டிருந்தன என்ற விவரங்கள் முழுவதையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என தமிழக லஞ்சத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில், தமிழக லஞ்சத்துறை அதிகாரிகள் சார்பில் ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியலை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பொருட்களை ஏலம் விடுவதற்கான வழிமுறைகளை அரசு வழக்கறிஞரிடம் இருந்து கேட்டறிந்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களின் முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணம், வைப்புநிதி உள்ளிட்ட விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்.

    மனுதாக்கல் செய்திருந்த நபர், ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சால்வை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஏலம் விட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி, சட்ட விரோதமாக சேர்த்த சொத்துகள் பட்டியலில் இல்லாததை ஏலம் விட முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

    ஜெயலலிதாகவின் ஆயிரக்கணக்கான சேலைகள், செருப்புகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை சட்டவிரோதமாக சேர்த்த சொத்து பட்டியலில் இல்லை.

    • சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார்.
    • 28 வகையான பொருட்களை பெற்ற பாஸ்கரன் யார்? என்ற கேள்வி எழுந்தது.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தாலும், சுப்ரீம் கோர்ட்டு அதை உறுதி செய்து தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து விடுதலை ஆகினர்.

    இந்த நிலையில் இந்த சொத்து குவிப்பு வழக்கில் 30 கிலோ தங்க, வைர நகைகள், புடவைகள், செருப்புகள் உள்பட 29 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி பெங்களூருவை சோ்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையின்போது, அரசு சிறப்பு வக்கீலாக கிரண் ஜவளி நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கில் ஆஜராகி வந்தார்.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர், அந்த சிறப்பு கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்து, தாங்கள் வாரிசுகள் என்பதால் ஜெயலலிதாவின் பொருட்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிடக் கோரினர். இந்த மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்த வழக்கு தொடர்பான பொருட்களில் கர்நாடக அரசிடம் தற்போது 30 கிலோ தங்கம், வைரம் போன்ற ஆபரணங்கள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 28 வகையான பொருட்கள் குறித்த தகவலை சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவிக்க வேண்டும் என்று வாய்மொழியாக நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே கடந்த 9-5-2023 அன்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்களை பெங்களூரு கோர்ட்டில் உடனடியாக ஒப்படைக்குமாறு அவர் கோரினார்.

    இந்த நிலையில் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி அதற்கு தபால் மூலம் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ''நீங்கள் கடந்த 9-5-2023 அன்று எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை.

    அதற்கு பதிலாக அந்த பொருட்கள் மதிப்பீட்டு பணிகளுக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட நபரான (நாமினி) பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக எங்களிடம் எதுவும் நிலுவையில் இல்லை''.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடிதத்தில் கூறப்பட்டுள்ள நபரான பாஸ்கரன் யார்? என்பது தெளிவாக கூறப்படவில்லை. ஏனென்றால், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் சகோதரியான ஸ்ரீதளா தேவியின் கணவரது பெயரும் பாஸ்கரன் (வயது 58). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 17-ந்தேதி மரணம் அடைந்தார்.

    இன்னொரு பாஸ்கரன், டி.டி.வி.தினகரனின் சகோதரர் ஆவார். ஆனால், இந்த இரு பாஸ்கரனிடமும் ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் ஒப்படைக்கப்படவில்லை. அப்படி என்றால், 28 வகையான பொருட்களை பெற்ற பாஸ்கரன் யார்? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பாஸ்கரன் என்பவரிடம்தான் 28 வகையான பொருட்களும் ஒப்படைக்கப்பட்டதாக ஜெயலலிதா தரப்பு வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.

    28 வகையான பொருட்கள் எவை?

    1.பட்டுப்புடவைகள்-11,344

    2.குளிர்சாதன எந்திரங்கள்-44

    3.தொலைபேசிகள்-33

    4.சூட்கேசுகள்-131

    5.கைக்கெடிகாரங்கள்-91

    6.சுவர்கெடிகாரங்கள்-27

    7.மின்விசிறிகள்-86

    8.அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள்- 146

    9.டீப்பாய்கள்-34

    10.மேஜைகள்-31

    11.மெத்தைகள்-24

    12.உடை அலங்கார டேபிள்கள்-9

    13.அலங்கார தொங்கும் மின்விளக்குகள்-81

    14.ஷோபா ஷெட்டுகள்-20

    15.செருப்புகள்-750 ஜோடிகள்

    16.உடை அலங்கார டேபிள் கண்ணாடிகள்-31

    17.மதுபானம் அருந்தும் கண்ணாடி டம்ளர்கள்-215

    18.இரும்பு பெட்டகங்கள்-3

    19.சால்வைகள்-250

    20.குளிர்பதன பெட்டிகள்-12

    21.டி.விக்கள்-10

    22.வி.சி.ஆர்.கள்-8

    23.வீடியோ கேமரா-1

    24.சி.டி.பிளேயர்கள்-4

    25.ஆடியோ பிளேயர்கள்- 2

    26. ரேடியோ பெட்டிகள்-24

    27.வீடியோ கேசட்டுகள்-1,040

    28. 700 கிலோ வெள்ளி பொருட்கள்.

    • ஜெயலலிதாவின் பொருட்களை உரிமை கோரிய ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    • சமூக ஆர்வலர் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுமாறு உத்தரவிடக் கோரினார்.

    பெங்களூரு :

    பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுமாறு உத்தரவிடக் கோரினார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக கிரண் ஜவலி நியமிக்கப்பட்டார்.

    இந்தநிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, தாங்கள் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்றும், அதனால் அவரது இந்த பொருட்கள் தங்களுக்கு சேர வேண்டும் என்றும் கோரினர். இந்த வழக்கில் வாதாடிய அரசு சிறப்பு வக்கீல் கிரண் ஜவலி, சொத்து குவிப்பு வழக்கில் 3 பேர் சிறை தண்டனை அனுபவித்ததாகவும், அதனால் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இந்தநிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த பெங்களூரு சிறப்பு கோர்ட்டு நீதிபதி மோகன், ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அப்போது நீதிபதி, சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இறந்துவிட்டார் என்ற காரணத்திற்காக வழக்கில் பறிமுதல் செய்த சொத்துகளை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றார்.

    மேலும் ஜெயலலிதாவின் 29 வகையான பொருட்களில் 30 கிலோ தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் மட்டுமே தற்போது இங்கு உள்ளதாகவும், மீதமுள்ள 28 பொருட்கள் குறித்து தகவலை சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி நீதிபதி வாய்மொழியாக உத்தரவிட்டார்.

    • ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
    • தற்போது 11,344 பட்டு சேலைகள், 750 ஜோடி செருப்புகள், 250 சால்வைகள் இல்லை என்று கூறுகின்றனர்.

    பெங்களூரு :

    சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி தகவல் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் அரசு வக்கீலாக கிரண் எஸ்.ஜவலி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 5-ந் தேதி விசாரணையின் போது ஜெயலலிதாவின் வாரிசு ஜெ.தீபா என கோர்ட்டு உத்தரவிட்டு, சொத்துகளை ஒப்படைத்துள்ளதால், கர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் பொருட்களையும், அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வக்கீல் கூறி இருந்தார். அப்போது இந்த வழக்கில் முறையாக ஆஜராகி வாதாட ஜெ.தீபா தரப்பில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அதே நேரத்தில் இந்த வழக்கை தொடர்ந்திருந்த நரசிம்மமூர்த்தி கூறியபடி ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள், சால்வைகள் இல்லை என்று நீதிபதி கூறி இருந்தார். இதையடுத்து, அரசு கருவூலத்தில் இருக்கும் பொருட்கள் குறித்து கருவூல துறையிடம் இருந்து ஆவணங்களை பெற்று கொடுப்பதாக நரசிம்மமூர்த்தி கூறினார்.

    இதையடுத்து, அன்றைய தினம் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 26-ந் தேதி (இன்று) ஒத்திவைத்திருந்தார். அதன்படி, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி வழக்கு விசாரணை பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சொத்து குவிப்பு வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றிய போது, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது 11,344 பட்டு சேலைகள், 750 ஜோடி செருப்புகள், 250 சால்வைகள் இல்லை என்று கூறுகின்றனர்.

    இதுபற்றி கர்நாடக அதிகாரிகள், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் இருந்து ஆவணங்கள், தகவல்களை பெற்றுள்ளேன். நீதிபதி உத்தரவின்படி ஆவணங்கள், தகவல்களை கோர்ட்டில் அளிப்பேன். இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி ஒருவர் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கிறேன், என்றார்.

    • ஜெயலலிதா தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
    • தி.மு.க.வை விட்டு வெளியேறிய வைகோ சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அறிவாலயம் சென்றார்.

    அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லா காலக்கட்டத்திலும் விமர்சிப்பதும் உண்டு. அதேபோல் சாக்கடையில் மலர்ந்த செந்தாமரை என்பது போல் இதே அரசியலில்தான் மக்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் மலர்ந்து, வளர்ந்து தொண்டாற்றி மறைந்தும் வருகிறார்கள்.

    இப்படிப்பட்ட அரசியலில் மறப்போம், மன்னிப்போம் என்பதை அரசியல்வாதிகள் தங்கள் அடிப்படை குணமாக வைத்திருந்தாலும் மக்களும் அவர்களை பின்பற்றி மறந்தும், மன்னித்தும் பழகி கொண்டார்கள் என்பதுதான் வேடிக்கை.

    ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் ஒன்றாக கை குலுக்கி இணைந்த கைகளாக அரசியலில் அடுத்த ரவுண்டுக்கு புறப்பட்டு இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. எப்படியெல்லாம் ஒருவரையொருவர் தாக்கி கொண்டார்கள். இன்று எப்படித்தான் முகத்துக்கு நேர் நின்று தோளோடு தோள் சேர்த்து ஒன்றாக நிற்க முடிகிறதோ என்று அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பதும், ச்சே... என்னடா இது அரசியல் பொழப்பு என்று விமர்சிப்பதையும் பார்க்க முடிகிறது.

    ஆனால் இப்படிப்பட்ட நிகழ்வுகளும், சம்பவங்களும் இப்போது மட்டும் தான் நடக்கிறதா? அரசியல் உருவான காலத்தில் இருந்தே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு நம் கண் முன்னால் நிகழ்ந்த சமீப காலத்திய நிகழ்வுகள் சிலவற்றை பார்ப்போம்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. அனல் பறக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர். பாராளுமன்றமே அவரது பேச்சை கேட்டு புருவம் உயர்த்திய காலமும் உண்டு. அது அவர் கருணாநிதி தலைமையேற்று தி.மு.க.வில் இருந்த காலம். எல்லோரும் தலைவர் கலைஞர் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் வைகோ அண்ணன் கலைஞர் என்றுதான் அழைப்பார். அந்த அளவுக்கு இருவரும் அண்ணன், தம்பிகளாக ஒரே இயக்கத்தில் இருந்தவர்கள். ஒன்றாக அரசியல் களத்தில் வலம் வந்தவர்கள்.

    காலப்போக்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பிரிவினையை உருவாக்கியது. 1993-ம் ஆண்டு வைகோ தி.மு.க.வை விட்டு வெளியே வந்தார். மறு ஆண்டு ம.தி.மு.க. என்ற அரசியல் இயக்கத்தை எழுச்சியோடு தொடங்கினார். அதை தமிழகமே திரும்பி பார்த்தது என்பதே உண்மை. அவரது அரசியல் பயணம் தனிப்பாதையில் தொடங்கியது.

    அந்தக்காலக்கட்டத்தில் கருணாநிதியை வைகோ சாதாரணமாக விமர்சிக்கவில்லை. எல்லாம் அரசியல் மாற்றங்கள் வரும்போது மறந்து போகும் என்பதுதான் உண்மை. 1999-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவர் சென்னைக்கு வரும் போது விமான நிலையத்தில் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி வரவேற்க சென்றார். அப்போது வாஜ்பாய் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோவும் விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். கருணாநிதியை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டது. அதன்பிறகு ஜெயலலிதா தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு வாஜ்பாய் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க. இணைந்தது. அந்த கூட்டணியில் ஏற்கனவே ம.தி.மு.க.வும் இருந்தது. அவ்வாறு ஏற்பட்ட தொடர்பு பிற்காலத்தில் மீண்டும் தி.மு.க.வோடு வைகோ கூட்டணி அமைப்பது வரை சென்றது.

    தி.மு.க.வை விட்டு வெளியேறிய வைகோ சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அறிவாலயம் சென்றார். அங்கேயே கலைஞருடன் ஒரே மேடையில் அமர்ந்து அவரை வாழ்த்தியதையும் பார்க்க முடிந்தது. இப்போதும் அதே கூட்டணியில் அவர் தொடர்வதை பார்க்கிறோம்.

    தமிழக அமைச்சராக இருந்தவர்... சபாநாயகராக பணியாற்றியவர்... அ.தி.மு.க.வில் அவை தலைவராக இருந்தவர்... தமிழக அரசியல் களத்தில் இவரது சொல்லாற்றல் சும்மா அதிர வைத்த காலம் அது. தி.மு.க.வில் இருந்து வெளியேறி எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது அந்தஇயக்கத்தில் இணைந்தார்.

    ஒருஇயக்கத்தில் இருக்கும்போது எதிரான இயக்கத்தை விமர்சிப்பது அரசியல்வாதிகளுக்கு அல்வா சாப்பிடுவது போல். அதேபோலத்தான் அ.தி.மு.க.வில் இருந்த போது கருணாநிதியை காளிமுத்து கடுமையாக விமர்சித்ததை அந்த கால அரசியலில் பார்க்க முடிந்தது.

    தமிழக அரசியல் களத்தில் காளிமுத்து மிகப்பெரிய ஆட்டக்காரர் என்றே சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஜானகி அணியில் இருந்து ஜெயலலிதாவை விமர்சன கணைகளால் துளைத்தெடுத்தவர். மீண்டும் அ.தி.மு.க. ஒன்றுபட்ட போது அதே ஜெயலலிதா தலைமையை ஏற்று அ.தி.மு.க.வில் இடம் பிடித்தார். சபாநாயகராகவும் பதவி பெற்றார். அதே நேரம் மீண்டும் கருணாநிதி தலைமையேற்று தி.மு.க.வில் இணைந்து பணியாற்றினார் என்பதும் தமிழக அரசியல் களம் கண்ட வரலாறு. இவர்களெல்லாம் தங்களின் நாவண்மையால் ஒருவரையொருவர் விமர்சித்ததை பார்த்து உயிர் இருக்கும் வரை இனிமேல் இவர்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்றெல்லாம் சாதாரண மக்கள் அப்பாவித்தனமாக நினைத்து ஏமாந்துதான் போனார்கள். நான் தி.மு.க.வின் திருவிளக்கு. ஜெயலலிதா கூட்டத்துக்கு தீப்பந்தம் என்று கர்ஜித்த காளிமுத்து அதே ஜெயலலிதாவோடு கைகோர்த்து அமைச்சர் ஆனதையும் தமிழகம் பார்த்திருக்கிறது.

    தற்போது எம்.ஜி.ஆர். கழக தலைவர். இவர் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 1980களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். அந்த காலக்கட்டத்தில் கோவில் உண்டியலில் இருந்த வைரவேல் மாயமானதாக கருணாநிதி குற்றம் சாட்டினார். குற்றம் சாட்டியது மட்டுமல்ல அப்பா... அப்பா.. வீரப்பா வைரவேல் எங்கேப்பா... என்ற கோஷத்தோடு மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நீதி கேட்டு நெடு பயணமும் சென்றார்.

    இந்த சம்பவத்தால் அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் மிகப்பெரிய மோதல் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு தனிக்கட்சியை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன் தன்னை எதிர்த்து நடைபயணம் சென்ற கருணாநிதியுடன் இணைந்து பயணித்த அரசியல் வரலாறையும் தமிழகம் பார்த்தது.

    அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது என்பதையும் அரசியல் வாதிகள்தான் கற்றுத்தந்துள்ளார்கள். எனவே இதெல்லாம் சகஜமப்பா என்று கடந்து சென்றால்தான் அரசியலை புரிந்து கொள்ள முடியும்.

    ×