search icon
என் மலர்tooltip icon

    வேலூர்

    • டிரைவர் சீட்டின் பின்பக்கம் உள்ள பயணிகள் இருக்கைக்கு அடியில் பதுங்கியது.
    • தொடர்ந்து நாயை அடித்து விரட்டி சிறிது தூரத்தில் பஸ்சை நிறுத்தி இறக்கிவிட்டனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி - குடியாத்தம் இடையே இயங்கிவரும், அரசு டவுன்பஸ் மிகவும் பழுதான நிலையில் ஓடிக்கொண்டு இருந்தது. இதை புதியதாக மாற்றவேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்த நிலையில் தானியங்கி கதவுகளுடன் கூடிய புதிய டவுன்பஸ் அண்மையில் விடப்பட்டது.

    இந்த பஸ் கே.வி.குப்பம் வழியாக சென்னறாயனபள்ளி பஸ் நிறுத்தத்தில் நின்று சில பயணிகளை இறக்கிவிட்டது. அப்போது குடியாத்தம் செல்ல ஒரு பயணி ஏறினார். அப்போது முன்னதாக ஒரு தெரு நாய் திடீர் என்று பஸ்சின் பின்பக்க வாசல் வழியாக உள்ளே ஏறிக்கொண்டது. அழையா விருந்தாளியான அந்த நாய் ஏறியதும் பஸ்சின் தானியங்கி கதவுகள் மூடி பஸ் புறப்பட்டது.

    சிறிது தூரம் சென்றதும் பஸ்சுக்குள் நாய் சத்தம் கேட்டது. இதனால் நாய் கடித்துவிடுமோ என்று பயணிகள் அலறினர். இருக்கையை விட்டு இங்கும் அங்குமாக ஓடினர். எனினும் பின்பக்கம் ஏறிய நாய் இருக்கைகளுக்கு இடையே நகர்ந்து நகர்ந்து டிரைவரிடம் வந்து, என்ஜின்மீது ஏறி படுத்துக்கொண்டது. அதை அங்கிருந்து விரட்டியதும் டிரைவர் சீட்டின் பின்பக்கம் உள்ள பயணிகள் இருக்கைக்கு அடியில் பதுங்கியது.

    தொடர்ந்து நாயை அடித்து விரட்டி சிறிது தூரத்தில் பஸ்சை நிறுத்தி இறக்கிவிட்டனர். உடனே தானியங்கி கதவை மூடியபடி பஸ், குடியாத்தம் நோக்கி புறப்பட்டு சென்றது. நாய் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இவ்வளவு நடந்தும் நாய் ஒருமுறைகூட குரைக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.

    • கடந்த மார்ச் மாதம் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • துரை தயாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.

    வேலூர்:

    மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு சிகிச்சை குறித்து கேட்டறிந்து சென்றனர்.

    இந்த நிலையில் துரை தயாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால் அவர் இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த துரை தயாநிதி தனது காரில் ஏறி கிளம்பி சென்றார். அவருடன் மு.க.அழகிரியும் சென்றார்.

    இதனால் சி.எம்.சி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

    • விரக்தி அடைந்த முருகேசன் அவரது மனைவி மாலா ஆகியோர் வீட்டில் தூக்கில் தொங்கினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர், சலவன்பேட்டை, சேஷாலம் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). இவரது மனைவி மாலா (60). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் முருகேசன், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ. 11 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். கடனை பெற்ற நபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். முருகேசன் அவரது மனைவி இருவரும் கடன் பெற்றவர் வீட்டிற்கு சென்று அவரது மகன்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர். அவர்கள் பணத்தை தருவதாக காலம் கடத்தி வந்தனர்.

    பின்னர் நீங்கள் எனது தந்தையிடம் பணம் கொடுத்தது எங்களுக்கு தெரியாது. இதனால் நீங்கள் யாரிடம் பணம் கொடுத்தீர்களோ அவர்களிடமே சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.

    இதனால் விரக்தி அடைந்த முருகேசன் அவரது மனைவி மாலா ஆகியோர் நேற்றிரவு வீட்டில் தூக்கில் தொங்கினர்.

    இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் முருகேசன் வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் முருகேசனின் வீட்டில் சோதனை செய்த போது அவர்கள் எழுதி வைத்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.

    அதில் சலவன்பேட்டையை சேர்ந்த நபர் ஒருவர் எங்களிடம் ரூ.11 லட்சம் கடனாக வாங்கினார். அவர் இறந்து விட்டதால் அவரது மகன்களிடம் பணத்தைக் கேட்டபோது இறந்தவர்களிடமே பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர்.

    இதனால் மன உளைச்சல் அடைந்த நானும் எனது மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதி இருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாத விரக்தியில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
    • வகுப்பறைகளிலேயே அமர்ந்து சாப்பிட வேண்டும்.

    வேலுார்:

    வேலுாரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பகிர்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

    இந்த பழக்கத்துக்கு ஆளான மாணவிகள், பள்ளி வளாகத்தில் சக மாணவிக்கு வளைகாப்பு விழா நடத்தி ரீல்ஸ் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தனர்.

    இந்த விழாவுக்கு அழைப்பிதழையும் வடிவமைத்து அதில் பகிர்ந்தனர். இந்த விவகாரம் வேலூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் மோகன் சம்பந்தம்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அதில் வீடியோ வெளியிட்ட மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    அப்போது மாணவிகள் தெரியாமல் செய்து விட்டோம் என கூறினர்.

    இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர்களுடன் ஆன்லைன் மூலம் அவசர கூட்டம் நடந்தது.

    இதில் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் கூறியதாவது:-

    பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் புத்தகப்பைகளில் கத்தி, செல்போன் போன்று தேவையில்லாத பொருட்கள் எடுத்து வருகிறார்களா என்பதை தினமும் சோதனை செய்ய வேண்டும்.

    வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றிருந்தால், அவர்களின் வகுப்பறையில் வேறு ஆசிரியர் இருக்க வேண்டும்.

    பள்ளிகளில் ஏதாவது நேர்ந்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களே பொறுப்பு என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியர் ஓய்வு அறைக்கு செல்லாமல், வகுப்பறைகளிலேயே அமர்ந்து சாப்பிட வேண்டும்.

    மேலும் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் எந்த காரணத்தை கொண்டும் செல்போன்கள் எடுத்து வர கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த உத்தரவுகளை இன்று முதலே பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வசந்தகுமார், சிறுவர்களை அழைத்து சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடியுள்ளனர்.
    • மனைவியை பிரிந்து சில மாதங்களாக வசந்தகுமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 2 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பாக கட்டிட ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    யோகராஜின் மகன்களான யோகித் (5), தர்ஷன் (4) ஆகிய சிறுவர்களை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி கட்டிட ஒப்பந்ததாரரான நண்பர் வசந்த குமார் அழைத்து சென்றுள்ளார்.

    வசந்தகுமார், சிறுவர்களை அழைத்து சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள கோவில் அருகாமையில் இருந்து சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வசந்த குமாரை கைது செய்தனர்.

    மனைவியை பிரிந்து சில மாதங்களாக வசந்தகுமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனிடையே சிறுவர்களின் உடல்கள் கோவில் அருகாமையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதால் நரபலி முயற்சி நடந்திருக்கலாம் என உறவினர்கள், பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

    • அனைத்து தொகுதிகளிலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்.
    • புதிய வாக்காளர்களை நாம் சேர்க்க வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. கட்சியினர் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தி.மு.க. கொடி ஏற்ற வேண்டும். வருகிற 15, 16, 17 ஆகிய 3 தேதிகளில் அனைவரும் கருப்பு, சிவப்பு அணிந்த துண்டை அணிந்து செல்ல வேண்டும்.

    தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அனைவரும் கடைசி வரை இருக்க வேண்டும். ஒரு ஓட்டு என்பது கூட முக்கியமானது. காட்பாடி தொகுதியை பொறுத்தவரை உழைத்தோம். ஆனால் அதிகமான நேரத்தில் ஓய்வு எடுத்து விட்டோம். இப்பொழுது உள்ள முறைகள் சரியில்லை. வருகிற 20-ந் தேதிக்கு பிறகு அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் நான் நேரில் வந்து மக்களுடைய குறைகளை கேட்டு அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.

    வாக்குச்சாவடிகளில் பழைய முகவர்கள் சரியில்லை என்றால், அவர்களை நீக்கி விட்டு புதியவர்களை சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் காட்பாடி தொகுதி பழைய முறைப்படி தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலைமை மீண்டும் ஏற்படும்.

    கடந்த முறை என்ன நடந்தது? தோற்றுவிடுவோம் என்ற நிலை இருந்தது. அதை நான் சவாலாக எடுத்துக் கொண்டேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். ஏன் அனைத்து தொகுதிகளிலும் சொல்லவில்லை என்றால் எதிர்க்கட்சி 34 தொகுதியிலாவது வரட்டுமே என்ற எண்ணம் தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதியாக இருந்து வெற்றி பெற்று விடுவார்.

    இப்பொழுது புதிய வாக்காளர்களை நாம் சேர்க்க வேண்டும். அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் உள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் வந்த பிறகு கட்சியில் பல மாறுதல்கள் செய்ய வேண்டும்.

    அனைத்து தொகுதிகளிலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். ஒளிமயமான எதிர்காலம் வந்துள்ளது. அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வேலூரில் வீட்டுப் பணிக்காக சிறைக் கைதியை பயன்படுத்தியதாக டி.ஐ.ஜி. ராஜலட்சுமி மீது புகார்
    • டி.ஐ.ஜி. உள்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் என்பவரை வேலூர் சிறைத்துறை பெண் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி அவரது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதோடு, ரூ.4.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை திருடியதாக குற்றம்சாட்டிக் கொடுமைப்படுத்தியதாகவும் சிவகுமாரின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி. உள்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.10.48 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.
    • வழக்கின் விசாரணை வேலூர் ஜெ.எம் 1 கோர்ட்டில் நடந்து வருகிறது.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தலின்போது தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.

    அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக கதிர்ஆனந்துக்கு நெருக்கமான தி.மு.க பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையின் போது தாமோதரன் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் இருந்து தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.10.48 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும், வாக்குச்சாவடி விவரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டு கட்டுகள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டன.

    இது தொடர்பாக காட்பாடி போலீஸ் நிலையத்தில் அப்போதைய தேர்தல் கணக்கு அலுவலர் சிலுப்பன் அளித்த புகாரின் பேரில் தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்த், தி.மு.க பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை வேலூர் ஜெ.எம் 1 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக கதிர் ஆனந்த் எம்.பி. இன்று கோர்ட்டில் ஆஜரானார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்

    • வருகின்ற இளைஞர்கள் தடம் பார்த்து வாருங்கள்.
    • உங்களை விட உயர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் மாநகர பகுதி தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சரமான துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாம் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாமல் இருந்தோம். ஆனாலும் இன்றைக்கு வெற்றி பெற்றுள்ளோம். தமிழகத்தில் எவன் அண்ணா பெயரை சொல்லுகிறானோ அவன் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். ஆசாபாசங்களுக்கு இடம் இன்றி இந்த கட்சியில் உள்ளேன். என்னை பேணிப் பாதுகாத்து அவர் வீட்டு பிள்ளையாக வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.

    கட்சி பிரிந்த நேரத்தில் எல்லோரும் எதிர்பார்த்தார்கள் நான்தான் போவேன் என்று கருணாநிதியும் கொஞ்சம் பயந்தார். ஆனால் நான் போகவில்லை. அந்நாளில் எம்ஜிஆர் முதல்வரான பிறகு ஒரு நாள் என்னை அழைத்து அமைச்சர் பதவி கொடுக்கிறேன் போய் உட்காரு என்றார் நான் முடியாது, எனது கட்சி தி.மு.க. எனது தலைவர் கருணாநிதி என சொல்லிவிட்டேன்.

    இதை பார்த்து பாராட்டினார். எதிரிகள் கூட பாராட்டுகிற அளவிற்கு இந்த கட்சியிலே நான் இருந்ததால்தான் இன்றைக்கு அண்ணா உட்கார்த்த இடத்தில் நான் உட்கார்ந்திருக்கிறேன்.

    அரசியலில் சில சந்தர்ப்ப சூழல்களில் வெறுப்பு வரும், தோல்வி வரும், அவமானம் வரும், நான் படாத அவமானமா? நான் படாத தோல்வியா? நான் சந்திக்காத எதிர்ப்புகளா? இவை வருகிற போதெல்லாம் இதற்காக நான் தி.மு.க.வில் இல்லை. தி.மு.க. என்றால் இவை எல்லாம் பறந்து போய்விடும்.

    எனவேதான் சொல்லுகிறேன் இயக்கத்தில் பிடிப்பு வேண்டும். "இளைஞர்கள் வருகிறார்கள் இன்றைக்கு நான் வரவேற்கிறேன். ஏனென்றால் நாங்கள் எல்லாம் இளைஞர்களாக வந்தோம். அண்ணா சொன்னார் நாற்றங்காலில் இருக்கிற பயிரை பிடுங்கி சேற்றில் நட்டால்தான் பலன் கொடுக்கும். நாற்றங்காலாகவே விட்டுவிட்டால் பாழாகிவிடும். ஆகவே தகுந்த நேரத்தில் உங்களை கட்சியில் சேர்த்து பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார்.

    ஆகவே சொல்கிறேன் "இளைஞர்கள் வரவேண்டும் இளைஞர்கள் இல்லாமல் ஒரு காலம் கட்சியே போய்விடும். ஆகவே இளைஞர்களுக்கு வழி விடுங்கள்"

    "ஆனால் வருகிற இளைஞர்கள் கொஞ்சம் தடம் பார்த்து வாருங்கள்" கட்சியை நினைத்து வாருங்கள் வந்த உடனேயே என்ன கிடைக்கும்னு எதிர்பார்க்காதீர்கள். உன்னை விட உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அடிபட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், உதைப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், கட்சியினால் பொண்டாட்டி பிள்ளைகளிடம் கெட்ட பேர் வாங்கியவர்கள் இருக்கிறார்கள், அவர்களும் இந்த கட்சியிலே தியாகம் செய்திருக்கிறார்கள்.

    ஆகவே தான் இளைஞர்களுக்கு நாம் வழிவிட்டாக வேண்டும். இந்த நிலைமையை நாம் நினைத்தால் தான் ஒரு இயக்கத்தை நிலைத்து நிற்க வைக்க முடியும். நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா மிசாவில் எல்லோரும் நமது கட்சி போய்விடும் என நினைத்தார்கள். ஆனால் வெளியே வந்த பிறகு பார்த்தீர்களா. நம்முடைய தலைவர் அதைவிட அதிகமாக இன்று உழைக்கிறார்.

    எம்.ஜி.ஆ.ருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை நீ எதிர்க்கக் கூடாது என கருணாநிதி சொன்னார். இதனை நான் எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது அவர் கண்ணீர் விட்டு அழுது விட்டார். இருபெரும் தலைவர்களோடு மிக நெருக்கமாகவும், அண்ணாவோடும் பழகியிருக்கிறேன்.

    நான் கேட்டுக் கொள்வதெல்லாம் அரசியல் என்பது பொழுதுபோக்கு மடம் அல்ல, அரசியல் என்பது வியாபாரம் அல்ல, அரசியல் என்பது கொள்கை பிடிப்பு, கொள்கை நியாயம். இந்தக் கட்சியில் நாம் இருக்கிறோம் என்பதே ஒரு பெருமைதான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் பேட்டி அளித்தார். அப்போது, தேசிய கல்விக் கொள்கையில் இணைவதன் மூலம் தாய் மொழி காக்கப்படும் என மத்திய மந்திரி கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு,

    மாற்று மொழி வந்தால் தமிழ் மொழி அழியும் என்று எங்களுக்கு சொன்னவர் அண்ணா. அண்ணா முதல்-அமைச்சரானவுடன் 3 கொள்கைகளை அறிவித்தார்.

    ஒன்று தமிழ்நாடு என பெயரிட்டார். 2-வது இரு மொழிக் கொள்கைதான் தமிழ், ஆங்கிலம். 3-வது கொள்கை சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கினார். 3 கொள்கைகளை சட்டமன்றத்தில் அறிவித்தார்.

    இந்த கொள்கைகளையும் மாற்றுகிற சக்தி எந்த கொம்பனுக்கும் கிடையாது என அப்போதே சொன்னார். வேற்று மொழி வந்தால் தாய்மொழி அழியும் என்பது எங்களின் சித்தாந்தம். அந்த சித்தாந்தத்திற்கு எதிர் சித்தாந்தம் உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதிப்பெண் போடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் எழுகிறது.
    • தேர்வு தாளில் கிறுக்குவதை தடுக்க ஏ ஐ தொழில்நுட்பம்.

    விடைத்தால் திருத்தும் பணியில் ஈடுபடும் விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு அவற்றை அடையாளம் காண்பதில் குழப்பம் அடைகின்றனர்.

    இந்த கேள்விக்கு மதிப்பெண் போடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் அவர்களுக்குள் ஏற்படுகிறது.

    இது போன்ற மாணவர்கள் தேர்வு தாளில் கிறுக்கி வைத்து மதிப்பெண் பெறுவதை தடுக்க ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் விடைத்தால் திருத்தும் பரிசோதனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:-

    ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு எந்திரம் மூலம் விடைத்தாள்களை திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சரியான பதில்கள் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் ஏ ஐ தொழில்நுட்ப எந்திரத்திற்கு அனுப்பப்படும்.

    செயற்கை நுண்ணறிவு நகலை ஆய்வு செய்து பொருத்தமற்ற பதில்களை கண்டுபிடித்து அது பேராசிரியர்களை எச்சரிக்கும். ஒவ்வொரு மாணவரின் கையெழுத்தும் வித்தியாசமாக இருக்கும்.

    ஏஐ தொழிநுட்பத்தில் இது தொடர்பாக பல்வேறு திட்டங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.

    தேர்வுத்தாள் திருத்தம் பேராசிரியர்களுக்கு ஒரு ஏஐ தொழில்நுட்ப கருவி வழங்கப்படும்.

    இதன் மூலம் அவர்கள் விடைத்தாளில் உள்ள பிழைகளை கண்டறிந்து சரியான மதிப்பெண் தர முடியும். இதற்கென பிரத்தியேக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு பாட அறிவு தொடர்பான விதிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    ஏஐ தொழில்நுட்பத்தில் விடைத்தாள்களை திருத்துவது குறித்து பேராசிரியர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது தமிழகத்தில் உள்ள 4 பல்கலைக்கழகங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் விடைத்தாள்களை திருத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த தொழில்நுட்பத்தின் செயல் திறனை சரியாக பயன்படுத்திய பிறகு விரிவான முடிவுகள் செய்து அனைத்து பல்கலைக்கழகங்களில் செயல்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது.

    இதனை மாநில திட்ட குழு முடிவு செய்யும். ஏஐ தொழில்நுட்பத்தால் கல்லூரி விடைத்தாள்களை திருத்த ஒரு எந்திரன் வந்துவிட்டது.

    இதன் மூலம் தேர்வில் ஏதாவது எழுதி கிறுக்கி வைத்தால் மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற மாணவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. சரியான விடைக்கு மட்டுமே மதிப்பெண் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பெண்ணுக்கு தான் தாய், தந்தை எங்கு இருந்தாலும், எங்கு போனாலும் பாசம்.
    • நாமும் பாசமாக இருந்தால் குடும்பம் மட்டுமல்ல, நாடும் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதி முப்பெரும் விழா நடந்தது.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    போன ஜென்மத்தில் நிறைய பாவம் செய்திருந்தால் மகன்களாகவே பிறப்பார்கள், யாராவது புண்ணியம் செய்து இருந்தால் பெண் குழந்தைகள் பிறக்கும்.

    பெண்ணுக்கு தான் தாய், தந்தை எங்கு இருந்தாலும், எங்கு போனாலும் பாசம்.

    இதை பொதுவாக கூறுகிறேன், தப்பாக கூறவில்லை, இது இயல்பு.

    இதை நாம், நானும் மாற்றிக்கொள்ள வேண்டும் . நாமும் பாசமாக இருந்தால் குடும்பம் மட்டுமல்ல, நாடும் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

    அரசு பள்ளியில் கடந்த கால ஜென்மம் குறித்து பேசிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்காந்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற விழாவில் பேசிய பேச்சு மீண்டும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வேப்பங்குப்பம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.
    • பச்சிளம் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    ஒடுகத்தூர்:

    ஒடுக்கத்தூரை அடுத்த பொம்மன்குட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 30). இவரது மனைவி டயானா (20). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த மாதம் 27-ந் தேதி மாலை ஒடுக்கத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டயானாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

    குழந்தை பிறந்து 8 நாட்கள் ஆன நிலையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்ததாகக்கூறி பச்சிளம் பெண் குழந்தை உடலை உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டுக்கு பின்னால் குழி தோண்டி புதைத்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த டயானாவின் தந்தை சரவணன் பச்சிளம் குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு தெரியாமல் பின்வாசல் வழியாக குழந்தையின் பெற்றோர் இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளனர். வேப்பங்குப்பம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அணைக்கட்டு தாசில்தார் வேண்டா முன்னிலையில், பச்சிளம் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    சம்பவ இடத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை மற்றும் ஆய்வில் குழந்தை நலமுடன் இருந்ததாகவும், அதே போல உடல் மற்றும் தலை ஆகிய பகுதிகளில் எந்தவித காயமும் ஏற்படவில்லை. குறிப்பாக வீட்டிற்கு அருகில் இருந்த பப்பாளி மரம் மற்றும் எருக்கஞ்செடி உடைக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே இவற்றின் பாலை குழந்தைக்கு ஊற்றி கொன்று இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர். மேலும் தலைமறைவானவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில், தலைமறைவான கொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோரான சேட்டு மற்றும் டயானாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

    ×