என் மலர்
நீங்கள் தேடியது "திமுக"
- எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும்.
- யார் அந்த டி.டி.வி.தினகரன்? அவருக்கு அரசியலே தெரியாது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் பேஸ்ட் காப்பி அடிப்படையிலேயே உள்ளது. கடந்த தேர்தலின் போது மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினோம். அப்போது எடப்பாடி பழனிசாமி குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து படிக்க வைப்பதை போல் மகளிருக்கு ஆசை வார்த்தை கூறி உரிமைத்தொகை தர போகிறோம் என்று தி.மு.க. கூறியுள்ளது என்று சொன்னார்.
உங்களால் உரிமைத்தொகை கொடுக்க முடியாது என்று கூறியவர், இன்று 2000 ரூபாய் கொடுக்க முடியும் என்று கூறியதில் இருந்தே மகளிருக்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எந்த அளவிற்கு மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ள வரவேற்பையும் எடுத்துக்காட்டி உள்ளது என்பதை அறியலாம்.
எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும். அவசர அவசரமாக பந்திக்கு முந்திக்கொண்டு செல்வதைப் போல எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஆனால் அங்கு பந்தியே போடவில்லை, அவர் காத்திருக்கத்தான் வேண்டும். பந்தி போட்டவுடன் நாங்கள் வந்து அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவோம். எடப்பாடியால் எந்த நிதி நிலையையும் சரி செய்ய முடியாது. அவரின் திறமை என்ன என்பதை மக்கள் பார்த்துவிட்டார்கள். அவரால் திறமையாக எதையும் செயல்படுத்த முடியாது.
ராகுல் காந்தி தான் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளது. எனவே கூட்டணிக்குள் எந்த குழப்பமும் ஏற்படாது. யாராலும் அதனை உடைக்க முடியாது. சிலர் எதிர்பார்க்கிறார்கள், அது நடக்காது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்கள் கூட்டணியை விட்டு யாரையும் அனுப்புவது கிடையாது, அந்த பழக்கமும் கிடையாது. அவர்களை அரவணைப்பது தான் தமிழ்நாடு முதலமைச்சர் பழக்கம். தற்போதும் அவர்களை அரவணைத்து கொண்டு தான் இருக்கிறார். அந்த அரவணைப்பிலிருந்து யாராவது செல்ல வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் எங்களோடு இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதற்கு எங்கள் தலைவர் தெளிவான பதிலை சொல்லிவிட்டார்.
வரக்கூடிய தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என டி.டி.வி.தினகரன் ஜாதகம் பார்த்து ஜோசியம் சொல்கிறார். யார் அந்த டி.டி.வி.தினகரன்? அவருக்கு அரசியலே தெரியாது. நாங்கள் தனித்து ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு வெற்றி பெறுவோம். நிச்சயம் தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் என்றார்.
- கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக் கூடாது.
- காங்கிரஸ் தலைமை 5 நபர் குழுவை தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நியமித்து உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டும் என்று கேட்பதுடன், ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் விஜய் தலைமையிலான த.வெ.க. கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் கூட்டணி விவகாரம் பற்றி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் முடிவு செய்வார்கள் என்றும் மற்றவர்கள் சொல்வது அவரவர் சொந்த கருத்து என்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறி இருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் தமிழக காங்கிரசாருடன் ராகுல்காந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். கூட்டணி தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். இதில் பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் தி.மு.க.வுடன் கூட்டணி தொடர வேண்டும் என்றே வலியுறுத்தி பேசி உள்ளனர்.
அதுமட்டுமின்றி தி.மு.க. வுடன் கூட்டணியை தொடர ராகுல்காந்தி திட்டவட்டமாக முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக் கூடாது. சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிரக் கூடாது என்றும் நிர்வாகிகளிடம் அவர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தி.மு.க. செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி இதுவரை தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையோ அல்லது தேசிய காங்கிரஸ் தலைவரோ, தி.மு.க.வை விட்டு வேறு கட்சியில் பேசவில்லை என்றும், தி.மு.க.வுடன்தான் இருக்கிறோம் என்றும் பேசுகிறார்கள்.
காங்கிரஸ் தலைமை 5 நபர் குழுவை தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நியமித்து உள்ளது. எனவே மேலிடம் தௌிவாக உள்ளது. இங்கு லோக்கலில் சில பேர் வேறுவிதமாக பேசுகிறார்களே தவிர, காங்கிரஸ் அதிகாரப்பூர்வமான தலைமை தி.மு.க.வுடன் இருப்பதை இதுவரை உறுதி செய்துள்ளது.
அதில் எந்த மாற்றமும் அவர்கள் சொல்லவில்லை. இந்த கூட்டணி அப்படியே தொடர்கிறது.
கே: காங்கிரசில் ஒரு சிலர், விஜய் கட்சியுடன் போகலாம் என்று பேசுகிறார்களே?
ப: அப்படி பேசுபவர்கள் தலைவர்கள் இல்லை. இஷ்டத்துக்கு அவர்கள் கருத்தை சொல்கிறார்கள். எங்கு சொல்ல வேண்டுமோ அங்கு சொல்லாமல் பொது வெளியில் பேசுவதுதான் குழப்பத்தை உண்டாக்குகிறது. அதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.
- அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது.
- நம் திராவிட நாயகன் முதலமைச்சர் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிவிட்டார்.
திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்பை அதிமுக வெளியிடுகிறது என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒவ்வொரு தேர்தலிலும் கதாநாயகனாக திகழும் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிவாலயம் வாசலில் குத்த வைத்து காத்திருக்கும் அதிமுகவினர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானதும் முதல் காப்பியை வாங்கிக்கொண்டு, அதை அப்படியே காப்பியடித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக வெளியிடுவது தான் வழக்கமான நடைமுறை. இந்த முறை, அதில் விசித்திர மாற்றத்தை செய்து தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மாண்புமிகு திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு "டூப்" போட்டு அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது !
2021ல் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியான போது, தமிழ்நாட்டின் நிதி நிலைமை சரியில்லை எனவே இதையெல்லாம் நிறைவேற்றவே முடியாது என்றார் பழனிசாமி. ஆனால், தமிழ்நாட்டை அனைத்து தளங்களிலும் முன்னேற்றியதுடன், எதையெல்லாம் திமுகவால் செய்ய முடியாது என்று எதிர்கட்சி தலைவர் சொன்னாரோ, அதை எல்லாம் நம் திராவிட நாயகன் முதலமைச்சர் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிவிட்டார்.
இப்போது புதிதாக எதுவும் சிந்திக்க திராணி இல்லாமல் திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்புகளை வெளியிடுகிறது அதிமுக.
அவர்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளவர்களின் திறமை மீது நம்பிக்கை இல்லாமல், திமுக அரசின் சாதனை திட்டங்களை ரோல் மாடலாகக் கொண்டு, அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இது உங்களுக்கு செட் ஆகல சார். வெயிட் பண்ணுங்க. உங்க மூளையை இப்ப கசக்க வேண்டாம். எப்போதும் போல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை வந்த பிறகு, அதை முழுமையாக உங்க பழைய ஜெராக்ஸ் மிஷினில் காப்பி எடுக்கலாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை, ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லை.
- தெலுங்குப் பழமொழி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முழுமையாகப் பொருந்தும்.
மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏமாற்று அறிவிப்பை கொடுத்துள்ளார என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக, மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆகா, தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கப் போகிறார் என்று அனைவரும் நினைத்தோம். ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை, ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று, மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப் போகிறோம் என்று மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஏற்கனவே, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த ஐந்து ஆண்டுகளில், கொடுக்கப்பட வேண்டிய சுமார் ₹60,000 ஊக்கத்தொகை எப்போது வருமென்று தெரியவில்லை. இப்படி தொடர்ந்து வெற்று வாக்குறுதிகள் கொடுத்து யாரை ஏமாற்றலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என்பது தெரியவில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிடித்த "பேரு பெத்த பேரு, தாக நீலு லேது" என்ற தெலுங்குப் பழமொழி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முழுமையாகப் பொருந்தும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாள்களில் மது வணிகம் ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
- மக்கள் விரோத மது ஆதரவு அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் ரூ.454 கோடிக்கு மது விற்பனையாகி இருந்த நிலையில், நடப்பாண்டில் அதை விட 14.10 சதவீதம் அதிகம் ஆகும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் 11.19 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில், அதை விட அதிகமாக மது வணிகம் வளர்ச்சியடைந்திருக்கிறது. மக்களுக்கு மதுவைப் புகட்டுவதில் மட்டும் தான் தி.மு.க. அரசு சாதனை படைக்கிறது.
கடந்த ஆண்டு பொங்கல் திருநாளின்போது 4 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில், நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாள்களில் மது வணிகம் ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
பொங்கல் திருநாள் மது வணிகத்தில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், மனமகிழ் மன்றங்களின் மூலம் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது என்பது தான். இது மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட ரூ.435.41 கோடி மதுவுடன் ஒப்பிடும்போது 19 சதவீதம் ஆகும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் 500 மதுக்கடைகளை, அதாவது 9 சதவீதம் மதுக்கடைகளை மூடிய தி.மு.க. அரசு, 19 சதவீதம் கூடுதலாக மது வணிகம் செய்யும் அளவுக்கு மனமகிழ் மன்றங்களைத் திறந்து மதுவை விற்பனை செய்திருப்பது உறுதியாகி யிருக்கிறது.
மக்கள் விரோத மது ஆதரவு அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பண்டிகை நேரங்களில் சாராய விற்பனையைப் பல மடங்குகளாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது இந்த டாஸ்மாக் மாடல் அரசு.
- பொங்கலுக்குக் கொடுத்த ரூபாய் நோட்டில் உள்ள எண்ணும், டாஸ்மாக்கில் வசூலாகியுள்ள நோட்டில் உள்ள எண்ணும் ஒத்துப்போகிறது என்று செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,
உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது தி.மு.க. அரசு!
"போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்" என உருகி உருகி காணொளி வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் ரூ.518 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை களைகட்டியிருப்பது சுவாரஸ்யமான நகை முரண். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சாராய வாடை இல்லாத கொண்டாட்டங்களே இல்லை என்று கூறுமளவிற்குப் பண்டிகை நேரங்களில் சாராய விற்பனையைப் பல மடங்குகளாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது இந்த டாஸ்மாக் மாடல் அரசு.
அதிலும், குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு ரூ.3000 கொடுக்கிறோம் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துவிட்டு, அந்தப் பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ள திமுக அரசின் அறிவாற்றலைப் பார்க்கையில், இதற்குப் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்ற நகைச்சுவை வசனம் தான் நினைவிற்கு வருகிறது. பொங்கலுக்குக் கொடுத்த ரூபாய் நோட்டில் உள்ள எண்ணும், டாஸ்மாக்கில் வசூலாகியுள்ள நோட்டில் உள்ள எண்ணும் ஒத்துப்போகிறது என்று செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்களின் மகிழ்ச்சியை விட, மக்களின் மன நிம்மதியை விட, போதையால் சமூகத்தில் நிகழும் அசம்பாவிதங்களைத் தடுப்பதை விட டாஸ்மாக் வருமானத்தைப் பெரிதாகப் பார்க்கும் ஒரு அரசு, இனியொரு முறை தப்பித்தவறி கூட தமிழகத்தை ஆளக் கூடாது! என்று கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.45,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்திய பிறகும் மின்சார வாரியம் நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது.
- மீண்டும், மீண்டும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக்கூடாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மாலை நேர மின் தேவையை சமாளிப்பதற்காக 1553 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுவதாகவும், அந்த அளவு மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.8.50 முதல் ரூ.9.50 வரை விலை கொடுத்து வாங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் விண்ணப்பித்திருக்கிறது. இந்த அளவுக்கு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது மின்வாரியத்திற்கு இழப்பையே ஏற்படுத்தும்.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கும் மின்சாரத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறையவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியமே வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி மாநிலத்தின் மொத்த மின் தேவையில் வெறும் 16% மட்டுமே மின்சார வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்று வரை ஒரே ஒரு மெகாவாட் அளவுக்கு கூட புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
கடந்த ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவை 13,860 கோடி யூனிட் எனும் நிலையில், அதில் 80.66 விழுக்காடான 11 ஆயிரத்து 179 கோடி யூனிட் மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பு, தனியார் மின் நிறுவனங்கள், மின்சார சந்தைகள் ஆகியவற்றிடம் இருந்து தான் மின்சார வாரியம் வாங்கியிருக்கிறது. இவ்வாறு வாங்குவதற்காகவே மின்னுற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தாமல் திமுக அரசு தாமதப்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.45,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்திய பிறகும் மின்சார வாரியம் நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது. காரணம்.... தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவது தான். மீண்டும், மீண்டும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக்கூடாது. சந்தை சராசரி விலையைக் கணக்கிட்டு, அதற்கும் குறைவான விலையிலேயே 1553 மெகாவாட் மின்சாரத்தையும் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் கூலிப்படை Network, போதைப்பொருள் Network, தற்போது துப்பாக்கி Network
- துப்பாக்கி கலாச்சாரம் என்பதெல்லாம் தமிழ்நாடு இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று.
அதிமுக வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலியில் வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அதுவும், இவர்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாக துப்பாக்கி விற்பனை செய்ததாக செய்திகள் வருகின்றன.
அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில்,
கூலிப்படை Network,
போதைப்பொருள் Network,
தற்போது துப்பாக்கி Network
என இவை அனைத்தையும் வளர விட்டிருப்பது யார்? இன்றைய Failure Model திமுக முதல்வர் தானே?
துப்பாக்கி கலாச்சாரம் என்பதெல்லாம் தமிழ்நாடு இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று. அதுவும், இன்ஸ்டாகிராம் வாயிலாக ஏதோ புடவை விற்பது போல Assault-ஆக துப்பாக்கி விற்கும் அளவிற்கு எங்கிருந்து இவர்களுக்கு தைரியம் வருகிறது?
இதுபோன்ற செய்திகள் எல்லாம், இந்த திமுக ஆட்சியில் மக்கள் எப்படி நிம்மதியாக நடமாட முடியும்? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
"உலக நாடுகளுடன் தான் நமக்கு இனிமேல் போட்டி" என்று ஒரு திமுக அமைச்சர் சொன்னாரே- எதில்? Crime Nexus, Gun Network, Drug Mafia... இதில் தானே?
அதிலும் சகல நெட்வர்க்கிலும் உச்சியில் நின்று ஆட்டிப் படைப்பது திமுக-வினர்தான் என்பதுதான் இதில் Highlight...!!
மக்களின் உயிரைப் பற்றி, அவர்களின் பாதுகாப்பு பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல், துப்பாக்கி கலாச்சாரத்தை வளர வைத்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
கைது செய்யப்பட்டுள்ள திமுக நிர்வாகி உட்பட, குற்றத்தில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
இன்னும் 3 மாதங்களில் அமையவுள்ள அதிமுக ஆட்சியின் முதல் பணியாக, சட்டம் ஒழுங்கைக் காக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை தமிழக மக்களுக்கு அளிக்கிறோம்.
மக்களைக் காப்பதே அரசின் முதல் கடமை!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது.
- 2014 இல் தனியாக நின்று திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 23.9% தான். அதாவது 24% கூட இல்லை.
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று பொங்கல் திருநாளில் காங்கிரஸ் ஏம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை சீண்டி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "தை பிறந்தால் வழி பிறக்கும்.. ஆட்சியில் பங்கு என்பது என்ன என்பதை நாம் அறிய ஒரு மாடல்.
கேரளாவின் UDF மாடல். கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையான பாதையை காட்டுகிறது.
காங்கிரஸ் தலைமையேற்கிறது — ஆனால் அதிகாரம் குவிக்கப்படவில்லை; பகிரப்படுகிறது.
நட்பு +பங்கு. இதுவே UDF அரசியலின் அடித்தளம்.
UDF-ல் நாங்கள் தேர்தலை ஒன்றாகவே எதிர்கொள்கிறோம். பரஸ்பர நம்பிக்கையும், ஒரே அரசியல் நோக்கமும் அவர்களின் பலம்.
முக்கியமானது — தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கு "பை-பை" சொல்லுவதில்லை. தேர்தலில் கூட்டாளிகள், ஆட்சியிலும் பங்கு பெறும் கூட்டாளிகளே.
அமைச்சர் பதவிகளும் முக்கிய துறைகளும் பலத்தையும், உடன்பாட்டையும், பொறுப்பையும் அடிப்படையாகக் கொண்டு பகிரப்படுகிறது — ஆட்சி ஆதிக்கத்திற்காக அல்ல.
IUML, Kerala Congress (M), RSP உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிதி, கல்வி, பொதுப்பணித்துறை, தொழில், சமூக நலன், நீர்வளம் போன்ற முக்கிய அமைச்சகங்களை பொறுப்புடன் நிர்வகித்தன.
இது பெயருக்கான பங்கீடு அல்ல. கூட்டணிக் கட்சிகள் மைய துறைகளை நிர்வகித்து, முடிவெடுத்து, முழுப் பொறுப்பையும் ஏற்றன.
முக்கிய கொள்கை முடிவுகள் UDF ஒருங்கிணைப்பின் மூலம், கேரளாவின் சமூக-அரசியல் பல்வகைமையை மதித்து எடுக்கப்பட்டன.
தேர்தலுக்குப் பின் துரோகம் இல்லை. வாக்குகள் எண்ணப்பட்டதும் கூட்டணியை ஒதுக்கும் அரசியல் இல்லை. இதுதான் UDF மாடலின் வித்தியாசம்.
UDF மாடல் = கூட்டணி தர்மம் செயல்பாட்டில். ஒன்றாகப் போராடு. ஒன்றாக ஆட்சி செய். ஒன்றாக மக்களுக்கு வழங்கு.
இந்த ஜனநாயகமான UDF மாடல் 2026-லும் வெற்றி பெற வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்.. நல்ல ஆட்சியாக மாறட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் பகிர்ந்த மற்றொரு பதிவில், "தை பிறந்தால் வழி பிறக்கும். அனைத்து தமிழ் பெருங்குடி மக்களுக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. அப்படி கேட்பதே குற்றம், ஆர். எஸ். எஸ் மனப்பான்மை என்கின்றனர் திமுக தோழர்கள். முக்கியமாக திமுக ஆன்லைன் வாரியர்ஸ். காங்கிரஸ் நன்றி இல்லாமல் பேசுகிறது என்று சொல்கிறார்கள்! சிரிப்பாய் தான் வருகிறது.
நாங்கள் தான் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவித்தோம் மற்ற கூட்டணி கட்சிகள் அதை செய்ய முன்வரவில்லை என்கிறார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை வசதியாக மறந்து விடுகிறார்கள் .
2016 இல் தங்களுக்கு மந்திரி பதவிகள் வேண்டும், தாங்களும் அதிகாரத்தில் அமர வேண்டும் என முடிவு செய்து மக்கள் நல கூட்டணி ஆரம்பித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இப்போதைய திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக , சிபிஎம், சிபிஐ , மற்றும் தமாகா தனித்து நின்ற போது, "திமுக தலைவர் கலைஞர் அவர்களை தான் முதல்வராக ஆக்க வேண்டும்" என்று திமுகவிற்கு உற்ற துணையாக தோழனாக இருந்து களம் கண்டது காங்கிரஸ் பேரியக்கம் மட்டும் தான். உடன் சின்ன கட்சிகளான முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மட்டுமே இருந்தது.
அதிமுக 136 சீட்டுகளுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது. அப்போது அதிமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 40.9%
திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 98 சீட்டுகளுடன் பெற்ற வாக்கு சதவீதம் 39. 4%.
அதிமுக கூட்டணி- திமுக கூட்டணி வித்தியாசம் வெறும் 1.5% தான்.
திமுக பெற்ற வாக்கு சதவீதம் 31.39% (காங்கிரஸ் IUML மமக கூட்டணி). இதே தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் 6.47%
ம.ந.கூ பெற்ற சீட்டுகள் 0 தான். 6 கட்சிகள் ஒன்றாக சேர்ந்து பெற்ற வாக்கு சதவீதம் 19.6%
2014 முதல் 2016 காலகட்டத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வீழ்ச்சியில் இருந்த போது கூட பெற்ற வாக்குகள் 6.47%
2014 இல் தனியாக நின்று திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 23.9% தான். அதாவது 24% கூட இல்லை.
2016 இல் அனைத்து கூட்டணி கட்சிகளும் கலைஞர் அவர்களை கைவிட்ட போதிலும் அவர் தான் எங்களின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி காங்கிரஸ் அவரை கை விடாமல் உடன் நின்றது . ஆகவே நன்றி விசுவாசம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை. இதனை ஆன்லைன் உடன்பிறப்புகள் உணர வேண்டும். எழுதும் போது பொறுப்புணர்ந்து கண்ணியம் குறையாமல் எழுதுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- பகுதிநேர ஆசிரியர் கண்ணன் என்பவர் (ஜனவரி 13) விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
- இன்று மாலை சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 7 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று ஆசிரியர் கண்ணன் என்பவர் (ஜனவரி 13) விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் கண்ணனின் உயிரிழப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொய் வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்தபின் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்களின் உயிரை பறித்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.
திமுக கொடுத்த வாக்குறுதிகளால் பணி நிரந்தரம் ஆகிவிடும் எனும் நம்பிக்கையில் காத்திருந்த பகுதி நேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்கள், விஷம் அருந்தி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் சக ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
ஆசிரியர் ஒருவர் மரணித்துவிட்ட கவலை கொஞ்சம் கூட இல்லாமல், கவிதை பாட சொல்லி "Vibe" செய்து கொண்டிருக்கிறாரே... முதல்வர் என்ற உயர்வான பதவிக்கே இந்த Failure Model முதல்வர் ஒரு இழுக்கு.
உயிரிழந்த திரு.கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த அரசு உடனடியாக ரூ.50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோர், இதுபோன்ற முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
- ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது.
- ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 7 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று ஆசிரியர் கண்ணன் என்பவர் (ஜனவரி 13) விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் கண்ணனின் உயிரிழப்புக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில,
"பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடத்தி வந்த போராட்டத்தின் போது நஞ்சு குடித்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் மருத்துவம் பயனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பகுதிநேர ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணி நிலைப்புக் கோரிக்கையை வலியுறுத்தி 13 ஆண்டுகளாக போராடி வரும் அவர்கள், கடந்த 8ஆம் தேதி முதல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு மறுப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு எதிராக அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது.
சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் வானகரத்தில் உள்ள திருமண அரங்கத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அடக்குமுறைகளைக் கண்டித்தும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் கண்ணன் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மருத்துவம் பயனளிக்காமல் இன்று மாலை காலமானார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை. கடந்த ஐந்தாண்டுகளாக அவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட , அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு பதிலாக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆசிரியர் கண்ணன் உயிரிழப்புக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
இனியாவது திமுக அரசு மனசாட்சிக்கு அஞ்சி பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- சிந்தாந்தரீதியில் அதிமுகவிற்கும் எங்களுக்குள் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
- சீமானை ஏன் குறைத்து எடைப்போடுகிறீர்கள்?
டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,.
திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி என விஜய் கூறுகிறாரே என்ற கேள்விக்கு,
தமிழ்நாட்டில் நான்கு பிரதான கட்சிகள் இருக்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணி இருக்கிறது, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ உள்ளது; தமிழக வெற்றிக்கழகம் இருக்கிறது; சீமானின் நாம் தமிழர் உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க திமுகவிற்கு எதிரான வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் கூட்டணியை பொறுத்தவரை அனுபவம் உள்ளது; பிரதமரின் ஆசிர்வாதம் உள்ளது. ஜன.23 அன்று பிரதமரின் தேர்தல் பரப்புரை சென்னை அருகில் தொடங்க உள்ளது. அதனால் எங்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது.
தலைவர்களை தாண்டி அண்ணாமலையின் எண்ணம் என்ன, விஜய் கூட்டணிக்குள் வருவது குறித்து என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,
நான் எதுவும் நினைக்கவில்லை. அதற்கான முடிவை தலைவர்கள் எடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு கட்சியின் இலக்கு என்ன என்பதை பார்க்கவேண்டும். சீமானைப் பொறுத்தவரை திராவிட கட்சிகள் வேண்டாம். விஜய் திமுக வேண்டாம் என்றும் நினைத்தால், யார் வேண்டும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். எங்களுக்குள் கொள்கை முரண்பாடு இருந்தாலும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அதிமுக-பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது. சிந்தாந்தரீதியில் எங்களுக்குள் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
விஜய் வந்தால் உங்கள் கூட்டணி பலம் வாய்ந்ததாகும் என தலைமையிடம் கூறுவீர்களா?
நான் தலைமையிடம் எதுவும் கூறுவதில்லை. முரண்பாடு இருப்பவர்களை அழைத்து ஒரே இடத்தில் வைத்துக் கொள்வதும் பிரச்சனைதான். எல்லாவற்றையும் ஒன்றாக குழப்பினால் கூட்டணிக்குள் கெமிஸ்ட்ரி இருக்காது. விஜய்யின் அரசியல் விஜய்க்கு, எங்களின் அரசியல் எங்களுக்கு.
நான் விஜய்யை சாதாரணமாக எடைபோடவில்லை. முதல் நாளிலிருந்து இதைக்கூறுகிறேன். அவர் ஒரு மாஸ் ஸ்டார். செங்கோட்டையன் உட்பட நிறைய தலைவர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். எல்லா இடங்களிலும் கிளைக்கழங்களை நிறுவிவருகின்றனர். தொண்டர்கள் களப்பணியில் உள்ளனர். அதுபோலத்தான் சீமானும். சீமானை ஏன் குறைத்து எடைப்போடுகிறீர்கள்? நாடாளுமன்ற தேர்தலில் 8.5 சதவீதம் ஓட்டு வாங்கியுள்ளார். சீமான் இந்த தேர்தலில் எவ்வளவு வாக்குவாங்குவார், வெற்றிப்பெறுவார் என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். யாரையும் லேசாக எடைப்போடக்கூடாது. எங்கள் கூட்டணி வலிமையாக உள்ளது.
சீமானின் கட்சி வலிமையானதா?
யாரையும் உதாசீனப்படுத்தக்கூடாது என்பது என்னுடைய கருத்து. எல்லோருமே தலைவர்கள். எல்லோரும் வாக்குகளை பெறுகிறார்கள். நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி இத்தனை சதவீதம் வாக்கு வாங்கியுள்ளது என்றால், அதனை தட்டி தூசிபோல் பேசக்கூடாது. அவர்களுக்கும் வாக்குவங்கி, வேறுபட்ட எண்ணங்கள் உள்ளன. மக்கள் மனதிலும் ஓட்டம் உள்ளது. இன்று நான்குமுனை போட்டி உள்ளது. அடுத்த அறுபது நாட்களில் 2 முனை போட்டியாக மாறும்.
பாமக, தேமுதிக குறித்து பேசாதது ஏன்?
பாமக எங்கள் கூட்டணியில் உள்ளது. தேமுதிக தனியாக போவதாக கூறுகிறார். மருத்துவர் ராமதாஸ் நல்லமுடிவை எடுப்பார். அதுபோல பிரேமலதா விஜயகாந்தும் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்." என தெரிவித்தார்.






