என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    #DMK மத்திய அரசு செய்யும் ஏமாற்று வேலையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
    X

    #DMK மத்திய அரசு செய்யும் ஏமாற்று வேலையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    • கருணாநிதி வழியில் நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைச் செய்து வருகிறது.
    • தமிழினுடைய தொன்மையை வெளி உலகிற்குச் சொல்கிற வகையிலே வேர்ச்சொல் ஒப்பீட்டு ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் கரந்தை தமிழ் சங்கத்தில் இன்று தமிழ் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவசிலை மற்றும் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் செயலாளர் ராமநாதன் உருவ சிலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    வரலாற்றுச் சிறப்புமிக்க கரந்தை தமிழ் சங்கத்தினுடைய வளாகத்திலே கருணாநிதி சிலையையும், சங்கத்துடைய முன்னாள் தலைவர் செம்மொழிவேலர் ராமநாதனுடைய சிலையையும் உங்களுடைய முன்னிலையிலே திறந்து வைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    நிகழ்ச்சியினுடைய தொடக்கத்திலே தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் பாடி இருக்கின்றோம். தமிழ்த்தாய் வாழ்த்து முதன்முதலாகப் பாடப்பட்டது இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கத்தில்தான். அதன் பிறகு 1970-களில் கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்தைத் தமிழ்நாடு அரசினுடைய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தார்.

    இது வெறும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தான். இதற்கு எழுந்து நின்று நம்முடைய மரியாதை செலுத்தத் தேவையில்லை என்று ஒரு கூட்டம் சொல்கிறது. இன்னும் சில பேர் சட்டப்பேரவையிலே இந்த பாட்டையே பாடக்கூடாது அப்படின்னு ஒரு கூட்டம் சொல்கிறது. ஆனா இந்த பாடல் தமிழ்நாடு அரசினுடைய ஸ்டேட் ஆந்தம் மாநிலப் பாடல் என்பதை அறிவித்து அதைப் பாடும் பொழுது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசாணையைப் போட்டவர் கருணாநிதி தான். இன்றைக்கு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எப்படியாவது மீண்டும் தமிழ்நாட்டிற்குள்ளே இந்தியை திணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டினுடைய கல்வி நிதி ரூ.3,500 கோடியை கொடுக்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் அந்த 3,500 கோடியை கொடுப்போம் என்று மத்திய அரசு கூறுகிறது.

    ஆனா நம்முடைய முதலமைச்சர் 3,500 கோடி இல்லை. 10,000 கோடி கொடுத்தாலும் இந்தியையும் சமஸ்கிருதத்திற்கும் தமிழ்நாட்டில் எந்த நேரத்திற்கும் இடம் கிடையாது என்று உறுதியாக கூறிவிட்டார்.

    கருணாநிதி வழியில் நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைச் செய்து வருகிறது.

    தமிழினுடைய தொன்மையை வெளி உலகிற்குச் சொல்கிற வகையிலே வேர்ச்சொல் ஒப்பீட்டு ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது . தமிழறிஞர்களுக்கு விருதுகளும், தேசிய சர்வதேச விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடுகளும் நம்முடைய முதலமைச்சர் தொடர்ந்து வழங்கி வருகிறார். தமிழினுடைய அரிய நூல்கள் எல்லாமே இன்றைக்கு டிஜிட்டல் வடிவில் மாற்றப்படுகிறது. தமிழில் இருக்கக்கூடிய சிறந்த நூல்கள் உலகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அதேபோல் உலகின் சிறந்த நூல்களை எல்லாம் தமிழில் கொண்டுவர முயற்சிகளை நம்முடைய அரசு எடுத்து வருகின்றது.

    ஆனால் மத்திய அரசு சமஸ்கிருதத்தை வளர்க்கிறதில் மட்டும்தான் அக்கறையைக் காட்டி வருகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மட்டும் மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ.2,500 கோடி. ஆனால் நம்முடைய தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகை வெறும் 147 கோடி ரூபாய்.

    தமிழ் தமிழ்ன்னு சொல்லி இன்றைக்கு மக்களை ஏமாற்றும் வேலையை மத்திய அரசு செய்து வருகின்றது. அந்த ஏமாற்று வேலைகளை எல்லாம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். உண்மையாகத் தமிழுக்காக உழைப்பவர்கள் யார்? போலித்தனமாக நடிப்பவர்கள் யார்? என்பதை மக்களுக்கு நாம் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும். எனவே இந்த முக்கியமான நேரத்தில் நீங்கள் அத்தனை பேரும் நம்முடைய முதலமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அன்னைத் தமிழைப் காப்போம், ஆதிக்க மொழித் திணிப்பை என்றும் வீழ்த்துவோம் என்று பேசினார்.

    Next Story
    ×