என் மலர்
தஞ்சாவூர்
- 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- சம்பவம் குறித்து வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
வல்லம்:
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் மாதவன் (வயது10).
அதே பகுதியை சேர்ந்த செந்தில் மகன் பாலமுருகன் (10) மற்றும் ஸ்ரீதர் மகன் ஜஸ்வந்த் (8) இவர்கள் 3 பேரும் திருவேங்கப்புடையான்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 5 மற்றும் 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருவேங்கப்புடையான்பட்டியில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் அருகே மருதகுடி கிராமத்தில் நடந்து வரும் கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அனைவரும் திருவிழாவை பார்த்து கொண்டு இருந்தனர்.
அப்போது மாதவன், பாலமுருகன், ஜஸ்வந்த் ஆகிய 3 மாணவர்கள் மட்டும் அதேகிராமத்தில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றனர். ஒன்றாக சேர்ந்து குளித்தபோது குளித்தின் ஆழமான பகுதிக்கு சென்றனர். அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கினர். 3 பேருக்கும் நீச்சல் தெரியதால் தண்ணீரில் தத்தளித்து காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பினர்.
சிறிது நேரத்தில் மாணவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதற்கிடையே 3 பேரையும் திருவிழாவில் காணாதது கண்டு அவர்களது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடி பார்த்தனர். பின்னர் உறவினர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள குளத்திற்கு சென்ற பார்த்தபோது வெளியில் மாணவர்களின் உடமைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் குளத்தில் குதித்து தேடிபார்த்தனர். அப்போது மூழ்கிய நிலையில் இருந்த மாதவன், பாலமுருகன், ஜஸ்வந்த் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடல்களை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 5 வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக கூறிவருகின்றனர்.
- தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.
கும்பகோணம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பா.ம.க.வை வழிநடத்துவது யார்? என்பதில் இருவரும் பிடிவாதமாக உள்ளனர். கட்சியை கையகப்படுத்த இருவரும் தலைமைத் தேர்தல் ஆணையத்தையும் நாடி உள்ளனர். பொதுக்குழுவை கூட்டி, எடுக்கும் முடிவுகள் அடிப்படையில் பா.ம.க.வின் எதிர்காலம் அமையும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் கும்பகோணத்தில் இன்று பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூடியது. அக்கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
அப்போது டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
5 வயது குழந்தையாகிய நான்தான் 3 வருடங்களுக்கு முன்பு அன்புமணியை பா.ம.க.வின் தலைவராக ஆக்கினேன். அன்புமணி தனது பெயருக்கு பின்னால் என் பெயரை பயன்படுத்தக்கூடாது. என் பேச்சைக் கேட்காதவர்கள் எனது பெயரை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். தேவையென்றால் அன்புமணி எனது பெயரை இன்ஷியலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஜெயா என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- சேதமடைந்த 2 வாகனங்களையும் தாலுகா போலீசார் அப்புறப்படுத்தினர்.
தஞ்சாவூா்:
சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் குமார் (வயது 57). இவர் தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30) மற்றும் உறவினர்கள் ஸ்டாலின் (36), அவரது மனைவி துர்கா (32), 3 வயது குழந்தை நிலாவேணி சூர்யா ஆகியோருடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக ஒரு காரில் புறப்பட்டார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கும்பகோணத்திற்கு வந்த அவர்கள் அங்குள்ள கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, பின்னர் அதே காரில் தஞ்சை பெரிய கோவிலை பார்ப்பதற்காக புறப்பட்டனர். தஞ்சாவூர் அருகே விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் நாற்று ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்துள்ளது. அந்த மினிலாரியை விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக கார்- மினி லாரி நேருக்கு நேர் மோதின. இதில் 2 வாகனங்களும் பலத்த சேதமடைந்து தூக்கி வீசப்பட்டன. இந்த கோர விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஜெயா என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், காரில் பயணித்த குமார், துர்கா, மோனிஷா, ஸ்டாலின், சிறுமி நிலாவேணி சூர்யா மற்றும் மினி லாரி டிரைவர் விக்னேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.
தகவல் அறிந்த தஞ்சாவூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே குமார், துர்கா, சிறுமி நிலாவேணி சூர்யா ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மோனிஷா, ஸ்டாலின், லாரி டிரைவர் விக்னேஷ் ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோர விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சேதமடைந்த 2 வாகனங்களையும் தாலுகா போலீசார் அப்புறப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சைக்கு ஆன்மீக சுற்றுலா வந்தபோது மினி லாரி மோதியதில் சென்னையை சேர்ந்த சிறுமி உள்பட 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், டாஸ்மாக் இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் குறையாது.
- அரசின் மீது இருக்கிற அதிருப்தியை மக்கள் வெளிப்படையாக பேச தொடங்கி இருக்கிறார்கள்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூரில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்சமயம் தமிழகத்தை உலுக்கிய ஒரு மிகப்பெரிய வேதனையான பிரச்சனை. சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் மரணம்.
இதற்கு காரணம் தமிழக அரசினுடைய செயல்பாடு. காவல்துறை வசம் முதலமைச்சரிடம் தான் உள்ளது என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். சட்டம் ஒழுங்கும் தமிழகத்திலே படிப்படியாக கடைசி புள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறது.
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணை நடந்து கொண்டிருந்தாலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையிலே திருபுவனம் காவலாளி மரணத்திலே ஏதோ அவிழ்க்க முடியாத முடிச்சு இருக்கிறது. அந்த முடிச்சை போட்ட அதிகாரி யார்? என்பது இன்று வரை கேள்விக்குறியாக இருக்கிறது.
முழுமையான விசாரணை மூலம் முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும். இறந்த காவலாளி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்கலாம், பணம் கொடுக்கலாம், மனை கொடுக்கலாம், ஆறுதல் கூறலாம். ஆனால் உயிரை திரும்ப கொடுக்க முடியாது என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், டாஸ்மாக் இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் குறையாது.
அரசினுடைய தவறுகளை, விரோத போக்கை மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள். வருகின்ற தேர்தலிலே ஆட்சி மாற்றத்தின் அடிப்படையிலே பாடம் புகட்டுவார்கள் என்பதிலே மாற்று கருத்து இருக்க முடியாது.
இன்றைக்கு அ.தி.மு.க தலைமையிலான பா.ஜ.க., த.மா.கா மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் தான் நம்பிக்கைக்கு உரிய கூட்டணியாக விளங்குகிறது.
எடப்பாடி பழனிசாமி கூட்டணி தலைவராக உள்ளார்.
அரசின் மீது இருக்கிற அதிருப்தியை மக்கள் வெளிப்படையாக பேச தொடங்கி இருக்கிறார்கள். எனவே தமிழகத்தினுடைய வெற்றி அணியாக முதல் அணியாக செயல்பட தொடங்கி இருக்கிற அ.தி.மு.க, பா.ஜ.க, த.மா.கா மற்றும் ஒத்த கருத்துடைய கூட்டணிகள் தேர்தலிலே வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை மக்களை ஏற்படுத்தி கொடுப்பார்கள் . இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளன.
நாளை முதல் கோவை மண்டலத்தில் இருந்து தனது மக்கள் சந்திப்பு இயக்கத்தை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்க உள்ளார். அவரது சுற்றுப்பயணத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிப்பார்கள். எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும். அ.தி.மு.க, பா.ஜ.க-த.மா.கா வெற்றி கூட்டணி.
கீழடி ஆய்வில் நம்முடைய பாரம்பரிய பெருமைகளுக்கு எடுத்துக்காட்டாக உதாரணங்கள் நிஜ வடிவிலே வெளிவந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் தேர்தலில் அதிக சீட் கேட்கிறார்கள் என்பது அவர்களுடைய கட்சி விவகாரம்.
இந்தி மொழியை மத்திய பா.ஜ.க அரசு ஒருபோதும் திணிக்கவில்லை. .
வளர்ந்த நாடுகள் கூட பொருளாதாரத்தில் குன்றிய நிலையில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை பொருளாதாரத்தில் படிப்படியாக உயர்த்திய பெருமை பா.ஜ.க. ஆட்சியே ஆகும். பிரதமர் மோடி திறம்பட பணியாற்றி வருகிறார்.
இதனை ஜீரணிக்க முடியாத தி.மு.க அரசு வாக்கு வங்கிக்காக ஜாதி, மதத்தை பிரித்து பார்த்து பேசுகிறது. அது ஏற்புடையது அல்ல.
காவிரியின் கடைமடை வரை இன்னும் காவிரி நீர் சென்று சேரவில்லை. இதனால் பல இடங்களில் விதைத்த பயிர்கள் கருகி வருகிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது. எனவே அரசு கடைமடை வரை தண்ணீர் செல்வது உறுதிப்படுத்த வேண்டும்.
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு நிபந்தனை இன்றி பயிர் கடன் வழங்க வேண்டும்.
டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் மிகுந்த மரியாதைக்குரிய தலைவர்கள். பா.ம.க.வில் ஒட்டுமொத்தமாக நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சி த.மா.கா.
தமிழகத்தினுடைய இன்றைய பல்வேறு துறையினுடைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக செயல்பட்ட முதல்வர் பெருந்தலைவர் காமராஜர். நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படை தன்மைக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்ட தலைவர். இன்றைக்கும் மாணவர்களுக்கு ரோல் மாடலாக திகழக்கூடிய தலைவர். பெருந்தலைவர் காமராஜர் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எல்லா வருடமும் அவரது பிறந்த தின விழாவை மிகச் சிறப்பாக ஒரு பொதுக் கூட்டமாக ஏற்பாடு செய்து அதனை பிரம்மாண்டமாக நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த வருடம் சென்னை மாநகராட்சி புரசைவாக்கத்தில் காமராஜர் பிறந்த தின விழா பொதுக்கூட்டமாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கும்பகோணம் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பேசினர்.
- பாதுகாப்பு பணியில் கும்பகோணம் கிழக்கு போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
சுவாமிமலை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்படி பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத கும்பகோணம் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தஞ்சை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பு செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.
மாநகர செயலாளர் ராம.ராமநாதன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் அசோக்குமார், சோழபுரம் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பி.எஸ்.சேகர், மாவட்ட செயலாளர் பாரதிமோகன் ஆகியோர் கலந்து கொண்டு கும்பகோணம் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பேசினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வு, பாதாள சாக்கடை சுகாதார சீர்கேடு, தாராசுரம் பகுதியில் சீரற்ற குடிநீர் வினியோகம், சேதமடைந்த சாலைகள், பாசன வாய்க்காலில் கலக்கும் கழிவு நீர், அடிக்கடி பழுதாகும் தெரு விளக்குகள் உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பாதுகாப்பு பணியில் கும்பகோணம் கிழக்கு போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.
- பள்ளி வகுப்பறையில் சக மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
- இதனை தவறாகப் புரிந்துகொண்ட ஆசிரியர் சிம்காஸ், என்னை பல மாணவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளில் பேசினார்.
தஞ்சாவூரில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவன் சக மாணவியுடன் பேசியதை ஆசிரியர் கண்டித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாகச் சொல்லப்படும் நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு அந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாதாகோட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் ஒரே மகன் ஸ்ரீராம், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், காலை வீட்டின் அறையில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணத்தை அவர் கடித்ததில் எழுதியுள்ளார். அதில், பள்ளி வகுப்பறையில் சக மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தேன். இதை பார்த்த 11ம் வகுப்பு ஆசிரியர் சிம்காஸ் என்பவர் தவறாகப் புரிந்துகொண்டு என்னை பல மாணவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளில் பேசினார். அதனால் தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என ஸ்ரீராம் தன் கைப்பட அதில் எழுதியுள்ளார்.
இதன்காரணமாக தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
- நால்வருக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
- பக்தர்கள் கலந்து கொண்டு மாணிக்கவாசகரை தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நால்வருக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேப்போல் தஞ்சாவூர் மேலவீதி கொங்கணேஸ்வர சுவாமி கோவிலில் குருபூஜை வழிபாடை முன்னிட்டு மாணிக்கவாசகர் உட்பட நால்வருக்கும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. சிவனடியார்கள் திருவாசகம் பாடல் பாடினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாணிக்கவாசகரை தரிசனம் செய்தனர்.
- தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூர்:
வேளாண் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
அதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், வி.ச மாவட்ட செயலாளர் பாஸ்கர், கரும்பு விவசாயிகள் சங்கம் கோவிந்தராஜ், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏகேஆர்.ரவிச்சந்தர், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க தலைவர் முகமது இப்ராஹிம், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் பழநிஅய்யா, துணை தலைவர் கோவிந்தராஜ், அறிவழகன், சி.ஐ.டி.யூ அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கவர்னர் வந்ததிலிருந்து தமிழகத்தில் உயர்கல்வித்துறைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சி தான் எடுத்து கொண்டு இருக்கிறார்.
- பா.ஜ.க ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையும், தமிழக முதல்வரையும் வஞ்சிக்கிறது.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிரந்தர இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் மூலம் கோப்புகள் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக கவர்னர் இதுவரை ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துகிறார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் நானும் உயர்கல்வித்துறை செயலாளரும் கவர்னரை சந்தித்து இது சம்பந்தமாக கோரிக்கை வைக்க நேரம் கேட்டுள்ளோம். இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. காத்துக் கொண்டிருக்கிறோம். அழைக்கும் பட்சத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தின் அவசியம், இதனால் பயனடையும் மாணவர்கள் குறித்து கருத்துக்களை எடுத்துரைப்போம். தமிழக கவர்னர் விரைவில் அழைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.
கவர்னர் வந்ததிலிருந்து தமிழகத்தில் உயர்கல்வித்துறைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சி தான் எடுத்து கொண்டு இருக்கிறார். அந்த முயற்சி, தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து உயர் கல்வித்துறையை உச்சத்துக்கு கொண்டு செல்வோம்.
தி.மு.க. தான் திராவிட பற்று-தமிழ் பற்று கொள்கையில் பின் வாங்காமல் உள்ளது. பா.ஜ.க ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையும், தமிழக முதல்வரையும் வஞ்சிக்கிறது.
17 மாநிலங்களில் ஆளுகிற பா.ஜ.க மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க செய்கிற அநீதியை கண்டிக்கிற ஒரே ஒற்றைத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதை எல்லாம் விரைவில் உடைத்து எரிந்து தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ.உடன் இருந்தார்.
- வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு அ.ம.மு.க. தயாராகி வருகிறது.
- தமிழகத்தின் தற்போதைய தி.மு.க. ஆட்சியை அகற்ற பாடுபடுவோம்.
நாகப்பட்டினம்:
நாகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அ.ம.மு.க. துணை பொது செயலாளர் ரெங்கசாமி பேட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன் மட்டுமே மாற்று கட்சியில் இணைந்துள்ளார்.
மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றிய செயலாளர் நகர செயலாளர்கள் தற்போது வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு அ.ம.மு.க. தயாராகி வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார். தமிழகத்தின் தற்போதைய தி.மு.க. ஆட்சியை அகற்ற பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மொழிக் கொள்கையில் பல்வேறு மாநிலங்கள் இருமொழி கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.
- கீழடி தொடர்பான ஆராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு ஏற்காதது கண்டிக்கத்தக்கது.
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே ஆடுதுறையில் செய்தியாளர்களை அமைச்சர் கோவி.செழியன் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆங்கிலம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவின் கருத்து இந்தியையும், வட மொழியையும் திணிப்பதற்கான வழிதான்.
அவரது கருத்தை என்றும் தமிழகம் ஏற்காது. மொழிக் கொள்கையில் பல்வேறு மாநிலங்கள் இருமொழி கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.
ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு கூட மாநில மொழி பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டியாக இருக்கிறார் என கூறியுள்ளார்.

கீழடி தொடர்பான ஆராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு ஏற்காதது கண்டிக்கத்தக்கது.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை தமிழர்கள் கண்டுபிடித்து பயன்படுத்தினர் என்பது உலகினரை அதிசயித்து பார்க்க வைத்து உள்ளது.
இந்தியாவில் பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூா்:
தமிழ்நாடு மின் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற் பொறியாளர் பாலகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டாம்பட்டி, ராராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, அள்ளூர், அல்சகுடி, அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சக்கரைசாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேப்போல் தஞ்சை மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேறி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், தஞ்சை அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.