இலவசங்களை வாரி வழங்கி முதலமைச்சர் புண்ணியம் செய்கிறார்- திருவாவடுதுறை ஆதீனம் புகழாரம்

பசிப்போர்க்கு உணவு தருவது மிகப்பெரிய புண்ணியம். கோவில்களில் மதியம் அன்னதானம் திட்டத்தை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் தொடர்ந்து நடத்தி வருவது பாராட்டுக்குரியது.
இலவசங்களை வாரி வழங்கி முதலமைச்சர் புண்ணியம் செய்கிறார்- திருவாவடுதுறை ஆதீனம் புகழாரம்
Published on

திருவிடைமருதூர்:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், அமைச்சர் கோவி. செழியன், முன்னாள் எம்.பி. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பேசியதாவது:-

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் வரகுண பாண்டியன் வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் நீக்கப் பெற்றார். 27 நட்சத்திரங்கள் வழிபட்ட பெருமையுடையதாக இத்தலம் விளங்குகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பதிகம் பாடி உள்ளனர். மனிதப்பிறவி எடுத்துள்ள நாம் இத்தகைய திருமுறை பதிகங்களை தவறாது ஓத வேண்டும். தீயவழியில் செல்பவர்களை நல்வழிப்படுத்துவது திருமுறைகளும், சைவ சித்தாந்தமும் என்பதை உணர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பாவம் செய்யக்கூடாது, பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பகுதியிலும் கோவில்கள் மற்றும் கோசாலைகளை முறையாக பாதுகாக்கப்படுகிறது. பசிப்போர்க்கு உணவு தருவது மிகப்பெரிய புண்ணியம். கோவில்களில் மதியம் அன்னதானம் திட்டத்தை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் தொடர்ந்து நடத்தி வருவது பாராட்டுக்குரியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் மற்றும் இலவசங்களை வாரி வழங்கி புண்ணியம் செய்துள்ளார். இலவசம் கொடுப்பதும் தர்மம் தான். புண்ணியம் தான் நம்மை உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும் என்று பேசினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com