என் மலர்
நீங்கள் தேடியது "Tanjore"
- வட இந்திய குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்ற தோற்றத்தில் இருக்கிறது.
- கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும் என்று கோவில் முன்னாள் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் கூறினார்.
தஞ்சை மண்ணின் மைந்தன் ராஜராஜசோழனின் கலை நயமிக்க ஆட்சியில் மிளிர்ந்த கோவில் நகரம், கும்பகோணம்.
அங்கு அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மை தலமான ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள பெட்டகத்தில், வரலாற்றுக்கு சாட்சியாக பழங்கால கல் நாதஸ்வரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது வடிவமைக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் இருக்கும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
இந்த கோவிலில் இருந்து கல் நாதஸ்வரங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் இன்னொன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. சாதாரண மர நாதஸ்வரம் 600 கிராம் எடைகொண்டது. இது அதைவிட 6 மடங்கு (3.600 கிலோ கிராம்) எடை கொண்டதாகவும், சுமார் 2 அடி நீளத்துடனும் காட்சியளிக்கிறது. வட இந்திய குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. ஆதி இசைக்கருவியான நாதஸ்வரம், ஆச்சா என்ற மரத்தில் உருவாக்கப்படுகிறது. வைரம் பாய்ந்த பாறை போன்ற மரத்தையே இதற்காக பயன்படுத்துவார்கள். கல்நாதஸ்வரம் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆதிகாலத்தில் இக்கருவியை கருங்கல்லில் செதுக்கிவாசித்திருக்கலாம் என்பது இசை ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாக இருக்கிறது.
கல் நாதஸ்வரத்தின் உலவுப்பகுதியானது 3 உறுதியான தனித்தனி பாகங்களாக செய்யப்பட்டு வெண்கலப்பூண் மூலம் இணைக்கப்பட்டு வெண்கல அனசுடன் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரங்களில் 7 ஸ்வரங்கள் இருக்கும். கல் நாதஸ்வரத்தில் 6 ஸ்வரங்களே உண்டு. அதனால் சண்முகப்ரியா, கல்யாணி போன்ற பிரதிமத்திம ராகங்களை மட்டுமே வாசிக்க முடியும். இதனை 3 முதல் 3½ கட்டை சுதியில் வாசிக்க இயலும்.
சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி போன்ற சுத்த மத்திம ராகங்களை இந்த நாதஸ்வரத்தால் வாசிக்க முடியாது. முழுமையாகவும் அடர்த்தியாகவும் மூச்சை உள்ளே செலுத்தினால் மட்டுமே இதில் நல்இசை கிடைக்கும். கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும் என்று கோவில் முன்னாள் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் கூறினார்.
மறைந்த நாதஸ்வர மேதை மன்னார்குடி பக்கிரியா பிள்ளை 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் இந்த கல் நாதஸ்வரத்தை வாசித்துள்ளார். அவருக்கு பின் கோவில் நாதஸ்வர வித்வானான குஞ்சுதபாதம் பிள்ளை 30 ஆண்டுகளுக்கு மேல் வாசித்து வந்துள்ளார். அவருக்கு பின் சுவாமிநாதன் கல் நாதஸ்வரத்தை வாசித்தார்.
இவர், சிக்கல் சிங்கார வேலன் திருத்தல தேவஸ்தான இசைப் பள்ளியில் பணியாற்றி வந்த புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் கலைமாமணி கோட்டூர் என்.ராஜரத்தினம் பிள்ளையின் சீடர். நாதஸ்வரம் மங்கள வாத்தியமாகும். இதனை நாகூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் வசித்து, நாகபாம்புகளை தெய்வமாக பூஜித்த நாகர் என்ற இனத்தவரால் முற்காலத்தில் வாசிக்கப்பட்டு வந்திருக்கிறது.
நாகத்தினை போன்று நீண்டிருந்ததன் காரணமாக "நாகசுரம்" என்னும் பெயர் ஏற்பட்டது. இதில் இருந்து இனிமையான நாதம் கிடைப்பதால் பிற்காலத்தில் நாதஸ்வரம் என அழைக்கப்பட்டிருக்கிறது. 17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "பாத சங்கிரகம்" என்ற இசை நூல், துளைக்கருவிகளின் வரிசையில் இதனை "நாகசுரம்" என்றே குறிப்பிடுகிறது.
நாதஸ்வரத்தின் மேல் பகுதியில் சீவாளி பொருத்தப்படும். ஜீவ வளி என்பதுதான் சீவாளியாகி இருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது. 4 வகை வேதங்களில், சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர்.
ச,ரி,க,ம,ப,த,நி ஆகிய 7 ஸ்வரங்களும் ஆகாயத்தில் இருந்து ஒலிக்க கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று மகாபாரதம் கூறுகிறது. ஒவ்வொரு ராகத்திற்குள்ளும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன. ஒலியை கூர்ந்து நுட்பமாக கேட்டு அனுபவித்தவர்கள் தமிழர்கள். அவர்கள் கேட்ட ஒலியே கட்டமைக்கப்பட்டு இசையானது. முறைப்படுத்தப்பட்ட இசையை, நாதஸ்வரம் போன்ற பல்வேறு கருவிகள் நமக்கு வழங்குகின்றன.
மேலும் இதுகுறித்து ஆதிகும்பேஸ்வரர் கோவில் முன்னாள் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் கூறுகையில், இது 6 துளைகளை கொண்ட திமிரி வகை நாதஸ்வரம். ஆதி கும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி இந்த கல் நாதஸ்வரம் கோவிலில் வாசிக்கப்பட உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆயுத பூஜை நன்நாளில் இந்த கல் நாதஸ்வரத்தை நான் சுமார் 1 மணி நேரம் வாசித்தேன். அதைத்தொடர்ந்து தற்போது வருகிற 28-ந் தேதி எனது மகன் தமிழரசனுடன் சேர்ந்து, கோவிலின் தற்போதைய நாதஸ்வர வித்வானுடன் இந்த கல் நாதஸ்வரத்தை வாசிக்க உள்ளேன் என்றார்.
- நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
- சரக்கு ரெயிலில் வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக 2000 டன் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தஞ்சாவூா்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் சரக்கு ரெயிலில் வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக 2000 டன் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- நித்யாவுக்கு மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தது மறு புறம் என வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவருடைய மகன் வினோத்குமார்(வயது 38). இவர் புகைப்பட கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி நித்யா(35). இந்த தம்பதியினர் மணவாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்தது. இவர்களது அன்பான இல்லற வாழ்க்கையின் பயனாக இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.
இதில் மூத்த மகள் ஓவியா(12) 6-ம் வகுப்பு படித்து வந்தாள். 2-வது மகள் கீர்த்தி(8) 3-ம் வகுப்பு படித்து வந்தாள். 3-வதாக 5 வயதில் ஈஸ்வரன் என்ற மகன் இருந்தான்.
இந்த நிலையில், நித்யாவுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பாழாய்ப்போன இந்த கெட்ட சகவாசத்தால் நித்யா தனது அன்பான கணவரையும், குழந்தைகளையும் மறந்து கள்ளக்காதலனே கதி என்றானார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து, தனது கள்ளக்காதலனுடன் நித்யா சென்று விட்டார். கள்ளக்காதலனுடன் தனது மனைவி ஓடிச்சென்ற பிறகும் மனைவியை பிரிய முடியாத சூழ்நிலையில் வினோத்குமார் இருந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை சந்தித்து மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.
அப்போதும் மனம் இரங்காத நித்யா கள்ளக்காதலனை விட்டு கணவருடன் வரமறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
மனைவி தன்னை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய வேதனை ஒரு புறம். 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தது மறு புறம் என வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இதனால் மனைவி மீது மிகுந்த ஆத்திரம் அடைந்த வினோத்குமார் நேற்று மாலை வீட்டில் குழந்தைகளுக்கு பலகாரங்கள் வாங்கி கொடுத்து சாப்பிடுமாறு கூறி உள்ளார். குழந்தைகளும் தந்தை வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசை ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பாவம் அவர்களுக்கு தெரியவில்லை... அதுதான் தங்களது இறுதி சாப்பாடு என்பது.
அப்போது தனது மனதை கல்லாக்கிக்கொண்ட வினோத்குமார் தான் பெற்ற குழந்தைகள் என்றும் பாராது தனது 3 குழந்தைகளையும் துடிக்க, துடிக்க சரமாரி கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்.
இதில் 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். பின்னர் குழந்தைகளை கொலை செய்த வினோத்குமார், மதுக்கூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தான் தனது 3 குழந்தைகளையும் கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டிய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- விவசாயிகள் மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தஞ்சாவூர் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் பேசிய அவர்," லைஞர் கருணாநிதியின் வழியின் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வில் தஞ்சை வந்துள்ளேன்" என்றார்.
இதுதொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக இருப்பதைக் கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டிய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு என, பொய்யான தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்து விவசாயிகளை ஏமாற்றியது, தங்கள் நிலங்களைக் காக்கப் போராடிய திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டது என, கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா? நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஒன்றரை ஆண்டுகளாகப் போராடி வரும் விவசாயிகள் மீதா உங்கள் அடக்குமுறையைக் காட்டுவது? நான்கு வருடங்களில் நீங்கள் போட்ட வேடங்களில், தேர்தல் நேரத்தில் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல்லிளிக்கிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே.
உடனடியாக, கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பாக, விவசாயிகள் மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வெண்ணாற்றங்கரை நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.
- நாளை மறுநாள் வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் காலை 9 மணியளவில் விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் ஆண்டுதோறும் ஒரே இடத்தில் 25 பெருமாள்கள் எழுந்தருளி கருடசேவை வைபவம் நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான கருடசேவை வைபவம் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் நடைபெறும் 90-வது ஆண்டு கருடசேவை விழாவானது நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகியது. வெண்ணாற்றங்கரை நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில் திவ்யதேச பெருமாள்களுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு 7 மணி முதல் 12 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜவீதிகளில் பெருமாள்கள் வீதிஉலா நடைபெற்றது.
இதில் நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்பட 25 கோவில்களில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்கள் எழுந்தருளி ஒரே நேரத்தில் வலம் வந்து ராஜவீதிகளை அழகூட்டியது. தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு 25 பெருமாள்களையும் ஒரு சேர கண்டு தரிசித்து பரவசம் அடைந்தனர்.
தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) காலை நவநீத சேவை நடைபெற உள்ளது. இதில் வெண்ணாற்றங்கரையில் காலை 6 மணியளவில் புறப்பட்டு காலை 7 மணி முதல் 10.30 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜவீதிகளில் வீதிஉலா நடைபெறும். இதில் 16 கோவில்களில் இருந்து பெருமாள் எழுந்தருளி ராஜவீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்க உள்ளனர்.
தொடர்ந்து, நாளை மறுநாள் (31-ந்தேதி) வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் காலை 9 மணியளவில் விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. இதனிடையே ராஜராஜ சமய சங்கத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு திருவாய்மொழி தொடங்கி, நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு சாற்று முறை நடைபெற உள்ளது. 25 கோவில்களில் இருந்து பெருமாள்கள் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்ததால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
- மத்திய மந்திரி நிதின்கட்கரி கும்பகோணம் ஜெகநாதப்பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
- மத்திய மந்திரி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கும்பகோணம்:
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின்கட்கரி நாக்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிபேட் மூலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கலைக் கல்லூரி மைதானத்திற்கு வந்தார்.
அவரை மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், சுதா, பா.ஜனதா நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் ஆகியோரும் வரவேற்றனர்.
இதையடுத்து மத்திய மந்திரி நிதின்கட்கரி கும்பகோணம் ஜெகநாதப்பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் விக்கிரவாண்டி 4 வழி சாலை பணிகள் முடிந்துள்ள விவரங்களை அறிய தஞ்சாவூரில் இருந்து சோழபுரம் வரையிலான சாலை பணிகளை ஆய்வு செய்தார். அப்போது சாலை பணிகள் முடிந்துள்ள விவரங்கள் உள்ளிட்ட பலவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சோழபுரத்திலிருந்து சேத்தியாத்தோப்பு பகுதி வரை 4 வழி சாலை திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளை முடித்து கொண்டு திருச்சி சென்று விமானம் மூலம் நாக்பூர் செல்கிறார்.
மத்திய மந்திரி வருகையை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- சுகாதார சீர்கேடுகளை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- ரெயிலடி தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாகச் சீர்கேடுகள், சுகாதார சீர்கேடுகள், பல்வேறு வகை வரி உயர்வு, ஆதாய நோக்கத்துடன் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மடை மாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டுதல் முதலான மக்கள் விரோதச் செயல்களை கண்டும் காணாமல் இருந்து வரும் தி.மு.க. அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அ.தி.மு.க. தஞ்சாவூர் மாநகரக் கழகத்தின் சார்பில், வருகிற 8-ந் தேதி (புதன் கிழமை) காலை 10 மணியளவில், ரெயிலடி தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை தலைமையிலும், தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் ஆ.சேகர், தஞ்சாவூர் மாநகரக் கழகச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாணவர் சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் வந்தனர்
- 2 பேர் மட்டும் பெரிய கோவில் முன்பு உள்ள படித்துறையில் இறங்கி கல்லணை கால்வாயில் குளித்தனர்
தஞ்சாவூர்:
திருவாரூரில் இந்திய மாணவர் சங்கத்தின் 26-வது மாநில மாநாடு இன்று தொடங்கி வருகிற 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் ஜலகண்டபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 18), தாமரைச்செல்வன் (18) உள்பட 60 பேர் ஒரு பஸ்சில் புறப்பட்டனர். அவர்கள் தஞ்சை பெரிய கோவிலை சுற்றி பார்த்துவிட்டு மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி அந்த பஸ் இன்று காலை தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தது. பின்னர் அவர்கள் குளித்துவிட்டு பெரிய கோயிலை சுற்றி பார்த்து அதன் பிறகு திருவாரூர் மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.
இதையடுத்து தினேஷ்குமார், தாமரைச்செல்வன் ஆகிய 2 பேர் மட்டும் பெரிய கோவில் முன்பு உள்ள படித்துறையில் இறங்கி கல்லணை கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் அருகே உள்ள குளியல் அறையில் குளித்தனர்.
அப்போது தினேஷ்குமார், தாமரைசெல்வன் இருவரும் ஆற்றில் குளித்தபோது தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் இரண்டு பேரும் ஆற்றின் சுழலில் சிக்கி தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபய குரல் எழுப்பினர் . இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக தஞ்சை தீயணைப்பு நிலையம் மற்றும் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பொய்யாமொழி மற்றும் வீரர்கள்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதற்கிடையே தினேஷ்குமார் ஆற்றின் கரையில் இருந்த ஒரு மரக்கிளையை பிடித்தவாறு இருந்தார். அங்கு பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்ற தீயணைப்பு துறையினர் தினேஷ் குமாரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் தண்ணீரில் மூழ்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தாமரைச்செல்வன் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தாமரைச்செல்வனை தேடி வருகின்றனர்.
இது குறித்து மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தஞ்சையில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 825 கடைகள் திறக்கப்படவில்லை. 72 கடைகள் மட்டுமே திறக்கபட்டது.
தஞ்சாவூர்:
பொது வினியோக திட்டத்திற்காக தனித்துறையை உருவாக்க வேண்டும். 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை, நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
ஒரே மாதிரியான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சரியான எடையில் தரமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும்.
மாத இறுதி தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் 4 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று தஞ்சை பாலாஜி நகரில் உள்ள மண்டல இணைபதிவாளர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேப்போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில துணை தலைவர் ராமலிங்கம் கூறும்போது:-
தஞ்சை மாவட்டத்தில் 1,184 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் இன்று 897 கடைகள் திறந்திருக்க வேண்டும். ஆனால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 825 கடைகள் திறக்கப்படவில்லை. 72 கடைகள் மட்டுமே திறக்கபட்டது என்றார்.
ரேஷன் கடை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் 38 பாராளுமன்றத்துக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டலில் உள்ள மதுபான கூடங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அவைகள் அடைக்கப்பட்டன.
இதனை பயன்படுத்தி யாராவது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்களா? என்று சோதனை செய்ய தஞ்சையில் பல இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கிழக்கு போலீசார் தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றபோது, திருவையாறு பஸ் நிறுத்தம் அருகே 2 பேர் மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்தனர்.
உடனடியாக போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், வடுவூரை சேர்ந்த பஞ்சமூர்த்தி, சொக்கலிங்கம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டன. இருப்பினும் சில இடங்களில் திருட்டுத்தனமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுகிறது. லாட்டரி சீட்டுகள் விற்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரண்டாம் கேட் அருகே 2 வாலிபர்கள் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் தஞ்சை தென்பெரம்பூர் கிழக்கு தெரு வசந்த் (வயது 23), தெற்கு தெரு ராஜா (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ .61 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.80 ஆயிரமாகும்.
தஞ்சாவூர்:
தஞ்சை திருவேங்கடம் நகரை சேர்ந்தவர் தனபாலன் (வயது 63). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி சாந்தி (53). இவர்கள் 2 பேரும் கீழவாசலில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு தனபாலன் தனது மனைவி சாந்தியுடன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் முகமூடி அணிந்து கொண்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்தனர். தஞ்சை-வல்லம் சாலையில் ஒரு தனியார் கம்பெனி அருகே வந்தபோது திடீரென மர்ம நபர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து சாந்தியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை சட்டென்று இழுத்து பறித்தனர்.
பின்னர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். மர்ம நபர்கள் செயினை இழுத்ததில் சாந்தி நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவரது கணவர் அதிர்ச்சியடைந்து உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சாந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுப்பற்றி தனபாலன் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பின்தொடர்ந்து சென்று சாந்தியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்த காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து கொள்ளையர்கள் யார்? அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையில் நேற்று முன்தினம் இரவு ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு தாயுடன் ஸ்கூட்டியில் சென்ற சங்கவி தாரணி என்ற இளம்பெண்ணிடம் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் செயினை பறித்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் அதுபோல் செயின் பறிப்பு நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் செல்லும் பெண்களை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபடுகின்றனர். எனவே தஞ்சையில் முக்கிய இடங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






