என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆத்திரம் - 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக்கொன்ற தந்தை
- நித்யாவுக்கு மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தது மறு புறம் என வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவருடைய மகன் வினோத்குமார்(வயது 38). இவர் புகைப்பட கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி நித்யா(35). இந்த தம்பதியினர் மணவாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்தது. இவர்களது அன்பான இல்லற வாழ்க்கையின் பயனாக இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.
இதில் மூத்த மகள் ஓவியா(12) 6-ம் வகுப்பு படித்து வந்தாள். 2-வது மகள் கீர்த்தி(8) 3-ம் வகுப்பு படித்து வந்தாள். 3-வதாக 5 வயதில் ஈஸ்வரன் என்ற மகன் இருந்தான்.
இந்த நிலையில், நித்யாவுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பாழாய்ப்போன இந்த கெட்ட சகவாசத்தால் நித்யா தனது அன்பான கணவரையும், குழந்தைகளையும் மறந்து கள்ளக்காதலனே கதி என்றானார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து, தனது கள்ளக்காதலனுடன் நித்யா சென்று விட்டார். கள்ளக்காதலனுடன் தனது மனைவி ஓடிச்சென்ற பிறகும் மனைவியை பிரிய முடியாத சூழ்நிலையில் வினோத்குமார் இருந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை சந்தித்து மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.
அப்போதும் மனம் இரங்காத நித்யா கள்ளக்காதலனை விட்டு கணவருடன் வரமறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
மனைவி தன்னை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய வேதனை ஒரு புறம். 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தது மறு புறம் என வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இதனால் மனைவி மீது மிகுந்த ஆத்திரம் அடைந்த வினோத்குமார் நேற்று மாலை வீட்டில் குழந்தைகளுக்கு பலகாரங்கள் வாங்கி கொடுத்து சாப்பிடுமாறு கூறி உள்ளார். குழந்தைகளும் தந்தை வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசை ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பாவம் அவர்களுக்கு தெரியவில்லை... அதுதான் தங்களது இறுதி சாப்பாடு என்பது.
அப்போது தனது மனதை கல்லாக்கிக்கொண்ட வினோத்குமார் தான் பெற்ற குழந்தைகள் என்றும் பாராது தனது 3 குழந்தைகளையும் துடிக்க, துடிக்க சரமாரி கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்.
இதில் 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். பின்னர் குழந்தைகளை கொலை செய்த வினோத்குமார், மதுக்கூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தான் தனது 3 குழந்தைகளையும் கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.






