என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    • அதிக அளவு சர்க்கரை உள்ள காபி குடிப்பது நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது.
    • தினமும் 2-3 கப் குடிப்பவர்களுக்கு இந்த நன்மை 17 சதவீதம் ஆக சற்று அதிகரித்துள்ளது.

    தினமும் அதிகாலையில் பால் இல்லாத 'பிளாக்' காபி குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது என்று புதிய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. தி ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் நடத்திய புதிய ஆய்வில், காலையில் காபி குடிப்பதால் இறப்பு அபாயத்தைக் குறைப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது .

    காபி நுகர்வுக்கும் இறப்பு ஆபத்துக்கும் இடையிலான தொடர்பு, பானத்தில் சேர்க்கப்படும் இனிப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்பின் அளவைப் பொறுத்து இது மாறுவதாக கண்டறிந்துள்ளனர்.

    ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் பிளாக் காபி குடிப்பது இறப்பு அபாயத்தையும், இருதய நோயால் ஏற்படும் உயிரிழப்பையும் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.



    எனினும், அதிக அளவு சர்க்கரை உள்ள காபி குடிப்பது நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது. குறைந்த அளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட காபி குடிப்பதால் இறப்புக்கான ஆபத்து 14 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த ஆய்வு, 1999-ம் ஆண்டு முதல் முதல் 2018-ம் ஆண்டு வரையிலான தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு கப் காபி குடிப்பதால், எந்த காரணத்தாலும் இறக்கும் அபாயம் 16 சதவீதம் குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் 2-3 கப் குடிப்பவர்களுக்கு இந்த நன்மை 17 சதவீதம் ஆக சற்று அதிகரித்துள்ளது.

    இருப்பினும், 3 கப்களுக்கு மேல் குடிப்பது ஆரோக்கியமானது இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காபி குடிப்பதற்கும் புற்றுநோயால் பாதிப்பு ஏற்பட்டு இறப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • சருமத்திற்கு மாயாஜால அழகை கொடுக்கும் பழம், ஆரஞ்சு.
    • சரும அரிப்பு, வியர்வை உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகாமல் காக்கும்.

    இயற்கையான முறையிலேயே சருமத்திற்கு பளபளப்பை கூட்டுவதற்கு பழங்கள் உதவி செய்யும். அத்தகைய பழங்கள் பற்றி பார்ப்போம்.

    தர்பூசணி

    சருமத்திற்கு ஈரப்பதத்தையும், புத்துணர்ச்சியையும் தரும் பழங்களில் தர்பூசணி முக்கியமானது. குறிப்பாக எண்ணெய் பசையுள்ள சருமம், முகப்பரு சருமம் கொண்டவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். சருமம் பளபளப்புடன் மின்னத் தொடங்கிவிடும்.

    ஆரஞ்சு

    சருமத்திற்கு மாயாஜால அழகை கொடுக்கும் பழம், ஆரஞ்சு. அதிலிருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சூரிய கதிர்களிடம் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். சரும அரிப்பு, வியர்வை உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகாமலும் காக்கும்.

    அவகேடோ

    இந்த பழத்தில் வைட்டமின்கள் இ, ஏ, சி, கே, பி6, நியாசின், பாந்தோதெனிக் அமிலம், போலட், நார்ச்சத்து உள்ளிட்ட அத்தியாவசியமான சேர்மங்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் உள்புற வளர்ச்சிக்கு வித்திட்டு சரும அழகை மெருகேற்ற வழிவகை செய்யக்கூடியவை.

    எலுமிச்சை

    எலுமிச்சை சருமத்திற்கு பளபளப்பு சேர்க்குமா? என்ற எண்ணம் எழலாம். ஆனால் இயற்கையாகவே வைட்டமின் சி நிறைந்துள்ள அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சருமத்தை பாதுகாக்கவும் உதவிடும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படக்கூடியது.

    • குழந்தைகளுக்குப் பிடித்தமான விளையாட்டுப் பொருட்களின் வடிவில் காய்கறி இருந்தால் மிகவும் சிறப்பு.
    • சரியான நேரத்துக்கு சாப்பாடு தர வேண்டும்.

    காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆற்றலைத் தருகின்றன. காய்கறிகளை சாப்பிடுவது குழந்தைகளை நோய்களில் இருந்து பாதுகாக்கும். காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆற்றல், வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் தண்ணீரை வழங்குகின்றன. அவை குழந்தைகளை பிற்காலத்தில் இதய நோய், பக்கவாதம் மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. ஆனால், காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை குழந்தைகள் விரும்பிச் சாப்பிட வைப்பது எப்படி? இப்படித்தான்...

    உணவு விஷயத்தில் உங்களைப் பார்த்துத்தான் உங்கள் குழந்தை கற்றுக்கொள்கிறது, எனவே குழந்தையை காய்கறிகளை சாப்பிட ஊக்குவிப்பதற்கான சிறந்த வழி, நீங்கள் சாப்பிடுவதையும், அதை ரசித்து ருசிப்பதையும் குழந்தையை பார்க்க வைப்பதாகும்.

    குழந்தைகள் நிறைய காய்கறிகளை சாப்பிட ஊக்குவியுங்கள். அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருங்கள். இந்த விஷயத்தில் விடாமுயற்சியும், பாராட்டும் உதவும்.

    குழந்தைகளிடம் சாப்பாட்டை திணிக்கக் கூடாது. அவர்களுக்கு பசிக்கும்போதுதான் உணவு ஊட்ட வேண்டும். புடலங்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய், அவரைக்காய் போன்ற காய்களை பெரும்பாலான குழந்தைகள் விரும்புவதில்லை. அவற்றை நறுக்கும்போது வித்தியாசமான முறையில் நறுக்க வேண்டும்.

    குழந்தைகளுக்குப் பிடித்தமான விளையாட்டுப் பொருட்களின் வடிவில் காய்கறி இருந்தால் மிகவும் சிறப்பு. காய்கறிகளை வைத்து வேடிக்கையான வடிவங்களை உருவாக்குவது அல்லது சிறு துண்டுகளாக நறுக்கி வித்தியாசமாக பரிமாறினால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    உங்கள் பிள்ளை ஒரு குறிப்பிட்ட பழம் அல்லது காய்கறியை விரும்பவில்லை என்று ஒருபோதும் முடிவெடுத்துவிட வேண்டாம். அடுத்த முறை நீங்கள் அதை சமைக்கும்போது, அவர்கள் அதை தின்று பார்க்க முயற்சி செய்யலாம். குழந்தைகளின் ரசனைகள் வயதுக்கு ஏற்ப மாறுகின்றன.

    சரியான நேரத்துக்கு சாப்பாடு தர வேண்டும். சாப்பிடுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு வரை எந்த நொறுக்குத்தீனியும், குளிர்பானமும் கொடுக்கக் கூடாது. அதிலும், சாக்லேட் போன்ற தீனிகள் கூடவே கூடாது.

    உங்கள் குழந்தையை பழம், காய்கறிகளை வாங்க அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் உங்களுடன் பழங்களையும் காய்கறிகளையும் பார்க்கவும், முகரவும், உணரவும் அனுமதிக்கவும்.

    காய்கறிகளை கழுவுவது, அவற்றை எடுத்துவைப்பது போன்ற சிறு சிறு வேலைகளை குழந்தைகளிடம் கொடுத்து ஈடுபடுத்துவது, அவர்கள் உணவை விரும்பி சாப்பிடத் தூண்டும்.

    காய்கறி பொரியல், கூட்டு போன்றவற்றை பரிமாறும் போது கூடவே வடகம், அப்பளம் போன்ற எண்ணெயில் பொரித்தவற்றை வைக்கக் கூடாது. அவற்றை எடுத்து உண்டுவிட்டு, காய்கறிகள் வேண்டாம் என்று பிள்ளைகள் தவிர்ப்பார்கள். எனவே அவற்றை தனியாகத் தருவதுதான் நல்லது.

    அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினால், குழந்தைகளும் உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    சாப்பிட மறுக்கும் குழந்தைகளை ஒருபோதும் தண்டிக்காதீர்கள். எதையாவது சொல்லி பயம் காட்டாதீர்கள். அது குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியை பாதிக்கும். வற்புறுத்தி உங்கள் குழந்தையை சாப்பிட வைக்க நினைப்பது தவறு. அது அவர்களுக்கு சாப்பாட்டின் மீதான கொஞ்ச நஞ்ச ஆசையையும் நீக்கிவிடும். பொறுமையோடு முயற்சி செய்யுங்கள்.

    • குழந்தைகளை தவிர்த்து மற்றவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
    • ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 800 மி.லி. முதல் ஒரு லிட்டர் சிறுநீரை வெளியேற்றும் திறன் கொண்டது.

    உடல் நலனை பேணுவதற்கு தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பது நெடுங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. அப்படி 8 டம்ளர் தண்ணீர் மட்டும் பருகினால் போதுமானதா? என்ற கேள்விக்கு அது ஒரு கட்டுக்கதை என்கிறார், டாக்டர் சிரியாக் அபி பிலிப்ஸ். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த இவர் கல்லீரல் நோய் நிபுணர். கல்லீரல் டாக்டர் என்றும் அழைக்கப்படும் இவர், தினமும் உடலில் ஏற்படும் திரவ இழப்பை ஈடு செய்வதற்கு ஏதுவாக தண்ணீர் பருக வேண்டும் என்றும் கூறுகிறார். உடல் தினமும் எவ்வளவு திரவ இழப்பை சந்திக்கிறது? அதற்கான காரணம் என்ன? தினமும் எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும்? என்பது பற்றி விளக்கி இருக்கிறார். அது பற்றி பார்ப்போம்.

    எவ்வளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும்?

    நீரிழப்பைத் தவிர்க்க குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் (பானங்கள் மற்றும் தண்ணீர் உட்பட) திரவம் உட்கொள்ள வேண்டும். இந்த நீரில் சுமார் 20 சதவீதம் உண்ணும் உணவில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து கிடைக்கும். இந்த அளவு உணவை பொறுத்து மாறுபடும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக நீர் உள்ளடங்கி இருக்கும். இறைச்சிகளில் மிதமான நீர் கலந்திருக்கும். பதப்படுத்தப்பட்ட, வேகவைத்த பொருட்களில் குறைவான அளவில் நீர் இருக்கும். ஒன்றரை லிட்டர் என்பது குறைந்தபட்ச அளவுதான். அவரவர் உடலமைப்பு, நீரிழப்புக்கு ஏற்ப தண்ணீர் பருகும் அளவு மாறுபடும்.

    வெப்பம்-உடல் செயல்பாடு: கடுமையான வெப்பம் மற்றும் கடின உடலுழைப்பு காரணமாக உடலில் இருந்து வியர்வை வெளிப்படுவதுண்டு. இந்த வியர்வை ஒரு மணி நேரத்திற்கு 300 மி.லி. முதல் 2 லிட்டர் வரை உடலில் திரவ இழப்பை ஏற்படுத்தக்கூடும். உடற்பயிற்சியினால் ஏற்படும் நீரிழப்பை தடுக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 400 மி.லி. முதல் 800 மி.லி. திரவ பானங்களை பருகுமாறு அமெரிக்க விளையாட்டு மருத்துவக்கல்லூரி பரிந்துரை செய்துள்ளது.

    குழந்தைகள்: வயது மற்றும் உடல் செயல்பாட்டை பொறுத்து குழந்தைகளுக்கு நீரின் தேவை மாறுபடும். 2 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 1.3 லிட்டர் தண்ணீரும், 4 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1.6 லிட்டர் தண்ணீரும் பருக வேண்டும்.

    மற்றவர்கள்: குழந்தைகளை தவிர்த்து மற்றவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். தாக உணர்வு, சிறுநீரக செயல்பாடுகளை பொறுத்து இந்த அளவு மாறுபடும்.

    நீரேற்ற திட்டம்

    மிதமான வானிலை நிலவும் சூழலில் ஒரு நாளைக்கு சுமார் 1.5 லிட்டர் (தண்ணீர், பானங்கள் மற்றும் உணவில் கலந்திருக்கும் ஈரப்பதம்) உட்கொள்வது போதுமானது. மற்ற சமயங்களில் ஒரு நாளைக்கு 2 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் பருகலாம்.

    அதே நேரத்தில் கடுமையான உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ மேற்கொள்பவர்கள் ஒரு நாளைக்கு 6 முதல் 7 லிட்டர் வரை பருகலாம். கடுமையான வெயில், அதிக வியர்வை வெளியேற்றம் போன்ற சமயங்களில் 10 லிட்டர் தண்ணீர் வரை பருக வேண்டியிருக்கும். மருத்துவரின் ஆலோசனை பெற்று தண்ணீர் பருகுவது நல்லது.

    உடல் எவ்வளவு தண்ணீரை இழக்கிறது?

    நாம் ஓய்வெடுக்கும்போது கூட உடல் தொடர்ந்து நீரிழப்புக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறது. 20 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வசிக்கும்ஆரோக்கியமான நபர் தினமும் சிறுநீர் வழியாக தினமும் சுமார் 500 மி.லி. திரவ இழப்பை எதிர்கொள்கிறார். சுவாசம் மற்றும் சருமத்தில் இருந்து ஆவியாதல் செயல்முறை மூலம் கூட சுமார் 700 மி.லி. நீரை இழக்கிறார். ஒட்டுமொத்தமாக சிறுநீர் கழித்தல், வியர்த்தல், சுவாசித்தல் மற்றும் குடல் அசைவுகள் போன்ற பல்வேறு செயல்முறைகள் மூலம் மனித உடல் ஒரு நாளைக்கு சுமார் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீரை இழக்கிறது. இது வெப்பமான காலநிலையிலோ, கடுமையான உடற்பயிற்சியின்போதோ அதிகரிக்கக்கூடும்.

    சிறுநீரகங்களின் செயல்பாடு

    ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 800 மி.லி. முதல் ஒரு லிட்டர் சிறுநீரை வெளியேற்றும் திறன் கொண்டது. அதற்காக ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் என்ற அளவில் தண்ணீர் பருகுவது ஆபத்தானது.

    அப்படி அதிகமாக தண்ணீர் பருகுவது ரத்தத்தில் சோடியத்தை நீர்த்து போகச் செய்து ஹைபோநெட்ரீமியா எனப்படும் சோடியம் குறைபாடு சார்ந்த நோய் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    நீரேற்றமாக இருப்பது எப்படி?

    8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பதை மறந்துவிடுங்கள். அதற்கு பதிலாக உடலின் சமிக்ஞைகளை கவனியுங்கள். சிறுநீர் தெளிவாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறமாகவோ இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் தண்ணீர் கூடுதலாக பருக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடைசியாக எப்போது தாகமாக உணர்ந்தீர்கள் என்பதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப தண்ணீர் பருகுங்கள்.

    • கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், புளி ஆகியவற்றை வதக்கி, பின்னர் மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
    • அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு, நெய் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    தேவையான பொருட்கள்:

    அரிசி ரவை-2 கப்

    கொத்தமல்லித்தழை - சின்ன கட்டு

    பச்சை மிளகாய் -3

    தேங்காய்த் துருவல் - 4 கப்

    நெய் - 2 டீஸ்பூன்

    புளி - சிறிதளவு

    கடுகு - 1½ டீஸ்பூன்

    உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா - 2 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் ½ டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், புளி ஆகியவற்றை வதக்கி, பின்னர் மிக்சியில் விழுதாக அரைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, 5 கப் நீர் ஊற்றவும். அதில் அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு, நெய் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    நன்கு கொதிக்கும்போது, அடுப்பை 'சிம்'மில் வைத்து, அரிசி ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறி, மூடிபோட்டு 10 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்தால் சுவையான கொத்தமல்லி கார உருண்டை தயார்.

    • பெண்கள் அதிக அளவில் ரத்தசோகை பாதிப்பால் பல்வேறு உடல் நலக்குறைவுகளை எதிர்கொள்கின்றனர்.
    • சிவப்பு இறைச்சியை சிறிய அளவில், வாரத்திற்கு 1 அல்லது 2 முறை மட்டுமே உண்ணலாம்,

    இறைச்சி உணவு உடலுக்கு உகந்ததா, இல்லையா? என்று பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன. சமீபத்திய ஆய்வுகளில், மனித உடலுக்கு தேவையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்து காணப்படுவதால், இறைச்சியை தவிர்க்காமல் அளவோடு உட்கொள்வது சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    பொதுவாக சிவப்பு இறைச்சியில் புரதம், இரும்புச்சத்து, பி.12 போன்ற வைட்டமின்கள், தாதுக்கள் செழுமையான அளவில் உள்ளன. குறிப்பாக, இறைச்சியில் காணப்படும் இரும்பு வகையான ஹீம் அயன் என்னும் இரும்புச்சத்து, மனித உடலில் பிராண வாயுவை கொண்டு செல்ல, ஆக்சிஜன் போக்குவரத்து மற்றும் ஹார்மோன் உற்பத்திக்கு இன்றியமையாதது.

    இந்த 'ஹீம்' இரும்பு உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. பொதுவாக, இந்த ஹீம் இரும்புச்சத்து குறைபாட்டால் தான் ரத்தசோகை நோய் பலரையும் பாதித்துள்ளது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் ரத்தசோகை பாதிப்பால் பல்வேறு உடல் நலக்குறைவுகளை எதிர்கொள்கின்றனர்.

    ரத்தசோகை பாதிப்பை தடுக்க ஈரல் இறைச்சி மிகச் சிறந்த உணவாக உள்ளது. சிவப்பு இறைச்சியில் உள்ள வைட்டமின் பி 12, ரத்தம் மற்றும் டி.என்.ஏ. என்னும் மரபணு தகவல்களை கடத்தும் மூலக்கூறு உருவாகவும் முக்கிய சத்தாக இருக்கிறது. உடலை இயங்க செய்யும் பல்வேறு ஹார்மோன்கள், நொதிகள் உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. சில விலங்குகளின் சிவப்பு இறைச்சியில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இது எல்.டி.எல். எனப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்பு, கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்.

    இதனை தவிர்க்க, சிவப்பு இறைச்சியை சிறிய அளவில், வாரத்திற்கு 1 அல்லது 2 முறை மட்டுமே உண்ணலாம்,

    ஏற்கனவே இதய நோய் அல்லது உடலில் அதிக கெட்ட கொழுப்பு உள்ளவர்கள் இறைச்சிகளை சாப்பிட விரும்பினால் குறைவாக உண்ண வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    • தோள்பட்டையை சுற்றியுள்ள தசை நார்கள், சவ்வுகள் இவை கிழிவதினால் கடுமையான வலி ஏற்படுகிறது.
    • கீல்வாத நோய்களிலும் தோள் பட்டையில் வீக்கத்துடன் வலி உருவாகிறது.

    தோள்பட்டை வலி என்பது பல்வேறு காரணங்களால் வரலாம்.

    * ரோட்டேட்டர் சுற்றுப்பட்டை வலி: தோளின் சுழற்சியை உருவாக்கும் நான்கு முக்கிய தசைகள் சுப்ரா ஸாபின்டஸ், இன்ப்ரா ஸ்பின்டஸ், டெரெஸ் மைனர் மற்றும் சப் ஸ்கேபுலாரிஸ் ஆகும். இந்த தசைகள், டெல்டாய்டு தசையுடன் சேர்ந்து, தோள்பட்டை மூட்டை உறுதிப்படுத்துவதற்கும் பரந்த அளவிலான கை அசைவுகளை செயல்படுத்துவதற்கும் முக்கியமானவை ஆகும். தசைப்பிடிப்புகள் காயங்களினால் இவைகளின் இயக்கம் குறையும் பொழுது தோள்பட்டையின் உள்பகுதியில் மந்தமான வலியாகவோ அல்லது திடீரென கூர்மையான வலியாகவோ வெளிப்படும். இந்த வலியினால் தோள் பட்டையில் குறைந்த அளவிலான இயக்கம், முதுகுக்கு பின்னால் கை வைத்து எட்டுவது, தலைமுடியை சீவுவது ஆகியவை கடினமாகிறது.

    * கிழிவுகள்: தோள்பட்டையை சுற்றியுள்ள தசை நார்கள், சவ்வுகள் இவை கிழிவதினால் கடுமையான வலி ஏற்படுகிறது.

    * டென்டினைடிஸ்: தோள் பட்டையை சுற்றியுள்ள தசைநாண்களில் ஏற்படும் அழற்சி, வீக்கம் வலி மற்றும் விறைப்பை ஏற்படுத்தும்.

    * திடீரென ஏற்படும் விபத்துகள், காயங்களினால் தோள்பட்டை மூட்டைச் சுற்றியுள்ள எலும்புகள், தசைகள் மற்றும் தசைநாண்களில் ஏற்படும் பாதிப்புகள்.

    * பர்சைடிஸ்: தோள்பட்டை மூட்டை மெத்தை போன்று தாங்கி உயவுடன் சுழலச் செய்யும் திரவம் நிறைந்த பைகளில் ஏற்படும் வீக்கம்.

    * எலும்பு தேய்மானம்: தோள்பட்டை மூட்டில் உள்ள குருத்தெலும்புகளில் ஏற்படும் சிதைவு.

    * உறைந்த தோள்பட்டை (புரோஷன் ஷோல்டர்): இது மூட்டைச் சுற்றியுள்ள இணைப்பு திசுக்களில் இறுக்கம் மற்றும் விறைப்பை ஏற்படுத்துகிறது.

    * தசைச் சுளுக்குகள்: சமநிலையற்ற படுக்கையில் படுப்பது, அதிக பாரத்தை தூக்குவது இவற்றால் தோள்பட்டையைச் சுற்றியுள்ள தசைகளில் ஏற்படும் பிடிப்புகள் கடுமையான வலியை தரும்.

    * கீல்வாதம்: கீல்வாத நோய்களிலும் தோள் பட்டையில் வீக்கத்துடன் வலி உருவாகிறது.

    * கழுத்து எலும்பு, நரம்புகளில் ஏற்படும் வலி, மார்பு அல்லது வயிறு போன்ற பிற பகுதிகளிலிருந்து தோன்றும் வலிகளும் தோள்பட்டையில் வலியை ஏற்படுத்தும்.

    சித்த மருத்துவ தீர்வுகள்:

    1) அமுக்கரா சூரணம் 1 கிராம், சிவனார் அமிர்தம்-200 மி.கி., முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம்-200 மி.கி. இவைகளை மூன்று வேளை வெந்நீர் அல்லது பாலில் உணவுக்கு பின்பு சாப்பிட வேண்டும்.

    2) அஸ்வகந்தா லேகியம் 1-2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) வலியுள்ள இடத்தில் கற்பூராதி தைலம், வாதகேசரி தைலம் இவைகளை தேய்த்து வெந்நீரில் ஒற்றடம் இட வேண்டும்.

    • தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், அட்ரினலின் திரவம் சுரப்பு போன்றவை அதிகமாகலாம்.
    • கடின, மிகக்கடின உடற்பயிற்சிகளை மெதுமெதுவாக ஆரம்பித்து, பயிற்சி செய்யும் நேரத்தை படிப்படியாக அதிகரிப்பது நல்லது.

    கடின மற்றும் மிகக்கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும்போது ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்பட கண்டிப்பாக வாய்ப்புண்டு. ஆனால் இது மிகமிக அரிதாகத்தான் நடக்கும். இதய நோய், சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், அதிக உடல் எடை, சீரற்ற இதய துடிப்பு உள்ளவர்கள், இதயத் தசைகள் வலுவிழந்தவர்கள் மிகக் கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும்போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

    தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், அட்ரினலின் திரவம் சுரப்பு போன்றவை அதிகமாகலாம். இதனால் இதயத்திலுள்ள ரத்தக் குழாய்களின் உள்சுவரில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புக் கலவையான காறை வெடித்து, ரத்தக்குழாய்களை முழுமையாக அடைத்து மாரடைப்பை உண்டு பண்ணலாம். அல்லது இதயத்தில் இயற்கையாக ஏற்படும் மின்னோட்டத்தில் தொந்தரவு ஏற்பட்டு திடீர் மாரடைப்பு வரலாம்.

    மிகக்கடின உடற்பயிற்சிகளை செய்யும்போது பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்ற தாது உப்புகள் மற்றும் கனிமங்கள் சேர்ந்த எலெக்ட்ரோலைட் பொருட்கள் குறையவோ, கூடவோ வாய்ப்புண்டு. இதனால், இதயம் உடனே பாதிக்கப்பட்டு மாரடைப்பு வரலாம்.

    கடின, மிகக்கடின உடற்பயிற்சிகளை மெதுமெதுவாக ஆரம்பித்து, பயிற்சி செய்யும் நேரத்தை படிப்படியாக அதிகரிப்பது நல்லது. கடினமான உடற்பயிற்சி செய்வதற்கு முன், 'வார்ம் அப்' எனப்படும் உடலை தயார்படுத்தும் பயிற்சிகளை செய்வது நல்லது. அப்படி இல்லாமல் திடீரென்று கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டால் இதயத்துக்கு வேலைப்பளு அதிகமாகி மாரடைப்பு வரலாம்.

    பொதுவாக உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து, உடலில் எப்பொழுதும் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

    கடின உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக, நெஞ்சு மிகவும் இறுக்கமாக கனமாக இருக்கிறமாதிரி தென்பட்டாலோ, மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டாலோ, அதிகமாக வியர்த்துக் கொட்டினாலோ, தோள்பட்டை, இடதுகை, கழுத்து, தாடை, முதுகுப் பகுதி முதலியவைகளில் வலி ஏற்பட்டாலோ, உடனே உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கோ அல்லது அருகிலுள்ள இதயநோய் சிகிச்சை நிபுணரிடமோ சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது.

    • மனித உடலில் லேசான நேர்மறை மின்னூட்டம் உள்ளது.
    • புல் தரை, மணல் ஆகியவற்றில் நடப்பது கூடுதல் பலன்களை அளிக்கிறது.

    நிலத்தில் காலணி இன்றி வெறுங்கால்களால் நடப்பதன் மூலம் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என உலகின் பல நாடுகளிலும் 'பேர்புட் வாக்கிங்' பழக்கத்தை பலரும் கடைப்பிடிக்க தொடங்கி உள்ளனர்.

    வெறுங்கால் நடை என்ற இந்த செயல்பாடு, இயற்கையான ஒரு மனிதனின் நடையை மீட்டெடுத்து, கால் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவுவதுடன், இடுப்பு, முழங்கால்கள் இலகுவாக இயங்க உதவுகிறது என்றும் கூறுகின்றனர்.

    இதன் பின்னணியில் ஒரு எளிய அறிவியல் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, மனித உடலில் லேசான நேர்மறை மின்னூட்டம் உள்ளது. நமது செல்கள் மின் தூண்டுதல்கள் மூலம் செயல்பாடுகளை நடத்துகின்றன. நரம்பு மண்டலம் உடல் முழுவதும் மற்றும் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்ப மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால் நாம் சிந்திக்கவும், நகரவும், உணரவும் முடியும். ஓய்வெடுக்கும் செல்கள் உட்புறமாக எதிர்மறையாக மின்னூட்டம் பெற்றிருந்தாலும், வெளிப்புற செல் சூழல் நேர்மறையாக மின்னூட்டம் பெற்றது.



    பூமி ஒரு எதிர்மறை மின்னூட்டம் என்ற நெகடிவ் மின்னூட்டம் கொண்டுள்ளது. இந்தநிலையில், மனிதனின் கால்கள் நிலத்தில் பூமியுடன் தொடர்பை ஏற்படுத்தும் போது, பூமியை அழுத்துவதன் மூலம், உடலில் இருக்கும் அதிகப்படியான நேர்மறை மின்னூட்டம் சமநிலை அடைந்து உடலில் ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளை குணப்படுத்தும் விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

    நிலத்தில் வெறுங்கால்களால் நடப்பதன் மூலம், மன அழுத்தம் குறைகிறது. உடல் ஆற்றல் அதிகரிக்கிறது மற்றும் ரத்த அழுத்தம் குறைகிறது என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    புல் தரை, மணல் ஆகியவற்றில் நடப்பது கூடுதல் பலன்களை அளிக்கிறது. இது நம்மை பூமியுடன் மின்சாரம் மூலம் மீண்டும் இணைக்கும் ஒரு சிகிச்சை நுட்பம் என்றும் இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    அதேவேளையில் காலணிகள் இன்றி நிலத்தில் நடப்பது பல்வேறு கிருமிகள் உடலில் தொற்றி உடல் நலனை பாதிக்கும் என்றும் பல்வேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    • சென்சார்கள், மென்பொருள்கள் மற்றும் நெட்வொர்க் இணைப்புகளை கொண்டு செயல்படுகின்றன.
    • வீட்டில் இருக்கும்போது, குரல் வழி கட்டளைகள் மூலமாகவும் இதை இயக்கலாம்.

    இப்போது எல்லாமே டிஜிட்டல் மயம்தான். 'ஓகே கூகுள்', 'ஹே சிரி'... என குரல் வழி கட்டுப்பாட்டில் உலகமே இயங்க பழகிவிட்டது.

    ஸ்மார்ட்போன் மட்டுமல்ல, இப்போது வீட்டு உபயோக சாதனங்கள் கூட நவீனமாக அப்டேட் ஆகிவிட்டன. ஒருகாலத்தில் நாம் வாங்கும் பிரிட்ஜ், ஏ.சி.யில் மின்சார பயன்பாட்டை குறைக்கும் நட்சத்திர தர சான்று இருக்கிறதா..? என்று தேடியவர்கள், இப்போது நாம் வாங்கும் வீட்டு உபயோக சாதனங்களில் ஐ.ஓ.டி. தொழில்நுட்பம் இருக்கிறதா..? என அலசி ஆராய பழகிவிட்டனர். ஆம்..! நீங்களும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. போன்ற மின்சாதன பொருட்களை வாங்குவதாக இருந்தால், அதில் ஐ.ஓ.டி. தொழில்நுட்பம் இருக்கிறதா என்பதை ஒன்றுக்கு, இருமுறை பரிசோதித்து கொள்ளுங்கள். ஏனெனில் அடுத்த 10 வருடங்களுக்கு, ஐ.ஓ.டி. தொழில்நுட்பம்தான் மின்சாதன பொருட்களை ஆட்சி செய்ய இருக்கின்றன.

    * ஐ.ஓ.டி. தொழில்நுட்பம்

    'இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்' என்பதன் சுருக்கம்தான் ஐ.ஓ.டி. எளிமையாக சொல்வதென்றால், இணையதளத்துடன் இணையக்கூடிய எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள். இவை சென்சார்கள், மென்பொருள்கள் மற்றும் நெட்வொர்க் இணைப்புகளை கொண்டு செயல்படுகின்றன. வழக்கமான பிரிட்ஜுக்கும், ஐ.ஓ.டி. பிரிட்ஜுக்கும் என்ன வித்தியாசம் என்றால், ஐ.ஓ.டி. பிரிட்ஜில் பொருத்தப்பட்ட சென்சார்கள் பிரிட்ஜை எந்நேரமும் கண்காணித்தபடியே இருக்கும். பிரிட்ஜ் பற்றிய தகவல்களை சேகரிக்கும், உங்களுக்கு ஸ்மார்ட்போன் ஆப் மூலமாக பகிர்ந்து கொள்ளும். ஆப் மூலமாகவே உங்களிடமிருந்து கட்டளைகளை பெற்று, பிரிட்ஜின் குளிர்ச்சியை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்யும். நீங்கள் 500, ஆயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தும்கூட இணையதளம் வாயிலாக இந்த கட்டுப்பாட்டு பணிகளை செய்யலாம். அதேபோல வீட்டில் இருக்கும்போது, குரல் வழி கட்டளைகள் மூலமாகவும் இதை இயக்கலாம்.

    * ஐ.ஓ.டி. மின்சாதனங்கள்

    நிறம் மாறும் விளக்குகள், சுவிட்ச் பிளக்குகள், ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டி.வி., மைக்ரோவேவ் ஓவன், வாக்குவம் கிளீனர், சி.சி.டி.வி. கேமரா... இப்படி வீட்டு உபயோக பொருட்கள் பலவற்றிலும் ஐ.ஓ.டி.தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கிறது. அதனால் நீங்கள் மின்சாதன பொருட்களை வாங்குவதற்கு முன்பாக, ஐ.ஓ.டி.யின் இருப்பை அறிந்து கொண்டு வாங்குங்கள். இல்லையென்றால், மற்றவர்கள் குரல் வழியாக கட்டுப்படுத்தும் மின்சாதனப்பொருட்களை நீங்கள் பட்டன்கள் வாயிலாகவே கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.

    • ஓட்ஸ் அல்லது முழு தானிய உணவுகளை உட்கொள்ளலாம்.
    • ரத்த ஓட்டத்தை சீராக முடுக்கிவிடுவதற்கு வழிவகை செய்யும்.

    காலையில் எழுந்ததும் ஒருசில பழக்கவழக்கங்களை பின்பற்றுவது உடலை மட்டுமல்ல மனதையும் உற்சாகமாக செயல்பட வைக்கும். அத்தகைய பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    1. உலர் திராட்சை நீர் பருகுதல்

    ஊற வைத்த உலர் திராட்சையில் இயற்கை சர்க்கரை, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இரவில் 5 முதல் 7 உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை பருகிவிட்டு உலர் திராட்சையை சாப்பிடவும்.

    * உடலின் ஆற்றலை அதிகரிக்க செய்யும்.

    * செரிமானத்தை மேம்படுத்தும்.

    * இரும்புச்சத்து உறிஞ்சுதலை துரிதப்படுத்தும்.

    * உடலில் இயற்கையாக உள்ள ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும்.

    2. அலைபேசியை தவிர்த்தல்

    காலையில் எழுந்த உடனேயே அலைபேசியை பார்க்கும் ஆவல்தான் பலருக்கும் ஏற்படும். அப்படி அலைபேசியை பார்ப்பது மனதை திசை திருப்பும், நாளடைவில் மன அழுத்தத்தை தூண்டுவதற்கு காரணமாகிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் எழுந்ததும் 30 நிமிடங்கள் அறவே அலைபேசியை தவிர்த்துவிட வேண்டும். அந்த வழக்கத்தை கடைப்பிடிப்பது ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும். அதற்கு மாற்றாக சிறிது நேரம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருக்கலாம், ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியே விட்டு சுவாசிக்கலாம்.



    3. வெதுவெதுப்பான நீர் அருந்துதல்

    காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை நீரை பருக விரும்பாதவர்கள் அதற்கு மாற்றாக வெதுவெதுப்பான நீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

    இது செரிமான அமைப்பின் செயல்பாட்டை தூண்டிவிடும். உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவிடும்.

    4. சமச்சீரான காலை உணவு

    காலையில் வழக்கமாக உண்ணும் உணவுடன் புரதச்சத்து இடம் பெறும் உணவுப்பொருளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டை சிறந்த தேர்வாக அமையும். ஓட்ஸ் அல்லது முழு தானிய உணவுகளை உட்கொள்ளலாம். வாழைப்பழம் அல்லது பெர்ரி வகை பழங்களையும் சாப்பிடலாம். காலையில் வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும். அவை செரிமானத்தை மெதுவாக்கி மந்தமான உணர்வை தரும்.

    5. 5 நிமிட மன பயிற்சி

    காலையில் 5 நிமிடங்கள் மனதிற்கு தனியாக பயிற்சி அளிக்க வேண்டியதும் அவசியமானது. அது தியானமாகவோ, ஆழ்ந்த சுவாசமாகவோ, இசை கேட்பதாகவோ இருக்கலாம். இதற்காக 5 நிமிடங்கள் செலவிட்டாலே போதும். தேவையற்ற பதற்றத்தை குறைத்து மனதை நிலைநிறுத்த உதவிடும். இல்லாவிட்டால் எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் மனதை சிறிது நேரம் அமைதியாக வைத்திருந்தாலே போதும். அன்றைய நாளின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும்.

    6. உடற்பயிற்சி-யோகாசனம்

    * காலையில் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் 5 நிமிடங்கள் உடலுக்கு அசைவு கொடுக்கும் எளிய உடற்பயிற்சிகளை செய்தாலே போதுமானது. ரத்த ஓட்டத்தை சீராக முடுக்கிவிடுவதற்கு வழிவகை செய்யும்.

    * எளிய யோகாசன பயிற்சிகளையும் செய்யலாம். அல்லது சூரிய நமஸ்காரம் மேற்கொள்ளலாம். இவை மனதுக்கு இதமளிக்கும். முதுகெலும்புக்கும் பலம் சேர்க்கும்.

    7. 3 விஷயங்களுக்கு முன்னுரிமை

    அன்றைய நாளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளில் முதல் 3 விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். அதனை சுற்றியே சிந்தனையும், செயல்பாடும் அமையும். அது அன்றைய நாளை வேறு விஷயங்களுக்கு கவனத்தை திசை திருப்பாமல் பார்த்துக்கொள்ளவும் உதவிடும்.

    • சாதம் உதிரி உதிரியாக இருக்க ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும்.
    • சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, பசும்பாலுடன் அரை கப் தேங்காய் பாலும் ஊற்றி கிளறினால் சுவை நன்றாக இருக்கும்.

    வெண்டைக்காய் பொரியல் வழ வழன்னு இல்லாமல், மொறு மொறுன்னு இருக்க, வதக்கும் போது சிறிது தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள். சாப்பிட ருசியாக இருக்கும்.

    வாழைத்தண்டு, வாழைப் பூவை நறுக்கியதும், அரிசி களைந்த நீரில் போட்டு விட்டு பிறகு மோர் கலந்த நீரில் அலசி பின்பு பொரியல் செய்தால், நிறம் மாறாமலும் துவர்ப்பு குறைவாகவும், சுவை அதிகமாகவும் இருக்கும்.

    புது அரிசியில் சாதம் வடிக்கும் போது, குழைவாக ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும். சாதம் உதிரி உதிரியாக இருக்க ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும்.

    ரவா தோசை செய்யும் போது, ஒரு கரண்டி கடலை மாவு சேர்த்து கரைத்து தோசை வார்த்தால், ஓட்டல் தோசை போல் பொன்னிறத்தில் மொறு மொறு என்று இருக்கும். எள்ளு, மிளகாய்ப் பொடியில் நல்லெண்ணெய் ஊற்றி அதை சாப்பிட்டால் சுவையோ சுவை தான்.

    சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, பசும்பாலுடன் அரை கப் தேங்காய் பாலும் ஊற்றி கிளறினால் சுவை நன்றாக இருக்கும்.

    இட்லி, தோசைக்கு மிளகாய்ப் பொடி அரைக்கும் போது சிவப்பு மிளகாய், கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயக் கட்டி இவற்றை வறுத்ததும், ஒரு கப் கொத்தமல்லி விதை மற்றும் சுத்தமான கருப்பு எள் 100 கிராம் இரண்டையும் வறுத்து, உப்பு சேர்த்து பின் அம்மியில் அரைத்து வைத்துக் கொண்டால்.... ஒரு மாதம் வரை வாசனையும் சுவையும் நன்றாக இருக்கும்.

    கோதுமை மாவு அரைக்கும் போது அதனுடன் வெள்ளை கொண்டைக் கடலை மற்றும் சோயா பீன்ஸ் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் மிருதுவாகவும் ருசியாகவும், சத்து மிகுந்தும் இருக்கும்.

    ரசம் மணக்க வேண்டுமா? புளிக் கரைசலுடன் பழுத்த தக்காளியை மிக்சியில் அரைத்து சேர்த்து ரசம் வைத்து, கீழே இறக்கி இளம் கொத்துமல்லித் தழையை தூவி விடுங்கள். வீடே கமகமனு இருக்கும்.

    சமைத்த சாதம் மீந்து விட்டதா? அதில் உப்பு போட்டு, ஒரு டம்ளர் பால் ஒரு ஸ்பூன் தயிர் ஊற்றிப் பிசைந்து `ஹாட் பேக்' கில் எடுத்து வைத்து விடுங்கள். மறுநாள் காலை சூப்பர் தயிர் சாதம் ரெடியாக இருக்கும். எலுமிச்சை அல்லது மாங்காய் ஊறுகாய் கொண்டு சாப்பிட்டால், அமிர்தமாக இருக்கும்!

    ×